அறியாத்தனமும் மனோ இச்சையும்
ஷிர்க் போன்றவைகளில் பிரவேசிப்பதற்கு அறியாத்தனமும் மனோ இச்சையும்தாம் காரணம்.
அறியாத் தனமும், அன்னியரின் உதவியை எதிர்பார்ப்பதுமே ஆன்மாக்களை அக்கிரமமாய் ஆகாத காரியத்தில் கொண்டு போய்விடுகின்றன. இல்லையேல், ஒரு வஸ்து இழிவானதென் அறிந்தும், இதைச் செய்வதற்கு நமது ஷரீஅத் இடந்தரவில்லை என்பதையுணர்ந்தும், மனமார எப்படித்தான் கெட்ட காரியத்தில் பிரவேசித்தல் முடியும்?
இவையனைத்தையும் உணர்ந்துகொண்டு இக்காரியத்தைச் செய்வதனால்தான் சிலர் தூர்த்தரெனவும் அறியாத மனிதர்களெனவும் சொல்லப்படுகின்றனர். ஏனெனின், இன்னவர் அறிந்தும் அறியாதவர்களேபோல் நடித்துத் தங்கள் இச்சைக் கிசைந்து நடந்து செல்லுகின்றனர்.
உதாரணமாக, இவர்களின் இச்சையின் உணரச்சியே இதைச் செய்யும்படியாய்த் தூண்டிவிடுகிறது. சில சமயங்களில் இக் காரியங்களில் தென்படும் நன்மைகளைக்காட்டினும் பதின்மடங்கு தீமையே காண்கின்றன. எனினும், அறியாத் தன்மையினால் இதைக் கவனிக்கிறார்களில்லை. அல்லது, கெட்ட நப்ஸானது இவன்மீது சவாரிசெய்து, ஞானமென்னும் கண்ணைமூடி, இக்கெட்ட காரியத்தில் பிரவேசிக்கும்படி செய்துவிடுகின்றது.
“ஒரு வஸ்துவின் அன்பு உன்னைக் குருடாகவும் செவிடாகவும் செய்துவிடுகிறது,” என்றொரு நாயக வாக்கியமும் காணப்படுகிறது.
இதை யொட்டியே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உண்மை நேயர்களான சஹாபாக்களிடம், “அறியாத் தன்மையால் துர்ச்செயலைச் செய்துவிட்டு, உடனே பாப மன்னிப்பை ஆண்டவனிடம் தேடுபவர்களுக்கே தௌபா இருக்கின்றது” (4:17) என்னும் வாக்கியத்தின் கருத்தென்ன வென்பதை வினவியதாக அபுல் ஆலியா அவர்கள் திருவுளம் பற்றியிருக்கின்றார்கள்.
(நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபுல் ஆலியாவுக்கு கொடுத்த விடை இங்குக் காணப்படவில்லை. ஆனால், மற்றோரிடத்தில் மனிதன் பாபமான எக்காரியத்தைச் செய்துவிடினும், இவைகளெல்லாம் அறியாத்தன்மையையே சாரும் என்று விடையளித்ததாய்க் கூறியிருக்கின்றார்.)
எனவே, இங்கு மார்க்கத்தில் விலக்கப்பட்ட காரியங்களில் என்னென்னவிதமான கெடுதிகளிருக்கின்றன? இவைகளை ஏன் விலக்கவேண்டும்? என்பதையும், இஸ்லாமிய ஷரீஅத்தில் செய்யவேண்டுமென்று கட்டளையிடப்பட்ட காரியங்களில் என்னென்ன நன்மைகளிருக்கின்றன? இவற்றைச் செய்வதால் மானிட கோடிகளுக் கென்ன பிரயோஜனம் விளையப்போகிறது? என்பதையும் இங்கு விவரித்துக் கூற இடமில்லை.
