வேற்றுமைகளை வளர்த்து அதில் குளிர் காய்பவர்கள்
ஒரே நேர்வழியான ”குர்ஆன், ஹதீஃதை மறைக்காமல் மக்கள் முன் வைப்பது குழப்பத்தையும், பிளவுகளையும் உண்டாக்கும்” என்ற போதனை ஷைத்தானின் போதனையாகும். ஷைத்தானின் இந்த துர்போதனைக்கு நாம் செவி சாய்க்க வேண்டியதில்லை.
அதல்லாமல் நம்முடைய சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கும், வரட்டு கெளரவங்களுக்கும் ஆளாகி சமுதாயத்தில் பிளவுகளை ஏற்படுத்த நாம் ஒருபோதும் முற்படக் கூடாது.
சமுதாயத்தைக் கூறு போட்டுச் சுரண்டும் மனப்பான்மை சில மார்க்க அறிஞர்களுக்கே உரித்தானதாக இருக்கிறது. அதில் நமக்கு எவ்விதப் பங்கும் அவசியமே இல்லை. அவர்களே அர்த்தமற்ற காரணங்களைக் கற்பித்து மக்களிடையே வேற்றுமைகளை வளர்த்து அதில் குளிர் காய முற்படுவார்கள்.
.
அந்த அடிப்படையில் அந்த இமாமுக்குப் பின்னால் தொழக் கூடாது இந்த இமாமுக்குப் பின்னால் தொழக்கூடாது என்று சட்டம் வகுப்பதும், ஒருவருக்கொருவர் குஃப்ர் ஃபத்வா கொடுத்துக் கொண்டு சமுதாயத்தில் வேற்றுமைகளை வளர்ப்பதும், தங்களுக்கென்று தனிப் பெயர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு சமுதாயத்திலிருந்துத் தங்களை வேறுபடுத்திக் காட்டிக் கொள்வதும், முழுக்க முழுக்க இவர்களின் செயல்களேயாகும்.
நாங்கள் தான் அரபி மொழி கற்றப் பண்டிதர்கள். அவாம்களான பாமரர்களுக்கு குர்ஆன் விளங்காது. அவர்களின் தாய்மொழியில் குர்ஆன் மொழி பெயர்ப்புக் கொடுக்கப்பட்டாலும் அதனைப் படித்து பாமரர்களால் விளங்க முடியாது என்று வீண் பெருமை பேசுகிறார்கள். இவர்களின் இப்படிப்பட்ட வீண் பெருமை காரணமாகவே எல்லாம் வல்ல அல்லாஹ் இவர்களை குர்ஆன் வசனங்களை விளங்குவதை விட்டும் திருப்பி விடுகிறான்.
குர்ஆன் வசனங்களை நேரடியாகக் காட்டினாலும் நம்பமாட்டார்கள், ஏற்கமாட்டார்கள்.
6:153 குர்ஆன் வசனம் கூறும் ஒரே நேர்வழியை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். கோணல் வழிகளையே தங்கள் வழியாக ஏற்பார்கள். இவை 7:146 குர்ஆன் வசனம் கூறும் நேரடி உண்மைக் கருத்துக்களாகும்.
ஆக இவர்கள் எதுவரை நாங்கள்தான் மார்க்கம் கற்ற மேதைகள் என்ற வீண் பெருமையை விட்டொழிக்க வில்லையோ, அவாம்களை அதாவது பாமரர்களை இழிவாக எண்ணுவதை விட்டொழிக்க முன்வரவில்லையோ, அவர்கள் தங்கள் கைகளால் உழைத்துச் சாப்பிட முன்வர வில்லையோ அதுவரை இவர்கள் நேர்வழி பெறவே முடியாது.
.
இவர்களைப் போல் தாருந்நத்வா உலமாக்கள் சபையில் அபுல் ஹிக்கம் என்று போற்றப்பட்ட அபூ ஜஹீலுடன் இருந்த உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும், அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் அந்த நாற்றக் குட்டையிலிருந்து வெளியேறி, அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் யூதனுடைய தோட்டத்தில் தன் கைகளால் நீர் இறைத்து உழைத்தும், உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தன் கைகளால் வியாபாரம் செய்து உழைத்தும் ஹலாலான முறையில் தங்கள் வயிற்றின் பசியைப் போக்கினார்கள்.
