என்னைப்படைத்த ரப்பு பார்த்துக் கொண்டிருக்கிறான்
ஒரு மூன்று வருடங்களுக்கு முன்பு நாம் அனைவரும் கேள்விப்பட்ட செய்தி தான்!
சவுதிஅரேபியாவின் பாலைவனப் பகுதியில் சூடான் நாட்டைச் சேர்ந்த யூசுஃப் என்ற நபர் ஒரு அரபியின் ஆட்டுப் பண்ணையில் வேலைக்கு சேர்ந்து ரோட்டின் புறவெளிப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக காரில் வந்த காட்டரபிகள் சிலர் (பாலைவனத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சற்று ஏழ்மை நிலையில் வசிக்க கூடியவர்கள்) யூசுஃப்பை பார்த்து ”எனக்கு ஒரு ஆடு வேண்டும். (சுமார் 1000 ரியால் மதிப்புள்ள ஆட்டை) நான் உனக்கு 200 ரியால் பணம் தருகிறேன் உன் முதலாளிக்கு தெரியாமல் எனக்கு ஒரு ஆட்டை எடுத்து தருகிறாயா?” என்று கேட்டனர்.
அதற்கு அந்த யூசுஃப் ”இல்லை என்னால் முடியாது நான் என் முதலாளிக்கு துரோகம் செய்ய மாட்டேன்” என்று கூறுகிறார்.
அதற்கு அந்த அரபி ”ஏன் முடியாது என்கிறாய்?”
இங்கிருக்கும் நூற்றுக்கணக்கான ஆடுகளில் ஒரு ஆட்டை எடுத்துக் கொடுப்பதினால் உன் முதலாளிக்கு என்ன தெரிய போகிறது?
”உன் சம்பளம் என்ன?’ இந்த வெயிலில் இவ்வளவு பாடுபட்டு உன் முதலாளிக்கு நீ உழைத்துக் கொடுப்பதினால் உனக்கு அவர் பெரிதாக என்ன கொடுத்து விட போகிறார்? அதனால் இந்த பணத்தை வாங்கிக் கொண்டு எனக்கு ஒரு ஆட்டை எடுத்துக் கொடு” என்று கூறுகிறார்.
அதற்கு மறுபடியும் யூசுஃப் சொன்ன பதில்; ”இதிலிருக்கும் நூற்றுக்கணக்கான ஆடுகளில் ஒன்றை உங்களுக்கு எடுத்துக் கொடுத்தால் என் முதலாளி பார்க்க மாட்டார் தான்! ஆனால் என்னைப் படைத்த ரப்பு பார்த்துக் கொண்டிருக்கிறான் நாளை மறுமை நாளில் நான் அவனிடம் போய் பதில் சொல்ல முடியாது. ஆகவே நான் இவ்வுலகில் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, நாளை மறுவுலகில் சொர்க்கத்தில் நிம்மதியாக வாழ ஆசைப்படுகிறேன். எனவே என்னுடைய இந்த ஹலாலான சம்பாத்தியம் மட்டுமே எனக்கு போதும் உங்களுடைய பணம் எனக்கு வேண்டாம், நீங்கள் கிளம்புங்கள்” என்று கூறுகிறார்.
அதைக்கேட்ட அந்த அரபி ”மாஷா அல்லாஹ் பரவாயில்லையேப்பா உன்னிடமிருந்து இப்படியொரு பதிலை நான் எதிர்ப்பார்க்கவில்லை அல்லாஹ் உனக்கு அருள்புரிவானாக” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்று விடுகிறார்.
அதேசமயம் அந்த காரில் பக்கத்தில் அமர்ந்திருந்த அந்த அரபியின் நண்பர் ஒருவர் கையில் வைத்திருந்த போனில் ஏதேர்ச்சையாக அங்கு நிற்கும் ஆட்டுக்குட்டிகளை வீடியோ எடுக்கும் போது கேமராவை இந்த சூடானி முகத்திற்கு முன் திருப்பி அவர்கள் இருவரும் பேசிக்கொண்ட காட்சியையும் சேர்த்து பதிவு செய்து விடுகிறார்.
பிறகு அவர்கள் வீட்டிற்கு சென்றடைந்ததும் அந்த நபர் தன்னுடைய நண்பர்களிடம் நடந்த விசயத்தை சொல்லிக் காட்டி அந்த வீடியோவையும் காட்ட அவர்கள் எனக்கும் இதை அனுப்பி வை என்று கேட்க அந்த சூடானி தன்னுடைய ஈமானை பறைசாற்றும் விதமாக கையை உயர்த்திக் காட்டி கத்திப் பேசிய அந்த ஏக வசன வீடியோ வாட்ஸ்அப், இன்ஸ்டாக்ராம் மூலமாக சவுதி முழுவதும் காட்டுத் தீ போல பரவுகிறது.