ஆனால், உண்மையிலேயே ஆண்டவன்மீது நன்னம்பிக்கை கொண்ட ஒவ்வொரு மனிதனும் தெரிந்துகொள்ளவேண்டுவ தென்னவெனின், பரம்பொருளால் மனிதர்கள் செய்யவேண்டுமெனக் கட்டளையிடப்பட்டிருக்கும் காரியங்களைனத்தும் அப்படியே நன்மை பயக்கக் கூடியனவாய் இருக்கின்றன; அல்லது இக் காரியங்களில் நன்மைகளே மிகுதமாயிருக்கின்றன என்பதும், எக்காரியங்களை அல்லாஹ் செய்யவேண்டாமென விலக்கியிருக்கிறானோ, அக்காரியங்களெல்லாம் அப்படியே மானிட கோடிகளுக்குத் தீமை விளைக்கக்கூடியனவாகும்; அல்லது அவைகளில் கெடுதியே நிரம்பக் காணப்படுகின்றன என்பதுமேயாம்.
இவ்வாறே, ஒவ்வொரு மூஃமினும் நம்ப வேண்டும், அப்படியல்லாது, சில காரியங்களை மனிதர்களைச் செய்யும்படி சொல்லி அதனால் அல்லாஹ் பிரயோஜனமடையலாமென் றெண்ணுகிறான்; அல்லது சில காரியங்களைச் செய்யாமலிருக்கும்படி செய்து, அதன் மூல்யமாய்த் தான் ஏதேனும் நல்லபிரதிபலனைப் பெற்றுக்கொள்ளலாமென ஆண்டவன் எண்ணுகிறான் என்று மனோபாவம் கொள்வது கூடாது. அல்லாஹ் ஒன்றைச் செய்யவேண்டுமென உத்தவிடுவதில் நமக்குத்தான் பிரயோஜன முண்டு. இவ்வாறே ஒன்றை விலக்கினானேயானால், அதை நாம் செய்யாம லிருக்க வேண்டும். இல்லையேல், அது நமக்குத் தீங்கையே விளைவிக்கும். இக் காரணம் பற்றியேதான் ஆண்டவன் தன் திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்:
“(என் நபி) அவர்களுக்கு நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவுகிறார். மேலும், தீமையான காரியங்களைப் புரியவேண்டாமென விலக்குகிறார். இன்னமும், மணமான நல்ல வஸ்துக்களை அவர்கள் உண்ணும்படி அனுமதிகொடுத்து வைக்கிறார். மேலும் அசுசியான வஸ்துக்களை அன்னர் உண்ண வேண்டாமென விலக்குகிறார்”-(7:157)
இனி, சமாதியைத் தொடுவது, அதை முத்தமிடுவது, அதன்மீது வதனத்தைத் தேய்ப்பது முதலிய விஸயங்களைக் கவனிப்போம்: எவருடைய சமாதியாயினும் அதன்மீது கரங்களை வைப்பதும், அதனை முத்தமிடுவதும், அதன்மீது முகத்தை வைப்பதும் கூடாதென முஸ்லிம்க ளனைவரும் ஒற்றுமையாய்க் கூறுகிறார்கள். இவ்விதம் சலப் சாலிஹீன்களான முன்னோர்கள் எவரும் செய்ததா யில்லை. இதுவும், ஒருவிதச் சிறிய ஷிர்க்காகவே இருக்கிறது. இவ்வாறு செய்து செய்துகொண்டு வந்தவர்களெல்லாம் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வகுப்பாருள் சேர்ந்தவர்களென்று நாம் முன்னமே விரிவாய் விளக்கியிருக்கிறோம்.
