‘தக்தீர்’ பற்றி ஓயாத வம்புப் பேச்சு வழக்காடல்கள்
பொறியாளர், அப்பாஸ் மந்திரி, எல்.சி .இ.
‘எல்லாம் இறைவன் செயல் என்றால், ஒரு மனிதன் செய்கின்ற பாவத்திற்கும் இறைவன்தானே காரணம்? தானே காரணமாக இருந்து கொண்டு, அந்த மனிதனை இறைவன் தண்டிப்பது எப்படி நியாயமாகும்?’
‘ஷைத்தானையும் படைத்துவிட்டு, அவனுக்கு அபரிமிதமான கெடுக்கும் சக்தியையும் கொடுத்துவிட்டு, இறைவன் மனிதனை பாவம் செய்ததற்காக எப்படி தண்டிக்கலாம்?’
‘எல்லாம் தக்தீர்(விதிப்)படிதானே நடக்கிறது, ஒருவன் பாவம் செய்வதும் தக்தீர்ப்படிதானே நடந்திருக்கிறது? அப்புறம் அவனை நரகத்தில் போடுவதாகச் சொல்வது பொருத்தமா?’
இந்த வினாக்களுக்கு மிகச் சுருக்கமான விடைதான் இக்கட்டுரை.
ஓயாத வம்பப் பேச்சு வழக்காடல்கள்!
தக்தீர், நஸீபு, தலைவிதி என்ற சொற்களை வைத்துக் கொண்டு பேச்சுவம்பர்கள் வரலாற்று நெடுகிலும் ஓயாத வாய் வழக்குகள் பேசி வருவதை அறநெறி கவனித்துக் கொண்டே தான் இருக்கிறது. எத்தனையோ மெய்யறிவுச் சான்றோர்கள் ஏற்புடைய விளக்கங்களைத் தந்து வந்த போதிலும் இந்த வம்பு வழக்குப் பேச்சுகள் தொடர்ந்து இருந்து வருவதைப் பார்க்கும்போது நமக்கு வியப்பே மேலிடுகின்றது.
அதிலும், சிந்தனை அருவியின் பக்கமே செல்லாதவர்கள் கூட மிக எளிதாக இப்படி ஒரு வம்பாட்டத்தில் ஈடுபட்டு, தாங்கள் மிக நுட்பமான முறையில் ஆராய்ந்து விட்டது போலவும், அவர்களின் வினாக்களுக்கு விடையிறுக்க முடியாத நிலை இருப்பது போலவும் மிகவும் மிதப்பாகத் ‘தக்தீர்’ என்ற மிகப்பெரிய சங்கதியுடன் மோதி வருகிறார்கள். அத்தகையோர் விடுக்கும் வினாக்கள் கீழ்க்கண்ட பாணியில் இருந்து வருகிறது.
‘எல்லாம் இறைவன் செயல் என்றால், ஒரு மனிதன் செய்கின்ற பாவத்திற்கும் இறைவன்தானே காரணம்? தானே காரணமாக இருந்து கொண்டு, அந்த மனிதனை இறைவன் தண்டிப்பது எப்படி நியாயமாகும்?’
‘ஷைத்தானையும் படைத்துவிட்டு, அவனுக்கு அபரிமிதமான கெடுக்கும் சக்தியையும் கொடுத்துவிட்டு, இறைவன் மனிதனை பாவம் செய்ததற்காக எப்படி தண்டிக்கலாம்?’
‘எல்லாம் தக்தீர்(விதிப்)படிதானே நடக்கிறது, ஒருவன் பாவம் செய்வதும் தக்தீர்ப்படிதானே நடந்திருக்கிறது? அப்புறம் அவனை நரகத்தில் போடுவதாகச் சொல்வது பொருத்தமா?’
இந்த வினாக்களுக்கு இங்கே மிகச் சுருக்கமாக விடைகாண்போம்.
எதனை மறுக்கிறார்கள்?
‘அல்லாஹ்வை ஒப்புக்கொள்கிறாயா?” – ‘ஆம்!’
‘அல்லாஹ்வின் திருமறையை ஒப்புக் கொள்கிறாயா?’ – ‘ஆம்! ஒப்புக் கொள்கிறேன்.’
