ஹஜ்ஜின் புனிதமான நோக்கங்கள்
அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்
லா இலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து.
எல்லாம் வல்ல இறைவன் இந்த முஸ்லிம் சமுதாயத்திற்குக் கடமையாக்கி வைத்திருக்கின்ற அத்தனை வணக்க வழிபாடுகளும் ஒரு புனிதமான நோக்கத்தைக் கொண்டவையாக இருக்கின்றன.
அவன் மொழிகின்ற கலிமாவான ஷஹாதத்தாக இருக்கட்டும், தொழுகையாக இருக்கட்டும், நோன்பாக இருக்கட்டும், ஸகாத் மற்றும் தான தர்மங்களாக இருக்கட்டும், வாழ்நாளில் ஒருமுறை வசதிவாய்க்கப்பட்டவர்களுக்காக கடமையாக்கப்பட்டிருக்கும் ஹஜ்ஜாக இருக்கட்டும்.., இவை அனைத்தும் ஒரு உயரிய நோக்கத்திற்காகவே கடமையாக்கப்பட்டிருக்கின்றன.
எவ்வாறு வானமும், பூமியும், அண்ட சராசரங்களும் இந்த பிரபஞ்ச வாழ்க்கைக்கான பங்களிப்பிற்காகப் படைக்கப்பட்டிருக்கின்றனவோ, அதனைப் போலவே மனிதனும், அவன் மீது இறைவன் கடமையாக்கி வைத்திருக்கின்ற வழிமுறைகளும் ஒரு உயரிய நோக்கத்தைக் கொண்டவையாக உள்ளன.
சூரியன் வெப்பத்தை வழங்குவதன் மூலம் இந்தப் பிரபஞ்சத்திற்கான தனது பங்களிப்பை வழங்க வேண்டும். இதில் தடைகள் ஏற்படுமென்றால், இந்த பிரபஞ்ச வாழ்வில் பல்வேறு தடைகளும், குழப்பங்களும், ஒழுங்கீனங்களும் ஏற்பட்டு விடும்.
அந்த வகையில் தான் இந்த பிரபஞ்சத்தின் பிரதான படைப்பாகிய மனிதனும், அவனுக்குரிய கடமைகளை அவன் முழுமையான நிறைவேற்றியாக வேண்டும். அந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்குரிய வழிமுறைகளை இறைவன் வழங்கியிருக்கின்ற பிரகாரம் அவன் அதனை நிறைவேற்றியாக வேண்டும். அவ்வாறு நிறைவேற்றத் தவறும்பட்சத்தில், இந்தப் பூமியில் குழப்பங்களும், மாச்சரியங்களும் தலை விரித்தாடத் துவங்கும்.
எனவே, இந்த குழப்பமில்லாத வாழ்க்கைக்கு பயிற்றுவிக்கக் கூடிய பயிற்சிக் களமாகத் தான் இறைவன் கடமையாக்கி வைத்திருக்கின்ற ஒவ்வொரு கடமைகளும் அமைந்திருக்கின்றன. அதில் இந்த ஹஜ் என்னும் கடமையானது, மிகவும் உன்னதானதொரு வழிமுறையையும், முழுமையான பயிற்சியையும் தன்னுள்ளே பொதிந்து வைத்திருக்கக் கூடியதாக இருந்து கொண்டிருக்கின்றது.
இதில் ஓரிறைக் கொள்கை, இஸ்லாமிய குடும்ப அமைப்பு, பிரச்சாரப் பணி, தியாகம், பொறுமை, சகிப்புத் தன்மை, வாழ்க்கை முறைகள் போன்ற எண்ணற்ற அம்சங்கள் அடங்கி இருப்பதைக் காண முடியும்.
• ஹஜ்ஜின் வார்த்தைகள்
• இஹ்ராம்
• மினா, அரஃபா, முஸ்தலிஃபா
• பிரச்சாரப் பணிக்கான ஆயத்தப் பயிற்சி
• தியாகம்
• இஸ்லாமிய நிழலில் குழந்தை வளர்ப்பு
• குடும்பத்தலைவியின் ஒத்துழைப்பும், பிரச்சாரப் பணியும்
• கல்வியறிவு ஊட்டுதல்
ஹஜ்ஜின் வார்த்தைகள்
”லப்பைக்கல்லாஹும்ம லப்பைக்
லப்பைக்க லாஷரீக்க லக்க லப்பைக்
இன்னல் ஹம்த வந்நிஃமத லகவல் முல்க்
லாஷரீகலக்””
ஒவ்வொரு செயலுக்கும் ஒரு குறிக்கோள் உண்டு. இந்த ஹஜ்ஜின் குறிக்கோள், ”இணை துணையற்ற வல்ல அல்லாஹ்விடம் தன்னை முழுமையாக ஒப்படைத்து விடுவது”” என்பதாகும்.
அதனைத் தான் மேலே உள்ள ‘தல்பியா” என்ற சுலோகம் நமக்குக் கற்றுத் தருகின்றது. இந்த உலக வாழ்வில் எத்தனையோ முறை இறைவனுக்கு இணை வைக்கின்ற மாபாதகச் செயலில் நாம் இறங்கி விடுகின்றோம். எனக்கு இணை வைக்கும் தவறுக்கு மனிதர்கள் வருந்தி பச்சாதாபப்பட்டு என்னிடம் மன்னிப்புக் கேட்காதவரை அவனை மன்னிக்க மாட்டேன் என்று அல்லாஹ் உறுதிபடக் கூறி இருக்கும், அத்தகைய மாபாதகத்தை நமது வாழ்வின் நடைமுறைகளில் சர்வ சாதாரணமாச் செய்து விடுகின்றோம்.
அத்தகைய தவறுகளைக் களைவதற்கு முதற் பயிற்சியாக இந்த தல்பியா அமைந்து விடுகின்றது. இந்த தல்பியாவிலே இஸ்லாத்தின் அடிப்படைத் தத்துவமான தவ்ஹீத் – ஏகத்துவக் கொள்கையின் மனம் வீசுகின்றது.
புகழும், ஆட்சியும், அதிகாரமும் உனக்கு மட்டும் தான் உரித்தானது, இந்த பிரபஞ்சத்தை அடக்கி ஆளும் வல்லமையும் உனக்கு மட்டும் தான் உண்டு. உனக்கு ஈடு இணை ஏதுமில்லை என்று பிரகடனப்படுத்தக் கூடியதொரு முழக்கமாக தல்பியா அமைந்து விடுகின்றது.
அதனைப் போலவே ஹஜ்ஜின் ஒவ்வொரு கிரியைகளின் பொழுதும், இந்த தவ்ஹீதின் சங்க நாதம் மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தப்படுவதை நாம் உணரலாம்.
கறுப்புக் கல்லை நோக்கி கை உயர்த்தும் போது, ‘அல்லாஹ{ அக்பர் – இறைவன் மிகப் பெரியவன்” என்றும்,
அதனை அடுத்து ஸஃபா மற்றும் மர்வா குன்றினில் ஏறும் பொழுது,
”அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்,
லா இலாஹ இல்லலாஹு வஹ்தஹு லாஷரீக்கலஹு லஹுல் முல்க வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்,
லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு அன்ஜஸ வஃதஹு வநசர அப்தஹு வஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹு”
என்று கூறக் கூடிய திக்ரும்,
அரஃபா தினத்திலே அதிகமதிகம் உச்சரிக்கக் கூடிய திக்ராக இருக்கக் கூடிய, ‘லா இலாஹ இல்லாஹு” என்ற திக்ரும்,ஷைத்தானை நோக்கி கல் எறியக் கூடிய சந்தர்ப்பத்தில் முழக்கமிடக் கூடிய, ‘அல்லாஹு அக்பர் – இறைவன் மிகப் பெரியவன்” ஆகிய அனைத்தும், இந்த முஸ்லிம் சமுதாயத்திற்கு சிறப்பானதொரு பயிற்சியை வழங்கி, இங்கு.. இந்த.. ஹஜ்ஜின் நடைமுறைகளில் எவ்வாறு தவ்ஹீதின் சங்கநாதம் கமழக் கமழ நீங்கள் உங்களது கடமையை நிறைவேற்றினீர்களோ.. அவ்வாறே உங்களது உலக நடைமுறை வாழ்வில் தவ்ஹீத் என்னும் ஓரிறைக் கொள்கையை முழுமையாகக் கடைபிடித்து வாழ்பவராக இருக்க வேண்டும் என்று நமக்கு பயிற்சி அளிக்கின்றது.
இவ்வாறு கூறும் பொழுது, நாம் என்ன சிலைகளையா வணங்குகின்றோம்.. என்றதொரு கேள்வி தொணிக்கின்றது. மிகப் பெரும் இணை வைப்பிலிருந்து இந்த சமுதாயம் மீண்டிருக்கலாம் அல்லது அதன் எச்சங்கள் நம்முடைய வாழ்க்கையின் போக்கில் ஆங்காங்கே ஒட்டிக் கொண்டிருக்கலாம். அதனை இனங் கண்டு களைய வேண்டும். அதற்கு அடுத்ததாக, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்துச் சென்ற, சிறிய இணைவைப்பிலிருந்து இந்த சமுதாயம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முன்வர வேண்டும்.
• ஆசைகளுக்கும், இச்சைகளுக்கும் அடிபணிவது
• முன்னோர்களுக்கும், அவர்களது பழக்க வழக்கங்களுக்கும் அடிபணிவது
• ஆட்சி அதிகாரத்திற்கு அடிபணிவது
இவற்றை நம்முடைய மனப்பதிவுகளில் அசை போடும் பொழுது, இறைத்தூதர் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது வாழ்க்கை நம் கண்முன் மனப்பதிவாக வலம் வர வேண்டும்.ஒரு கோயில் பூசாரிக் குடும்பத்தில், அதுவும் தலைமைப் பூசாரியின் மகனாகப் பிறந்த இப்ராஹீம் (அலை) அவர்கள், தனது தந்தைக்குப் பின் தனக்கு வரவிருக்கின்ற அந்த கௌரவமான பதவியையும் இறைவனது திருப்பொருத்தத்திற்காக உதறித் தள்ளி விடுகின்றார்கள். அவர்களைக் கொலை செய்யவும் அவரது தூதை நிராகரித்த மக்கள் முனைந்தார்கள். வாழ்ந்த நாட்டை விட்டும் துரத்தினார்கள். கொண்ட கொள்கையில் மாறாத இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், பதவிக்காகவும், பட்டத்திற்காகவும், முன்னோர்களுக்காகவும், ஆட்சி அதிகாரத்திற்காகவும் ஆசைப்பட்டு இறைவனது கோபத்தை சம்பாதித்துக் கொள்ள அவர் துணியவில்லை என்பதையும், தான் ஏற்றுக் கொண்ட கொள்கையை வாழ வைப்பதற்காக நாட்டை விட்டும் கூட வெளியேறிய அவர்களின் தியாகத்தை நமக்கு இந்த ஹஜ் உணர்த்திக் காட்டுகின்றது.
இன்னும் முகஸ்துதி, பெருமை, தற்பெருமை, சூனியம், சகுணம், சாஸ்திரங்கள், ஜோஸியம், நான் என்ற மமதை இன்னும் இவை போன்ற சிறு இணைவைப்பிலிருந்தும் இந்த சமுதாயம் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு இந்த மனித சமுதாயத்தை மாற்றியமைப்பதற்கான வழிமுறைகள் ஹஜ்ஜின் நோக்கமென்றால் அதில் மிகையில்லை.
இஹ்ராம்
ஹஜ்ஜின் பொழுது அணியக் கூடிய இஹ்ராமைப் பார்க்கின்றோம். உலக நடைமுறை வாழ்வில் எவ்வளவு பெரிய பணக்காரனாக அவன் இருந்தாலும், இஹ்ராம் என்னும் இரண்டு துண்டுத் துணிகளை அவன் அணிந்து விட்ட மாத்திரத்தில் அவனது ஆணவம், அகங்காரம், தான் என்னும் மமதை ஆகிய துற்குணங்கள் அவனை விட்டு அகன்று விட வேண்டும். அந்த இரண்டு துண்டுகள் அணிந்திருக்கின்ற நிலையில், அவனது ஆடம்பரங்கள், அலங்காரங்கள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டு, சாதாரண அடித்தட்டு மக்களின் வாழ்க்கை நிலையோடு ஒன்றியதொரு வாழ்க்கைக்கு அதன் மூலம் ஒரு பயிற்சி அவனுக்குக் கிடைக்க வழி ஏற்படுகின்றது.
இந்த இரண்டு துணிகளோடு எத்தனை மனிதர்கள் உலா வந்து கொண்டிருக்கின்றார்கள். தனது அங்க அவயங்களை மறைப்பதற்கான முழுமையான உடை இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்போர்களும், அந்த உடைக்காக ஜீவமரணப் போரட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றவர்கள் எத்தனை பேர் என்று நினைக்கும் பொழுதும், அவனுடைய உள்ளத்தில் குடி கொண்டிருக்கும் பகட்டும், ஆடம்பரமும் இடம் பெயர்ந்து விட வேண்டும். ஒரு மனிதன் இவ்வளவு சிக்கனமான உடை அலங்காரத்தோடும் தன்னுடைய வாழ்க்கையை நடத்தி விட முடியும் என்பதை இது உணர்த்தி நிற்கின்றது.
இது ஒன்றும் சாத்தியமற்றதொரு செயலல்ல. அத்தகையதொரு வாழ்க்கையை வாழ்ந்து வழிகாட்டி விட்டுச் சென்றிருக்கின்ற இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அவரது தோழர்களும், அவர்களைப் பின்பற்றி வாழ்ந்த நேர்வழி பெற்ற மக்களும் நமக்கு நற்சரித்திரச் சான்றுகளாய்த் திகழ்கின்றார்கள்.
மினா, அரஃபா, முஸ்தலிஃபா
இன்னும், ஒவ்வொரு மனிதனும் தனக்கென ஒரு வாழ்விடம் தேடி, அதற்காக மிகப் பெரும் போராட்டத்தையே வாழ்க்கையில் சந்திக்கின்றான். அந்த வாழ்விடம் எவ்வாறெல்லாம் அமைய வேண்டும் என்று கற்பனை செய்த வண்ணம் இருக்கின்றான்.
ஆனால், மினாவில் வாழ்கின்ற அந்த நாட்களை சற்று எண்ணிப் பாருங்கள்..! அவரவருக்கு இறுதியாகக் கிடைக்கக் கூடிய 6 அடிக் குழியை ஞாபகப்படுத்தும் நிலப்பரப்பாக மினா திகழ்வதை அங்கு சென்றவர்கள் உணர்வார்கள். எவ்வளவு வசதி வாய்ப்புள்ளவராக இருப்பினும் சரியே, அவருக்கென அங்கு ஒதுக்கப்படுவது அவர் படுப்பதற்கு வசதியாக உள்ள இடம் மட்டுமேயாகும். இன்னும், மிகப் பெரிய மாட மாளிகைகளில் வாழ்ந்து வரக் கூடியவரது வாழ்க்கை கூட இந்த நாட்களில் சுருக்கப்பட்டு, இவ்வளவு சுருக்கமான இடத்திலும் கூட ஒரு மனிதன் தனது வாழ்வை செவ்வையாக நடத்த முடியும் என்பதையும், இன்னும் முஸ்தலிபாவில் தங்கக் கூடிய அந்த இரவில், வாழ வக்கற்ற இன்னும் தனக்கென ஒரு சொந்த இடமில்லாத ஏழையின் வாழ்க்கைப் போக்கை பண வசதி படைத்தவர்களுக்கு உணர்த்தக் கூடியதாகவும் இருக்கின்றது. முஸ்தலிபாவில் தங்கக் கூடிய அந்த இரவில், வெற்று வெளியில் தான் மக்கள் தங்களது அந்த இரவைக் கழிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். பஞ்சு மெத்தையில் படுத்துப் பழக்கப்பட்டவர்கள் கூட, அந்த இரவில் மணலில் படுத்து எழுந்திருக்கக் கூடியவராக இருப்பார்.
அரஃபாப் பெருவெளியானது அல்லாஹ் நாளை மறுமை நாளில் மக்கள் அனைவரையும் ஒன்று கூட்டப்படக் கூடிய தளமாக இருப்பதை நமக்கு உணர்த்துகின்றது. அத்துடன், இஸ்லாமிய பிரச்சாரப் பணிக்காக தன்னுடைய தோழர்களைத் தயார்படுத்திய தளமாகவும், உலக மனித உரிமை சாசனத்தை பிரகடனப்படுத்திய நாளை, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரை நிகழ்த்தப்பட்ட இடமாகவும் அது காட்சியளிக்கின்றது.
இங்கு நின்று கொண்டு தான், இன்றுடன் அனைத்து அறியாமைக்காலப் பழக்க வழக்கங்களும் என்னுடைய காலடியில் போட்டு மிதிக்கப்பட்டு விட்டன, அழிக்கப்பட்டு விட்டன”” என்றார்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
பிரச்சாரப் பணிக்கான ஆயத்தப் பயிற்சி
வெறுமனே வந்தோம் கூடினோம், ஒரு மிகப் பெரிய சடங்கை நிறைவேற்றி விட்டோம் என்ற களிப்பில் செல்வதற்குக் கடமையாக்கப்பட்டதல்ல ஹஜ். மாறாக, எவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரையால் உந்தப்பட்ட அவர்களது தோழர்கள், தாங்கள் முகம் பார்த்த திசை நோக்கி பயணப்பட்ட, இந்த மார்க்கத்தை வாழ்விக்கப் புறப்பட்டார்களோ அதனைப் போலவே, அரஃபாவிலிருந்து கிளம்புகின்ற ஒவ்வொரு முஸ்லிமும் தனது வாழ்க்கைப் போக்கையே, அழைப்புப் பணியாக மாற்றியமைத்துக் கொண்டு வாழ முயற்சிக்க வேண்டும்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வில் ஒரு அழகிய முன்மாதிரி இருக்கின்றது என்று திருமறைக் குர்ஆன் கூறுகின்றது. அந்த அழகிய முன்மாதிரி மிக்க வாழ்க்கைக்குச் சொந்தக் காரர்களாக முஸ்லிம்கள் மாற வேண்டும்.
ஐரோப்பா அஞ்ஞான இருளில் கிடந்த பொழுது இப்படி ஒரு கருத்தைச் சொல்வார்களாம். அதாவது, ‘நாகரீமாக இரு என்றால், முஸ்லிமாக இரு” என்ற பொருள்படக் கூறுவார்களாம். ஆனால், இன்றைக்கு நாகரீகமாகவும், அழகிய முன்மாதிரியாகவும் வாழ்ந்து காட்டி மனித சமுதாயத்திற்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய முஸ்லிம்கள், பிற சமுதாயம் எள்ளி நகையாடும் அளவுக்கு, இகழப்படக் கூடிய அளவுக்கு இருப்பது வேதனைப்படக் கூடியது.
தியாகம்
ஹதிய் என்ற குர்பானி கொடுக்கும் பொழுது, இப்ராஹீம் (அலை) அவர்களது தியாகத்தையும், இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களது பொறுமையையும், அன்னை ஹாஜரா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனையே முற்றிலும் சார்ந்திருந்த தன்மையும் நம்முடைய கண் முன் வர வேண்டும்.
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தள்ளாத வயதில் மகனாகப் பிறந்தவர் தான் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். தவமிருந்த பெற்றெடுத்த ஆசை மைந்தனை பலி கொடுக்க வேண்டும் என்ற இறைக்கட்டளை வந்த பொழுது, அதனை நிறைவேற்றத் துணிந்த இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தியாகத்தை திருமறையின் வாயிலாக இவ்வாறு கூறுகின்றான் :
(இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான், அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்”” என்று அவன் கூறினான். அதற்கு இப்ராஹீம்; ”என் சந்ததியினரிலும் (இமாம்களை ஆக்குவாயா?)” எனக் கேட்டார். என் வாக்குறுதி (உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான். (2:124)
மேலே உள்ள வசனத்தில் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது தியாகத்திற்குப் பகரமாக இறைவன் அவர்களை இந்த மனித சமுதாயத்திற்கு தலைவராக ஆக்குகின்றேன் என்று கூறிய பொழுது, தன்னை மட்டும் முற்படுத்திக் கொள்ள விரும்பாத, அந்த தலைமைப் பதவியைத் தான் மட்டும் அனுபவிக்க வேண்டும் என்று எண்ணங் கொள்ளாத இப்ராஹீம் (அலை) அவர்கள், எனது சந்ததிக்கும் அந்தப் பதவியை வழங்குவாயா.. என்று இறைவனிடம் முறையிடும் பாங்கு, ஒவ்வொரு குடும்பத் தலைவருக்கும் மிகச் சிறந்த உதாரணமாகும். தன்னை மட்டும் சிந்திக்காமல், தனது சந்ததியின் வாழ்வு, வளம், கொள்கை போன்றவற்றையும் பெற்றோர்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதை நமக்கு உணர்த்தி நிற்கின்றது.
இஸ்லாமிய நிழலில் குழந்தை வளர்ப்பு
அதுமட்டுமல்ல, இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பொறுமை..! தந்தைக்கும் தனையனுக்கும் இடையே நடந்த உரையாடலின் பொழுது, தந்தை இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது மகன் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பார்த்து, ”இறைவனது கட்டளையைக் குறித்து விளக்கி, இதற்கு உங்களது பதில் என்ன மகனே..!” என்று கலந்தாலோசனை செய்யும் விதம், தந்தை மற்றும் மகனது உறவுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டும், குழந்தை வளர்ப்பு எவ்விதமாக இருக்க வேண்டும் என்பதற்குச் சிறந்த உதாரணங்களாகும்.அதற்கு மகன் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களது பதில், ‘இறைவனது கட்டளை எதுவோ அதனைத் தயங்காமல் நிறைவேற்றுங்கள் தந்தையே..” என்பதாக இருக்கின்றது. அதுமட்டுமல்ல, தந்தையே.. கத்தியை நல்ல முறையில் தீட்டிக் கொள்ளுங்கள், இன்னும், உங்களது ஆடையில் எனது இரத்தம் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள், அதன் மூலம் எனது தாய்க்கு மனக் கஷ்டத்தை அளித்து விடாதீர்கள் என்று கூறும் உளப் பாங்கில், அவர் வளர்ந்த மற்றும் வளர்க்கப்பட்ட விதம் பறைசாட்டப்படுகின்றது.
இது ஒவ்வொரு குடும்பத்தலைவனும் தங்களுடைய குழந்தைகளை எவ்வாறு மூத்தோர்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஒழுக்கத்தோடு வளர்க்கப்பட வேண்டும் என்பதைக் கூறுகின்றது. இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு வாழக் கூடிய குழந்தைகளாக அந்தக் குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டும் என்பதையும், இறைவனது கட்டளைகளை முழுமையாகப் பேணி வாழக் கூடியவைகளாகவும் அவை பரிணமிக்க வேண்டும் என்பதையும் நமக்கு இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் மற்றும் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களது வாழ்வு அமைந்துள்ளது.
குடும்பத்தலைவியின் ஒத்துழைப்பும், பிரச்சாரப் பணியும்
இஸ்லாமிய பிரச்சாரப் பணியில் காலடி எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு ஆண் மகனுக்கும் அவனது குடும்பத் தலைவி உறுதுணையானவளாக இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பொழுது தான், பிரச்சாரப் பணியில் எதிர்ப்படுகின்ற சவால்களின் மூலம் துவண்டு போய் வீட்டுக்கு வரும் கணவனுக்கு ஆறுதலான வார்த்தைகள் கிடைக்கும். இல்லையெனில், முரண்பாடுகள் முற்றி குடும்ப வாழ்வு சிதைந்து போவதற்குக் காரணமாகி விடும்.
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது மனைவி அன்னை ஹாஜரா அலைஹிஸ்ஸலாம் அவர்களை மக்காவின் அளரவமற்ற பாலைப் பெருவெளியில் தனித்து விட்டு விட்டுச் செல்லும் பொழுது, தனது கணவரைப் பார்த்து இவ்வாறு கேட்கின்றார்கள் : ‘இந்த பாலைப் பெருவெளில் தாயையும், தனையனையும் விட்டு விட்டுச் செல்கின்றீர்களே.. இது உங்களது முடிவா? அல்லது இறைவனது முடிவா?” எனும் பொழுது, ‘இது இறைவனின் முடிவு” என்று இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறி விட்டுச் செல்கின்றார்கள். அப்பொழுது, அன்னை ஹாஜரா அலைஹிஸ்ஸலாம் அவர்கள், பொறுமையுடன்.. இது இறைவனது முடிவாக இருக்குமென்றால், எங்களைப் பாதுகாக்க அவனே போதுமானவன்” என்று இறைவன் மீதே முழுமையாகச் சார்ந்திருக்கும் பண்பைப் பறை சாற்றுகின்றார்கள்.
மேலே உள்ள இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது வாழ்க்கையைப் பார்க்கும் பொழுது, அவர் தனது பிரச்சாரப் பணிக்காக தனது குடும்பத்தை எவ்வாறு தயார் செய்து வைத்திருந்திருந்தார் என்பதைக் காண முடிகின்றது. எனவே, இன்றைக்கு ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாமியப் பிரச்சாரகனாக மாற வேண்டிய சூழலில் தன்னை பிரச்சாரகனாக மாற்றியமைத்துக் கொள்ள முயற்சிக்கும் அதேவேளையில், தனது குடும்ப அங்கத்தவர்களையும் தனது பிரச்சாரத்திற்குரிய பக்க பலமாக மாற்றியமைக்க வேண்டியதும் அவசியமாகின்றது.இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் தனது ஆரம்ப காலப் பிரச்சாரப் பணிக்காலத்தில், இறைநிராகரிப்பாளர்களின் எதிர்ப்புக்களால் சோர்ந்து போய் வீட்டிற்கு வந்த பொழுதெல்லாம், அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தந்த ஆறுதல் வார்த்தைகள் தான் அண்ணலார் (ஸல்) அவர்களுக்கு புது வலிமையை ஊட்டி, பிரச்சாரப் பணியில் கிடைத்த சோர்வை போக்கி புத்துயிர் ஊட்டின. இன்றைய உலகானது இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், ஒவ்வொரு பிரச்சாரகனும் தனது இல்லத்தை சோதனைகளைத் தாங்கும் வலிமை கொண்டவையாக மாற்றியமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருந்து கொண்டிருக்கின்றது.
இதனைத் தான் ஸஃபாவும், மர்வாவும் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன.
பிரச்சாரப் பணிகளின் பொழுது, மனச் சோர்வு, எதிர்ப்புக்கள், உலக வசதி வாய்ப்புக்கள், சொந்த பந்தங்களின் ஆசைகள் போன்றவற்றின் மூலம் ஷைத்தான் மனிதனை வழிகெடுக்கும் பொழுதெல்லாம், அந்த ஷைத்தானை எந்தக் கல் கொண்டு மினாவில் எறிகின்றீர்களோ, அதே மன வலிமையுடன் – அல்லாஹ்வே மிகப் பெரியவன், அவனது திருப்தி ஒன்றே போதுமானது என்ற உயரிய எண்ணத்தை வரவழைத்துக் கொண்டு சத்தியத்திற்காகப் போராடக் கூடிய ஆத்மாக்களாக நம்மை மாற்றி அமைத்துக் கொள்வதற்கான உள வலிமைத் தரக் கூடியதாக ‘கல் எறியும் நிகழ்ச்சி” நம்மை மாற்றியமைக்க வேண்டும்.
அடுத்ததாக, இஸ்லாமியப் பிரச்சாரப் பணி என்பது குறிப்பிட்ட எல்லையோடு முடிவடைந்து விடுவதில்லை. அதன் எல்லைக் கோடுகள் விரிவாகிக் கொண்டே இருக்க வேண்டும். குறுகிய நோக்கங்கள், இயக்க பேதங்கள், கருத்து முரண்பாடுகள் ஆகியவற்றைக் களைந்து முழு சமுதாய நல்வாழ்வுக்காக என்னும் அடிப்படையில் பிரச்சாரப் பணியின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.
இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன்னை பிரச்சாரப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டதோடு நிறுத்திக் கொள்ளாமல், தனக்குப் பின் தனது சந்ததியையும் அதற்குத் தயார் செய்கின்றார்கள். இன்னும் மக்காவில் ஆரம்பித்த இந்த இஸ்லாமியப் பிரச்சாரப் புயல், முழு அரேபியாவிற்கும் பரவ வழி அமைக்கின்றார்கள். லூத் (அலை) அவர்களை ஜோர்டானுக்கும், இங்கிருந்து பாரசீகம், எகிப்து, ஈரானுக்குப் பிரச்சாரங்கள் சென்று பரவ வழிவகுக்கின்றார்கள். அடுத்ததாக இஸ்மாயீல் (அலை) அவர்களை ஹிஜாஸ் என்றழைக்கக் கூடிய மக்காவிலும், அடுத்து இஸ்ஹாக் (அலை) அவர்களை ‘கன்ஆம்” என்ற பாலஸ்தீனத்திலும் நியமித்து இஸ்லாமியப் பிரச்சாரப் பணி முடுக்கி விடப்படுகின்றது.
இதில் மக்கா முழு உலக இஸ்லாமியப் பிரச்சாரப் பரவலுக்கான தலைமையிடமாக மாற்றம் பெறுகின்றது. அந்த தலைமையகத்தில் வருடம் ஒருமுறை வந்து கூடுவதன் மூலம், முஸ்லிம்கள் தங்களது பிரச்சாரப் பணிக்கான பயிற்சியையும், உத்வேகத்தையும் பெற்றுச் செல்லக் கடமையாக்கப்பட்டதே ஹஜ் ஆகும். ஹஜ் என்றாலே ”சந்தித்தல்”” என்ற பொருளாகும்.
இந்த சந்திப்பின் பொழுது நமக்குள் இருக்கின்ற கருத்து வேறுபாடுகள் களையப்பட வேண்டும். சகிப்புத்தன்மையும், விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கும் வளர வேண்டும். நடுநிலையைப் பேணக் கூடியவர்களாக ஒவ்வொருவரும் மாற வேண்டும்.
ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்படப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு – ஆகியவை செய்தல் கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தனாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள். (2:197)
கல்வியறிவு ஊட்டுதல்
பல சமூகச் சூழ்நிலைகளில் இருந்து மக்காவை நோக்கி வரக் கூடிய மக்களிடம், இஸ்லாத்தில் இல்லாத பல்வேறு நூதனச் செயல்கள் மலிந்து காணப்படுவதை நாம் காண முடியும். அவ்வாறு காணும் பொழுது, நயமாக அவர்களிடம் அதனை எடுத்துச் சொல்லி, அறியாத மக்களுக்கு இஸ்லாமியக் கல்வி அறிவை ஊட்ட வேண்டியது, அறிந்தோர்களின் கடமையாகும்.
இதற்காக, கல்வி அறிவு பெற்றோர் மார்க்கச் சட்டங்கள் குறித்து தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு அறிந்து கொள்வதற்காக முயற்சிகளைச் செய்ய வேண்டும். தான் அறிந்தவற்றை அழகிய முறையில் பிறருக்கு எடுத்துரைக்க வேண்டும். இன்னும் முஸ்லிம்களை ஒருங்கிணைத்துச் செல்லக் கூடிய பக்குவம் பெற்றவர்களாக தன்னை மாற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
ஹஜ்ஜின் பொழுது, தனக்கு மிக அருகில் இருக்கின்ற மாற்று தேச முஸ்லிம்களிடம் அளவளாவ முயற்சி செய்ய வேண்டும். அவர்களது வாழ்க்கை, மார்க்கம், அரசியல், பிரச்னைகள், தீர்வுக்காக எடுத்துக் கொண்ட முயற்சிகள் இதுபற்றிய கலந்துரையாடல் செய்ய வேண்டும். இவை யாவும் அழகிய விவேகத்துடன் நடத்தப்பட வேண்டும். மாறாக, தான் விரும்பும் இயக்கத்தின் கருத்துக்களை வலிந்து திணிக்கும் முயற்சி இருத்தல் கூடாது. இஸ்லாம், ஓரிறைக் கொள்கை, இஸ்லாமியப் பிரச்சாரம், இணைவைத்தல் போன்ற கருப் பொருளின் கீழ் சம்பாஷனைகள் அமைவது சிறந்தது.
ஆகவே, இஸ்லாமியப் பிரச்சாரப் பணிக்கான முழு உத்வேகமும் தேவைப்படுகின்ற இந்த கால கட்டத்தில் நமது இந்த ஹஜ்ஜுக் கடமையானது அதற்கான முழுப் பயிற்சியையும் தரக் கூடியதாக மாற்றம் பெற வல்ல இறைவன் நம் அனைவரும் பேரருள் புரிவானாக..! ஆமீன்.
இறைவன் நம் அனைவரது அமல்களையும் ஏற்றுக் கொண்டு, பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையில், சுவனச் சோலையில் நுழையும் சிறப்பு மிக்க நல்லடியார்களாக நம்மை ஆக்கி அருள்புரிவானாக.
ஆமீன்.