எனவே, பீர்களுக்கும் அவர்களைப் போன்றார்களுக்கும் முன்னே சிரம் வணங்குவதும், நிலத்தைத் தொட்டு முத்தமிடுவதும் கூடாவென இமாம்களனைவரும் விலக்கியிருக்கின்றனர். அன்றியும், அன்னவர்களுக்கு மரியாதை செய்யும் எண்ணத்துடன் தலை சாய்ப்பதும் குனிவதும் கூடக் கூடாதென்று கூறியிருக்கின்றனர். உதாரணமாக, ஒன்றைக் கவனிப்பீர்களாக: ஒரு சமயம் முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸிரியாவினின்றும் திரும்பி வந்தபொழுது, நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கண்டு சிரவணக்கும் செய்தார்கள்.
இதைக் கண்டதும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “ஏ முஆத்! நீரென்ன செய்கிறீர்?” என்று வினவ, முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “யா ரஸூலல்லா! சிரியாவின் மனிதர்கள் தங்கள் பாதிரிகளான மத குருக்களின் முன்னே இவ்வாறுதான் சாஷ்டாங்கம் செய்து வருகிறார்கள். அன்றியும், அத்தேய மக்கள் நெடுங் காலமாயே இவ்வாறு செய்து கொண்டு வருவதாயும் கூறுகிறார்கள்,” என்று விடை கொடுக்க,
நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “ஏ முஆத்! இஃது அன்னவர்கள் கூறும் ஆதாரமற்ற ஒரு பொய்யாகும். மனிதர்களுக்குள் சிரவணக்கம் செய்ய வேண்டுவது இருக்குமாயின், புருஷனுக்குப் பெண்சாதி சிரவணக்கம் செய்யவேண்டும் என்று சொல்லியிருப்பேன்; பெண்சாதிக்குப் புருஷன்பால் அவ்வளவு கடமைக ளிருக்கின்றன,” என்றுகூறி,
“முஆத்! நீர் என்னுடைய சமாதியின் பக்கல் எப்பொழுதாவது செல்வீராயின், அதற்குச் சிரவணக்கம் புரிவீரோ?” என்று வினவ, “மாட்டேன் நாயகமே!” என்று விடையிறுத்தார். “ஆம்! எப்பொழுதும் எவருக்கும் சிரவணக்கம் புரியாதீர்!” என்று நம் வள்ள லிரஸூலவர்கள் இயம்பினார்கள்.
சஹீஹ் புகாரீயில் பின்வருமாறு ஒரு விஷயம் காணக் கிடக்கிறது: “நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வியாதியுற்றிருந்தக்கால், உட்காந்து கொண்டு இமாமத் செய்தார்கள். ஆனால், அஸ்ஹாபிக ளெல்லாம் நின்றவண்ணமே தக்பீர் கட்டிக்கொண்டிருந்தார்கள். இதைக் கண்டதும் எம்பெருமானார் அன்னவர்களையெல்லாம் உட்காந்தே தொழுகையை நிறைவேற்றும்படி கட்டளையிட்டார்கள்.
அன்றியும், “ஒன்றுமறியாத அஜமீகள் ஒரவருக்கு மற்றொருவர் மரியாதை செய்வதேபோல் எனக்குச் செய்யவேண்டா” மென்றும், “இவ்வாறு செய்வதை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொண்டு சந்தோஷமடைகிற அவர்கள் நரகலோகத்திற்குச் செல்லத் தையாரா யிருத்தல் வேண்டு” மென்றும் திருவுளம் பற்றியுள்ளார்கள்.
அறியாத்தனமும் மனோ இச்சையும் – 2
இன்னம், நபிகள் திலகமவர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒருவரைக் கண்டு மற்றொருவர் மரியாதை செய்யும் எண்ணங்கொண்டு எழுந்து நிற்பதையும் கண்டித்திருக்கிறார்கள். இந் நோக்கத்தைக் கொண்டேதான் மேலே சொல்லிவந்தபடி இமாம் உட்காந்திருக்கும்போது மௌமூமானவர்கள் பின்னால் நிற்கவேண்டாமென்று கூறயிருக்கிறார்கள். இவ்வாறு ஏனையவர்கள் தங்களுக்கு மரியாதை செய்யவேண்டுமென்று மனத்தில் எண்ணுவார்களாயின், எண்ணுமிவர்கள் நரகலோகம் போய்ச் சுகம் பெறத் தையாராயிருக்க வேண்டுமென்று எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.
