நபி வழியில் தண்ணீர் சிக்கனம்!
ஹழரத் அலி
ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான செய்தி
அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான ஏராளமான அருட்கொடை களை தனது தனிப்பட்ட பெருங் கருணையினால் வழங்கி வருகிறான். இந்த அருட்கொடைகளில் நாம் சுவாசிக்கும் காற்றுக்கு அடுத்தப்படியாக மிக முக்கியமானது தண்ணீர் என்பதை அனைவரும் அறிவோம்.
இந்த தண்ணீருக்கு அடிப்படை ஆதாரமாக அனைவரும் விளங்கக்கூடிய மழையை அல்லாஹ் நிறுத்திவிட்டால் மனிதர்கள் மட்டு மின்றி காட்டில் வாழ்கின்ற விலங்கினங்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதை பார்க்கிறோம்.
மழை பொழிய வேண்டிய காலங்களில் மழை பொழியாமல் இருந்தால், நாட்டில் உள்ள நீர்நிலை ஆதாரங்களான ஆறு, ஏரி, குளம் மற்றும் அணைகள் அனைத்தும் வறண்டுவிடுகின்றன. இதனால் மக்கள் குடிநீருக்கே அவதிப்படும் இந்தச் சூழலில் முஸ்லிம்கள் எந்த முறையில் தண்ணீர் சிக்கனத்தை மேற்க்கொள்ள வேண்டும் என்கின்ற அறிவை பெற்றுக் கொள்வது மிக அவசியம். இதற்கான வழிமுறைகளில் ஒருசிலவற்றை நபிமொழிகளின் அடிப்படையில் பார்ப்போம்.
உளுவின்போது கடைபிடிக்க வேண்டியவை:
தொழுகைக்காக உளு செய்வதன் மூலம் வணக்க வழிபாட்டு ரீதியாக தண்ணீரை ஐவேளை பயன்படுத்தி வருபவர்கள் தொழுகையாளிகள். இந்தத் தொழுகையாளிகள் உளு செய்யும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த அளவு நீரை செலவிட்டுள்ளார்கள் என்பதை அறிந்து அதனடிப்படையில் செயல்படுவது அவசியத்திலும் அவசியமாகும்.
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு “முத்து’ தண்ணீரில் ஒளு செய்வார்கள். (நூல் : முஸ்லிம்: 542)
ஒரு முத்து என்பது ஏறத்தாழ ஒரு லிட்டர் அளவு தண்ணீரைக் குறிக்கும். இந்த நபிமொழியை அறியாத காரணத்தினால் வறட்சி ஏற்பட்டு தண் ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள காலத்தில் கூட தொழுகையாளிகள் ஒவ்வொரு தொழுகையின் போதும் சுமார் ஐந்து லிட்டருக்கும் அதிகமான தண்ணீரைப் பயன்படுத்தி உளு செய்து வருகிறார்கள்.
மேற்கண்ட ஹதீஃதை ஒரு மஹல்லாவைச் சார்ந்த தொழுகையாளிகள் அனைவரும் நடை முறைப்படுத்தினால் ஒருவேளை தொழுகையின் போதே பலநூறு லிட்டர் தண்ணீரை மிச்சப்படுத்த முடியும் எனும்போது ஐவேளை தொழுகையின் மூலமாக பல ஆயிரம் லிட்டர் தண்ணீரை மிச்சப் படுத்த முடியும் என்பதை உணர்ந்து மேற்கண்ட நபிமொழியின் அடிப்படையில் தொழுகையாளிகள் செயல்பட வேண்டும். மேலும் உளுவின் போது உறுப்புகளை மூன்று தடவை கழுவுவதையே நபிவழி என்று நினைத்து இதனடிப்படையிலேயே தொழுகையாளிகள் செயல்பட்டு வருகிறார்கள்.
ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உளுவின்போது மூன்று முறை உறுப்புகளை கழுவியதைப் போன்றே ஒரு முறையும் கழுவியுள்ளார்கள்.
