மலடாவது நிலம் மட்டுமல்ல..!
[ 90% குடும்பங்கள் குழந்தையின்மை காரணத்திற்கு பெண்களிடம் இருக்கும் குறைதான் காரணம் என்று நினைக்கிறார்கள். ஆனால் மருத்துவ ரீதியாக 60-70% குறைபாடு ஆண்களிடம்தான் உள்ளது என்று கூறுகிறது.
உயிர் அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது, உயிர் அணுவின் உருவ அமைப்பில் குறைபாடு என இன்னும் சில குறைபாடுகள் உள்ளன. அய்யயோ! என்னப்பா இப்படி சொல்ற, என்று பதற வேண்டாம்.
இன்றைய தலைமுறைக்கு இருக்கும் பெரும் பிரச்சனையான உணவு மற்றும் கலாச்சார மாற்றத்தின் விளைவே இது.
முழு நேர இரவுப்பணி, துரித உணவுகள் அதிகமாக உட்கொள்வது, தாமதமாக திருமணம் புரிவது என எல்லா காரணங்களும் நாமாக ஏற்படுத்திக் கொண்டவையே!.
இப்படி நீண்டகாலமாக ஏற்படுத்திக்கொண்ட பெரும் பிரச்சனையை ஒரே ஊசியால் சரி செய்து விட வேண்டும் என்ற நம் முட்டாள்தனத்தை பணமாக மாற்ற ஒரு கும்பலே சுற்றுகிறது!.
நம் தாத்தா பாட்டி காலத்தில் ஆயிரத்தில் ஒருவருக்கு குழந்தை பெறுவதில் ஏற்பட்ட சிக்கல், நம் அம்மா அப்பாவின் காலத்தில் நூற்றில் ஒருவருக்கு வந்தது. இன்று நமது காலத்தில் பத்தில் ஒருவருக்கு இருக்கிறது!]
மலடாவது நிலம் மட்டுமல்ல..!
டேய் பங்காளி!, அந்த சானல் பாரேன் என்று ஒரு குறிப்பிட்ட டிவி சானல் பெயரை வாட்ஸ்அப் – இல் அனுப்பி இருந்தான் நண்பன்.
இரவு 11.45க்கு டிவி பாக்க சொல்றானே பையன்! என்று புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அவன் சொன்ன அந்த நிகழ்ச்சியை வைத்தேன். ஒரு இளம் வயது தொகுப்பாளினி முழுவதும் இரட்டை அர்த்தத்தில் பேசிக்கொண்டு இருந்தார்!.
“என்னடா நம்ம ஊர் ஆடல் பாடல் நிகழ்ச்சியை விட ஆபாசமா இருக்கே!” அப்படி என்ன தான் நிகழ்ச்சி என்று பார்த்தால், குழந்தையின்மை பற்றிய சந்தேகங்கள் கேட்கும் நிகழ்ச்சி.
அது சரி! என்று வேறு சானல்கள் வைத்தால் 90% தமிழ் தொலைக்காட்சியில் இரவு நேரக் காட்சியாக தாம்பத்தியம் தொடர்பான நிகழ்ச்சிகள்தான் அத்தனையும்!
உச்ச கட்டமாய் ஒரு நிகழ்ச்சியின் தொகுப்பாளினி நிகழ்ச்சி முடியும்போது முத்தம் எல்லாம் தருகிறார். போதும்டா என்று அணைத்து விட்டேன். (வீட்டில் ஆள் இருந்திருப்பாங்க அதான் ஆப் பண்ணிருப்ப என்று குதர்க்கமாக யோசிக்கக்கூடாது, அதான் உண்மையும் கூட…
நம் தாத்தா பாட்டி காலத்தில் ஆயிரத்தில் ஒருவருக்கு குழந்தை பெறுவதில் ஏற்பட்ட சிக்கல், நம் அம்மா அப்பாவின் காலத்தில் நூற்றில் ஒருவருக்கு வந்தது. இன்று நமது காலத்தில் பத்தில் ஒருவருக்கு இருக்கிறது!