இதனால்தான் ஹிஜ்ரி நூறாம் ஆண்டில் அரசு செலுத்திவந்த கலீபா உமர் பின் அப்துல் அஜீஜ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஒரு வேலையாளை நியமித்து, “இங்கு நமது தர்பாரில் வந்து மரியாதைக்காக எவரேனும் பூமியைத் தொட்டு முத்தமிடுவரேல், அன்னவரை அம்மாதிரி செய்வதினின்றும் விலக்கி அவருக்குத் தக்கபடி புத்தி புகட்டவேண்டும்,” என்று ஏற்பாடு செய்து வைத்திருந்தார்கள். என்னே அன்னவரின் மார்க்கபக்தி!
எனவே, கியாமென்னும் நிலையும், குஊத் என்னும் இருப்பும், ருகூஃ என்னும் சிரம்குனிதலும், சஜ்தா வென்னும் சிரவணக்கமும், வானலோகங்களையும் பூலோகத்தையும் படைத்த ஏக நாயகனான அவ்வாண்டவனுக்கே யல்லாது வேறு யாருக்கும் செய்வது தகாது. ஆண்டவனுக்குரிய இக்காரியத்தில் வேறு யாரும் தலையிடுவது கூடாது. இதனால் தான் ஆண்டவனைக் கொண்டேயல்லாது ஏனைய வஸ்துக்களைக் கொண்டு பிரமாணம் பண்ணுவதும் கூடாதென விலக்கப்பட்டிருக்கிறது.
இதை யொட்டியே புகாரீயிலும் முஸ்லிமிலும் பின்காணும் வாக்கியங்கள் காணக்கிடக்கின்றன: “ஒருவன் பிரமாணம் பண்ண நாடுவானாயின், அவன் ஆண்டவனைக் கொண்டே பிரமாணம் செய்யவேண்டும். இல்லையேல் வாய் மூடிச் சும்மா இருக்கவேண்டும்.” இதுவுமல்லாமல், “யாரேனும் அல்லாஹ் அல்லாத ஏனையவர்களைக் கொண்டு பிரமாணம் செய்வாராயின், நிச்சயமாய் அவர் ஆண்டவனுக்கு இணை வைத்தவராவார்,” என்பனபோன்ற அனேக வாக்கியங்களிருக்கின்றன. எனவே, இதன் கருத்தைக் கவனிக்குமிடத்து, ஒவ்வொரு வணக்கமும் அல்லாஹ் ஒருவனுக்கேயல்லாது ஏனையவர்களுக்கு நடப்பது கூடாதென்னும் கருத்தைப் பெற்றுக் கொள்ளுகின்றோம்.
“மனிதர்கள் ஆண்டவனுக்குரிய உண்மையான நேரான மார்க்கத்தைப் பின்பற்றிச் சகலரும் மன ஒற்றுமையாய் அவனை வணங்க வேண்டுமென்றும், தொழுகையை நிலைத்திருக்கச் செய்யவெண்டு மென்றும், தங்கள் ஜகாத்தென்னும் ஏழை விகிதத்தைக் கொடுக்கவேண்டு மென்றும் கட்டளையிடப்பட்டிருக்கின்றனர். மேலும், இதுவே நேர்மையான மார்க்கமாய்க் காணப்படுகிறது” – (98:5).
அன்றியும் ஹதீதில் பின்வருமாறு ஒரு வாக்கியமுமிருக்கிறது:
(1) “நீங்கள் அல்லாஹ் ஒருவனுக்கே வணக்கம் செய்யவேண்டும்; அவனுக்கு எந்த வஸ்துவையும் இணையாக்குதல் தகாது.”
