இந்திய அரசியலமைப்புச் சட்டமும் குழந்தைகளும்
குழந்தை என்று யாரைக் குறிப்பிடலாம்?
சர்வதேசச் சட்டத்தின்படி, 18 வயதுக்குக் கீழுள்ள ஒவ்வொரு மனிதனும் குழந்தை என்று கருதப்படுவார். உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விளக்கம் இது. ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் குழந்தைகளுக்கான உரிமைகள் வரையறுக்கப்பட்டது. அவற்றின்படியும் இந்தக் கருத்தே பொதுவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. (யு என்ஸிஆர்ஸி) இந்த வரையறைகள் பலநாடுகளில் சட்டத் திருத்தங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இந்தியாவைப் பொறுத்தவரை எப்போதுமே 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சட்டபூர்வமான உரிமைகளும் பாதுகாப்பும் பெற்ற, தனிப் பிரிவினராகவே கருதப்படுகின்றனர். இதனால்தான், 18 வயதானவர்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை, வண்டி ஓட்ட உரிமம் பெறும் தகுதி, சட்டபூர்வமான ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளும் உரிமை ஆகியவை வழங்கப்படுகின்றன. 18 வயதுக்குக் குறைந்த பெண்ணும் 21 வயதுக்குக் குறைந்த ஆணும் திருமணம் செய்துகொள்வது 1929இல் குழந்தைத் திருமணத் தடை சட்டத்தின் மூலம் தடுக்கப்பட்டது.
குழந்தை என்றால் யார் என்பதைப் பற்றி பல்வேறு கோணங்களில் விளக்கும் பிற சட்டங்கள், யுஎன்ஸிஆர்ஸியின் வழிகாட்டு நெறிகளுடன் முழுவதும் ஒத்துப் போகாத வண்ணம் இருக்கின்றன. ஆனாலும் கூட, முன்பே குறிப்பிட்டது போல, சட்டபூர்வமாகப் பெண்களின் பருவமுதிர்வு வயது 18 என்றும், பையன்களுக்கு 21 வயது எனவும் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயமாக இருக்கிறது.
இப்படிப் பார்த்தால், கிராமம், சிறு நகரம், நகரம் ஆகிய பகுதிகளில் உள்ள 18வயதுக்குக் கீழே உள்ள அனைவரும் குழந்தைகளாகவே கருதப்பட்டு நடத்தப்பட வேண்டியவர்கள். உங்களது உதவியும் ஆதரவும் அவர்களுக்குத் தேவை.
குழந்தை என்பதைத் தீர்மானிக்கும் விஷயம் அந்த நபரின் வயது மட்டும்தான். 18 வயதுக்கு உட்பட்டவர்கள் திருமணம் ஆகியிருந்து, குழந்தைகள் இருந்தாலும்கூட, குழந்தையாகவே அங்கீகரிக்கப்படுவார்கள்.
முக்கிய அம்சங்கள்:
18 வயதுக்குக் கீழ் இருக்கும் அனைத்து நபர்களும் குழந்தைகள்தாம்.
குழந்தைப் பருவம் என்பது ஒவ்வொரு மனிதரும் கடந்தே ஆக வேண்டிய ஒரு பருவம்.
குழந்தைகள், தங்களது குழந்தைப் பருவக் காலத்தில் பல்வேறு விதமான அனுபவங்களைப் பெறுகிறார்கள்.
அனைத்துக் குழந்தைகளும், கொடுமைக்கு உள்ளாவது, தவறாகப் பயன்படுத்தப்படுவது ஆகியற்றிலிருந்து காப்பாற்றப்பட வேண்டியவர்கள்தாம்.
1. குழந்தைகளுக்கு எதனால் சிறப்புக் கவனம் தேவைப்படுகிறது?
தாங்கள் வாழும் சூழ்நிலைகளால், பெரியவர்களை விட அதிகமாக பாதிக்கப்படக்கூடிய பலவீனமான நிலையில் குழந்தைகள் இருக்கிறார்கள்.
ஆகவே, மற்றெந்தப் பிரிவினரையும் விட, அவர்கள் சார்ந்த சமூகம் மற்றும் அரசாங்கங்களின் நடவடிக்கைகளாலும் நடவடிக்கையின்மையினாலும் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.
