ஆறடி மனிதனும் ஆறாத அகங்காரமும்
ஆறடி மனிதனுக்கு இறைவன் கூறும் அறிவுரை இது…
”மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது; மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது. (அல்குர்ஆன் 17:37)
இன்று நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் இந்த பூமிப்பந்தின் குறுக்களவு அதாவது விட்டம் – 12,756 கிலோமீட்டர். இதன் பரப்பளவு 510,10,00,000 சதுர கிலோமீட்டர்கள்.
இதிலும் மூன்றில் ஒரு பங்குதான் நிலம். மீதியோ கடலால் சூழப் பட்டுள்ளது. இதன் மீதுதான் கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கோடிக்கணக்கானோர் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். எதிர்காலத் தலைமுறைகள் வாழக் காத்திருக்கின்றன.
”பூமியை உங்களை அணைத்துக் கொண்டிருப்பதாக நாம் ஆக்கவில்லையா? உயிருள்ளோருக்கும், மரித்தோருக்கும் (அது இடம் அளிக்கிறது). அன்றியும், அதில் உயர்ந்த மலைகளையும் நாம் ஆக்கினோம்; இனிமையான தண்ணீரையும் நாம் உங்களுக்குப் புகட்டினோம்.” (அல்குர்ஆன் 77:25-27)
“(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்; இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்; மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான்; இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவரவர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்” (என்று இறைவன் கூறுகிறான்).“(அவற்றிலிருந்து) நீங்களும் புசித்து உங்கள் கால்நடைகளையும் மேய விடுங்கள்; நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குத் (தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.” (அல்குர்ஆன் 20:53,54)
அதே பூமியில் தோன்றி மறைந்த அனைத்து மனிதர்களும் அதிலிருந்தே மீண்டும் விசாரணைக்காக இறைவனால் எழுப்பப்பட உள்ளார்கள்:
இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம். (அல்குர்ஆன் 20:55)
இந்த நிலப்பரப்பின் பின்னணியில் இதன் மீது சுமார் ஆறடி உயரமும் ஒன்றரை அடி குறுக்களவும் கொண்ட மனிதன் என்பவன் எவ்வளவு அற்பமான படைப்பு என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். இதன் மீது நீர்க்குமிழி போல தோன்றி மறையும் அவனது ஆயுளும் அற்பமானது என்பதை நாம் அறிவோம்.
நமக்கு இவ்வளவு பிரம்மாண்டமானதாகத் தெரியும் இந்த பூமியை இன்னபிற கோள்களோடும் சூரியனோடும் ஒப்பீடு செய்யும்போது இந்த பூமி எவ்வளவு அற்பமானது என்பது புரியும். நம் சூரிய குடும்பம் அது சார்ந்த பால்வெளி மண்டலத்தில் எவ்வளவு அற்பமானது என்பதையும் பால்வெளி மண்டலம் அது சார்ந்த அடுத்த மண்டலங்களின் தொகுப்பில் எவ்வளவு அற்பமானது என்றும் அடுத்தடுத்து ஒப்பீடு செய்யும்போது மனிதனின் அற்பநிலையின் உண்மை விளங்கும். அத்துடன் இவற்றையெல்லாம் படைத்து பரிபாலித்து வரும் நம் இறைவனின் உள்ளமையும் வல்லமையும் பற்றி உணர முடியும்.
உணராதோர் நிலை
ஆனால் இவை எதையுமே கண்டு கொள்ளாமல் இந்த பூமியின் மீது அகங்காரம் கொண்டும் கர்வம் கொண்டும் நடந்து கொண்டவர்களின் நிலை பரிதாபத்திற்குரியது. இறைவனின் தூதர்களும் நல்லோரும் அவர்களுக்கு மரணத்தைப்பற்றியும் இறைவனைப்பற்றியும் மறுமையில் விசாரணை பற்றியும் எச்சரித்தபோது அவற்றைப் புச்சமாகக் கருதினார்கள். தங்கள் அநியாயங்களில் அத்துமீறல்களில் வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள்.