இனி நாளை மருத்துவ உதவி இல்லாத கருத்தரிப்பு என்பது சாத்தியம் அற்றதாய் போய்விடும்!. அதன் முன் உதாரணங்கள்தான் இது போன்ற நிகழ்ச்சிகளும் திரும்பும் இடம் எல்லாம் குழந்தை இன்மை சிகிச்சை நிலையங்களும். இது தவிர்த்து அரசு கழிப்பிடங்கள் எல்லாவற்றிலும் ஆண்மைக் குறைவு சிகிச்சை பற்றிய நோட்டீஸ் ஒட்டிருப்பதை பார்கிறோம் அதில் பாதி ஏமாற்றும் மருத்துவமனைகளே!.
90% குடும்பங்கள் குழந்தையின்மை காரணத்திற்கு பெண்களிடம் இருக்கும் குறைதான் காரணம் என்று நினைக்கிறார்கள். ஆனால் மருத்துவ ரீதியாக 60-70% குறைபாடு ஆண்களிடம்தான் உள்ளது என்று கூறுகிறது. உயிர் அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது, உயிர் அணுவின் உருவ அமைப்பில் குறைபாடு என இன்னும் சில குறைபாடுகள் உள்ளன. அய்யயோ! என்னப்பா இப்படி சொல்ற, என்று பதற வேண்டாம். இன்றைய தலைமுறைக்கு இருக்கும் பெரும் பிரச்சனையான உணவு மற்றும் கலாச்சார மாற்றத்தின் விளைவே இது .
முழு நேர இரவுப்பணி, துரித உணவுகள் அதிகமாக உட்கொள்வது, தாமதமாக திருமணம் புரிவது என எல்லா காரணங்களும் நாமாக ஏற்படுத்திக் கொண்டவையே!. இப்படி நீண்டகாலமாக ஏற்படுத்திக்கொண்ட பெரும் பிரச்சனையை ஒரே ஊசியால் சரி செய்து விட வேண்டும் என்ற நம் முட்டாள்தனத்தை பணமாக மாற்ற ஒரு கும்பலே சுற்றுகிறது!.
எனது நண்பனின் அண்ணனிற்கு 5 ஆண்டுகளாக குழந்தை இல்லை. எந்த மருத்துவமனை சென்றாலும் அதற்கு முந்தைய மருத்துவமனையில் பார்த்த ஆய்வுகள் பயன்படாது என்று அவர்களின் மருத்துவமனையில் பரிசோதித்து உள்ளனர், ஆனால் முடிவு என்னவோ ஒன்றுதான். (இது பராவா இல்லை, சில மருத்துவமனைகள் குறிப்பிட்ட ஆய்வகங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கட்டாயமே படுத்துகின்றன, நீங்க கமிஷன் வாங்க நாங்கதான் கெடச்சமா!”) இறுதியில் அவரின் தொடர் மது பழக்கம்தான் முக்கிய காரணம் என்று அதை நிறுத்தி சில எளிய சிகிச்சைகளின் மூலமே அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது .
இதுபோல பல தம்பதிகளுக்கு உண்மையான குறை என்ன என்று கண்டறியும் முன்னரே பெரும் பணத்தை இழந்துவிட நேர்கிறது. இந்தியாவில் கருமுட்டை மாற்று அறுவை சிகிச்சையில் மட்டுமே 23 ஆயிரம் கோடி ரூபாய் வணிகம் நடக்கிறது என்கிறது ஒரு அறிக்கை!. என்ன தம்பி ஆண்களுக்குத்தானே பிரச்சனை என்று சொன்ன இப்ப கருமுட்டை பத்தி சொல்ற! என தோன்றலாம் ஆனால் இந்தியாவில் 30-40% பெண்களுக்கு இருக்கும் பெரும் பிரச்சனை மாதவிடாய் சரியான கால இடைவெளியில் நடக்காமல் இருப்பதே.
