குழந்தைகளை நேசிப்போர் இறைவனின் அருளைப் பெறுகிறார்கள்
[ ”குழந்தைகளை நேசிப்போரும் குழந்தைகளுக்கு சேவை செய்வோரும் இறைவனின் அருளை பெறுகிறார்கள். நரகிலிருந்து விடுதலை அடைகிறார்கள்” என்று அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
ஒருமுறை ஒரு நபித்தோழர் ”நபியவர்களே! அந்தக்குழந்தைகள் முஸ்லிம் குழந்தைகள் அல்ல” என்றார் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”யார் குழந்தைகளாக இருந்தாலென்ன குழந்தை குழந்தைதான். எல்லாக் குழந்தைகளும் நேசத்திற்குரியதாகும்” என்று கூறினார்கள்.]
குழந்தைகளுடனும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகுந்த பாசத்துடன் இருந்துள்ளார்கள். குழந்தைகளுடன் எப்படிப் பழக வேண்டும் என்பதற்கும் அவர் முன்னோடியாக இருந்துள்ளார்கள்.
கைக்குழந்தைகளை உலுக்குவதையோ மேலெறிந்து பிடிப்பதையோ பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரும்பவில்லை. சற்று வளர்ந்த குழந்தைகளுடன்தான் அவ்வாறு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளையாடினார்கள். கைக்குழந்தைகளின் கழுத்து மென்மையானதால் மூளை பாதிப்படையவோ அல்லது மரண மேற்படவோ வாய்ப்புண்டு.
o பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குழந்தையின் அழுகைக்கு பதிலளித்துள்ளார்கள். ஒரு முறை நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் போது ஒரு குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டு அத்தொழுகையை அவசரமாக தொழுது முடித்தார்கள். நபித்தோழர்கள் காரணம் கேட்க, ”பின்னால் தொழுது கொண்டிருக்கும் தாயின் மனம் பதைபதைக்கும் அல்லவா?” என்றார்கள்.
o உணவு தேவைப்படும் போதும் சௌகரியமாக இருக்க விரும்பும் போதும் சௌகரியமாக தொடுகை தேவைப்படும் போதும் குழந்தைகள் அழுகையின் மூலம் தெரிவிப்பார்கள் என்பதை நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிந்திருந்தார்கள்.
o குழந்தைகளுக்கு தேவையான காரியங்களை ஒழுங்காகச் செய்வதிலும் அவர்களின் பாதுகாப்பை பலப்படுத்துவதிலும் தானும் ஈடுபட்டு ஏனைய தோழர்களையும் ஊக்குவித்தார்கள். குழந்தைகள் தன்னை நம்புவதற்கும் ஊக்குவித்தார்கள். அதற்காக தனது அன்பையும் அரவணைப்பையும் காட்டினார்கள்.
o குழந்தைகளை அரவணைத்து உரையாடுவதிலும் நகைச்சுவையாக பேசுவதிலும் ஆர்வம் காட்டினார்கள். குழந்தை ஒரு பிரச்சினையை தீர்க்க முடியாமல் விரக்தியடையும் போது வித்தியாசமான அணுகுமுறையைப் பயன்படுத்தி தீர்த்துள்ளார்கள். பெருநாள் தினத்தில் ஒரு குழந்தை கவலையுற்றிருந்ததைக் கண்டு தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று வேண்டிய உபசரணைகளை செய்தார்கள்.
o அதேபோல் குழந்தைகள் ஆபத்தான காரியம் ஒன்றைச் செய்யும் போது உடனடியாகச் அச்செய்கையிலிருந்து குழந்தையை விடுவித்து பின்னர் அதனால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக் கூறியுமுள்ளார்கள். வீதியில் கல்லெறிந்து விளையாடுவதை தடுத்த சம்பவத்தைக் கூறலாம். அதற்குப் பகரமாக சதுரங்க விளையாட்டை அனுமதித்ததை காண முடிகிறது.
o பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குழந்தைகளுக்கு உற்சாகமூட்டும் வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்கள். அல்லாஹ்வின் வாள், சுவனத்தின் தலைவர்கள், தாவூதின் புல்லாங்குழல் என்றும் குழந்தைகளின் திறமைகளை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அடிக்கடி கூறுவார்கள்.
o குழந்தைகளுக்கென்று தனியாக நேரம் ஒதுக்கியும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பழகியுள்ளார். ஹஸன், ஹுஸைன், உஸாமா, அனஸ் போன்ற குழந்தைகள் பிறகாலத்தில் வளர்ந்து பெரியவர்களான பின்பும் நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுடன் கழித்த அந்த இனிமையான பொழுதுகளை நினைவு படுத்தி கூறியுள்ளார்கள்.
o அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குழந்தைகளுக்கு பரிசுகளையும் வழங்கியுள்ளார்கள். பரிசு வழங்குவது பாசத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்கள். தொடுகை, ஸ்பரிசம் என்பவற்றை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.
o தலையை தடவுதல், மடியில் வைத்திருத்தல், அணைத்து பிடித்தல், முத்தமிடல், வருடுதல், குழந்தைகளும் தானும் பெரிய துணியால் போர்த்திக் கொண்டு கதகதப்பாக இருத்தல் போன்ற உடலின் தொடுகையால் வரும் பல அன்பு மொழிகளை வெளிப்படத்தியுள்ளார்கள் இவற்றுக்கான சம்பவங்களை சற்று நோக்குவோம்.
o ஒருநாள் காலித் பின் ஸயீத் என்பவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்க்க வந்தார். அருடைய பெண் குழந்தையும் அவருடன் வந்த்து. இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அக்குழந்தை நபிகளாரின் முதுகின் மேல்பக்கத்தில் முத்திரை போன்று தசை வளர்ந்திருப்பதை கண்டது. உடனே குழந்தை அதைத்தொட்டு விளையாட ஆரம்பித்த்து. புதிய பொருட்களைக் கண்டால் குழந்தைகளது பார்வை அவற்றில் செல்வது இயற்கையல்லவா?
இதைக் கண்டதும் காலித்துக்கு கோபம் வந்தது. நபிகளுடன் விளையாடுகிறாயா? என்று குழந்தையை தடுத்தார். ஆனால் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? ”குழந்தை விளையாடட்டும் அதைத் தடுக்க வேண்டாம்” என்றார்கள்.
o நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்பொழுதும் குழந்தைகளை நேசித்து வந்தார்கள். குழந்தைகளைக் கண்டால் ஸலாம் சொல்லுவார். வெளியூருக்குச் சென்று திரும்பி வநதால் தெருக்களில் வரும் குழந்தைகளைத் தமது ஒட்டகத்தின் மீது ஏற்றிக் கொள்வார்.
o நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பழங்கள் அன்பளிப்பாக கிடைத்தால் அவற்றை முதலில் குழந்தைகளுக்கே கொடுப்பார். போரில் குழந்தைகள் கொல்லப்பட்டதாக கேள்விப்பட்டால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகவும் கவலைப்படுவார்.
o ஒருமுறை ஒரு நபித்தோழர் ”நபியவர்களே! அந்தக்குழந்தைகள் முஸ்லிம் குழந்தைகள் அல்ல” என்றார் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”யார் குழந்தைகளாக இருந்தாலென்ன குழந்தை குழந்தைதான். எல்லாக் குழந்தைகளும் நேசத்திற்குரியதாகும்” என்று கூறினார்கள்.
”குழந்தைகளை நேசிப்போரும் குழந்தைகளுக்கு சேவை செய்வோரும் இறைவனின் அருளை பெறுகிறார்கள். நரகிலிருந்து விடுதலை அடைகிறார்கள்” என்று அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
விளையாட்டாகவும் பொய் சொல்லாதே
”மகனே இங்கே வா உனக்கு ஒரு சாமான் தருகிறேன்” என்றாள் அந்தத்தாய். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அங்கு வந்தார்கள்.
