பற்று, நபியைப் பின்பற்று!
காதிர் மீரான் மஸ்லஹி
ஒருமுறை நபித்தோழர் ஒருவர் அரை குறையாக ருகூவு, சுஜூது செய்து தொழுது கொண்டிருப்பதைக் கண்ட “ஹூதைஃபா அல் யமான்” என்ற நபித்தோழர் தொழுகைக்குப் பின் அவரை உடனடியாக அழைத்து,
“தோழரே…! நீர் தொழவில்லை..! ஒருவேளை நீர் மரணித்தால் நபியின் சுன்னத்தை விட்டுவிட்ட நிலையின் தான் மரணிப்பீர்..!” என்று கண்டித்தார்கள். (நூல்: புகாரி)
இது ஒரு சிறுநிகழ்வு என்றாலும் இதில் பல்வேறு படிப்பினைகள் இச் சமூகத்திற்கு இருக்கவே செய்கிறது. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்…
o தொழுகை தான் அசலான அமல். அதில் மிகவும் கவனமாக இருங்கள். பொடுபோக்காக இருக்காதீர்கள்!
தக்பீர் கட்டியது முதல் சலாம் கொடுக்கும் வரையுள்ள அனைத்து அமல்களையும் முழுமையாக, நிறைவாகச் செய்யுங்கள். அரைகுறை அமல்கள் என்றைக்கும் வேலைக்கு ஆகாது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.
o ஒரு தொழுகைக்கு அதன் ருகூவும் சுஜூதும் தான் அசலாக இருக்கிறது. இங்கு அதுவே சரியில்லையென்றால் பிறகு அவனது தொழுகைக்கு என்ன அர்த்தம் இருக்கிறது? எனவே நாம் நமது ருகூவு, சுஜூது எனும் குனிவு, பணிவுகளை நிறுத்தி நிதானமாக, அமைதியாகச் செய்ய வேண்டும்.
எனவே, செய்வன திருந்தச் செய்வீர்!
o தவறுகளைக் கண்டால் உடனுக்குடன் கண்டியுங்கள். தாமதப்படுத்தாதீர்கள். தவறுகளை உடனே சுட்டிக் காட்டி சரிசெய்ய வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. தவறினால் திருந்துவதற்கான மற்றும் திருத்துவதற்கான வாய்ப்பு தவறிப் போய்விடக்கூடும். எனவே சரியான சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
o நபியின் சுன்னத்தான விசயங்களில் மிகஜாக்கிரதையாக இருங்கள். சுன்னத்து தானே என்று அஜாக்கிரதையாக இருந்து விடாதீர்கள். அப்படி நினைப்பதும் கூட குஃப்ர் எனும் இறைநிராகரிப்பின் அடையாளம் என்று மார்க்க மேதைகளால் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. எனவே அதன் பின்விளைவு மிகமோசமாக இருக்கக்கூடும்.குறிப்பாக மரணநேரத்தில் இது பெரும் பாதிப்பைத் தரலாம்.
o மரணம் அதை நீங்கள் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். நல்ல அமல்கள் தான் நமக்கு நல்லதொரு மரணத்தைத் தரும்.எனவே நீங்கள் நபியின் சுன்னத்துகளில் கவனமாக இருங்கள். மண்ணறையில் வினவப்படும் வினாக்களில் ஒன்று நபிகளார் காட்டப்பட்டு இவரைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்று கேட்கப்படும் அப்போது நாம் என்ன பதிலைக்கூறப் போகிறோம்…?
o மரணத்திற்குப் பின்பும் நமக்கு நல்லதொரு வாழ்க்கை இருக்கிறது. அதில் சாந்த நபியை நாம் சந்திக்க வேண்டியதிருக்கிறது. அந்த நபியின் சுவைமிகு சுன்னத்துகளை விட்டு விட்டு பிறகு எந்தமுகத்தை வைத்துக் கொண்டு நம்நபியை நாம் மறுமை யில்,அந்த மஹ்ஷர் பெருவெளியில் சந்திக்கப் போகிறோம்?
