மத நல்லிணக்கம் கண்ணை உறுத்துகிறதா?
Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
சமீப காலாத்தில் ஷாஜஹான் எழுப்பிய பளிங்கு நினைவு மாளிகை சிலருக்கு கண்ணை உறுத்தி அது, ‘சிவன் கோவிலை இடித்து எழுப்பப் பட்ட கட்டிடம்’ என்று உ.பி.மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும், ‘தாஜ் மஹால் பல்வேறு ஹிந்து தொழிலாளிகள் வேர்வை சிந்தி எழுப்பப் பட்டது’ என்று உ.பி.முதல்வரும், அது துரோகிகள் கட்டிய கட்டிடம் என்று வினய் கட்டார் என்ற பி.ஜே.பி எம்.பி.யும் கூறியிருப்பது சிரிப்பையும் சிந்தனையும் தூண்டி விட்டிருக்கிறது.
2014ஆம் ஆண்டு ஆட்சி பீடம் மத்தியில் அமர்ந்து மூன்று வருடம் ஆகியும், சொன்ன வாக்குறுதிகளான, ‘வெளிநாட்டில் பதுக்கிய கறுப்புப் பணமீட்டல்’ ‘அந்தப் பணத்தில் ஒவ்வொருவருக்கும் அவர் வங்கியில் ரூ 15லட்சம் வங்கியில் செலுத்துதல்’, ‘கறுப்புப் பணம் ஒழிப்பேன் என்று ரூ.500/ ரூ 1000/ நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்து அதுபோன்று செல்லாத நோட்டுக்கள் அரசு வங்கிகளுக்கு எவ்வளவு வந்துள்ளது என்று எண்ண முடியாமல் அதற்கான எந்திரங்கள் இல்லாத நிலை,
புதுமை பொருளாதாரம் என்று ஜி.எஸ்.டி.சட்டம் கொண்டு உற்பத்தி முடக்கியது’, ‘வெளிநாட்டு மேனா மினுக்கி பயணங்கள் மூலம் பயன் பெற்றது சில தொழில் அதிபர்கள் தானே ஒழிய ஐ.நா.சபையில் நிரந்தர பாதுகாப்பு உறுப்பினர் கூட பெறமுடியா பரிதாப நிலை போன்ற தோல்வியான திட்டங்களால் துவண்டு போன காவிப் படை கையில் எடுத்தது தான், ‘லவ் ஜிஹாத் எதிரான நடவடிக்கை’,
‘பசுமாட்டை கறிக்காக கடத்துகிறார்கள் என்று ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் நடந்த கொலைகளும், மாட்டுக் கறி சாப்பிட்டார்கள், மற்றும் பதுக்கி வைத்திருக்கின்றார்கள்’ என்று கூலிப்படை கொண்டு தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் உச்ச நீதிமன்றம் எச்சரித்தும் அங்குள்ள ஆட்சியாளர்கள் துணையுடன் நடப்பதாக எண்ணத் தோன்றுகிறது என்று ஒரு உதாரணத்தைச் சொல்லலாம் என நினைக்கின்றேன்.
உ.பி.மாநிலம் முஸாபார் நகரில் அக்லக் மாட்டுக்கறியினை பதுக்கி வைத்துள்ளார் என்று அவரை வீடு புகுந்து குடும்பத்தினர் முன்னாள் கொலை செய்த பாதகர் 15 பேர்களுக்கு அங்குள்ள சட்டமன்ற உறுப்பினர் மூலம் பொது நிறுவனத்தில் வேலை கொடுக்கப் பட்டுள்ளது எதனை காட்டுகின்றது? ‘புதிய இந்தியாவையா, அல்லது இனிமேல் இதுதான் இந்தியா’ என்று இந்திய மக்களைப் பயமுறுத்தும் திட்டமா? என்று தெரியவில்லை.
நான் மேலே குறிப்பிட்ட தோல்வியினை சரிக்கட்ட எடுக்கப் படும் நடவடிக்கை என்று, பல அரசியல் வாதிகள் சொன்னாலும், முன்னாள் பி.ஜெ.பி நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்காவும், மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத் மலானியும், மூத்த பத்திரிக்கையாளர் அருண் சேரியும், நமதூர் புதிதாக சிலிர்க்கும் நடிகர் கமலஹாசனும் முக்கியமானவர்கள்.
