இறைவனை ஏமாற்ற முடியாது
பொதுவாக நம் வாழ்க்கை அமைதியாகச் சென்று கொண்டிருக்கும்போது நமக்கு உண்மை இறைவனைப் பற்றிய நினைப்பு வருவதில்லை. அவன் நமக்கு வழங்கிவரும் எண்ணற்ற அருட்கொடைகளுக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்கிறோம் என்பதையும் மறந்துவிடுகிறோம்.
நாட்டு வழக்கம் என்றும் முன்னோரின் வழக்கம் என்றெல்லாம் சொல்லி நம்மில் பலரும் இறைவன் அல்லாதவற்றை எல்லாம் வணங்கி வரும் பழக்கம் உடையவர்களாக உள்ளோம். இதன் விபரீதத்தை உணராமலேயே காலத்தைப் போக்கியவர்களாக வாழ்ந்து கொண்டு வருகிறோம். இது பற்றி சிந்திக்க நாம் நேரமும் ஒதுக்குவதில்லை.
ஆனால் திடீரென்று ஒரு நோயின் காரணமாகவோ விபத்தின் காரணமாகவோ அல்லது வியாபாரம் அல்லது தொழிலில் ஏற்படும் திடீர் இழப்புகளின் காரணமாகவோ வாழ்க்கை தடம்புரளும்போது நிராசை அடைகிறோம். யாராவது உதவ மாட்டார்களா என்று ஏங்குகிறோம். அப்போதும் இடைத்தரகர்களை அணுகி மீணடும் இறைவன் அல்லாதவற்றின் முன்னால் சென்று அதிகம் அதிகமாகக் காணிக்கைகளும் நேர்ச்சைகளும் செய்து மன்றாடுகிறோம்.
உண்மை இறைவன்பால் ஏனோ திரும்ப மறுக்கிறோம். ஆனால் உண்மை இறைவனோ நம்மைத் தன்பால் அழைக்கிறான். அதாவது நம்மை அழகிய உருவத்தில் செம்மையாக வடிவமைத்து நமக்கு வேண்டிய தேவைகளை எல்லாம் குறைவின்றி வழங்கி பரிபாலித்து வரும் அந்தக் கருணையாளன் தன் அருள்மறையில் கேட்கிறான்:
அல்குர்ஆன் 82:6-8. மனிதனே! அருட்கொடையாளனாகிய உன் இறைவனைக் குறித்து உன்னை ஏமாற்றத்தில் வீழ்த்தியது எது? அவனே உன்னைப் படைத்தான்; உன்னைக் குறைகள் எதுவுமின்றிச் செம்மைப்படுத்தினான்; உனக்குப் பொருத்தமான உறுப்புகளை அளித்தான்.மேலும், தான் நாடிய உருவத்தில் உன்னை ஒருங்கிணைத்து உண்டாக்கினான்.
அவன் நம்மை நேரடியாக அவனிடமே அழைத்துப் பிரார்த்திக்குமாறு பணிக்கிறான்.
அல்குர்ஆன் 2:186 (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ”நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன் பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.
நாம் அவனுக்கு நன்றி கூறி அவனை நேரடியாக வணங்குவதற்கு பதிலாக அவனது படைப்பினங்களுக்கு தலைசாய்ப்பதும் அவன் அல்லாத எவற்றையும் கடவுள் என்று அழைப்பதும் இடைத்தரகர்களை நாடுவதும் அவனது கட்டளைக்கு மாறு செய்யும் செயலாகும். அது சர்வவல்லமை மிக்க அவனை சக்தியற்ற படைப்பினங்களுக்கு ஒப்பாக்கி சிறுமைப்படுத்தும் செயலாகும். இவ்வாறு இறைவனைப்பற்றிய மதிப்பை (seriousness) சிதைத்து விடுவதால் மனித உள்ளங்களில் இறையச்சம் அகன்றுபோய் சமூகத்தில் பாவங்கள் பெருக இது காரணமாகிறது.
பல பாவங்களுக்கு இது தூண்டுகோலாக இருப்பதாலும், கடவுளின் பெயரால் மக்களைச் சுரண்ட வழி வகுப்பதாலும் மனிதகுலத்தில் ஜாதி, மதம் என்று பிளவுகள் உண்டாகக் காரணமாவதாலும் இப்பாவம் பாவங்களிலேல்லாம் மிகப்பெரிய பாவமாகும். இதை மட்டும் இறைவன் ஒருபோதும் மன்னிப்பதில்லை என்கிறது திருக்குர்ஆன்.