o நீங்கள் எப்படி வாழ்கிறீர்களோ அப்படித்தான் மரணிக்கப்போகிறீர்கள்; நீங்கள் எப்படி மரணிக்கிறீர்களோ அப்படித்தான் எழுப்பப்படவும் போகிறீர்கள் என்பது நம்நபி வாக்கு எனவே வாழும்போதே மிகச்சரியாக வாழ்ந்துவிடுங்கள்.பிறகு மீண்டும் ஒருவாய்ப்பு என்பதெல்லாம் இங்கு இல்லவேயில்லை.
o மரணம் அதற்கு நேரம், காலம் என்று எதுவுமில்லை. அது எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் வரக்கூடும். அதற்கு நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். இல்லையெனில் ஏமாற்றத்திற்கு ஆளாகப்போவது நாம் தான் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.
o தவறுகள்தவிர்க்க முடியாத ஒன்றுதான். அவைகளை நீங்கள் பெரிது படுத்தாதீர்கள். உடனடியாக அதை அதற்கு உரியவரிடமே கூறி அதை சரிசெய்யுங்கள். வெவ்வேறு நபர்களிடம் கூறுவதால் எவ்விதப் பலனும் ஏற்படப்போவதில்லை. அது நமக்கு அவ்வளவு நல்ல பழக்கமும் அல்ல.
o தவறுகள் சுட்டிக்காட்டப்படுகிற நேரங்களில் அவற்றை நாம் மனதார ஏற்று நம்மை நாமே மாற்றிக்கொள்ள முன் வரவேண்டும். அதற்காக நாம் அல்லாஹ்வுக்கு அதிகமதிகம் நன்றி செலுத்தவும் வேண்டும். மறுமையில் மாட்டிக்கொள்வதை விட இம்மையில் நம்மை திருத்திக்கொள்வது நல்லது அல்லவா?
இப்படியாக இந்தச் சின்னஞ்சிறிய நிகழ்விலிருந்து பென்னம்பெரிய கருத்துத்துளிகள் கசிந்து கொண்டே இருக்கின்றன. அவற்றை நாம் தான் ரசித்து, ருசிக்க வேண்டும். ஆனால் நமக்குத்தான் அவற்றுக்கெல்லாம் நேரமேயில்லையே…!
எப்படியும் வாழ்வதல்ல வாழ்க்கை. நன்கு திட்டமிட்டு இப்படித்தான் வாழவேண்டும் என்று வைராக்கியத்துடன் வாழ்வது தான் வளமான வாழ்க்கை. இன்றைக்கு அதற்காக நாம் எங்கேயும் அலையத் தேவையில்லை. இஸ்லாம் கூறும் இனியவழியில் நம் வாழ்வை நாம் நன்கு அமைத்துக் கொண்டாலே போதும் அந்தத் திட்டம் தீட்டப்பட்ட தெவிட்டாத இன்பவாழ்க்கைக்கு நாம் தயார் என்று பொருள்.
மெய்யான மீலாது என்பது வெற்று மேடைமுழக்கங்களில் இல்லை. அது நமது அன்றாட பழக்க வழக்கங்களில் தான் குடிகொண்டிருக்கிறது. அதுவும் சுந்தர நபியின் சுன்னத்துகளை பின்பற்றுவதில் தான் நமது எதிர்காலமே இலைமறைகாயாய் இணைந்திருக்கிறது. ஏன் நீங்கள் உங்களைப் படைத்த இறைவனை நேசிக்கவேண்டுமா? அப்படியானால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது உங்கள் நபியை பின்பன்றுவது தான்! என்று குவலயக்குர்ஆன் கூறிக்காட்டுவது ஒன்று மட்டும் நமக்கு போதாதா என்ன?
கூடவே நமக்கான பாவமன்னிப்பும் அத்துடன் இணைந்திருப்பது இரட்டைச் சிறப்பல்லவா…? அந்த ஒற்றை இறைவசனம் இதுதான்…
قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ
(நபியே!) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும்,அல்லாஹ் மன்னிப்பவனாக வும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (குர்ஆன் : 3:31)
வாருங்கள்!
சுன்னத்தில் தடம் பதிப்போம்! ஜன்னத்தில் இடம் பிடிப்போம!
கீரனூர் SNR ஷவ்கத் அலி மஸ்லஹி
இர்ஃபானுல் ஹுதா அரபிக்கல்லூரி
தாராபுரம்-98658 04000.
source: http://kadharmaslahi.blogspot.in/2017/11/blog-post_14.html