”உன் குழந்தைக்கு எந்தப் பொருளைக் கொடுக்க நினைத்தாய்?” என் கேட்டார்கள்.
”நாயகமே பேரீச்சம் பழம் கொடுக்கப்போகிறேன்” என்றாள் அந்த தாய்.
”நீ உன் குழந்தைக்கு எதுவும் கொடுக்கவில்லையானால் நீ பொய் சொன்னதாக இறைவனிடம் எழுதப்படும். விளையாட்டாக கூட பொய் சொல்லக்கூடாது” என்றார்கள் அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
o மற்றொரு நாள் ஒரு நபித்தோழர் வந்து சுவனம் செல்வதற்கு நான் என்ன நற்செயல் செய்யவேண்டும் என்று கேட்டார். அதற்கு நபிகள் ‘உண்மை’ என்று பதிலளித்தார்கள். ஏனெனில் உண்மை பேசும் மனிதன் எப்போதும் நல்ல காரியத்தையே செயகிறான் அவனிடம் இறை விசுவாசம் ஒளி வீசுகின்றது. நல்ல விசுவாசமுள்ளவன் நிச்சயமாக சுவனத்தில் பிரவேசிக்கிறான் என்பதை அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அத்தோழருக்கு விளக்கினார்கள்.
o நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குழந்தையாக இருக்கும் போது ஹலீமா என்னும் கிராமத்துப் பெண் அவருக்குப் பால் கொடுத்து வளர்த்தார்கள். நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வளர்ந்து நபிப்பட்டம் பெற்றார்கள். பல ஆண்டுகள் சென்றன. முஸ்லிம்களுக்கும் எதிரிகளுக்கும் நடந்த போரில் ஹலீமாவின் கோத்திரத்தைச் சேர்ந்த பெண்களும் முஸ்லிம்களிடம் கைதிகளாக பிடிபட்டனர்.
o ஒருநாள் ஒருபெண் புழுதி படிந்த ஆடையுடன் நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நேராக வந்து ”முஹம்மத் என்ன காரியம் செய்து விட்டீர்? உம்முடைய சிற்றன்னையுள்ள கோத்திரத்தை கைதியாக்கி வீட்டீரே!” என்றாள். அங்கிருந்தவர்கள் அந்தப்பெண் திடீரென நுழைந்ததையும் துணிச்சலாகப் பேசியதையும் கண்டு வியப்படைந்தார்கள்.
ஆனால் அவ்வாறு வந்த பெண் தனது செவிலித்தாய் என்றறிந்த நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து அந்த அம்மையாரை அன்புடன் வரவேற்று தனது விரிப்பை விரித்து அதன் மீது உட்காரும்படி கூறினார். இனிமையாகப் பேசி, அநத அம்மையாரை மகிழ்வித்தார்கள். ஹலீமாவின் வேண்டுகோளுகிணங்கி எல்லாக் கைதிகளையும் விடுதலை செய்தார்.
o நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனக்குப் பால் கொடுத்து வளர்த்த தாய்க்கு இவ்வாறுதான் நன்றி செலுத்தினார்கள். இவ்வாறு தனக்கு உதவி செய்த ஒவ்வொருவருக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படி நன்றி செலுத்தியுள்ளார்கள். மற்றொரு நாள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் இருக்கும் போது அவரது செவிலித்தாய் ஹலீமாவின் கணவர் வந்தார் உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவருக்கு தமது விரிப்பின் மூலையில் உட்காருவதற்கு இடமளித்தார்கள்.
