கத்தியும் கழுத்தும் சந்தித்த பொழுதினில்…
“மகனே! நான் (என்) கனவில் (தொடர்ந்தும்) உன்னை அறுத்துப் பலியிடக் காண்கிறேன். நீ என்ன கருதுகின்றாய் என்பதை (ஒரு முறை) நோட்டமிட்டுப்பார்!”
“தந்தையே! உங்களுக்கு ஏவப்பட்டதை (தயக்கமின்றி) நிறைவேற்றுங்கள். இன்ஷா அல்லாஹ் என்னை ஒரு பொறுமையாளி யாக நீங்கள் கண்டுகொள்வீர்கள்.”
ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னால் வெறிச்சோடியிருந்த மினா பள்ளத்தாக்கில் இரண்டு உருவங்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் சொந்தக்காரர்கள் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அண்ணலாரின் செல்வப் புதல்வர் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும்தான்.
ஒரு கனவை நிறைவேற்றும் தீர்க்கமான முடிவோடு அவர்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். முடிவாகிவிட்ட அவர்களது தீர்மானத்தின் பின்னால் ஒரு கொள்கையின் வெற்றியும் அதன் வரலாறும் துவங்கப் போகிறது என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.
நபிமார்கள்தான் அதிகம் சோதிக்கப்படுவார்கள் என்ற நியதிக்கமைய அல்லாஹ் தனது நேசர் இப்றாஹீமை ஒரு பாரிய சோதனைக்குட்படுத்தினான். அந்த சோதனைக்குப் பின்னால் இருப்பதை அல்லாஹ் ஒருவனே நன்கறிவான். சோதனையை வெற்றிகரமாகத் தாண்டுவது ஒன்றே எமது பணி என அவ்விருவரும் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுவதற்குச் சித்தமாகி விட்டார்கள்.
இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது கத்தியும் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களது கழுத்தும் சந்திக்க வந்த கணப்பொழுதில் இரத்தம் உறைந்து, வானம் பூமியின் இயக்கங்கள் ஸ்தம்பிதமாகி, அடுத்த வினாடியில் என்ன நடக்குமோ என மலக்குகள் அல்லாஹ்வின் கட்டளையை எதிர்பார்த்திருந்த மயிர்க்கூச்செறியும் சந்தர்ப்பத்தை எமது மனக்கண்ணில் ஒருமுறை நிழலாட விட்டுப் பாருங்கள்.
கழுத்து அறுபடவில்லை என்பதை விட, வியப்புக்கும் அதிசயத்துக்குமுரிய மற்றுமோர் அம்சம் அங்கு நிகழ்ந்தது. இருவரது உள்ளங்களிலுமிருந்த உயிர்ப்பாசம் அறுபட்டு கொள்கைப் பாசம் உயிர்பெற்றது, அல்லாஹு அக்பர்!
ஒரு கொள்கை உலகில் வெற்றி பெறுவதற்கு முன்னால் உள்ளத்தில் வெற்றி பெற வேண்டும். கண்ணால் காணும் செல்வப் புதல்வனின் பூவதனமா கொள்கையால் காணும் அல்லாஹ்வின் திருமுகமா? எதற்கு ஒரு மனிதனின் உள்ளத்தை வளைத்துப் போடும் வல்லமையிருக்கிறது என்பதை அல்லாஹ் பார்க்க விரும்பியபோது,
“நிச்சயமாக உன் முகம்தான் எனது உள்ளத்தை ஆக்கிரமித்திருக்கிறது. எனது புதல்வன் மீதான பாசத்தை உன் முகத்துக்காக என்னால் நிச்சயம் அறுத்துவிட முடியும்.”
என்பதை நிதர்சனமாக சாதித்துக் காட்டினார்கள் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.
கொள்கையின் வெற்றியை முரசொலிக்கும் அந்த உத்தமர்களின் வரலாற்றில் துரதிஷ்டம்! அறுத்தும் அறுக்காத கத்தியும், அறுக்கப்பட்ட சுவனத்தின் செம்மறியாடும்தான் எஞ்சியிருக்கின்றன. கொள்கையும் அதற்குக் கிடைத்த வெற்றியும் அந்த வரலாற்றின் படிப்பினைகளாக எம்மை வந்தடையவில்லை.
நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது உள்ளத்தில் “கொள்கை” பெற்ற அந்தப் பெரு வெற்றியை உலகம் உள்ளவரை மனித சமூகம் நினைவுகூர வேண்டும் என்று அல்லாஹ் விரும்பினான் போலும். எனவே, நினைவுகூரப்படும் ஒரு கதையாக அதனை வரலாற்று ஏடுகளில் மடித்து வைத்து விடாமல் விரித்து வைத்து வருடந்தோறும் மீட்டப்படும் ஒரு வரலாறாகவே அதனை அல்லாஹ் ஆக்கிவிட்டான்.
நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது இரட்சகனிடமிருந்து பெற்று வந்த கொள்கையை உலகில் வாழவைத்த வரலாறு மிக விரிவானது, எனினும், அக்கொள்கைக்கு அன்னாரின் உள்ளத்தில் கிடைத்த வெற்றியைத்தான் இறுதிநாள் வரை வருடந்தோறும் மீட்டப்படுகின்ற ஒரு வரலாறாக அல்லாஹ் ஆக்கிவைத்தான்.
காரணம், இஸ்லாம் வாழ வேண்டும் என்பதற்காக உழைப்பவர்கள், அர்ப்பணிப்பவர்கள், போராடுகிறவர்கள்,எழுதுகின்றவர்கள்,பேசுகின்றவாகள் அந்த வரலாற்றுப் பிண்ணனியில் ஒரு கணம் தங்களைப் பார்த்துக் கொள்வதற்காக!
இஸ்லாத்தின் கொள்கைகள் வெற்றி பெற்றுள்ளனவா? அவர்கள் எந்தக் கொள்கை உயிர்வாழ வேண்டும் என நினைக்கிறார்களோ அந்தக் கொள்கை அவர்களது உள்ளங்களில் வாழ்கின்றதா என்பதை மீட்டிப் பார்ப்பதற்கு நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது வரலாறு மீட்டப்படத்தான் வேண்டும்.
அவ்வாறான ஒரு மீட்டலை இஸ்லாமியப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்களது உள்ளங்களோடு செய்து பார்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த வரிகள்.
கண் காணாத அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்தினால் கண்ணால் காணுகின்ற அனைத்தையும் அர்ப்பணித்த ஏன், தான் பெற்ற செல்வப் புதல்வனையே இழக்கத் துணிந்த வீர மகன் இப்றாஹீம் நபியின் வரலாறு இஸ்லாத்தை வாழவைக்கப் போராடுகின்ற ஒவ்வொரு ஊழியனும் தனது மனக்கண்ணில் நிறுத்த வேண்டியதே. இஸ்லாமிய ஊழியனின் உள்ளத்தில் வெற்றி பெறாத கொள்கையை அவன் உலகில் வெற்றி பெறச் செய்வது அசாத்தியம் மட்டுமல்ல, அந்த முயற்சி மறுமையிலும் அவர்களுக்கு எப்பயனையும் தர மாட்டாது.
அதனால்தான் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது நீண்ட பிரார்த்தனைகளில் இப்படியும் இறைஞ்சினார்கள் போலும்:
“எனது இரட்சகனே! (மனிதர்கள்) எழுப்பப்படும் நாளில் நீ என்னை இழிவுபடுத்திவிடாதே! அந்நாளில் பிள்ளைகளோ (அவனுக்கு) எப்பயனையும் தரப் போவதில்லை. (கொள்கையை சுமந்து) பாதுகாக்கப்பட்ட உள்ளத்தோடு வந்த மனிதனைத் தவிர.”
ஆம், உள்ளத்தில் பாதுகாக்கப்படாத கொள்கை உலகத்தில் பாதுகாக்கப்படுவது எங்கனம்?
அதேநேரம், கொள்கைக்காக தனது கழுத்தைக் கத்தியிடம் சமர்ப்பித்த தனயனுக்கும் அல்லாஹ் ஒரு வெற்றியைக் கொடுத்தான். அது வெற்றி மட்டுமல்ல, உன்னதமான பாக்கியமும் கூட. உலகம் உள்ளவரை அல்லாஹ்வுடைய மார்க்கத்தின் கலங்கரையாக விளங்குகிற ஓர் உத்தமரை தனயன் இஸ்மாயீலின் பரம்பரையிலேயே அல்லாஹ் உதிக்கச் செய்தான். அத்தகைய உத்தமர் பிறந்து, வாழ்ந்து, தீன் பணி செய்கின்ற பிரதேசத்தையும் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வாழ்ந்த பிரதேசமாக ஆக்கி வைத்தான்.
