ஆண்டொன்றுக்கு எத்தனை பேர் மக்கா செல்கின்றனர்?
ஹஜ்ஜினால் செளதி அரேபியாவுக்கு எவ்வளவு வருமானம்?
எந்தெந்த நாடுகளை சேர்ந்தவர்கள் மக்கா செல்கின்றார்கள்?
முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் புனித யாத்திரையை நிறைவேற்றும் பொருட்டு, ஆண்டுதோறும் பெருமளவிலான யாத்ரீகர்கள் செளதி அரேபியா செல்கின்றனர். ஹஜ் யாத்திரையின்போது செளதியில் பொருளாதார நடவடிக்கைகளும் கணிசமான அளவு அதிகரிக்கும்.
ஹஜ் மற்றும் அல் உம்ரா செல்லும் முஸ்லிம்களால் செளதி அரேபியாவுக்கு கிடைக்கும் வருவாய் எவ்வளவு என்பதை தெரிந்துக் கொள்ள அனைவருக்கும் ஆர்வம் இருப்பதும் இயல்பே.
செளதி அரேபியாவின் பொருளாதாரத்தில் இவற்றின் பங்கு என்ன? செளதியின் வருவாயை தெரிந்துக் கொள்வதற்கு முன்னதாக, ஹஜ் புனிதப் பயணத்திற்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் அங்கு செல்லும் மக்களின் மொத்த எண்ணிக்கையை பார்ப்போம்.
ஆண்டொன்றுக்கு எத்தனை பேர் மக்கா செல்கின்றனர்?
கடந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 83 லட்சம் மக்கள் செளதி அரேபியாவுக்கு ஹஜ் பயணம் சென்றார்கள். இவர்களில் எட்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இஸ்லாமியர்களின் புனிதத்தலமான அல்-உம்ராவுக்கும் சென்றார்கள்.
கடந்த தசாப்தத்தில் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 25 லட்சம் முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதில் முக்கியமாக கவனிக்கவேண்டிய இரண்டு விஷயங்கள் உள்ளன.
ஹஜ் பயணம் என்பது ஆண்டின் குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் மட்டுமே மேற்கொள்ளப்படுவது. ஒவ்வொரு நாட்டில் இருந்தும் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் மக்களுக்கான கோட்டாவும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ஹஜ் பயணத்திற்கு செல்லும் மக்களில் செளதி அரேபியாவில் வசிப்பவர்களே அதிகம் என்றாலும், அதில் பல்வேறு நாட்டு மக்களும் அடங்குவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதே.
கடந்த பத்தாண்டுகளில், ஹஜ் யாத்ரீகர்களின் மொத்த எண்ணிக்கையில் உள்நாட்டு யாத்ரீகர்களின் அளவு சரிபாதி என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களில் இரண்டு சதவிகிதத்தினர் மட்டுமே செளதி அரேபியாவில் வசிக்கின்றனர்.
ஹாஜி முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பங்கினர் இங்கு வசிக்கின்றனர். தங்கள் வாழ்க்கையின் தார்மீகக்கடமையை நிறைவேற்றுவதை முஸ்லிம்கள் முக்கியமாக கருதுகின்றனர்.
செளதிக்கு அருகில் மக்கா இருப்பதால், ஹஜ் பயணத்திற்கான செலவு குறைவு.
உம்ரா
ஹஜ் யாத்திரை குறிப்பிட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்டாலும், உம்ரா ஆண்டு முழுவதும் மேற்கொள்ளக்கூடியது. கடந்த ஆண்டு எட்டு லட்சம் பேர் உம்ரா யாத்திரை மேற்கொண்டனர்.
செளதிக்கு செல்லும் இஸ்லாமியர்களில் 80 சதவிகிதம் பேர் உம்ரா செல்கின்றனர். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு உம்ரா செல்பவர்களின் எண்ணிக்கை 40 லட்சமாக இருந்த்து.
இன்னும் நான்கு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சமாக உயர்ந்துவிடும் என்று செளதி அரேபியா நம்புகிறது.
ஹஜ்ஜினால் செளதி அரேபியாவுக்கு எவ்வளவு வருமானம்?