சில நிமிடங்களில் செவிலித்தாய் ஹலீமா வநதார். உடனே விரிப்பின் இன்னொரு மூலையில் உட்காருவதற்கு இடமளித்தார்கள். இன்னும் சில வினாடிகளில் ஹலீமாவின் புதல்வி வந்தார். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து நின்று அந்த விரிப்பில் மிகுதியாக இருந்த இடத்தில் தனது பால்குடிச் சகோதரியை உட்கார வைத்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஏழைச் சிறுவனும்
o அன்று நோன்புப் பெருநாள். அதிகாலையிலிருந்தே பெருநாள் களைகட்டத் தொடங்கியிருந்தது பெருநாளைக் கொண்டாடுவதற்காக ஆயத்தங்களை எல்லோரும் சுறு சுறுப்புடன் செய்து கொண்டிருந்தார்கள். பெருநாள் தொழுகைக்கான நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தது. புத்தாடை அணிந்து பெரியவர்களும் குழந்தைகளும் தொழுகைக்காக மைதானத்தை நோக்கி நடக்கலானார்கள். சற்று நேரத்தில் தொழுகை முடிந்த்தும் குழந்தைகள் அங்குமிங்கும் ஓடிவிளையாடிக் கொண்டிருந்தனர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பார்வை அஙகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவனின் பக்கமாக சென்றது. அவன் மெலிந்திருந்தான். அழுக்கடைந்த ஆடையை அணிந்திருந்தான். மைதானத்தில் ஒரு மூலையையில் அமர்ந்து மௌனமாக அழுது கொண்டிருந்தான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அச்சிறுவனை நோக்கி நடந்தார்கள் அவனுடைய தோளில் கைவைத்து அவனது தலையைத் தன்பக்கம் திருப்பினார். மகனே ஏன் அழுகிறாய் என்று அன்பாக கேட்டார். அந்தக் குழந்தை கோபத்துடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கையைத் தட்டி விட்டது. என்னைத் தனியாக விட்டுவிடுங்கள் நான் பிரார்த்தனை செய்கின்றேன் என்றான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனுடைய தலையைத் தடவிக் கொண்டு ”மகனே என்ன நடந்த்து?” என்று கேட்டார்கள்.
அவன் தனது முழங்கால்களுக்கிடையில் முகத்தைப்புதைத்துக் கொண்டு முஹம்மது நபிக்கு எதிராக நடந்த போரில் எனது தநதை மரணித்து விட்டார். என்னுடைய தாயார் வேறு ஒருவரை திருமனம் செய்து கொண்டார். என்னுடைய உடைகளையும் அபகரித்துக் கொண்டார். நான் தாயாரிடம் போனேன். அவருடைய புதிய கணவர் என்னைத் துரத்திவிட்டார். நான் என்ன செய்வேன் என்று ஓவென்று அழ ஆரம்பித்தான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அழுகை வந்தது. அதை அடக்கிக் கொண்டு ”அதுக்கென்ன நானும் ஓர் அநாதைதான் பிறப்பதற்கு முன்பே வாப்பாவை இழந்து விட்டேன்” என்று கூறினார்கள். சிறுவன் நபிகளை நிமிர்ந்து பார்த்த்தான். அவனுக்கு யார் என்பது நினைவுக்கு வந்தது. அவனுக்கு வெட்கம் வந்துவிட்டது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”நான் உனக்கு தந்தை, ஆயிஷா உன் தாய், ஃபாத்திமா உன் சகோதரி என்று இருந்தால் சந்தோசப்படுவாயா?” என்று கேட்டார்.
சிறுவன் ஆம் என்றான். அச்சிறுவனை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை அழைத்து ”இதோ உனக்கு ஒரு மகன்” என்றார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அச்சிறுவனை அழைத்துச் சென்று குளிப்பாட்டினார். பின்னர் அவனுக்கு ஆடை அணிவித்தார்கள். அவனுக்கு உண்ண உணவு கொடுத்தார்கள். ”இப்போது வெளியே சென்று குழந்தைகளுடன் விளையாடிவிட்டு வா” என்றார்கள். அவன் ஆனந்தத்துடன் வெளியேறி மைதானத்தை நோக்கி ஓடினான்.
எல்லா மனிதர்களுக்கும் முன்மாதிரியாக ஏக இறைவனால் அனுப்பிவைக்கப்பட்ட அகிலத்தின் அருட்கொடை நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியைப்பின்பற்றி நாமும் எல்லா குழந்தைகளிடம் அன்பு பாராட்டுவோம்.
source: http://idrees.lk/