முதலில் மாதவிடாய் என்பதை ஏதோ கெட்ட வார்த்தையை போல் நினைப்பது தவறு. இந்த மாதவிடாய் சுழற்சி இல்லை என்றால் மனித இனமும் இல்லாமல் போகும் என உணர வேண்டும். ஆனால் மாதவிடாய் நாட்களில் பெண்களை இன்னும் வீட்டிற்குள் அனுமதிக்காத கிராமங்களும் இங்கு இருக்கத்தான் செய்கின்றன. வளர்ந்து விட்டதாய் தம்பட்டம் அடிக்கும் நகர் புறங்களில் “சானிட்டரி நாப்கின்களை ” காகிதம் சுத்தி மறைத்துத்தானே எடுத்துச் செல்கிறோம்?. இதனால் மன ரீதியாகவும் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
“பெருவாரியான பெண்களுக்கு மாதவிடாய் காலகட்டத்தில் சரியான சத்து நிறைந்த உணவு இல்லாத காரணத்தால் இரத்த சோகை ஏற்படுகிறது. இதுவும் குழந்தை இன்மைக்கு முக்கிய காரணமாகிறது.” (ஆண் குழந்தைகளுக்கும் பதின் வயதில் சத்தான உணவுகள் கொடுக்க வேண்டும் அவைதான் ஹார்மோன் வளர்ச்சியில் பெரும் பங்காற்றும் ஆனால் பெற்றோர்கள் அதை ஓரு பொருட்டாகவே நினைப்பதில்லை)
இரத்தச்சோகை தீர்க்கப்படாமல் போனால் சினைப்பையில் சினைமுட்டையின் வளர்ச்சி குறைவதும், கருப்பையின் உட்சுவர் தடிப்பு குறைவதும் அதிகரிக்கும். சில நேரங்களில் உதிரப் போக்கை அதிகரிக்கும் சில நேரங்களில் உதிரமே போகாமல் உடலை வீங்க வைக்கும்!.ஆனால் “நாம் இன்னும் தொலைக்காட்சியில் சானிட்டரி நாப்கின் விளம்பரம் வரும்போது எல்லாம் முகத்தை சுழிக்கிறோம்”.
இப்பொழுது பல்வேறு நவீன சிகிச்சைகள் வந்துவிட்டன, ஆனால் எதுவும் இயற்கை சார்ந்து இல்லை என்பதே வேதனை. கருமுட்டை வெளியேறுவதற்கு என சிறப்பு ஊசி போட்டு அதன் பின் குறிப்பிட்ட கால இடைவெளியில் கணவன் மனைவி இனைய வேண்டும்! இப்படி நாட்களை எண்ணி பின், காதல் அற்ற காமம் எப்படி ஆரோக்கியமான குழந்தையை தரும்?. இவை எல்லாம் பொய்த்து போகும் போது, செயற்கை கருத்தரிப்பு என்ற நிலைக்கு வருகின்றனர். அதிலும் சில நிலைகள் உள்ளன.
ஆணின் விந்தணு நீந்தி செல்ல முடியாத நிலையில் இருக்குமேயானால் அதை நேரடியாக பெண்ணின் கருப்பையில் செலுத்தி குழந்தை பெறச் செய்யலாம். இங்குதான் மருத்துவம் எனும் சேவை வணிகமாக மாறி வேதனை அளிக்கிறது. தந்தை ஆக முடியாது என கூறாமல் வேறொரு நபரின் விந்தணுவை செலுத்தி குழந்தை பிறக்க வைத்து நாங்கள் 100% குழந்தை பிறப்புக்கு உறுதி என பல போலி மருத்துவமனைகள் வியாபாரம் செய்கின்றனர். இந்தியாவில் இருக்கும் செயற்கை கருத்தரிப்பு மையங்களில் பாதி போலியானவை என அரசு ஆய்வறிக்கையே சொல்கிறது. (அறிக்கை எல்லாம் நல்லா தான் இருக்கு நடவடிக்கை எப்ப எடுப்பிங்க?)
