மவ்லவிகளின் இம்மை மறுமை சீர்பட மாற்றுத் திட்டம் என்ன?
[ மார்க்கப்பணி புரிந்த நபிமார்கள் அனைவரும் உழைத்தே உண்டார்கள் ]
பெரும்பாலான பள்ளிகளில், பணம் படைத்தவர்கள் என்ற ஒரே காரணத்தால், வேறு எந்த தகுதியும் இல்லாத மார்க்க அறிவற்ற, ஹராம், ஹலால் பேணாதவர்களே, தொழுகைக்காகப் பள்ளி பக்கம் வராதவர்களே நிர்வாகிகளாக நியமிக்கப்படுகின்றனர்.
அவர்களின் அதிகார மமதைக்கு அடிபணிந்து செத்த ஆட்டை அறுத்த கதை, வட்டிக் கடைளுக்கும், சினிமா கொட்டகைகளுக்கும், சூதாட்ட லாட்டரி கடைகளுக்கும் ஃபாத்தியாக்கள் ஓதிய கதைகளும் உண்டு.
மவ்லவிகளும், உலமாக்கள் சபைகளும் ஆத்திரமோ அனுதாபமோ இல்லாமல், நடுநிலையோடு, அல்லாஹ்வை பயந்து உண்மை நிலையை கண்டறிந்து ஏற்றுக் கொள்ள முன்வர வேண்டும்.
மனாருல் ஹுதா ஜூலை 2007 இதழ் பக்கம் 15-ல் ஹலால்-ஹராம்:3 வரிசையில் ஹலாலான உழைப்பின் சிறப்பு என்ற தலைப்பில் சகோ. M.முஹம்மது இப்றாஹீம் பாக்கவி அழகான ஆக்கம் ஒன்றை எழுதியுள்ளார்கள்..
அதில் ”மார்க்கப்பணி புரிந்த நபிமார்கள் அனைவரும் உழைத்தே உண்டார்கள். அது மட்டுமல்ல; அறிஞர்களும், வணக்கசாலிகளும் தமது வாழ்க்கையின் ஓர் அங்கமாக உழைப்பை ஆக்கிக் கொண்டனர் என்று எழுதுவதோடு, எண்ணற்ற இடங்களில் இக்கருத்து குர்ஆன்-ஹதீஸ்களில் வலியுறுத்தப்படுகிறது” என்றும் எழுதியுள்ளார்கள்..
ஆனால் கைசேதம்! இவை அனைத்தும் ஊருக்கு உபதேசம் என்ற நிலையில் இருக்கிறதே அல்லாமல், மவ்லவி வர்க்கம் தங்களின் இழி நிலையை எண்ணிப்பார்ப்பதாயில்லை.
மார்க்கப் பணிக்காக, சுமார் ஐம்பது (50) குர்ஆன் வசனங்களுக்கும் முரணாக; கூலி வாங்கியும், மக்களிடம் கையேந்தியும் பிழைப்பு நடத்துவது ஒரு பிழைப்பா? என்று இவர்கள் எண்ணிப்பார்ப்பதாக இல்லை.
தாங்கள் செய்யாததை மக்களுக்கு உபதேசிப்பதில் மவ்லவிகள் வெட்கப்படுவதாக இல்லை. 2:44, 61:3, 62:5 இந்த இறை எச்சரிக்கைகள் எல்லாம் மவ்லவிகளின் உள்ளத்தைத் தொடுவதாக இல்லை. காரணம் தவறான வழியில்-ஹராமான வழியில் பொருள் தேடி அதை உண்டு, உடுத்தி வருவதால் அல்லாஹ் யூத, கிறிஸ்தவர்கள் எப்படிப்பட்ட குற்றங்களைச் செய்ததன் காரணமாக அவர்களின் இருதயங்களை இறுகச் செய்தானோ அதே குற்றங்களை இந்த மவ்லவிகளும் செய்வதன் காரணமாக 5:13-ல் கூறுவதுபோல் இவர்களின் இருதயங்களும் இறுகிவிட்டன.
சிந்திக்க மறுக்கும் மவ்லவிகளின் இம்மை, மறுமை வளமாக அமைய வேண்டுமென்றால், அவர்கள் பெரிதும் மதித்துப் போற்றுவதாகச் சொல்லும் நான்கு இமாம்களும் சுயமாக உழைத்து தாங்களும் சாப்பிட்டதோடு, மற்றவர்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தார்களோ, அதே போல், இவர்களும் உழைத்துப் பிழைக்க முன்வர வேண்டும். மக்களிடம் கையேந்துவதை கைவிட வேண்டும்.
கீழே இருக்கும் கை மேலே இருக்கும் கையைவிட தாழ்ந்தது எனும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எச்சரிக்கைப்படி கையேந்தும் இவர்கள் உயர்ந்தவர்களாக எப்படி இருக்க முடியும்?
தன் நம்பிக்கையுடன் சொந்தக் காலில் நிற்க முடியாமல், மார்க்கம் அறியாத, ஹலால் ஹராம் பேணாத பெரும்பாலானவர்கள் ஐங்கால தொழுகையே இல்லாத செல்வந்தர்களை சார்ந்து அவர்களுக்கு அடிபணிந்து நிற்கும் காலமெல்லாம் அதாவது யுகம் முடியும் வரை இவர்களின் அவலம் தீர வாய்ப்புண்டா? இவர்கள் சிந்திக்க வெண்டும்.
தங்களது வாழ்நாள் வீணாகிவிட்டாலும், எதிர்கால மார்க்க அறிஞர்களின் வாழ்வாவது வளமாக அமைவதுடன், மறுமையிலும் வெற்றிபெற வேண்டுமென்றால், குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் உலகக் கல்வி, மார்க்கக் கல்வி, தொழிற்கல்வி என்ற முக்கல்வித் திட்டத்தை உருவாக்க முன் வந்தால் அது நலன் பயக்கும். அதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வழி பிறக்கும். இன்ஷா அல்லாஹ்.
-அபு அப்தில்லாஹ்