அங்குள்ள சட்டமன்ற உறுப்பினர் சொல்வதுபோல அங்குள்ள சிவன் கோவில் இருந்ததா அல்லது இல்லையா என்று அவருக்கு எப்படித் தெரியும்? அல்லது அது போன்ற ஒரு கதையினைச் சொல்லி பாபரி மஸ்ஜித் இடித்தது போன்று இடித்துவிட்டு, அதன் அடிவாரத்தினை ஒரு கமிஷன் போட்டு தோண்டி சில மண் குடுவைகள் உதாரணத்திற்காக எடுத்துக்காட்ட உள்ள திட்டமா? என்று தெரியவில்லை. உ.பி. முதல்வர் சொல்வது போன்று இது இந்து தொழிலாளர்கள் சிந்திய வியர்வை என்று வைத்துக் கொள்வோம்.
உ.பி. முதல்வர் ஒரு முஸ்லிம் அதிகமாக உள்ள கிராமத்தில் வாசிக்கும் ஒரு மிராசுதார் என்று நினைத்துக் கொள்வோம், அவர் வயலில் முஸ்லிம் விவசாய தொழிலாளர் வேலை செய்து அதன் மூலம் நல்ல விளைச்சல் அந்த வருடம் வந்தால் அந்த நிலத்தினை முஸ்லிம் விவசாய தொழிலாளர்கள் கேட்டால் கொடுத்து விடுவாரா அல்லது விளைச்சலில் மூன்று பகுதியினை அவர்களுக்கு வழங்கி விடுவாரா? அது போன்று தான் முகலாய சக்கரவர்த்தி கட்டும் கட்டிடத்தில் ஹிந்து தொழிலாளர்கள் வேலை செய்திருந்தால் இயற்கைதானே! இப்போதைக்கு ஏன் அந்த ஞானோதயம், என்று கேட்க உங்களுக்குத் தோன்றவில்லையா?
இந்திய நாடு பல்வேறு மொழி, இனம், மதம், மார்க்கம் ஆகியவற்றினை கொண்டு பல்வேறு படையெடுப்புகளை சந்தித்து, அந்நியரின் கலாச்சரங்களையும் தன்னிடையே விழுங்கி ஒற்றுமையாக உருவெடுத்து ஹிமாலய சாதனையாக எழுந்து நிற்கின்றது. அந்த சாதனைகளுக்கு சரியான உருவமைப்புத் தான் இந்திய அரசியல் சட்டம் 1950. அது மட்டும் இல்லையென்றால் என்றோ இந்த நாடு மதத் துவேஷகர் மூலம் மாற்றி அமைக்கப் பட்டிருக்கும். இந்த சமயத்தில் ஒரு தவளைக் கதையினை சுவாமி விவேகானந்தர், அமெரிக்கா சிகாகோ நகரில் 1893 செப்டம்பர் மாதம் நடந்த உலக மத மாநாட்டில் எவ்வாறு நாம் மத வேறுபாட்டால் மனித இனத்திற்குள் சாக்கடை புகுந்து வெறுப்புனவுணர்வுடன் பிரிந்திருக்கின்றோம் என்று சொன்னதினை உங்கள் கண் முன் நிறுத்தலாம் என எண்ணுகின்றேன்.