இது ஒன்றன்பின் ஒன்றாக கடைசியில் சவுதியின் உள்துறை அமைச்சகம் வரை சென்றடைந்து அவர்கள் இதைப்பார்த்ததும் ஒரு ஆடு மேய்ப்பவனுக்கு இந்த வறுமையிலும் அல்லாஹ்வின் மீது இவ்வளவு இறையச்சமா என்று ஆச்சரியப்பட்டு இவரைப் பாராட்டியே ஆக வேண்டும் என்று காவல்துறையை ஏவிவிட்டு ஆளைத் தேடி கண்டுபிடிக்க உத்தரவிடுகின்றனர்.
அதன்படியே காவல்துறையும் யூசுஃபை தேடிப்பிடித்து அரசு முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. பின்பு அந்நாட்டு அரசு யூசுஃபை கண்ணியப்படுத்தும் விதமாக இரண்டு லட்சம் ரியால் பரிசுத்தொகையை அறிவித்தது மட்டுமில்லாமல் இந்நாட்டில் பணிபுரியும் ஒவ்வொரு வேளையாட்களும் நேர்மைக்கு உதாரணமாக யூசுஃபை முன்மாதிரியாக கொண்டு திகழ வேண்டும் என்ற அறிவுரையையும் முன்மொழிந்ததோடு யூசுஃப்பை போன்றதொரு நல்ல மனிதரை எங்களுக்கு பணிக்கு அனுப்பி வைத்த சூடான் அரசுக்கும் எங்களது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அறிவித்தது.
இதைப்பார்த்து தன் நாட்டு அரசுக்கும் இதை எத்திவைக்க வேண்டும் என்று எத்தனித்த சவுதிக்கான சூடான் நாட்டு தூதர் (Ambassador) அப்துல் ஹாஃபிஸ் என்பவர் சூடானின் மத்திய அரசின் கவனத்துக்கு இந்தச் செய்தியை கொண்டு செல்ல அவர்களோ யூசுஃப் அங்கே வேலை செய்தது போதும் உடனே அவரை நம்நாட்டுக்கு திரும்பப் பெறுங்கள் என்று உத்தரவிட்டது.
அதன்படியே யூசுஃப் தன் தாய்நாட்டிற்கு திரும்பிச் சென்றதும் அங்கே அவருக்கு பலத்த மரியாதையுடன் கூடிய வரவேற்போடு மட்டுமில்லாமல் தன்னுடைய பங்குக்கு சூடான் அரசும் சவுதிக்கு சற்றும் குறைவில்லாமல் ஒரு பரிசுத் தொகையும் அறிவித்து பாராட்டியது.
அன்று யூசுஃப் நான் என்னுடைய ரப்புக்கு அஞ்சுகிறேன் என்று அடித்துக் கூறியதால் இன்று அல்லாஹ்வின் உதவியால் அவர் சில கோடிகளுக்கு அதிபதி….
நேற்று குர்பானிக்கான ஆடு வாங்குவதை பற்றி போனில் என் அத்தாவிடம் பேசிக்கொண்டிருக்கும் போது நமது ஊரில் இப்போதெல்லாம் சில ஆட்டுப்பண்ணைகளில் எடை சற்று கூட வேண்டுமென்பதற்காக
ஆடுகளுக்கு வாயில் உப்பு கலந்த அமில நீரை ஊற்றிக் கொடுத்து விற்று விடுகின்றனர். அது நம்மிடம் வந்த பிறகு பக்ரீத் வருவதற்குள்ளேயே உடல் சற்று சோர்வடைந்து நோய்வாய்ப்பட்டுவிடுகிறது என்று கூறி வருத்தப்பட்டுக் கொண்டார்.
அதைக்கேட்டதும் எனக்கு அந்த யூசுஃபின் ஞாபகம் வந்து விட்டது…
”நம்பிக்கைக் கொண்டோரே! உங்களுக்கிடையே, உங்கள் பொருள்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்! திருப்தியுடன் நடக்கும் வியாபாரத்தைத் தவிர.”
(அல்-குர்ஆன் 4:29)
”நம்பிக்கை கொண்டோரே! அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் மோசடி செய்யாதீர்கள்! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றிலும் மோசடி செய்யாதீர்கள்.” (திருக்குர்ஆன் 8:27)
– Mohamed Ifthikar