(2) “நீங்களெல்லோரும் ஒன்று சேர்ந்து ஆண்டவன் கயிற்றை (உத்தரவைப்) பற்றிக்கொள்ள வேண்டும்; நீங்கள் பிரிந்து நிற்பது கூடாது.”
(3) “உங்களுக்காக ஆண்டவன் ஏற்படுத்தியிருக்கும் அதிகாரியை மனமார ஒத்துக்கொள்ளுதல் வேண்டும். எனவே, இம்மூன்று விஷயங்களையும் கைக் கொள்ளுபவர்கள்மீது ஆண்டவன் பிரீதி வைக்கிறான்,” என்று நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றிருக்கின்றார்கள்.
இதனாலும், நாம் தெரிந்துகொள்ள வேண்டுவதென்னவெனின், வணக்கத்தின் ஒவ்வொரு காரியத்தையும் சொந்தமாய் ஆண்டவனுக்கேதான் செய்யவேண்டும். ஆனால், பஹிரங்கமானதும், மறைவானதும், சிறிதும் பெரிதுமான எவ்வித ஷிர்க்கும் செய்வது கூடாதென்பதேயாம்.
இதனால்தான் கதிரவன் உதயமாகும் போதும், மறைந்துகொண்டிருக்கும் போதும், நடு உச்சத்திலிருக்கும்போதும் வணங்குவது கூடாதென விலக்கப்பட்டிருக்கிறது. இம்மாதிரியான நேரங்களில் சில முஷ்ரிகீன்கள் சூரியனுக்கு வணக்கம் புரிந்து கொண்டு வருகிறார்கள். எனவே, அன்னவர்களுடன் இந்த நேர்மையான முஸ்லிம்கள் எங்கு ஒப்பாக்கப் பட்டுவிடப் போகிறார்களோ வென்று அச்சங்கொண்டுதான் அச்சமயங்களில் முஸ்லிம்கள் வணக்கம் புரிவது கூடாதென்று விலக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை யாம் உங்களுக்கு எடுத்தோத வேண்டிய அவசியமின்று.
எனவே, நமது மார்க்கத்தில் இவ்வளவு உஷாராய் ஷிர்க்கின் வாடையே வரக்கூடாதெனத் தடைசெய்யப்பட் டிருக்கும்போது, மறுபடியும் பாமர முஸ்லிம்களாய நேயர்கள் ஏனே இச்சந்தேகக் காரியத்தில் ஈடுபடல் வேண்டும்? இந்த ஷிர்க்குக்கு இடமுண்டாகு மிடங்களிலெல்லாம் உண்மையான முஸ்லிம்கள் நெடுந்தூரத்துக் கப்பாலல்லவோ விலகிப் போய் நிற்கவேண்டும்? இதனால்தான் ஆண்டவன் ஏனை வேத முடையவர்களைப் பின்காணுமாறு சொல்லி அழைக்கும்படி எம்பிரான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கட்டளையிட்டிருக்கிறான்:
“ஏ வேதமுடையவர்காள்! அல்லாஹ்வைத் தவிர்த்து வேறு யாருக்கும் வணக்கம் புரியமாட்டோம்; மேலும், அவனுக்கு எந்த வஸ்துவையும் இணையாக்க மாட்டோம்; இன்னமும் ஆண்டவனைத் தவிர்த்து எங்களுள்ளேயே சிலர் சிலரை ரப்புகளாய்ப் பற்றிக்கொள்ளமாட்டோம் என்ற, உங்களுக்கும் எங்களுக்கும் பொதுவான இவ்விஷயத்தின் பக்கல் வாருங்கள், என்று (ஏநபியே!) சொல்வீராக. அவர்கள் இதை ஒப்புக்கொள்ளாது புறக்கணிப்பார்களாயின், நாங்கள் முஸ்லிம்களா யிருக்கிறோ மென்பதற்கு நீங்கள் சாக்ஷியாயிருங்கள் என்று சொல்வீர்களாக” (3:63).
ஆதலின், இந்த வேத வாக்கியத்தினால் நாம் தெரிந்து கொள்வ தாவது: யூதர்களும், நசாராக்களும் ஆண்டவனைத் தவிர்த்துத் தங்களுள் ஒருவரை மற்றொருவர் ரப்புகளாய்ப் பற்றிக்கொண் டிருக்கின்றனர். எனவே, முஸ்லிம்களாகிய் நீங்கள் இவ்வாறெல்லாம் இருக்கக் கூடாது என்பதே. இவ்வாறே ஒருவன் ஒரு பெரியாரிடம் ஆண்டவனுக்குச் செய்யும் வணக்கமே போல் செய்வானாயின், இவனும் எஹூதிகளில், அல்லது நசாராக்களில் சேர்ந்தவனென்றேதான் கொள்ள வேண்டியதாய் ஏற்படுகிறது.
இஃதே போல் ஒருவன் மற்றொருவனை நோக்கி, “ஆண்டவனுதவியாலும், உங்களுடைய பரக்கத்தாலும் என்னுடைய இன்ன காரியம் நிறைவேறி விட்டது,” என்று கூறுவானாயின், இதுவும் நமது நேர்மையான ஷரீஅத்துக்கு முற்றும் முரணாணதாய்க் காணப்படுகிறது. ஏனெனின், மனிதர்களின் நாட்டங்களை நிறைவேற்றிவைக்கும் விஷயங்களில் ஆண்டவனுக் குதவியாளர் வேறு யாருமில்லை யென்பது உங்களுக்குத் தெரியும். விஷயம் இவ்வாறிருக்கும் போது, ஆண்டவனுடன் வேறொருவரைச் சேர்த்து இருவர்களின் பரக்கத்தாலும் நாட்டத்தாலும் தாம் என்னுடைய கோரிக்கை நிறைவேறிற்றென்று ஒருவன் கூறுவானாயின், இஃது எவ்வளவு பொருத்தமற்ற விஷயமாய்த் தென்படுகின்ற தென்பதை நீங்களே சிந்தனை செய்து பாருங்கள். இவ்வண்ணம் ஒரு சமயம் நபிகள் (ஸல்) அவர்களையே முன்னோக்கி ஒரு நாட்டுப் புறத்து அரபி சொன்னபோது, “ஆண்டவன் ஒருவனது நாட்டப்படி தான் என்னுடைய இக்காரியம் நிறைவேறிற்று,” என்று சொல்ல வேண்டும்; இது விஸயத்தில் ஆண்டவனுடன் வேறு எவரையும் சேர்த்துக் கூறுவது கூடாது என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்கள். இதை யொட்டியே புகாரீயில் ஜைத்பின் காலித் மூலமாய் நாயக வாக்கிய மொன்று தென்படுகின்றது:
“ஹுதைபிய்யாவில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு பஜ்ர் தொழுகையைத் தொழவைத்தார்கள். இரவு மழை பெய்திருந்தது. தொழுததன் பிறக நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
‘இன்றிரவு அல்லாஹ் என்ன சொன்னானென்பது உங்களுக்குத் தெரியுமா?’ என வினவ, நாங்கள் அல்லாஹ்வும் அவனது ரசூலும் மிக்க அறிந்தவர்கள் என்று சொன்னோம். அதற்குப் பின் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘இன்று விடியற்காலையில் சிலர், மனிதர்கள் மீது ஈமான் கொண்டவர்களாகவும் நக்ஷத்திரங்கள் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களாகவும், வேறு சிலர் நக்ஷத்திரங்களின்மீது நன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் என்மீது நம்பிக்கையற்றவர்களாகவும் எழுந்து இருக்கிறார்கள். ஆண்டவனது அருளாலும் அவனது கிருபையாலுமே (இன்றிரவு) நமக்கு மழைபெய்தது என்று சொல்லும் அவர்கள், என்மீது நன்னம்பிக்கை கொண்டவர்களாகவும்; நக்ஷத்திரத்தின் மீது நம்பிக்கையற்றவர்களாகவும் காணப்படுகிறார்கள்; இதை விடுத்து இன்ன இன்ன காரணங்களினால் தாம் மாரிபொழிந்தது; ஆண்டவனுதவியாலன்று என்று சொல்லும் இவர்கள் நக்ஷத்திரங்களின்மீது நன்னம்பிக்கை கொண்டவர்களாகவும், எனக்கு மாறு செய்தவர்களாகவுமிருந்து வருகிறார்கள்’ என்று சொன்னான், என்று (நபிகள் திலகம்) திருவாய் மலர்ந்தருளினார்கள்.” எனவே, இவ்வுலகினுக்கு வேண்டிய சௌகரியங்களை ஆண்டவன் செய்து கொடுக்கும்போது அவனுக்கு யாரையும் இணை துணையாய் நிறுத்தாட்டுவதும் கூடாதென்பதை நாம் மிகத் தெளிவாய்த் தெரிந்து கொள்ளுகிறோம்.
ஆனால், ஒரு மனிதன் ஜீவித்திருக்கும் எங்கள் ஷைகுடைய பரக்கத்தால் இக்காரியம் முடிவடைந்தது என்றுசொல்லி, அவர் ஆண்டவனிடம் எங்களுக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் இக் காரியம் முடிவடைந்தது எனக் கருத்துக் கொள்ளுவானாயின், இதிலொன்றும் பாதகமில்லை. ஏனெனினல், மறைவான ஒரு மனிதன் மறைவாயிருக்கும் மற்றொருவனுக்காக ஆண்டவனிடம் மன்றாடி, துஆ கேட்பானாயின், இஃது ஏக நாயனால் ஒப்புக்கொள்ளப்படுவதா யிருக்கின்றது. இவ்வாறில்லாது, நமது பெரிய குருவான ஷைகுதான் இக்காரியம் நமக்கு முடிவடைவதற்கு மிக்க உதவியாளரா யிருந்தார் என்பது போன்ற எண்ணங் கொள்வதுதான் கூடாதென நாம் அடிக்கடி கண்டித்துக்கொண்டு வருகிறோம். இப்படி எண்ணுவதால்தான் ஆண்டவனுக் கொப்பான ஒருவரை இது விஷயம் நிறைவேறுவதில் இணையாக்கி வைக்கின்றதா யிருக்கின்றதெனச் சொல்லுகிறோம்.
உண்மையை கவனித்து, ஒரு சிறிதேனும் ஞானமுடையவர்கள் இதை நன்கு உணர்ந்து கொள்வார்க ளென்பது திண்ணம். ஆகவே, ஆண்டவனுக்குரிய நேரான மார்க்கத்தில் சீராக நடந்து செல்லவேண்டிய தற்காகவும், இவ்வுலகம் மறு உலகமான இருலோகத்திலும் நன்மையைப் பெறுவதற்காகவும், ஒருவர் மற்றொருவரைப் பற்றி ஆண்டவனிடம் துஆ கேட்பதென்பது நமது மேன்மையான ஷரீ அத்தின்படி “ஆகுமான” தென்றும், இவ்வாறுதான் முஸ்லிம்களுக்குள் உண்மையான சகோதர வாஞ்சை இருக்கவேண்டு மென்றும் நமது ஷரீஅத் மிகவும் நன்றாய் வற்புறுத்துகிறது. இம்மாதிரி செய்வதே மெய்யான சகோதரத்துவ முஸ்லிம்களின் வேலையுமாகும்.
WRITTEN BY தாருல் இஸ்லாம் ஆசிரியர் குழு.
source: http://darulislamfamily.com/book-depot-t/books/116-ziayarathul-quboor/898-ziarat-al-kuboor-17.html