போலியான கடவுள்களை வணங்குவோரின் இரட்டை நிலையை இறைவன் கடலில் பயணம் செய்யும் மனிதர்களின் உதாரணத்தின் மூலம் விளக்குகிறான். :
அல்குர்ஆன் 10:22. தரையிலும், கடலிலும் உங்களை இயங்கச் செய்பவன் அவனே! பிறகு, நீங்கள் கப்பல்களில் ஏறி, சாதகமாக வீசும் காற்றோடு மகிழ்ச்சிபூர்வமாக பயணம் செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று கடுமையான எதிர்க்காற்று வீசுகிறது. மேலும், எல்லாப் பக்கங்களிலிருந்தும் அலைகள் தாக்குகின்றன. அப்பொழுது தாம் கடும் பிரளயத்தால் சூழப்பட்டுள்ளதாகப் பயணிகள் எண்ணுகிறார்கள். அந்நேரத்தில் அவர்கள் கீழ்ப்படிதலை (மார்க்கத்தை) அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி, “(இறைவா!) இத்துன்பத்திலிருந்து நீ எங்களைக் காப்பாற்றினால் திண்ணமாக நாங்கள் நன்றியுடையவர்களாய் இருப்போம்” என்று அவனிடம் இறைஞ்சுகின்றார்கள்.
அப்படிப்பட்ட உயிருக்கு ஆபத்தான ஒரு சூழ்நிலை வரும்போது மக்கள் அன்றாடம் வணங்கி வந்த தெய்வங்கள் அனைத்தையும் மறந்துவிடுவார்கள். கரையில் அவர்கள் வணங்கிவந்த படங்களையும் உருவங்களையும் சமாதிகளையும் மனக்கண்முன் கொண்டுவந்து ‘இன்னவரே எங்களைக் காப்பாற்று’ என்று மன்றாட முனைவதில்லை.
இன்று உண்மை இறைவன் எவனோ அவன் மட்டுமே நம்மைக் காப்பாற்ற முடியும் எனபதை உளமார உணர்கிறார்கள். தூய்மையான உள்ளத்தோடு படைத்தவனை அழைத்துப் பிரார்த்திக்கிறார்கள். பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கவும் அவனால் மட்டுமே முடியும் என்பதையும் கரையிலும் கடலிலும் எங்கும் வணங்குவதற்குத் தகுதிவாய்ந்த இறைவன் அவன்மட்டுமே என்பதையும் உளமார அப்போது உணர்கிறார்கள்.
ஆனால் அந்த இறைவன் அவர்களின் மன்றாட்டத்தை ஏற்றுக் கொண்டு அவர்களைக் காப்பற்றினாலோ கரைசேர்ந்த பிறகு நன்றி மறந்துவிடுகிறார்கள். மீணடும் பழையபடியே போலி தெய்வங்கள்பால் திரும்பி விடுகிறார்கள். இப்போக்கை இறைவன் தோலுரித்துக் காட்டுகிறான்:
அல்குர்ஆன் 17:67 இன்னும் கடலில் உங்களை ஏதேனும் சங்கடம் (துன்பம்) தீண்டினால், அவனையன்றி நீங்கள் (தெய்வங்கள் என) எவற்றை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ, அவையாவும் மறைந்து விடும்; எனினும் (அல்லாஹ்) உங்களை ஈடேற்றிக் கரையளவில் கொண்டு வந்து சேர்க்கும் பொழுது நீங்கள் (அவனைப்) புறக்கணித்து விடுகிறீர்கள் –இன்னும் மனிதன் மகா நன்றி மறப்பவனாகவே இருக்கின்றான்.
ஆனால் இறைவனின் பிடியில் இருந்து அவர்கள் தப்பித்து விட்டதாகவும் அவனை ஏமாற்றி விட்டதாகவும் அவர்கள் கருத வேண்டாம் என்று கூறுகிறான் இறைவன்:
அல்குர்ஆன் 17:68 .(கரை சேர்ந்த) பின் அவன் உங்களை பூமியின் ஒரு புறத்தில் புதையும்படி செய்து விட மாட்டான் என்றொ அல்லது உங்கள் மீது கல்மாரியை அனுப்பமாட்டான் என்றோ அச்சந் தீர்ந்து இருக்கிறீர்களா? பின்னர் நீங்கள் உங்களைப் பாதுகாப்போர் எவரையும் காண மாட்டீர்கள்.
அல்குர்ஆன் 17:69 அல்லது அவன் மீண்டும் ஒரு தடவை அக்கடலில் உங்களை மீளச் செய்து, (எல்லாவற்றையும்) முறித்துத் தள்ளும் புயல் காற்றை உங்கள் மீதனுப்பி, நீங்கள் நிராகரித்ததற்காக உங்களை மூழ்கடித்து விடமாட்டான் என்றும் நீங்கள் அச்சந்தீர்ந்து இருக்கிறீர்களா? (அப்படி நேர்ந்தால் ஏன் இவ்விஷயத்தை அவ்வாறு செய்தோம் என) நம்மைத் தொடர்ந்து உங்களுக்காக(க் கேட்போர்) எவரையும் காணமாட்டீர்கள்.
உங்களைப் பரீட்சிப்பதற்காக ஏற்பாடு செய்யப் பட்ட குறுகிய வாழ்க்கை இது. இவ்வுலகம் ஒருநாள் அழியும். மீணடும் உங்களை விசாரிப்பதற்காகவும் உங்கள் வினைகளுக்குக் கூலி கொடுப்பதற்காகவும் இறுதித் தீர்ப்பு நாள் அன்று நீங்கள் எல்லோரும் எழுப்பப்பட இருக்கிறீர்கள் என்ற உண்மையை இறைவன் நினைவூட்டுகிறான்.
அல்குர்ஆன் 10:23. ஆயினும் அல்லாஹ் அவர்களைக் காப்பாற்றிவிட்டாலோ, உடனே அவர்கள் சத்தியத்திற்கு எதிராக பூமியில் வரம்பு மீறி நடக்கத் தலைப்பட்டு விடுகின்றார்கள். மக்களே! உங்களுடைய இந்த வரம்பு மீறுதல் உங்களுக்குத்தான் கேடு விளைவிக்கும். உலக வாழ்வின் அற்ப இன்பங்களை அனுபவித்துக் கொள்ளுங்கள். பிறகு நீங்கள் நம்மிடமே திரும்ப வரவேண்டியுள்ளது. அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை நாம் உங்களுக்கு அறிவித்து விடுவோம்.
அல்குர்ஆன் 10:24. (எந்த உலக வாழ்க்கையின் போதையில் மயங்கி நம் சான்றுகள் குறித்து நீங்கள் அலட்சியமாக இருக்கின்றீர்களோ அந்த) உலக வாழ்க்கையின் உதாரணம் இதைப் போன்றதாகும்: நாம் வானத்திலிருந்து மழையை இறக்கினோம்; பின்னர் அதன் மூலம் மனிதர்களும் கால்நடைகளும் உண்ணக்கூடிய பூமியின் விளைபொருள்கள் நன்கு அடர்த்தியாக வளர்ந்தன; பூமி அழகாகவும், செழுமையாகவும் காட்சியளிக்க, அதன் பலனை அடைந்திட தாங்கள் ஆற்றல் பெற்றுள்ளோம் என அதன் உரிமையாளர்கள் எண்ணிக் கொண்டிருந்த அதே நேரத்தில் திடீரென இரவிலோ, பகலிலோ நம்முடைய கட்டளை வந்துவிட்டது! மேலும், நேற்று வரை எதுவும் அங்கு விளைந்திருக்காதது போல அதனை முற்றாக நாம் அழித்து விட்டோம்; சிந்தித்துணரும் மக்களுக்கு இவ்வாறு சான்றுகளை மிகத் தெளிவாக நாம் விளக்குகின்றோம்.
ஆம், நீர்க்குமிழி போன்ற இவ்வாழ்வை நிரந்தரம் என்றெண்ணி ஏமாந்து விடாதீர்கள் என்று எச்சரிக்கிறான் இறைவன். மாறாக சொர்க்கத்திற்குச் செல்லும் நேர்வழி கோரிப் பிரார்த்திப்போருக்கு அதன்பால் வழிகாட்டக் காத்திருப்பதாகவும் இறைவன் கூறுகிறான்:
அல்குர்ஆன் 10:25. அல்லாஹ் உங்களை அமைதி இல்லத்திற்கு(சொர்க்கத்திற்கு) அழைத்துக் கொண்டிருக்கின்றான். (நேர்வழி காட்டும் ஆற்றல் அவனிடமே உள்ளது.) தான் நாடுவோர்க்கு அவன் நேர்வழி அளிக்கின்றான்.