பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகளே
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓரு சொற்பொழிவில் கண்கள் சிவக்க குரலை உயர்த்தி கூறினார்கள்:
”செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். நேர்வழியில் சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேர்வழியாகும். விஷயங்களில் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டது (பித்அத்) ஆகும். ஓவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்.” அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : முஸ்லிம்
இஸ்லாம் என்பது இறைவனால் முழுமைப்படுத்தப்பட்ட ஒரு மார்க்கமாகும். அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகின்றான்:
”இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பரிபூரணமாக்கி விட்டேன். மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்”. (அல்குர்ஆன் 5:3)
ஒரு முறை அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹாஅவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை எவ்வாறிருந்தது என்று வினவப்பட்டபோது ”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை குர்ஆனாகவே இருந்தது” என்று அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹாஅவர்கள் கூறினார்கள்.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:
”அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவுவைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப் போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது”. (அல்குர்ஆன் 33:21)
எனவே முஸ்லிம் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் ஒருவர், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை முறையையே தமது வாழ்வு நெறியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இதைத் தவிர ஏனைய கொள்கைகள் அல்லது பாதைகள் அனைத்தும் வழிகேடுகளாகும். அவைகள் எவ்வளவு பெரிய மகான்கள் அல்லது பெரியார்களால் தோற்றுவிக்கப்பட்டிருப்பினும் சரியே!
நபித்தோழர் இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
”ஒரு முறை நபியவர்கள் நீண்டதொரு கோட்டினை வரைந்தார்கள். பின் அக்கோட்டுக்கு வலது இடது புறமாகப் பலகோடுகளை வரைந்தார்கள். பின்பு இதோ இருக்கும் நேர்கோடு (போன்றது) தான் நான் உங்களுக்குக் காட்டிய வழிமுறையாகும். அதற்குக் குறுக்கே இரு மருங்கிலும் இருக்கும் பாதைகள் ஷைத்தானுடைய பாதைகளாகும். அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஷைத்தான் இருந்து கொண்டு அதன் பக்கம் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றான் என்று கூறி விட்டுப் பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيماً فَاتَّبِعُوهُ وَلا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ
”நிச்சயமாக இது தான் எனது நேரான பாதையாகும், எனவே இதையே நீங்கள் பின்பற்றுங்கள் (இதுவல்லாத) வேறு பாதைக ளைப் பின்பற்ற வேண்டாம். ஏனெனில் அவை நேரான வழியை விட்டும் உங்களைப் பிரித்துத் தடுத்திடும். நீங்கள் நல்லறிவு பெறவேண்டுமென்பதற்காக அல்லாஹ் உங்களுக்கு இந்த உபதேசத்தைச் செய்கின்றான். (அல் அன்ஆம் 153)
அல்லாஹ் மற்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் பரிபூரணமாக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தில் புதிதாக ஒரு அமலைச் சேர்ப்பது என்பது, அல்லாஹ்வுக்கோ, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கோ தெரியாத ஒன்றை நாம் கற்றுத்தருவது போன்றதாகும்.
நாம் செய்ய வேண்டிய அனைத்து வகையான அமல்களைப் பற்றியும் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் தெளிவாக விளக்கப்பட்டு மார்க்கம் முழுமைப்படுத்தப் பட்டிருக்கும் போது நாம் புதிய அமல்களைச் சேர்ப்பதற்கு வேண்டிய அவசியம் எதற்கு?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள்:
”நமது அனுமதியில்லாமல் ஓர் அமலை எவரேனும் செய்தால் அது நிராகரிக்கப்படும” (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஆதாரம் :புகாரி, முஸ்லிம்)
”(அமலில்) ஒவ்வொரு புதுமைப் பழக்கமும் வழிகேடு தான்: வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு உரியவை தான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.”(ஆதாரம்: அஹ்மத்)
எனவே எனதருமை சகோதர சகோதரிகளே! ஷாதுலிய்யா தரீக்காவின் பெயரில்
நமது ஊர்களில் நடைபெறுகின்ற உடல் அசைவுகளுடனான ஆட்டம்,
பாட்டத்துடன் கூடிய ஹல்கா எனப்படும் திக்ரு மஜ்லிஸ்கள்,
சினிமாவின் லேட்டஸ்ட் இசைக்கேற்ப பாடப்படுகின்ற மௌலூது போன்ற அனைத்தும்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் காட்டித்தரப்படாத மார்க்கத்தில் புதிதாக நுழைக்கப்பட்ட நூதன அனுஷ்டானங்கள் (பித்அத்துகள்) என்பதை நாம் உணர வேண்டும்.