o ஆறடி உயரம் நின்று கொண்டு தங்களையே கடவுள் என்று கூறிக்கொண்டவர்களும் அவர்களில் உண்டு.
o தங்களைத் தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற மமதையில் அடக்குமுறைகளையும் அக்கிரமங்களையும் கையாண்டவர்களும் அவர்களில் உண்டு.
o தங்கள் வாழ்வு இங்கேயே நிலைக்கும் என்று நினைத்து மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்தவர்களும் மாட மாளிகைகளும் இரும்புக் கோட்டைகளும் கட்டி அழகு பார்த்தவர்களும் அவர்களில் உண்டு.
o இங்கு நிலையாக இருப்போம் என்ற நினைப்பில் அப்பாவிகளைப் படுகொலைகளை செய்தும் நாடுகளையும் கண்டங்களையும் சூறையாடியும் வல்லரசுகளை நிருவி மற்றவர்களை மண்டியிடச் செய்வதில் சுகம் கண்டவர்களும் அவர்களில் உண்டு.
ஆனால் அவர்கள் அனைவருக்கும் பூமிக்கடியில் ஆறு அல்லது ஏழடி நீளமும் இரண்டு அடி அகலமும் இரண்டு அடி ஆழமும் கொண்ட ஒரு இடம்தான் இறுதி இருப்பிடமாக – இறுதி முகவரியாக – அமைந்தது. ஆனால் அந்த இடங்களில் இன்று அவர்களுடைய உடலும் கூட காணப்படுவதில்லை. அவர்களில் சிலர் அந்த இறுதி இருப்பிடத்தையும் அடையவில்லை. சிலரின் உடல்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இன்னும் சிலரின் உடல்கள் மீன்களுக்கும் பறவைகளுக்கும் உணவாயின. ஆனால் இறுதிவரை அவர்கள் செய்த அத்துமீறல்களை படுகொலைகளை சூறையாடல்களை தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற உணர்வோடு வாழ்ந்தார்கள்.
இறைவன் அனைத்தையும் காண்கிறான் என்ற உணர்வு இல்லாமலேயே! அன்றைய குற்றவாளிகளுக்கு ஒப்பான அல்லது அதைவிட கொடூரமான குற்றவாளிகள் இன்றும் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
யாராயினும் இறைவனின் நீதிவிசாரணையில் இருந்தும் தண்டனைகளில் இருந்தும் தப்ப முடியாது எனபதை கீழ்கண்ட இறைவசனங்கள் எச்சரிக்கின்றன:
இந்த அக்கிரமக்காரர்களின் செயல்களை அல்லாஹ் கவனிக்காமல் இருக்கின்றான் என்று (நபியே!) நீர் கருத வேண்டாம்! அவர்களை அவன் விட்டுவைத்திருப்பது ஒரு குறிப்பிட்ட நாள் வரைக்கும்தான்! அந்நாளில் அவர்களின் விழிகள் மருளும். (அல்குர்ஆன் 14:42)
அவர்கள் தம் தலைகளை மேலே உயர்த்திக் கொண்டு ஓடுவார்கள்; அவர்களின் பார்வை நிலை குத்தியிருக்கும்; மேலும், அவர்களுடைய இதயங்கள் சூன்யமாகிவிட்டிருக்கும்! (அல்குர்ஆன் 14:43)
தாங்கள் இந்த பூமியில் உயிரோடு உலவிய காலத்தில் செய்த அத்துமீறல்கள் விசாரிக்கப்பட்டு தண்டனை அவர்கள் மீது விதியாக்கப் படும்போது அந்த முன்னாள் ராஜாதிராஜர்களும் கொடுங்கோலர்களும் இறைவன் முன் மண்டியிட்டுக் கதறுவார்கள். அவற்றிற்கு இறைவன் கொடுக்கும் பதில்களையும் பாருங்கள்:
வேதனை வரக்கூடிய அந்நாளைப் பற்றி மக்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! அன்று இந்த அக்கிரமக்காரர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவனே! இன்னும் சிறிது காலம் வரை எங்களுக்கு அவகாசம் அளிப்பாயாக! அவ்வாறு அளித்தால், உனது அழைப்பினை நாங்கள் விரைந்து ஏற்றுக் கொள்வோம். மேலும், (உன்) தூதர்களையும் பின்பற்றுவோம்.” (அப்போது அவர்களுக்கு இவ்வாறு தெளிவாகப் பதில் கூறப்படும்:) “எங்களுக்கு அழிவே இல்லை” என்று இதற்கு முன்னர் (பல முறை) சத்தியம் செய்து கூறிக் கொண்டிருந்தவர்கள் அல்லவா நீங்கள்! (அல்குர்ஆன் 14:44)
உண்மையில் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவர்கள் வாழ்ந்த ஊர்களில்தான் நீங்கள் வசித்து வந்தீர்கள்; அவர்களிடம் நாம் எவ்வாறு நடந்துகொண்டோம் என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டிருந்தது; மேலும், அவர்களை உதாரணமாகக் கூறியும் உங்களுக்கு உண்மையைப் புரிய வைத்திருந்தோம்! (அல்குர்ஆன் 14:45)
அவர்கள் விதவிதமான சூழ்ச்சிகளைச் செய்து பார்த்தனர். அவர்களுடைய சூழ்ச்சிகள் மலைகளையே பெயர்த்துவிடக் கூடியவையாக இருப்பினும் அவர்களுடைய ஒவ்வொரு சூழ்ச்சியையும் முறியடிக்கும் சூட்சுமம் அல்லாஹ்விடம் இருந்தது. (அல்குர்ஆன் 14:46)
இறைவன் குற்றவாளிகளை உடனுக்குடன் தண்டிக்காததற்குக் காரணம் இவ்வுலக வாழ்க்கையை ஒரு பரீட்சைப் போலவும் இந்த தற்காலிக உலகை அதற்கான பரீட்சைக் கூடமாகவும் படைத்துள்ளதாலேயே. உடனுக்குடன் தண்டித்தல் என்பது பரீட்சையின் நோக்கத்திற்கு எதிரானது. அதிபக்குவமான முறையில் இவ்வுலகைப் படைத்துள்ள இறைவன் நீதி செல்த்துவதிலும் பக்குவமானவன். அவன் தன் தூதர்கள் மூலமாக வாக்களித்துள்ளபடி குற்றவாளிகளுக்குரிய தண்டனைகள் நிறைவேறியே தீரும் என்பதை இறைவன் நினைவூட்டுகிறான்:
(நபியே!) அல்லாஹ் தன் தூதர்களிடம் அளித்துள்ள வாக்குறுதிக்கு மாறு செய்வான் என்று நீர் ஒருபோதும் கருதவேண்டாம். திண்ணமாக, அல்லாஹ் வல்லமையுடையவனும், பழிவாங்குபவனும் ஆவான். (அல்குர்ஆன் 14:47)
அந்த நாளில் இந்த பூமி வேறு பூமியாகவும், இந்த வானங்கள் வேறு வானங்களாகவும் மாற்றப்பட்டு, அடக்கியாளும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் திருமுன்னர் ஒளிவு மறைவின்றி எல்லாரும் வந்து சேர்வார்கள். (அல்குர்ஆன் 14:48)
14:49. அத்தகைய ஒரு நாளைக் குறித்து நீர் அவர்களை எச்சரிப்பீராக! அந்நாளில் குற்றவாளி(களின் கை கால்)கள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருப்பதை நீர் காண்பீர். (அல்குர்ஆன் 14:49)
அவர்கள் தார் ஆடைகளை அணிந்திருப்பார்கள். மேலும், அவர்களின் முகங்களை தீக்கொழுந்துகள் மூடியிருக்கும். (அல்குர்ஆன் 14:50)
ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் செய்த செயல்களின் கூலியை அல்லாஹ் வழங்க வேண்டும் என்பதற்காக (இவ்வாறு செய்யப்படும்)! திண்ணமாக, அல்லாஹ் விரைவாய்க் கணக்கு வாங்குபவனாவான். (அல்குர்ஆன் 14:51)
source: http://quranmalar.blogspot.in/2017/03/blog-post_18.html