ஹஜ் பயணத்தினால் கடந்த ஆண்டு மட்டும் செளதிக்கு 12 மில்லியன் டாலர், அதாவது 76 ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய் நேரடி வருவாய் கிடைத்தது.
செளதி அரேபியாவுக்கு சென்ற 80,330,000 யாத்ரீகர்கள் அங்கு செய்த மொத்த செலவு 23 மில்லியன் டாலர்கள். இந்தத் தொகை அந்த நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்களிக்கிறது.
இது அந்த நாட்டு மொத்த வருவாயில் முதன்மையானது இல்லையென்றாலும், செளதியின் பொருளாதாரத்தின் மிகப்பெரிய ஆதாரமாக இருக்கிறது.
வெளிநாட்டிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் சராசரியாக 4600 டாலர்கள் செலவு செய்வதாக மக்கா சேம்பர் மற்றும் வணிக அமைப்பின் கணிப்பு தெரிவிக்கிறது. ஹஜ் பயணத்திற்கு உள்நாட்டினருக்கு ஆகும் செலவு 1500 அமெரிக்க டாலர்கள்.
ஹஜ் யாத்திரைக்கான செலவு நாட்டுக்கு நாடு மாறுபடும். இரானிலிருந்து ஹஜ் யாத்திரை செல்ல சராசரி செலவு சுமார் 3000 அமெரிக்க டாலர்கள்.
பயணக்கட்டணம், உணவு, மற்றும் பிற செலவுகளும் இதில் அடக்கம். பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் முஸ்லிம்களுக்கும் ஏறக்குறைய இந்த அளவு செலவுதான் ஆகும்.
தன்னுடைய அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் பிபிசியின் பாரசீக பிரிவிடம் இரானை சேர்ந்த ஒரு ஹஜ் பயணி சொல்கிறார், “இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கான எனது பட்ஜெட் 8000 அமெரிக்க டாலர்கள்”.
இதில் அவருடைய சொந்த செலவுகளும் அடங்கும் என்றும் அவர் கூறுகிறார். எது எப்படியிருந்தாலும், செலவழிக்கப்படும் பணம் அனைத்தும் செளதி அரேபியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி வளப்படுத்துகிறது.
எந்தெந்த நாடுகளை சேர்ந்தவர்கள் மக்கா செல்கின்றார்கள்?
ஹஜ் யாத்திரைக்கான கோட்டா இந்தோனேஷியாவிற்கு பிற நாடுகளைவிட மிகவும் அதிகம். ஆண்டுக்கு 2,20,000 பேர் செளதிக்குக் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. ஹஜ் புனித பயணத்திற்கான கோட்டாவில் இது 14 சதவிகிதமாகும்.
மொத்த ஹஜ் பயணிகளில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு தலா 11 சதவிகித ஒதுக்கீடும், பங்களாதேஷுக்கு 8 சதவிகிதமும் அனுமதி வழங்கப்படுகிறது. அதன்பிறகு நைஜீரியா, இரான், துருக்கி, எகிப்து ஆகிய நாடுகளும் ஹஜ் யாத்திரைக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
கச்சா எண்ணெய் விற்பனையில் கிடைக்கும் வருவாயுடன் ஒப்பிட்டால், செளதிக்கு ஹஜ் யாத்திரையில் கிடைக்கும் வருமானம் குறைவே.
ஆனால் எண்ணெய் வருமானத்திற்கு சமமாக ஹஜ் யாத்திரை வருமானத்தையும் அதிகரிக்கவேண்டும் என்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த ஆண்டில் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கவேண்டும் என்ற OPEC (எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள்) அமைப்பின் முடிவினால், இந்த ஆண்டு செளதி அரேபியாவின் பொருளாதார வளர்ச்சி பூஜ்ஜியம் என்ற அளவிற்கு குறையும் என சர்வதேச செலாவணி நிதியம் மதிப்பீடு செய்துள்ளது.
மற்ற ஆதாரங்களில் இருந்து ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய முயலும் செளதி அரேபியாவுக்கு, மத சுற்றுலாக்களில் இருந்து கிடைக்கும் வருவாயும் முக்கியமானது.
அலி கதீமி
பிபிசி பாரசீக சேவை
2 செப்டம்பர் 2017
நன்றி: தமிழ் பி.பி.சி