வாடகை தாய், கருமுட்டை தானம் போன்ற சிகிச்சைகளுக்கு பல இலட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது, ஆனால் அது அந்த கொடையாளியை போய் சேர்வதில்லை. ஏஜன்ட்களும் மருத்துவமனையும் மட்டுமே எடுத்துக் கொள்கின்றன. ஏஜன்ட் ஏழ்மை நிலையில் இருக்கும் பெண்களை குறி வைத்து சில ஆயிரங்கள் மட்டுமே கொடுக்கிறார்கள். சரியான முறையில் கவனிக்கப்படாத கொடையாளிகளுக்கு 50% உடல் ரீதியான பிரச்சனைகள் வருகிறது. “குழந்தையின்மை என்ற ஒற்றை சொல்லுக்கு பின் இருக்கும் மாய மருத்துவ பண சுரண்டல் நம்மை வியப்பில் ஆழ்த்தும்”
உங்கள் தெருவில் எத்தனை சுக பிரசவம் நடந்தது என்று எண்ணிப் பாருங்கள்! எங்கள் ஊரில் சில பெரிய மருத்துவ மனைகளில் 10 இல் 9 பேருக்கு ஆபரேசன்தான் செய்கிறார்கள். இடுப்பு வலியுடன் சென்ற நண்பனின் தங்கை மருத்துவ மனைக்கு சென்ற பின் போட்ட ஊசியால் பின் இடுப்பு வலியே வரவில்லையாம்?. ஆபரேசன் பண்ணி குழந்தையும் பிறந்தும் விட்டது!
பின்னர்தான் தெரிகிறது, சுக பிரசவத்திற்கு 15 ஆயிரம், ஆபரேசன் என்றால் 40 ஆயிரம்! அதுபோக ஒருவாரம் தங்க வேண்டும். எல்லாம் சேர்த்து 60 ஆயிரம்!. முதல் குழந்தை என்பதால் இதலாம் சிந்திக்க நேரம் ஏது? அரசு மருத்துவமனை மீது இருக்கும் அவ நம்பிக்கையை இந்த தனியார் மருத்துவமனைகள் பயன்படுத்திக் கொள்கின்றன.
என்னடா இவன்!, குழந்தையின்மை என்று ஆரம்பிச்சு எங்க எங்கயோ போரானே? என்று நினைக்க வேண்டாம். நாம் நம்மை சுற்றி என்ன நிகழ்கிறது என்று கவனிக்காமல் ஓடும் இயந்திர வாழ்க்கையை வாழ்வதின் விளைவே இவை எல்லாம். மருத்துவர் ஒருவரை அணுகி அவர் சந்தித்த சில நபர்களின் குறை பற்றி கேட்டால், இது எல்லாம் கூட காரணமா என்று தோன்றுகிறது, “ஆபாச படங்களில் வருவது போல் என்னால் அதிக நேரம் உடல் உறவில் ஈடு பட முடியவில்லை என்று கண்ட மாத்திரைகளை தின்று ஆண்மை தொலைந்த நபர்களை பற்றி சொன்னார் அவர்..” எனவே முதலில் காமம், காதல் பற்றிய தெளிவு வேண்டும் நமக்கு!.
சரி இதற்கெல்லாம் தீர்வுதான் என்ன? வரும் முன் காப்பதே சிறந்தது. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் கம்பு, சோளம், தினை இவற்றை கொடுத்தால் மிகவும் நல்லது அரிசியை விட 8 மடங்கு இரும்பு சத்து கம்பில் உள்ளது. முடிந்த மட்டும் பிராய்ளர் கோழிகளை சாப்டுவதை தவிர்க்க வேண்டும், பிராய்ளர் கோழி சாப்பிடும் பெண் குழந்தைகள் மிக சிறிய வயதிலேயே பூப்படைகிறார்கள் இது கண்டிப்பாய் தீங்கு.. நாட்டுக்ககோழிதான் உடலுக்கு நல்லது. முடிந்த அளவு இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட உணவுகளை சாப்படுவது மட்டுமே நல்லது .
“இரசாயனம் பயன் படுத்தப்படுத்தி விளைவிக்கப்படும் உணவுகள் மற்றும் மரபணு மாற்றப்பட்ட விதைகளின் மூலம் மலடாவது நமது நிலம் மட்டும் அல்ல நாமும் தான்.”
source: https://roar.media/tamil/life/bogus-treatment-centers-india/