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த “உளு’வை உங்க ளுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? (எனக் கேட்டு விட்டு ஒவ்வொரு உறுப்பையும்) ஒருமுறை கழுவி “உளு’ செய்தார்கள். (நூல்: அபூதாவூத் 119)
இந்த ஹதீஃதை நடைமுறைப்படுத்தியும் நாம் தண்ணீரை ஓரளவு சேமிக்க முடியும். இதைப் போன்றே உளு முறியாமல் இருந்தும் அடுத்த நேர தொழுகைக்காக மீண்டும் ஒளு செய்து தொழுவதே பெரும்பாலான தொழுகையாளிகளின் பழக்கமாக உள்ளது. ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கா வெற்றி தினத்தன்று ஒருமுறை செய்த உளுவினால் பல நேரத் தொழுகைகளைத் தொழுதார்கள். (அறிவிப்பாளர்: புரைதா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 466)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த வழிமுறையைப் பின்பற்றி குறைந்தபட்சம் மஃரிபு தொழுகைக்காக செய்த உளுவோடு இஷா தொழுகையையும் தொழுதால் தண்ணீரை பெருமளவுக்குச் சேமிக்க முடியும். இன்னும் சிலர் வீட்டில் உளு செய்துவிட்டு பள்ளிக்கு வரும்போது கால்கள் சுத்தமாக இருக்கும் நிலையிலேயே பல லிட்டர் தண்ணீரைக் கால்களில் ஊற்றிய பிறகே பள்ளிக்குள் நுழைகிறார்கள். கண்டிப்பாக இது தவிர்க்கப்படவேண்டிய நடைமுறையாகும். இது தொடர்பாக ஹதீஃத்களில் தரப்பட் டுள்ளதை பாருங்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மகனின் அடிமைப் பெண் கூறியதாவது.
நான் உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் “”நீளமான கீழாடை அணியும் பெண்ணாக இருக்கி றேன். அசுத்தமான இடங்களில் நடக்கவும் செய்கிறேன். (என் ஆடையின் கீழ்ப்பகுதி அசுத்தமான இடங்களில் படுகிறது)” என்று சொன்னேன். அதற்கு அவர்கள் “”அசுத்தமான இடங்களை அடுத்துள்ள தூய்மையான இடங்கள் ஆடையின் கீழ்ப் பகுதியைத் தூய்மைப்படுத்திவிடும் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதாக” உம்முஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவூத் 326,327)
கீழாடையில் அசுத்தம் பட்டிருந்தாலும் சுத்த மான இடத்தை கடந்து செல்லும்போது அந்த ஆடையில் உள்ள அசுத்தம் நீங்கிவிடும் என்று மிக எளிமையான நடைமுறையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்க இதற்கு மாற்றமாக தூய்மை என்ற பெயரில் சுத்தமாக உள்ள கால்களை பல லிட்டர் தண்ணீரை செலவு செய்து மீண்டும் எதற்காக கழுவ வேண்டும்? இது தண்ணீரை வீணடிக்கும் செயலா இல்லையா?
குளிக்கும்போது :
குளியலறைக்குச் சென்று குழாயை திறந்து வைத்துக்கொண்டு குளிப்பதால் எந்தளவு நீரை பயன்படுத்தி குளிக்கிறோம் என்பதை அறியாமல் இருந்து வருகிறோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குளிப்பதற்காக எந்தளவு நீரை பயன்படுத்தியுள்ளார்கள் என்பதைப் பார்ப்போம்.
அபூஜஃபர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது:
என்னிடம் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். உன் தந்தையின் சகோதரரின் புதல்வர் வந்து பெருந்துடக்கிற்காகக் குளிப்பது எப்படி? என்று கேட்டார். அதற்கு நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று கை நிறையத் தண்ணீர் அள்ளி அதை தமது தலையில் ஊற்றுவார்கள்; பின்னர் உடல் முழுவதும் ஊற்றுவார்கள் என்று சொன்னேன். அதற்கு ஹசன் அவர்கள் நான் அதிகமான முடியுடையவனாக இருக்கின் றேனே (மூன்று கைத் தண்ணீர் போதாதே) என்று கேட்டார். அதற்கு நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மை விட அதிக முடியுடையவர்களாக இருந்தார்கள் (அவர்களுக்கே அது போதுமானதாயிருந்ததே) என்று கூறினேன். (நூல்: புகாரீ : 256)
நீளமாக முடி வைத்திருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே கடமையான குளிப்பின்போது தலையை கழுவுவதற்கு சுமார் மூன்று கை நிறையத் தண்ணீரையே பயன்படுத்தியுள்ளார்களே எனும்போது, தண்ணீர் பற்றாக் குறையின்போதும் கூட நாம் தலையை கழுவுவதற்கு மட்டுமே பல லிட்டர் தண்ணீரை பயன்படுத்துவது முறைதானா என்பதைச் சிந்திக்க வேண்டும்.
தாகத்தை தணிக்கும் அற்புத வழிமுறை :
கடும் வெயிலில் அலைந்துவிட்டு வீடு வந்து சேர்ந்தவுடன் முதல் வேலையாக ஃபிரிஜ்ஜை திறந்து பாட்டிலில் உள்ள தண்ணீரை எடுத்து அதை ஒரே மூச்சில் கடகடவென பருகுவதைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்கள். இப்படி குடித்தால்தான் தாகம் தீரும் என்றும் நினைத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு நீர் அருந்தினால் ஒருபோதும் தாகம் தணியாது. மாறாக சற்று நேரத்தில் மீண்டும் தாகம் எடுக்கும். இதற்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ள அழகிய வழி முறையைப் பாருங்கள்.
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பருகும் போது மூன்று முறை மூச்சு விட்டு(ப் பருகி) வந் தார்கள். மேலும் இதுவே நன்கு தாகத்தைத் தணிக் கக்கூடியதும் (உடல்நலப்) பாதுகாப்பிற்கு ஏற்றதும், அழகிய முறையில் (உணவை) செரிக்கச் செய்யக் கூடியதும் ஆகும் என்று கூறினார்கள். ஆகவேதான், நானும் பருகும்போது மூன்று முறை மூச்சு விட்டு(ப் பருகி) வருகிறேன. (நூல்: முஸ்லிம் 4126)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய இந்த வழிமுறையைக் கடைபிடித்தால் நன்மைகள் பல ஏற்படுவதை அனுபவரீதியாக உணர முடியும். குறிப்பாக கால் லிட்டருக்கும் அதிகமான நீரை பருகியும் தாகம் தணியாமல் இருப்பவர்கள், 100 மி.லி. அளவு கொண்ட நீரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய இந்த முறைப்படி பருகினால் தாகம் தீருவதைக் கண் கூடாகப் பார்க்கலாம்.
யார் யாரோ சொல்லும் “”டயட்டுகளை”யயல்லாம் மிகக் கவனத்தோடு செயல்படுத்தும் முஸ்லிம் சமுதாயம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய இந்த வழிமுறையை தொடர்ச்சியாகப் பின்பற்றினால் மருத்துவம் என்று சொல்லிக் கொண்டு கண்டதையும் உளறும் எவரது பின்னாலும் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த வழிகாட்டுதலின் அடிப் படையில் நீர் பருகும்போது குறைந்த அளவு நீர் பருகினாலே நமது உடல் சீராக இயங்குவதற்கான ஆற்றல் கிடைத்துவிடும். தாகம் எடுக்காமலே நீர் அருந்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாது. உண்மையில் நீர் தேவைப்படும்போது நமது உடலே நமக்கு நீரின் தேவையை உணர்த்தும். அப்போது மட்டுமே நீரைப் பருகும் பழக்கம் ஏற்படும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்த இந்த வழிமுறைகளை இனி வரும் காலங்களில் நாம் பேணி நடந்தால் தண்ணீரைச் சேமிப்பதோடு இன்ஷா அல்லாஹ் உடல் நலத்தையும் பெறலாம் என்பதை உணர்ந்து செயல்படுவோமாக.
குறிப்பு: ஒரு லிட்டர் தண்ணீரில் உளு செய்ய முடியுமா? மூன்று லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தி தலையைக் கழுவ முடியுமா? இது நடைமுறைச் சாத்தியமா என்றெல்லாம் அறிவை பயன்படுத்தி வீண் சர்ச்சைகள் செய்வதை தவிர்த்துக் கொண்டு ஹதீஃதில் உள்ளதை நம்மால் இயன்ற அளவு நடைமுறைப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். மேலும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு “மக்கூக்’ நீரைக் கொண்டு உளு செய்பவர்களாகவும் ஐந்து “மக்கூக்’ நீரைக் கொண்டு குளிப்பவர்களாகவும் இருந்தார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: நஸாயீ 72)
இந்த ஹதீஃதில் கூறப்பட்டுள்ள ஒரு “மக்கூக்’ எனப்படும் அளவு ஏறத்தாழ நான்கு லிட்டர் ஆகும். அப்படியயன்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுமார் நான்கு லிட்டர் தண்ணீரில் உளு செய்துள்ளார்கள். இதை போன்றே சுமார் இருபது லிட்டர் தண்ணீரில் குளித் துள்ளார்கள் என்பதையும் அறியமுடிகிறது. தண் ணீர் தாராளமாக கிடைக்கும் காலங்களில் மேற் கண்ட அளவு நீரை நாம் பயன்படுத்திக் கொள் ளலாம். வறட்சி ஏற்பட்டு அதன் மூலாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் முன்னர் கூறிய ஹதீஃத்களின் அடிப்படையில் குறைந்தபட்ச அளவு நீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என் பதை உணர்ந்து செயல்பட்டால் அனைத்து நபி மொழிகளையும் நடைமுறைப்படுத்திய நன்மை நமக்குக் கிடைக்கும். நபிமொழிகளை முறையாக புரிந்து அதன்படி நடக்கும் பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்புரிவானாக.