நமது சமூகத்தையும் சேர்த்து, பல்வேறு சமூகங்களில் குழந்தைகள், அவர்களுடைய பெற்றோரின் சொத்துக்களாகக் கருதப்படுக்கிறார்கள். அவர்கள் இன்று பெரியவர்கள் அல்ல என்றும் சமுதாயத்தின் முன்னேற்றத்தில் அவர்களுக்குப் பங்கு இல்லை என்றும் கருதப்படுகிறார்கள்.
குழந்தைகள், தங்களுக்கு என்று மனமும், புத்தியும் கொண்டவர்கள் என்றோ தனிக்கருத்தை உடையவர்கள் என்பதாகவோ, தனக்கு வேண்டியது பற்றித் தேர்ந்தெடுக்கும் திறன் உள்ளவர்கள் எந்த விஷயத்தைக் குறித்தும் முடிவு செய்யும் திறமை உள்ளவர்கள் என்றோ பெரியவர்கள் கருதுவதில்லை.
பெரியவர்கள், குழந்தைகளை வழிநடத்துவதற்குப் பதிலாக அவர்களது வாழ்க்கை குறித்த அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார்கள்.
குழந்தைகளுக்கு ஓட்டுரிமை கிடையாது. அதே போல அரசியல் பலமும் கிடையாது. பொருளாதாரத்திலும் பலவீனமாகவே இருக்கிறார்கள். இதனாலேயே அவர்களது குரலும் கோரிக்கைகளும் பெரும்பாலும் எடுபடுவதில்லை.
குழந்தைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது, குரூரமாக நடத்தப்படுவது போன்ற அவலங்களுக்கு உள்ளாகக் கூடிய பலவீனமான நிலையில் உள்ளார்கள்.
2. குழந்தைகளுக்கான உரிமைகள் என்ன?
18 வயதிற்குள் இருப்பவர்கள் சட்ட ரீதியான உரிமைகள், பாதுகாப்பு உத்தரவாதங்கள் ஆகியவற்றைப் பெறத் தகுதியும் உரிமையும் பெற்றவர்கள். இவை தவிர சர்வதேச சட்டங்களில் நாம் ஏற்றுக் கொண்டவை மூலமாகக் கிடைக்கும் உரிமைகளுக்கும் உரியவர்கள்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம்
இந்திய அரசியலமைப்புச் சட்டம், அனைத்துக் குழந்தைகளுக்கும் குறிப்பிட்ட உரிமைகளை அளித்திருக்கிறது. இவற்றை இந்தக் காரணத்திற்காகவே சட்ட அமைப்பில் சேர்த்துள்ளார்கள் அவை:
6-14 வயது பிரிவினர் அனைவருக்கும் கட்டாயமாக ஆரம்பக் கல்வி இலவசமாகப் பெறுவதற்கான உரிமை (சட்டப்பிரிவு 21எ)
14 வயது பூர்த்தியாகும் வரை தீங்கு விளைவிக்கும் சூழ்நிலையில் வேலை செய்யத் தடை என்கிற பாதுகாப்பு உரிமை (சட்டப் பிரிவு 24)
பொருளாதார நிலை காரணமாக வேறு வழியின்றி அவர்களது வயது அல்லது வலிமையை மீறிய பணிகளில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்துவது, கொடுமைக்குள்ளாவது ஆகியவற்றுக்குத் தடை என்ற பாதுகாப்பு உரிமை (சட்டப் பிரிவு 39) (இ)
இவற்றைத் தவிர, இந்தியாவிலுள்ள பிற குழந்தைப் பருவ வயதைக் கடந்த ஆண்/பெண் ஆகியோருக்கு இருக்கும் அனைத்து உரிமைகளும், குழந்தைகளுக்கும் இருக்கிறது.
