இஸ்லாமை ஏற்றதால் மனைவி மக்களை இழந்தாலும் அல்லாஹ் என்னைக் கைவிடவில்லை!
லாரென்ஸ் ப்ரவுன், அமெரிக்க விமானப்படை கண் டாக்டர்
இஸ்லாத்தை ஏற்ற பிறகு என் சொந்த வாழ்க்கையில் புயல் வீசியது. நான் இஸ்லாத்தை ஏற்றதை என் மனைவியால் தாங்க இயலவில்லை. என்னிடமிருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தாள்.
கோர்ட்டில் நான் அடித்து துன்புறுத்தினேன் என்று கூறி விவாகரத்து கேட்டாள். ஆனால், நான் உண்மையில் மனைவியை அடிப்பவன் அல்ல. நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. எனது இரண்டு குழந்தைகளையும் தன்னுடன் அவள் எடுத்துக் கொண்டு போனாள்.
மேலும் நீதிமன்றத்தில் 100 வருடங்களுக்கு ஜீவனாம்சம் வேண்டுமென்று வாதிட்டாள். நீதிமன்றமும் இசைந்தது. ஜீவனாம்சமாக எனது வீடு மற்றும் இரண்டு கார்களை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக் கொண்டாள்.
இதற்கெல்லாம் மேலாக இன்னொரு அநியாயமும் எனக்கு நடந்தது. அது வாரத்தில் ஒரு நாள் எனது மகள்களை பார்க்கும் சமயத்தில் அவர்களை நான் அடித்து துன்புறுத்தி விடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு அதிகாரி ஒருவரை நியமிக்கும்படி நீதிமன்றம் எனக்கு கூறியிருந்ததாகும்.
என்னமோ மனிதர்களை அடித்து துன்புறுத்தும் கொடுமைக்காரன் போன்று சித்தரிக்கப்பட்டேன். எந்த பிள்ளையைக் காப்பாற்ற இறைவனிடம் மன்றாடி உதவியைப் பெற்றதால், உண்மையான இறைவனை ஏற்றேனோ அந்தப் பிள்ளை இப்போது என்னுடன் இல்லை. எனது நெஞ்சம் கவலைகளால் கசங்கிப் போனது.
அத்துடன் எனக்கு இன்னொரு சோதனையும் வந்தது. அது என்னை ஈன்றெடுத்த தாய் – தந்தையர் என்னை வெறுத்ததாகும். இஸ்லாத்தை ஏற்றதால் அவர்கள் என்னை விலக்கி வைத்தனர். ஒரு முறை அவர்களிடமிருந்து எனக்கு கடிதம் வந்தது. இனி அவர்களை நான் பார்க்கக் கூடாது என்று. முழுமையாக குடும்ப உறவற்று அநாதையாகிப் போனேன்.
இஸ்லாத்தை ஏற்ற சமயத்தில் அமெரிக்க விமானப்படை மருத்துவராக 20 வருடங்களை பூர்த்தி செய்திருந்தேன். இஸ்லாத்தை ஏற்ற பிறகு அமெரிக்க ராணுவத்தில் ஒரு முஸ்லிமாக என்னால் பணியாற்ற இயலவில்லை.
என் மனசாட்சி என்னைக் கொன்று போட்டது. பதவியை ராஜினாமா செய்தேன். மனைவி- பிள்ளைகளை இழந்தேன். வீடு வாசல்களை இழந்தேன். நண்பர்களை இழந்தேன்.கடைசியில் வேலையையும் இழந்து நின்றேன். பெரிய பண்ணை வீட்டில் வசித்த நான் குறுகலான ஏணிப்படி கொண்ட அறைகள் ஏதுமற்ற சின்ன வீட்டில் வசித்தேன்.
எல்லாவற்றையும் உண்மையான அந்த இறைவனுக்காகப் பொறுத்தேன். இஸ்லாத்தை ஏற்ற பிறகு அதுவரை என்னுடன் பழகி வந்த எனது நண்பர்கள் என்னை விட்டுப் பிரிந்தனர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம், நான் நடன விடுதிகளுக்கு செல்வதில்லையாம். மது அருந்துவதில்லையாம் தோழிகளுடன் கைகுலுக்குவதில்லையாம். இதுதான் அவர்கள் என் மீது வைக்கும் குற்றச்சாட்டு.
நான் கேட்கிறேன், இயேசு எங்காவது நெருங்கிய குடும்ப உறுப்பினர் அல்லாத அந்நியப் பெண்களுடன் கைகுலுக்கியுள்ளாரா? பைபிளில் எங்காவது அப்படி ஓன்று நடந்திருப்பதாக காட்ட முடியுமா?
நான் சவாலாக கேட்கிறேன். இன்றும் ஆர்த்தொடெக்ஸ் யூதர்கள் அன்னியப் பெண்களுடன் கைகுலுக்குவதில்லை. இயேசுவும் ஆர்த்தொடெக்ஸ் மதகுருவைப் போன்றே வாழ்ந்துள்ளார். இதுவே உண்மை, கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டு இவர்கள் யாரைப் பின்பற்றுகிறார்கள்?
இறைவனின் உதவி.
இஸ்லாத்தை ஏற்றதால் மனைவி பிள்ளைகளை இழந்தாலும் அல்லாஹ் என்னைக் கைவிடவில்லை. மிக நல்லதொரு குணவதியை அல்லாஹ் எனக்கு இரண்டாவது மனைவியாகத் தந்தான்.
அவள் மூலமாக அழகிய பெண் குழந்தையும் எனக்குப் பிறந்தாள். வீடு – வாசலை இழந்தேன்.எனினும் அல்லாஹ் என்னைக் கைவிடவில்லை. உலக முஸ்லிம்களால் மிகவும் விரும்பப்படும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நகரமான மதீனா மாநகரில் எனக்கு அல்லாஹ் வீட்டைத் தந்தான். உலகின் மிக அழகிய நகரங்களான வியன்னா, சூரிச், வான்கூவர், ஜெனிவா, சிட்னி போன்ற நகரங்களை விட மிகச்சிறந்த நகரம் அது. ஏனெனில், அந்நகரில் தஜ்ஜால் (அந்திக் கிறிஸ்து) நுழைய இயலாது என அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
என்னுடைய பழைய நண்பர்கள் என்னை விட்டுப் பிரிந்தாலும் அவர்களை விட எல்லா வகையிலும் சிறந்த நண்பர்களை அல்லாஹ் எனக்குத் தந்துள்ளான். உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் எனக்குத் தோழர்களாகவும் சகோதரர்களாகவும் ஆகிவிட்டனர். அல்லாஹ் போதுமானவன்.
தற்பொழுது இஸ்லாமிய பிரச்சாரப் பணி செய்து வரும் இவர் மூன்று நூல்களை எழுதியுள்ளார்.