நான்கு பக்கங்களிலும் பாதுகாவல்! ஏன்?
அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாக அஹ்மதில் ஒரு ஹதீஸ் பதிவாகியுள்ளது. நபி ஸல் அவர்கள் அதிகமாகக் கேட்டதாக உள்ள ஒரு துஆ அது.
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي، اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي وَآمِنْ رَوْعَاتِي، اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ وَمِنْ خَلْفِي وَعَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي وَمِنْ فَوْقِي وَأَعُوذُ بِعَظَمتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي
”யா அல்லாஹ்! எனது தீனிலும் துன்யாவிலும், குடும்பத்திலும், பொருளிலும் மன்னிப்பையும் ஆரோக்கியத்தையும் தந்தருள உன்னை வேண்டுகிறேன். யா அல்லாஹ் எனது வெட்கத்தலங்களை மறைத்தருள்வாளாக! எனது பயங்களை விட்டும் என்னை நிர்ப்பயமான வனாக்குவாயாக! எனது முன்புறம் பின்புறம், வலப்புறம், இடப்புறம், மேல்புறம் கீழ்ப்புறம் எல்லா திசைகளிலிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக! எனது கீழ்பாகத்திலிருந்து நான் தாக்கப்படுவதை விட்டும் உன் வலுப்பத்தைக் கொண்டு காவல் தேடுகிறேன்.”
பாதுகாப்பாயாக எனக் கூறிவிட்டால் முடிந்துவிடும்.. ஏன் ஒவ்வொரு பக்கத்தையும் குறிப்பிட்டு பாதுகாவல் கேட்குமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வழிகாட்டினார்கள்?
காரணம் இதுதான்.
அல்குர்ஆன் 7:16. (அதற்கு இப்லீஸ்) “நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்” என்று கூறினான்.
அல்குர்ஆன் 7:17. “பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காண மாட்டாய்” (என்றும் கூறினான்).
அனைத்து நான்கு பக்கங்களிலிருந்தும் ஷைத்தான் மனிதர்களைத் தடுப்பதாகச் சூளுரைக்கிறான்.
1. முன்பக்கம் – முன் வரவிருக்கும் மறுமையைக் குறித்து சந்தேகமடையச் செய்வான்.
2. பின்பக்கம் – இவ்வுலக வாழ்க்கையில் அதிக ஆசை கொள்ளச்செய்வான்.
3. வலப்பக்கம் – தீனைக் குறித்துத் துருவித்துருவி கேள்விகள் கேட்க வைப்பான்.
4. இடப்பக்கம் – பாவம் செய்யத் தூண்டுவான்.
நன்மையின் பாதையில் அமர்ந்து தடுத்து தீமையின் பக்கம் திசைதிருப்புவான்.
ஆனால், மேல்பக்கத்தை விட்டுவிட்டான்..ஏன்? அல்லாஹ்வின் அர்ஷ் நமக்கு மேலேயே இருப்பதால்… அர்ஷிலிருந்து வரும் அருட்கொடைகளைத் தடுக்கும் சக்தி ஷைத்தானுக்கில்லை. (கீழ்ப்பக்கம் என்பது பூகம்பத்தினால் ஏற்படும் தீங்கு).
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத்தந்த ஒவ்வொன்றின் பின்னும் நாம் அறிய இயலா பல தொலைநோக்குப் பார்வைகள் புதைந்திருக்கும்.
source: http://enrenrum16.blogspot.in/