அது மட்டுமா? பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை அடிமையாக, அவாமாக, கேவலமாக எண்ணி இழிவு படுத்தி வந்த பெரும் தவறை உணர்ந்து தெளபா செய்து மீண்டு, அவர்களை என்னுடைய மதிப்புக்குரிய தலைவரே என்று ஏற்றிப் போற்றும் நிலைக்குத் தங்களை மாற்றிக் கொண்டார்கள்.
அதேபோல் அன்றைய தாருந்நத்வா போன்ற நாற்றக் குட்டையான ஜமாஅத்துல் உலமா நாற்ற குட்டையிலிருந்து யார் வெளியேறி கொடிய ஹராமான வழியில் வயிற்றை நிரப்புவதை விட்டு, தங்கள் கைகளால் உழைத்துச் சாப்பிடுவதோடு, அரபி மொழி கல்லாதவர்களை இழிவுபடுத்துவதை விட்டு தொளபா செய்து மீண்டால் மட்டுமே அவர்கள் ஈடேற்றம் பெற முடியும்.
.
அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரிகளே!
ஆலிம், அல்லாமா, மார்க்கம் கற்ற மேதைகள் என வீண் பெருமை பேசும் சில மவ்லவிகளின் உண்மை நிலை இதுதான். அவர்களின் பெருமை காரணமாக அவர்கள் உங்களைக் கோணல் வழிகளில் நரகை நோக்கித்தான் இட்டுச் செல்வார்கள். சமுதாயம் ஒன்றுபடுவதை அவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். காரணம் அவர்களின் வயிற்றுப் பிழைப்பே சமுதாயத்தைப் பிளவுபடுத்துவதில்தான் இருக்கிறது.
எனவே மார்க்கத்தை மதமாக்கி அதையே தங்களின் வயிற்றுப் பிழைப்பாக்கக் கொண்ட எந்த மவ்லவியாக இருந்தாலும் அவர்கள் தர்கா, தரீக்கா, மத்ஹப், ஷாஃபி, ஹனஃபி, மாலிக்கி, ஹன்பலி, அஹ்ல ஹதீஃத், முஜாஹித், ஜாக், ததஜ, இதஜ, ஸலஃபி இன்னும் எத்தனைப் பிரிவுகள் உண்டோ அத்தனைப் பிரிவுகளின் மவ்லவிகளாக இருந்தாலும் அவர்கள் சமுதாய ஒற்றுமையை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்.
21:92, 23:52 குர்ஆன் வசனங்ளை நிராகரித்து குஃப்ரிலாகி சமுதாயத்தைப் பிளவு படுத்துவதிலேயே குறியாக இருப்பார்கள்.
ஒருவருக்கொருவர் காஃபிர், முஷ்ரிக் ஃபத்வா கொடுப்பதிலும், ஒருவரை ஒருவர் பின்பற்றித் தொழக்கூடாது என ஃபத்வா கொடுப்பதிலும் குறியாகத் தான் இருப்பார்கள்.
யார் இவர்களின் மாய, வசீகர, சூன்யப் பேச்சில் மயங்காமல் அவர்களிலிருந்து விடுபட்டு 3:103 இறைக்கட்டளைப்படி குர்ஆனைப் பற்றிப் பிடித்து 29:69 இறைவாக்குப்படி பெரும் முயற்சி எடுக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்று சுவர்க்கம் செல்ல முடியும். அவர்களே அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து நேர்வழி நடப்பவர்கள்.
இவர்களின் செயல்களை விட்டு விடுபட்டு குர்ஆன், ஹதீஃதை மட்டும் எடுத்துச் செயல்படுவது உண்மை முஸ்லிம்களின் கடமையாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.
source: https://www.facebook.com/annajaath/posts/1507941032623521