சமான உரிமை (சட்டப்பிரிவு 14)
பாரபட்சமாக நடத்தப்படுவதற்கு எதிரான உரிமை (சட்டப்பிரிவு-15)
தனிப்பட்ட சுதந்திரத்திற்கும், சட்டபூர்வமான செயல்பாடுகளுக்குமான உரிமை (சட்டப்பிரிவு 21)
இழிதொழில் வணிகத்திலிருந்து பாதுகாக்கப்படவும், வலுக்கட்டாயமாகக் கொத்தடிமைகளாக ஈடுபடுத்தப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படவும் உரிமை (சட்டப்பிரிவு – 23)
சமுதாயத்தில் பலவீனமாக இருக்கும் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் சமூக அநீதிகளால் பாதிக்கப்படுவதிலிருந்தும் அனைத்து வகையானச் சுரண்டல்களிலிருந்துப் பாதுகாக்கப்பட உரிமை (சட்டப்பிரிவு 46)
எந்த அரசாங்கமாக இருந்தாலும், அதற்கென்று சில கடமைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குச் சிறப்பான சலுகைகள் அளிக்கப்பட வேண்டும் (சட்டப் பிரிவு 15) (3)
மக்களில் பலவீனமான பிரிவினருக்குக் கல்வி மேம்பாட்டுக்கான வழிவகை செய்தல் (சட்டப் பிரிவு 46)
சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாத்தல் (சட்டப் பிரிவு-29)
தனது மக்களுடைய உணவின் தரம் மேம்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியத்தில் தொடர் முன்னேற்றத்துக்கான செயல்களில் ஈடுபடல் (சட்டப் பிரிவு – 47)
அரசியலமைப்புச் சட்டத்தைத் தவிர குழந்தைகளின் நலனுக்காகவே குறிப்பிட்ட வகையில் பல சட்டங்கள் இருக்கின்றன. பொறுப்புணர்வு கொண்ட ஆசிரியர்கள் மற்றும் குடிமகன்களாக இருக்கும் நீங்கள் இவற்றைப் பற்றியும், இவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றியும் தெரிந்து வைத்திருப்பது நல்லது. இவை, இந்தக் கையேட்டில் பல பகுதிகளில் விவரிக்கப்பட்டு இருக்கின்றன. அவை எப்படிப்பட்ட விஷயங்களைக் கையாள்வதற்காக என்பவை பற்றியும் விவரிக்கப்பட்டு இருக்கின்றன.
குழந்தைகளுக்கான உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகளின் மாநாட்டுத் தீர்மானங்கள்
குழந்தைகளுக்கு எந்த விதமான சட்டரீதியிலான உரிமைகள் இருக்க வேண்டும் என்பதைப்பற்றி ஐக்கிய நாடுகள் மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள், சர்வதேசச் சட்டங்களாக அங்கீகாரம் பெற்றுள்ளன. இவை பொதுவாக சிஆர்ஸி என்று அறியப்படுகின்றன.
குழந்தைகளின் உரிமை குறித்து ஐ.நா.வின் மாநாட்டுத் தீர்மானங்களின் குறிப்பிடத்தக்க அம்சங்கள்:
இந்தத் தீர்மானங்கள் 18 வயது வரையுள்ள பெண்கள் மற்றும் பையன்கள் ஆகிய இருபாலருக்கும் பொதுவானது. இந்த வயதில் இவர்களுக்குத் திருமணம் ஆகி இவர்களுக்கே குழந்தைகள் இருந்தாலும் இவை பொருந்தும்.
குழந்தையின் அதிகபட்ச நலன் பாரபட்சமற்ற நிலை மற்றும் ‘குழந்தையின் அபிப்பிராயங்களுக்கு மதிப்பு அளிப்பது’ போன்ற வழிகாட்டு நெறிகளின்படியே இருந்தது.
குடும்பம் என்ற அமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய இந்த மாநாடு, குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியது.
சமுதாயத்தில் குழந்தைகளுக்கான நியாயமான மற்றும் சம அளவிலான உரிமைகளைப் பெறுவதை அந்தந்த நாடுகளின் அரசுகள் உறுதி செய்ய வேண்டும்;இது அரசாங்கத்தின் கடமை என்று மாநாடு தெரிவித்தது.
குழந்தைகளுக்குச் சம அளவிலான சிவில், அரசியல், சமூக, பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு உரிமைகள் இருக்க வேண்டும் என்பதை மாநாடு அறிவுறுத்தியது.
இந்த உரிமைகள்:
உயிர் வாழும் உரிமை
பாதுகாப்பு
வளர்ச்சி
பங்கேற்பு
உயிர் வாழும் உரிமை என்பதில் கீழ்க்கண்டவை அடங்கும்:
வாழ்வதற்கான உரிமை
சிறந்த தரமான ஆரோக்கியத்தைப் பெற உரிமை
சத்துணவு
போதிய அளவு தரமான வாழ்க்கை
அடையாளத்திற்கான ஒரு பெயர் மற்றும் தேசிய அடையாளம்
வளர்ச்சி காண்பதற்கான உரிமை என்பதில் கீழ்க்கண்டவை அடங்கும்:
கல்வி கற்பதற்கான உரிமை
ஆரம்ப கட்டக் குழந்தைப் பருவத்தில் பராமரிப்பும் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருத்தல்
சமூகப் பாதுகாப்பு
ஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான உரிமை
பாதுகாப்புப் பெறுவதற்கான உரிமை என்பது,
சுரண்டல்கள்
கொடுமைகள்
மனிதத் தன்மையற்ற முறையில் கீழ்த்தரமாக நடத்துதல்
உதாசீனம் செய்தல் அல்லது புறக்கணித்தல்
ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு.
மேலும் நெருக்கடி காலம், போர், உடல் ஊனமுற்ற நிலை ஆகிய சமயங்களில் சிறப்புப் பாதுகாப்பு
பங்கேற்பு உரிமை என்பது,
குழந்தைகளின் அபிப்பிராயங்களுக்கு மதிப்பு அளிப்பது.
எதையும் வெளிப்படுத்த உரிமை
தகவல்கள் கோரிப் பெறும் உரிமை
கருத்தில், எண்ணத்தில், மதநம்பிக்கைகளில் தேர்ந்தெடுக்க, பின்பற்ற சுதந்திரம்.
குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வகையான உரிமைகளும் ஒன்றையொன்று சார்ந்தவை. அதனாலேயே பிரிக்க முடியாதவை. என்றாலும் அவற்றின் தன்மைகளின் அடிப்படையில் அவை பிரிக்கப்பட்டுள்ளன.
முன்னேற்றத்திற்கான உரிமைகள் (பொருளாதார, சமூக மற்றும் காலச்சார உரிமைகள்) : இவற்றில் ஆரோக்கியம், கல்வி போன்ற முதல் பிரிவில் சேர்க்கப்படாத உரிமைகள் இடம்பெற்று இருக்கின்றன. இவை, சிஆர்சி சட்டப் பிரிவு 4ல் குறிப்பிட்டப்பட்டுள்ளன.
‘பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளைப் பொறுத்தவரை அரசுத் துறைகள் அவர்களிடத்தில் உள்ள அதிகபட்சமான வள ஆதாரங்களைத் தேவைப்படும் இடங்களில் தேவைப்படும் சமயங்களில் சர்வதேச அளவிலான ஒத்துழைப்புடன் உபயோகப்படுத்தி மேற்படி உரிமைகளை கிடைக்கச் செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’.
இந்தச் சிறு நூலில், குழந்தைகளுக்கு உள்ள பாதுகாப்பு உரிமைகள் பற்றிக் குறிப்பாக விவரங்கள் தரப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் ஆசிரியர்களும், பள்ளிகளும் எந்த வகையில் இணைந்து பணியாற்ற முடியும் என்பது பற்றியும் கூறப்பட்டுள்ளன.
குறிப்பு: குழந்தைகள் வயதாக ஆக-ஆக பல்வேறு நிலைகளிலும் முதிர்ச்சி அடைகின்றனர். இதன் அர்த்தம் அவர்களுக்கு 15 அல்லது 16 வயதை அடைந்தால் அவர்களுக்குப் பாதுகாப்புத் தேவையில்லை என்பதல்ல. உதாரணமாக நமது நாட்டில் 18 வயதிற்குப்பட்டவர்கள், திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள்; பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்கள் குறிப்பிட்ட பருவத்தைக் கடந்து முதிர் நிலை அடைந்து விட்டார்கள் என்று சமூகம் கருதுவதால் அவர்களுக்குக் குறைவான பாதுகாப்பு அளிக்கப்பட்டால் போதும் என்று கூற முடியாது. அவர்களுக்கு மிகச் சிறந்த பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். இவற்றுடன்,சிறந்த வாய்ப்புகளும் உதவிகளும் அளித்து அவர்களுக்குச் சிறந்த வாழ்க்கை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.