ஜும்ஆவில் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம்!
ஜும்ஆவில் இமாம் மிம்பரில் ஏறி நின்று குத்பா ஓதி முடித்த பின் ”வல திக்ருல்லாஹி அக்பர்” என்று சொல்லி முடித்த பிறகு உடனே அவர் இறங்க ஆரம்பிப்பார்.
இமாம் இறங்குகின்ற நேரத்தில் முஅத்தீன் (மோதினார்-மோதியார்) அவர்கள் இகாமத் சொல்வார்.
இந்த இகாமத் முடிந்த பிறகுதான் தொழுகைக்கு வந்து இருக்க கூடிய மக்கள் தொழுகைக்காக எழும்ப வேண்டும். இதுதான் இஸ்லாமிய ஃபிக்ஹு சட்டம். ஆனால் எல்லா பள்ளிவாயில்களிலும் இந்த நடைமுறை படி நடப்பதே இல்லை என கேள்வி பட்டேன்.
பேஷ் இமாம் மிம்பரில் நின்று குத்பா ஓதி முடித்ததும் ”அல்லாஹ்வின் திக்ர் மிக பெரியது” என்று சொன்னவுடன் இறங்குவார். ஆனால் இமாம் ”வல திக்ருல்லாஹி அக்பர்” சொல்வதற்கு முன்பே எல்லோரும் எழுந்து நிற்க ஆரம்பித்து விடுகின்றனர்.
இமாம் அதை சொல்லி முடிக்கவும் வேண்டும். முஅத்தீன் சாஹிப் இகாமத் சொல்லி முடிக்கவும் வேண்டும். அதற்கு பின்பு தான் தொழுகைக்காக வந்தவர்கள் எழுந்து நிற்க வேண்டும். இதுதான் முறை.
இதை விட்டு விட்டு இமாம் குத்பாவை முடிக்க போகிறார் என்று தெரிந்ததும் எழுந்து நிற்பது ஸுன்னத் அல்ல. இதை கண்டிப்பாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.
இதற்கு காரணம் என்ன தெரியுமா?
இமாம் ”வல திக்ருல்லாஹி அக்பர்” என்று முடித்ததில் இருந்து தொழுகைக்காக அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கட்டுவதற்கும் இடைப்பட்ட நேரம் மிகவும் விசேஷமான நேரம். அதை யாரும் கவனிப்பதே இல்லை.
அது மிக மிக விசேஷமான நேரம். 2 நிமிடம் தான்! அந்த 2 நிமிட நேரம் தான் மிக விழிப்பாக இருந்து பயன்படுத்தி கொள்ள வேண்டிய நேரம். அல்லாஹ்வுக்கு மிக மிக விருப்பமான நேரம் என்கிறான்.
அந்த 2 நிமிடங்களில் கேட்கும் ‘துஆ’வை திரை இன்றி நிறைவேற்றிக் கொடுப்பானாம். துன்யா – ஆகிறா போன்ற எந்த தேவையாக இருந்தாலும் அந்த நேரத்தில் கேட்கும் துஆ கபூலாகும். விடிய விடிய தொழுது அழுது துஆ செய்வதை விட, நோன்பு இருந்து கேட்கும் ”துஆ”க்களைவிட இப்படியான சிறு துரும்பு போன்ற ”துஆ” கபூல் ஆகும் நேரங்களை விட்டு விடாமல் பயன்படுத்திக் கொள்வதில் மிக உன்னிப்பாக இருங்கள்.
குறுகிய நேரத்தில் கூடுதலான பலன்களை ஏன் விட வேண்டும்?
இமாம் குத்பா முடித்ததும் “வல திக்ருல்லாஹி அக்பர்’ சொல்லிய பின் முஅத்தீன் இகாமத் சொல்லி, பின் இமாம் தக்பீர் கட்டும் வரை உள்ள அந்த மிக குறுகிய நேரம் மிக மிக உன்னிப்பாக சப்தம் இல்லாமல் அதாவது சட சட வென்று எழுந்து அமளி துமலியாக இருக்காமல் அமைதியாக ”துஆ” செய்து விட்டு எழும்புங்கள். இந்த அரிதான அருமையான சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள்.
தகவல்: இமாம் ஃபஜ்லூர் ரஹ்மான் ஆலிம்