பித்அத்துகளில் நல்லவை கெட்டவை என்றெல்லாம் கிடையாது. பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகளேயாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓரு சொற்பொழிவில் கண்கள் சிவக்க குரலை உயர்த்தி கூறினார்கள்: –
”செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். நேர்வழியில் சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேர்வழியாகும். விஷயங்களில் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டது (பித்அத்) ஆகும். ஓவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்.” அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : முஸ்லிம்
பித்அத் என்று நாம் கூறுவது மார்க்க விஷயங்களில், அமல்களில் புதுமையைப் புகுத்துவதாகும். முஸ்லிமாகிய நாம் அனைவரும் மார்க்கத்தில் புதிதாக புகுத்தப்பட்ட ஷாதுலிய்யா தரீக்கா, காதிரிய்யா தரீக்கா போன்ற பித்அத்தான வழிமுறைகளை புறக்கணிக்க வேண்டும். இதை சில உதாரணங்களின் மூலம் விளக்குகிறேன்.
1) பஜ்ர் தொழுகையின் ”ஃபர்லான இரண்டு ரக்அத்து”களுக்குப் பதிலாக நன்மையை அதிகமாகச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஒருவர் அதை நான்கு ரக்அத்துகளாக அதிகரித்தால் நாம் எவ்வாறு அதை நிராகரிப்போமோ அதே போலத் தான் இறைவனை சென்றடையும் வழி என்று கூறுகின்ற இந்த தரீக்காவாதிகளின் வழிமுறையையும் புறக்கணிக்க வேண்டும். ஏனென்றால் ஒருவர் அல்-குர்ஆனையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த வழிமுறைகளைப் பின்பற்றினாலேயே இறைதிருப்தியைப் பெற்றுக்கொள்வார்.
2) குர்ஆன் ஓதுவது அதிக நன்மைகளைப் பெற்றுத் தருவதாக இருக்கிறது. அதற்காக ஒருவர் தொழுகையின் ருகூவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத்தந்த திக்ருகளை ஓதுவதற்குப் பதிலாக சூரத்துல் யாசீனை ஓதுங்கள் என்று கூறினால் நாம் எவ்வாறு அதை நிராகரிப்போமோ அதே போலத்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைகளில் இல்லாத தரீக்காவாதிகள் சொல்லித்தருகின்ற அமல்களை, திக்ரு முறைகளையும் நிராகரித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத் தந்த திக்ருகளையும் அமல்களையும் செய்ய வேண்டும்.
ஏனென்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”(அமலில்) ஒவ்வொரு புதுமைப் பழக்கமும் வழிகேடு தான்: வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு உரியவை தான்” என அவர்கள் எச்சரித்துள்ளார்கள்” (ஆதாரம்: அஹ்மத்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முஃமினான ஒவ்வொருவரும் பின்பற்றி நடக்கவேண்டியது இறைக் கட்டளையாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்.
”மேலும் (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். இன்னும் எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்.” (அல்குர்ஆன் 59:7)
மேலும் கூறுகின்றான்,
”ஆகவே எவர் அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களைச் சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினைத் தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும்”. (அல்குர்ஆன் 24:63)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
”பித்அத் புரியும் ஒருவரது தொழுகை, நோன்பு, தர்மம், உம்ரா, குர்பானி, தீனுக்கான முயற்சிகள், தீனில் செலவழித்தல், அனைத்தும் அல்லாஹ்விடத்தில் ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. குழைத்த மாவில் இருந்து தலைமுடி எவ்வளவு இலகுவாக வெளியேற்றப்படுமோ, அதுபோல் பித்அத் செய்யும் ஒருவன் இஸ்லாத்தில் இருந்து வெளியேறுவான்” அறிவிப்பவர்: ஹுதைபா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: இப்னு மாஜா
எனவே எனதருமை சகோதர, சகோதரிகளே! முன்னோர்களின் வழிமுறையைப் பின்பற்றுகின்றோம் என்ற பெயரில் கண்மூடித்தனமாக மார்க்கத்திற்கு விரோதமான செயலைச் செய்யாமல் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தந்த வழிமுறைகளைப் பின்பற்றி நடப்போமாக! அல்லாஹ் அதற்கு அருள்பாலிப்பானாகவும். ஆமீன்.
”Jazaakallaahu khairan” சுவனத்தென்றல்நிர்வாகி.