ஆம், அவர்கள்தான் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆவார்கள். இறுதி நபியின் பாட்டனார் அந்தஸ்து மட்டும் நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக் குக் கிடைக்கவில்லை. மாறாக, இறுதிநாள் மட்டும் இஸ்மாயீலின் தியாக வரலாற்றை மீட்டுகின்ற பாக்கியத்தையும் அன்னார் மூலமாக அல்லாஹ் ஏற்படுத்தினான்.
தனது இருபத்து மூன்று வருட வரலாற்றை இறுதி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முடித்து வைக்கின்ற போது இருள் மூழ்கிக் கிடந்த இவ்வுலகம் ஒரு பேரொளியில் பிரகாசித்து கொண்டிருந்தது. உலகம் மறுமை இரண்டையும் இணைக்கின்ற பாதை மிக விசாலமாக செப்பனிடப்பட்டு அதன் இரவும் பகலைப் போன்று பிரகாசித்துக் கொண்டிருந்தது.
இறுதி நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் சுமந்து வந்த கொள்கையைத்தான் உலகில் நிலைபெறச் செய்தார்கள். அல்லாஹ் அவ்விருவரது வாழ்க்கையையும் தத்ரூபமாக ஓரிடத்தில் பிணைக்க நாடினான் போலும்.
இறுதி நபியின் இறுதி வெற்றிக்குப் பின்னால் அன்னாரது முதலும் இறுதியுமான ஹஜ் இடம்பெறுகிறது. அது வெறுமனே மார்க்கத்தின் இறுதிக் கடமையாக மட்டுமல்ல, இறுதி நபியின் இறுதி வெற்றியைப் பறைசாற்றும் சந்தர்ப்பமாகவும், நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் சுமந்து வந்த கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் உலக வெற்றியை தக்பீருடனும் தல்பியாவுடனும் பிரகடனம் செய்யும் வேளையாகவும் அமைந்திருந்தது.
நபிகளாரின் வரலாற்றுப் புகழ்மிக்க அரஃபா உரைக்குப் பின் அங்கு திரண்டிருந்த ஒரு இலட்சத்துக்கும் அதிகமான தனது தோழர்களை நோக்கி அன்னார் வினவுகிறார்கள்:
“நான் அல்லாஹ்வின் மார்க்கத்தை எத்திவைத்துவிட்டேனா? (நிலைநாட்டி விட்டேனா?)”
“ஆம் யா ரஸூலல்லாஹ்” என்று ஒரே குரலில் அங்கு திரண்டிருந்தவர்களின் பதில் ஒலிக்க உடனே இரு கரமேந்தி,
“யா அல்லாஹ் நீயும் இதற்குச் சாட்சியாக இரு!” எனப் பிரார்த்தித்தார்கள்.
அந்தப் பிரார்த்தனைக்குப் பதில் கூறும் விதமாக ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பின்வரும் குர்ஆன் வசனத்துடன் வருகிறார்கள்:
“இன்றைய தினம் உங்களது மார்க்கத்தை நான் உங்களுக்கு நிறைவு செய்துவிட்டேன். எனது அருளையும் நான் உங்கள் மீது பூர்த்தியாக்கிவிட்டேன். (உலகில் இனி) இஸ்லாம் ஒன்றை மட்டுமே தீனாக நான் அங்கீகரித்து விட்டேன்.”
எத்துணை அற்புதமான இணைப்பு!
இப்றாஹீம் நபியின் உள்ளத்தில் வெற்றி பெற்ற கொள்கை இறுதி நபியால் உலகில் ஸ்தாபிக்கப்படுகிறது. இரண்டு வெற்றிகளையும் இணைக்கும் இடமாக ஹஜ்ஜை அல்லாஹ் பிரகடனம் செய்கிறான்.
ஆக, ஒரு கொள்கை உள்ளத்திலும், உலகிலும் பெற வேண்டிய அற்புதமான வெற்றிகளை இணைக்கும் இடமாகவே ஹஜ் இருக்கிறது.
இன்றைய ஹஜ்ஜுகளுக்கும் இந்த வெற்றிகளுக்கும் சம்பந்தம் இருக்கிறதா?
– உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி