குர்ஆன் கூறும் இவ்வுலகின் உண்மை இயல்பு
மனிதர்களை உண்மையான நேர்வழியில் செலுத்த வழிகாட்டும் இறுதி இறை வெளிப்பாடாகிய குர்ஆன், இவ்வுலக வாழ்க்கையின் நோக்கம் இறைவனுக்கு அடிபணிவதே ஆகும்.
மனிதன் இறைவனுக்கு அடிபணிகின்றானா அல்லவா என்று சோதிப்பதற்காகவே அவன் அனுப்பப்பட்ட இடம்தான் இவ்வுலகம் என்றும் குர்ஆன் அறிவிக்கின்றது.
இந்தச் சோதனையில் மனிதனை நேர்வழியில் நின்றும் பிறழத் தூண்டும் வகையில் படைக்கப்பட்ட பிரத்தியேகக் கூறுகளைப் பற்றி அல்லாஹ் எச்சரிக்கின்றான்; அவற்றின் தன்மைகளைப் பற்றிக் கூறுகையில் அவை முற்றிலும் ஏமாற்றுபவை எனவும் அறிவிக்கின்றான். உங்கள் பொருள்களைக் கொண்டும் உங்கள் ஆத்மாவைக் கொண்டும் நீங்கள் சோதிக்கப்படுவீர்கள் (3:186)
இவ்வுலகின் உண்மையான இயல்பை வர்ணிக்கும் வசனங்கள் பல குர்ஆனில் உள்ளன. அவற்றுள் சில கீழே தரப்படுகின்றன:
உங்களுடைய செல்வமும், சந்ததிகளும் உங்களுக்குச் சோதனையே. ஆனால் அல்லாஹ்விடத்தில் உங்களுக்கு உங்களுக்கு மகத்தான கூலி உள்ளது. (64:15)
பெண்களும்,ஆண் பிள்ளைகளும், தங்கம் மற்றும் வெள்ளியின் பெருங்குவியல்களும், உயர்ரகக்குதிரைகளும், கால்நடைகளும், வளம் மிகுந்த விளை நிலங்களும் எல்லாம் மனிதர்களைக் கவரும் வகையில் படைக்கப்பட்டுள்ளன. இவை யாவும் இவ்வுலக வாழ்க்கையின் வசதி வாய்ப்புகள். அல்லாஹ்விடத்தில் அழகிய தங்குமிடம் உள்ளது. (3:14)
உங்களுக்கு வழங்கப்பட்டிருப்பவை அனைத்தும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய வசதிவாய்ப்புகளும், பகட்டணிகலன்களுமே ஆகும். அல்லாஹ்விடத்தில் உள்ளவை மேலானாவையும் நிலையானவையும் ஆகும். உங்களின் அறிவாற்றலைப் பயன்படுத்த வேண்டாமா? (28:60)
சமூக தலைமை (அந்தஸ்து) செல்வவளம், சந்ததிகள், உயர் தரமான வாழ்க்கையும் அவையல்லாமல் ஏழ்மையும் மிக வறிய வாழ்க்கை நிலையும் எல்லாமே மனிதனை இவ்வுலகில் சோதிப்பதற்காக உள்ளவையே. குர்ஆன் வசனம் ஒன்று கூறுகிறது.
அவன் (அல்லாஹ்) தான் உங்களை இப்புவியின் வாரிசுகளாக ஆக்கினான். மேலும் உங்களில் சிலரை மற்றவர்களை விட தலைமையில் (அந்தஸ்தில்) உயர்த்தியும் உள்ளான். உங்களுக்கு அருளப்பட்டவை மூலம் உங்களைச் சோதிக்கின்றான். உங்கள் இறைவன் தண்டிப்பதில் மிகத் தீவிரமானவன். அவன் பிழை பொருப்பவனும் பேரருள் உடையவனும் ஆவான். (6:165)
வாழ்வும் மரணமும் மனிதனைச் சோதிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவையே என்பதை கீழ்வரும் வசனம் கூறுகிறது.
உங்களில் மிகச் சிறந்த நடவடிக்கைகளை மேற்கொள்பவர் யார் என்று சோதிப்பதற்காகவே அவன் மரணத்தையும் வாழ்க்கையையும் படைத்துள்ளான். அவன் வல்லவன் மன்னிப்பவன். (67:2)
மனிதனைச் சூழ்ந்துள்ள நல்ல சூழ்நிலையும் அது போல கெட்டதும் அவனைச் சோதிப்பதற்காகவே அமைக்கப்பட்டவை (பார்க்க அன்பியா 21:35) மனிதனுக்கு வழங்கப்படும் நன்மைகளும் ஆதரவுகளும் அதனைப் போலவே அவனிடமிருந்து பறிக்கப்படுபவையும் மனிதனைச் சோதனைக்குள்ளாக்குபவற்றில் உட்படுபவையே.
அவனைச் சோதனைக்குள்ளாக்கி அவனுக்கு அருள் புரிந்து அவனை இறைவன் மேம்படுத்தினால் மனிதன் என்னுடைய இறைவன் என்னை மகிமைப்படுத்தி விட்டான் என்று கூறுகிறான். ஆனால் அவனுடைய செல்வத்தைக் குறைத்து அவனைச் சோதித்ததால் என் இறைவன் என்னை இழிவுபடுத்திவிட்டான் என்று கூறுகிறான். (89: 15.16)