‘ஒரு கிணற்றுத் தவளை மிகவும் சந்தோசமாக அங்கே உள்ள கல்சுவருக்கும் தண்ணீருக்கும் இடையே தாவிக்குதித்து விளையாடிக் கொண்டு அந்தக் கிணறுதான் உலகம் என எண்ணிக் கொண்டும் எல்லையில்லா மகிழ்ச்சியில் இருந்ததாம். ஒரு நாள் ஒரு கடலில் வாழும் தவளை வழி தவறி வந்து கிணற்றில் விழுந்து விட்டதாம். அப்போது கிணற்றுத் தவளை, கடல் தவளையினைப் பார்த்து குதித்துக் கொண்டு கடல் எவ்வளவு பெரிது என்றும் அது கிணறு போன்று இருக்குமா என்று கேட்டதாம். அதற்கு கடல் தவளை கடல் ஒரு பெரிய சமுத்திரத்தினைப் போன்று என்று சொன்னதாம் அதனை கிணற்றுத் தவளை நம்ப வில்லையாம். அதேபோன்று தான் நான் ஒரு ஹிந்துவாக இருந்து கொண்டு ஹிந்து மதம் தான் பெரிது என்று எண்ணுகின்றேன். கிருத்துவ நாட்டில் கிருத்துவர்களும், முஸ்லிம் நாட்டில் முஸ்லிம்களும் எண்ணுகின்றார்கள்.
அதுபோன்று எண்ணத்தில் உள்ளவர் அடுத்த மதத்தினை அழித்து இன்னொரு மதத்தினை கொண்டு வரமுடியுமா என்ற கேள்வியினை எழுப்பினார். ஒவ்வொருவரும் அடுத்தவர் நல்ல கருத்துக்களை தன்னகத்தே கொண்டு, தன்னுடைய தனித் தன்மையும் குறையாது வாழவேண்டும் என்கிறார். அன்று அவர் சொன்ன கருத்துக்களையாவது அவர் 150 பிறந்த நாள் கொண்டாடும் காவி நண்பர்கள் கடைப் பிடிக்க வேண்டாமா என்பதே என் கேள்வி.
சாதாரண இந்திய குடிமகன் அவர்கள் வெறுப்புக் கருத்தினை ஏற்றுக் கொள்கிறானா என்றால் இல்லை என்றே சொல்லலாம் என்று சில உதாரணங்களை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்:
1) 1) கோடைக் காலம் என்றாலே காஷ்மீர் செல்ல வசதிப் படைத்த ஒவ்வொருவரும் குடும்பத்துடன் செல்ல விருப்பப் படும் இடம். ஆனால் இன்று அங்கே அனு தினமும் துப்பாக்கிச் சத்தம் கேட்காத நாட்களே இல்லை என்று சொல்லலாம். ஹிந்துக்களின் புனித இடமாக இருக்கும் அமர்நாத் கோவிலுக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸின் ஓட்டுநராக சலிம் மிஸ்ரா இருந்தார். அவர் ஒட்டிய பஸ்சினை நோக்கி துப்பாக்கிக்குண்டுகள் பொழியப் பட்டன. அவர் பஸ்ஸை நடு வழியில் விட்டு விட்டு ஓடி விடவில்லை மாறாக பக்தர்கள் 7 பேர் மாண்டாலும், 30 பேர் காயம் பட்டாலும் தைரியமாக பஸ்ஸை அருகில் உள்ள ராணுவ முகாமிற்கு ஓட்டி வந்து மற்றவர்களையும் காப்பாற்றியதினை அதிகாரிகளும், பக்தர்களும் பாராட்டியதை பத்திரிக்கைகள் வெளியிடவில்லையா?
2) 2) 2015ஆம் ஆண்டு ஹஜ் பெருநாள் தொழுகை நாளன்று மும்பையிலுள்ள ‘மதரசா தாலிமுல் குரான்’ பள்ளிக்கு தொழுவதிற்காக 3000 முஸ்லிம்கள் திரண்டு வந்ததால் பள்ளியின் உள்ளே தொழ இடமில்லை. அந்த நேரத்தில் விநாயக சதுர்த்தி விழாவிற்காக ஹிந்து மக்கள் ஒரு பந்தல் அருகில் அமைத்திருந்தனர். அவர்கள் உடனே அங்கு இடமில்லாமல் நிற்கும் முஸ்லிம்கள் தொழ வசதியாக தங்களுடைய பந்தலினை வழங்கி அங்கே தொழச் செய்தார்கள் என்றதும் பத்திரிக்கைச் செய்திதான் படத்துடன்.
3) மத்திய பிரதேசத்தினைச் சார்ந்த சந்தோஷ் சிங்கும், ரசாக் திகாரியும் நண்பர்கள். சிங் சிறு வருமானம் உள்ள கட்டிடத் தொழிலாளி. 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காச நோயால் பாதிக்கப் பட்டு தனிமையில் இறந்து விட்டார். அவருக்கு ஈமக்கிரியை செய்ய ஒருவருமில்லை. அந்த செயலை ரசாக் ஒரு சகோதரனாக இருந்து நிறைவேற்றினான் என்பதும் .செய்தி தான். இங்கு கூட அனாதை மாற்று மத சகோதரர்கள் இறந்து விட்டால் சுடுகாடு வரை தோளில் சுமக்கும் மார்க்க இளைஞர்கள் படமாக வந்துள்ளது.
4) சென்னை வாலாஜா பள்ளிக்கு நோன்பு நேரத்தில் இஃப்த்தார் திறப்பதிற்காக செல்லும் முஸ்லிம் நண்பர்களுக்கு கண்ணில் படக்கூடியது, ‘சுபிடார் டிரஸ்ட்’ உணவு வழங்குதல். இந்த டிரஸ்டில் 81 வயது நாராயண் தாஸும் அவரது சகோதரர்களும் 35 வருடங்களாக ரம்ஜான் நேரத்தில் காலை 7.30 மணிக்கு சமையல் ஆரம்பித்து மாலை இஃப்த்தாருக்கு உணவு கொண்டு வந்து விடுவார்கள்.
5) பஞ்சாப் லூதியானா மாவட்டத்தில் உள்ள ஜெயிலில் உள்ள அறையில் இருந்த முஸ்லிம் கைதிகள் நோன்பு காலத்தில் நோன்பு வைத்தனர். அதனைப் பார்த்த மாற்று மத கைதிகளும் அவர்களுடன் நோன்பு இருந்து இஃப்த்தார் விருந்திலும் கலந்து கொண்டனர் என்ற செய்தி தான். நான் 2000 ம் ஆண்டு விழுப்புரம் சரக டி.ஐ.ஜி யாக இருந்தபோது டெல்லியில் ஒரு வழக்கிற்காக அன்று சி.பி.சி.ஐ.டி டி.ஐ.ஜி யாக இருந்த நண்பர் துக்கையாண்டி அவர்களும் டெல்லிக்காக அதே வழக்கிற்கு வந்து தமிழ்நாடு இல்லத்தில் என் அறையில் தங்கி இருந்தார். நான் அதிகாலை எழுந்து கிடைத்த பண், வாழைப் பழத்தினை வைத்து நோன்பு வைத்தேன். அதனைப் பார்த்து, ‘அவரும் நானும் நோன்பு வைக்கின்றேன் என்று நோன்பு வைத்து, நான் அந்தி மயங்கிய வேளையில் நோன்பை திறந்தபோது அவரும் நோன்பினை விட்டார். இது எதைக் காட்டுகின்றது. முஸ்லிம்கள்-ஹிந்துக்கள் இந்த நாட்டில் அண்ணன்-தம்பிக்களாக வாழ்கின்றார்கள் என்பதனைத் தானே!
மதத்தின் பெயரால் மக்களைப் பிரிப்பதும், மத துவேஷ கருத்துக்களை விதைப்பதும், மக்களிடையே நீண்ட சுவரினை கிழக்கு-மேற்கு ஜெர்மனி பிரித்த பெர்லின் சுவர் போல அமையத்தான் வேண்டுமா? அந்த சுவரும் காலப்போக்கில் இடித்துத் தள்ளப்படவில்லையா? ஒவ்வொரு நாளும் மனித உள்ளங்களில் நடக்கும் நல்லெண்ண பரிமாற்றமும், விருந்தோம்பலும், தாராள மனப் பான்மையும் சில உதாரணங்கள் மூலம் எடுத்துச் சொன்னேன். அந்த நல்லெண்ண பரிமாற்றங்களை சுவர் கொண்டு மறைக்காமல், தங்களுடைய சமூக வளர்ச்சியிலும், தங்கள் அரசு கொடுத்த வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றால் சரியா!
dource: https://www.facebook.com/mdaliips/posts/10210815270286650