ஈயும் நோயும்!
சா. யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil.,
عن أبي هريرة رضي الله عنه يقول: قال النبي صلى الله عليه وسلم: إذا وقع الذباب في شراب أحدكم فليغمسه، ثم لينـزعه، فإن في إحدى جناحيه داء، والأخرى شفاء. (صحيح البخاري التامل: 3320)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரது பானத்தில் ஈ விழுந்துவிட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) அமிழ்த்தட்டும். பிறகு அதை வெளியே எடுத்துப் போட்டுவிடட்டும். ஏனெனில், ஈயின் இரண்டு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் உள்ளது. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம், ஹதீஸ் – 3320)
ஈயின் இரண்டு இறக்கைகளில் ஒன்றில் விஷமும் மற்றொன்றில் விஷமுறிவும் உள்ளது. அது உணவுப் பொருள் அல்லது பானத்தில் வந்து அமரும்போது விஷமுள்ள இறக்கையை அமிழ்த்துவதால் விஷமுறிவுள்ள மற்றோர் இறக்கையையும் நாம் அமிழ்த்திவிட்டால் நிவாரணம் கிடைத்துவிடும். விஷமுள்ள இறக்கை ஈயின் இடப் பக்கத்திலும் விஷமுறிவு இறக்கை அதன் வலப் பக்கத்திலும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. (ஃபத்ஹுல் பாரீ)
ரஷ்ய ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது: ஈக்கள் பொதுவாக அசிங்கமான இடங்களிலும் கழிவுகளிலும் அதிகம் வாசம் செய்வதால் கிருமித் தாக்கலுக்கு அதிகம் வாய்ப்புள்ளது. அதனால் அந்த இனமே அழிந்துவிடும் சாத்தியம் இருந்தும்கூட அவை எப்படி தொடர்ந்து உயிர் வாழ்கின்றன என்று யோசித்தேன். அதற்கான காரணத்தையும் அறிய முனைந்தேன்.
ஒருநாள் எத்தனால் எனும் திரவத்தில் கொஞ்சம் ஈக்களைப் பிடித்துப் போட்டு அதில் ஊறவைத்தேன். மறுநாள் அந்த திரவத்தைப் பார்த்தபோது அதன் மேல் ஆடை போன்ற திரவம் படிந்திருந்தது. அதை எடுத்து ஆய்வு செய்தபோது அது முழுக்க முழுக்க நோய் எதிர்ப்பு சக்தியின் திரட்டு என்பதை உணர்ந்துகொண்டேன். ஒப்பீட்டளவில் மனித உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியைவிட ஈயின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு உள்ளது. (திருச்சி பதிப்பு நாளிதழ் ஒன்றில்)
ஆக, ஈக்கள் அசிங்கங்களிலும் கழிவுகளிலும் அமரும்போது அதன் கால்களில் ஒட்டிக்கொள்ளும் நோய் தொற்றுக் கிருமிகள் நாம் அருந்தும் பானத்தில் ஈ விழும்போது அதில் கலந்துவிட வாய்ப்பு உண்டு. அப்படியே அதை எடுத்து எறிவதைவிட அதை அந்தப் பானத்தில் முக்கி எடுத்து எறிவதால் நோய் எதிர்ப்பு சக்தி அந்தப் பானத்தில் கலக்க வாய்ப்பு இருக்கிறது. அதை முக்காமல் எடுத்து வீசுவது ஒருக்கால் நோய்த் தொற்று ஏற்படுவதற்குக் காரணமாக அமையலாம்.