புனித குர்ஆனும் நவீன கம்ப்யூட்டரும்
ரஹ்மத் ராஜகுமாரன்
“ஆல்வின் டாப்ளர் ” என்பவரைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அதுதான் “ப்யூச்சர் ஷாக்” (வருங்கால அதிர்ச்சி) என்ற ஒரு புத்தகத்தை எழுதி, எல்லோரையும் ஒரு வித அதிர்ச்சிக்குள்ளாக்கிப் பணம் பண்ணிக்கொண்டு போனாரே. அவரேதான்.
அதன் பின் “தர்ட் வேவ் ” என்ற புத்தகம் எழுதி இதுவும் விற்பனையில் கோடி கோடியாய் அள்ளிக் கொண்டு போனார் .
“தர்ட் வேவ்” புத்தகத்தில் அவர் மனித சரித்திரத்தில் 3 புரட்சிகளைப் பற்றி சொல்கிறார். விவசாயப் புரட்சி, தொழிற் புரட்சி, அப்புறமா இப்போ நடந்து கொண்டிருக்கிற எலக்ட்ரானிக்ஸ் புரட்சி அதாவது கம்ப்யூட்டர், செல்போனில் கம்ப்யூட்டர் இந்த புரட்சிக்கு விஞ்ஞானிகள் வைத்த பெயர் “சிலிக்கன் புரட்சி”
இப்போ அமெரிக்காவில் ஒரு தனிமத்தின் அல்லது ரசாயனப் பொருட்களின் ஆதார அடையாளம் மாலிக்யூல். இந்த மாலி்க்யூல் அளவுக்கு கம்ப்யூட்டர் பண்ண முடியுமா? யோசிக்கிறது.
அவ்வளவு நுணுக்கமான கம்ப்யூட்டர்கள் செய்ய .மாலிக்யூல் அளவுக்கு கம்ப்யூட்டர் வந்தால், கான்ஸ்ரா…? கவலையே வேண்டாம் .கான்ஸர் செல்களின் ஆதார இயற்கையை மாற்ற மாலிக்யூல் கம்ப்யூட்டரை உள்ளே அனுப்பி கேன்ஸரின் பொல்லாத தனத்தையெல்லாம் நீக்கி விட்டு வருமாறு வெளியில் இருந்தே ஆணை பிறப்பிக்கலாம்.
அதே நேரத்தில் மனித மூளை மாதிரி ஒரு கம்ப்யூட்டர் மாடல் செய்து , மனிதன் மூளையில் உள்ள அத்தனை ஞாபகங்களையும் திருடி, இந்த மாடலுக்கு மாற்றி விட்டு அந்த மனிதனை வீசி்ன கையும் வெறுங்கையுமா அலையவிடலாம்.
இவ்வளவு மிகச் சிறியதா ஓர் உன்னதமான செயல்பாட்டுடன் மனித சமுதாயத்திற்கு நன்மை பயக்கக் கூடிய மாலிக்யூல் கம்ப்யூட்டர் இதைத் தவிர வேறென்ன இருக்க முடியும் என்று விஞ்ஞானிகள் மார்த்தட்டுகிறார்கள்.
ஏன் திருக்குர்ஆன் இத்தனையும் செய்யாதா? செய்யும் இதற்கு மேலேயும் செய்யும்.
மனித குல மேன்மைக்கு, உதாரணமாக சூரா யாஸீனை முறைப்படி ஓதி வந்தால் ஜீவனக் கஷ்டம் நீக்குகிறது. காலையில் பீங்கானில் எழுதிக் கரைத்துக் குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும். மனம் பரிசுத்தம் அடையும். மாலிக்கியுல் கம்ப் செய்யுமா?
லுஹர் தொழுகைக்கு பின் 41 சூரா அல்- பத்ஹூ ஓதினால் எதிரி மீது வெற்றி கொள்ளலாம். மாலிக்கியுல் கம்ப் செய்யுமா?
அர்-ரஹ்மான் சூராவை மிளகு அல்லது உணவில் ஓதிக் கொடுத்தால் வியாதியிலிருந்து குணம் அடையலாம். தண்ணீரில் ஓதி வீட்டின் மூளையில் தெரித்தால் விஷ ஜந்துகள் அணுகாது.
சூரா அல்-வாகிஆ இரவில் ஓதினால் வறுமை நெருங்காது.
சூரா அல்-முல்க் ஓதுபவருக்கு கபரில் கஷ்டம் இருக்காது.
அல்-ஜின்னு சூராவை கைதி ஒதினால் அவன் விரைவில் விடுதலை பெறுவான் .
இதெல்லாம் மாலிக்யுல் கம்ப்யூட்டர் செய்யுமா?…. செய்யுமா?….
இப்படி 114 சூராக்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி நன்மைகள் உண்டு (பார்க்க ஓளராதுத் தொகுப்பு – ஆர், பி.எம் கனி )
ஒரு மில்லி மீட்டர் என்பது ஒரு மீட்டரில் 1000 ல் ஒரு பாகம் இன்றைய ஐ.சி மைக்ரான் கணக்கில் இருக்கும் அதன் பிறகு நாம் நானோ மீட்டரில் பேச வேண்டும். ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரில் நூறு கோடியில் ஒரு பாகம் . இவ்வளவு சின்ன அளவுக்கு குர்ஆன் இயங்குமா?
இயங்கும் . குர்ஆன் இயங்குகிற அளவுக்கு மாலிக்யுல் கம்ப்யூட்டர் இயங்குமா? சொல்றேன்.
“கடல்நீர் அனைத்தும் மையாக இருந்து என் இறைவனின் வாக்கியங்கள் முடிவதற்கு முன்னதாகவே இந்தக் கடல் மை அனைத்தும் செவாகி விடும் அதைப் போல் இன்னொரு பங்கு சேர்த்துக் கொண்ட போதிலும் கூட” குர்ஆன் (18:109)
உலகிலுள்ள கடல்கள் அனைத்திலும் உள்ள நீரெல்லாம் மையாக கொண்டு எழுதப்படும் குர்ஆனின் விளக்கம் எவ்வளவு பெரியதாக இருக்கும். இருப்பினும் விளக்கம் முடிவுறாத நிலையில் கடல் நீரெல்லாம் வற்றிவிடும் இருப்பினும் இன்னொரு உலகத்து கடல்களின் நீரையும் மையாகக் கொண்டு தொடர்ந்தாலும் …..
ஒரு பேச்சுக்கு கற்பனை செய்து பாருங்கள் அப்படி விளக்கம் எழுதப்படும் குர்ஆனின் நீளம், அகலம் விஸ்தாரணத்தை உங்களால் கணி்க்க முடிகிறதா ? கற்பனை செய்யக்கூட முடியாது. இருந்த போதிலும் அத்தனை பெரிய குர்ஆனை சுருக்கி மிக மிக சுருக்கி இந்த நானோ அளவையும் விட குறைவாக 6666 வசனங்கள் அடங்கிய குர்ஆனை நமக்கு அளித்த இறைவனை எப்படி புகழ்வது?
மாலிக்கியுல் கம்ப்யூட்டர் இம்மைக்கு உதவுவதாக இருந்தாலும் மறுமைக்கு உதவ முடியுமா?
குர்ஆன் உதவும். இம்மை, மறுமை ஏன் கபறில் கூட அதை ஓதிய பலனுக்காக நண்பனாய் “பதறாதே நானிருக்கிறேன ” என்று சொல்லும் . மாலிக்யுல் கம்ப்யூட்டர் செய்யுமா?