‘இது பாவம், இதைச் செய்யாதே! இது கடமை, கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்! இவையெல்லாம் ஹலாலானவை, செய்வதற்குத் தகுந்தவை! இவையெல்லாம் ஹராமானவை, செய்வதற்கு தடுக்கப்பட்டவை என்று தரம் பிரித்து ஒவ்வொரு செயலையும் பற்றி அல்லாஹ{தஆலாதான் திருமறையில் தெளிவாக வரையறுத்திருக்கிறானே! அல்லாஹ்வையும் அவனது திருமறையையும் ஒப்புக் கொண்ட பிறகு, அப்புறமென்ன தர்க்கம், பாவம் செய்வதைப் பற்றி?!
எல்லாவற்றையும் ஆட்டிப்படைக்கின்றான் என்ற பொதுவிதி – தக்தீர் – என்பதை எடுத்துக்காட்டி, அதன் அடிப்படையில், பாவம் செய்வதற்கும் அல்லாஹ்வின் மீதே காரணத்தைச் சாட்டி, பாவத்திற்கு சட்டப்படி சம்மதம் பெறுவதற்கான தர்க்கமா?
அஃப்கோர்ஸ்! அல்லாஹ்வுடன் தர்க்கம் செய்தவன் தான் இப்லீஸ்!
இஸ்லாம், எதையும் பகுத்தறிவுடன் ஆராய்ந்து பார்த்தே நம்பச்சொல்கிறது. இஸ்லாத்தினால் பாவம் என்று பிரகடனம் செய்யப்பட்ட தீயசெயலை எந்தப் பகுத்தறிவாதியாலும் எளிதில் பாகுபடுத்தித் தெரிந்து கொள்ள முடியும். அப்படி இருக்க தீமையைச் செய்வதற்கு நாடுவதற்கான காரணம் என்ன? சட்டசம்மதம் பெற தர்க்கம் என்ன?
மனிதன் ஷைத்தான் அல்லவே!
பாவத்தை செய்வதற்கான தூண்டுகோலாகத்தான் ஷைத்தான் இருக்கமுடியுமே தவிர, பாவத்தைச் செய்வது குறிப்பிட்ட மனிதன்தானே? எந்த மனிதனுக்கும் பாவத்தைச் செய்வதற்குமுன், ‘இது பாவம், செய்யக் கூடாதது’ என்ற எச்சரிக்கை உணர்வு அவரது மனச்சாட்சியால் எடுத்துக்காட்டப்படாமல் இல்லை!
‘நான் மனிதர்களை வழிகெடுப்பேன்!’ என்றுதானே ஷைத்தான் வீறாப்பு பேசினான்? வழியைத்தான் கெடுப்பான். அந்த தீய தூண்டுதலை ஏற்பதும் ஏற்றுக்கொள்ளாததும் அசலாக தனி நபரைப் பொருத்ததுதானே?
கடல் மட்டத்திற்குமேல் 2000 அடி உயரத்திலிருந்து 4000 அடி உயரம் உள்ள நிலப்பகுதியில்தான் மலேரியா காய்ச்சல் தீவிரமாக ஏற்படும் சூழ்நிலை உள்ளது. ஆனால், அந்த நோயைக் குணப்படுத்தும் கொய்னா, சிங்கோனா மரங்களும் அதே உயரத்தில் உள்ள நிலப்பகுதியில் மட்டுமே வளர்கின்றன. இறைவன் படைப்பில் இப்படி ஒரு நுட்பம்! நன்மை – தீமை இந்த இரண்டு வகைகளையும் ஒருங்கே அமைத்திருப்பது வாழ்க்கையின் நுட்பமாகும். அவற்றில் நன்மையை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்காகத்தான், இறைவனால் பகுத்தறிவு மனிதனுக்கு அருளப்பட்டிருக்கிறது. பாவத்திற்கு சட்ட சம்மதம் பெற தர்க்கம் செய்வோர் எதனை மறுக்கிறார்கள்? பகுத்தறிவையா?
மனிதனின் தனித்தன்மை
சந்திரனுக்கு விண்வெளிக்கலத்தை விஞ்ஞானிகள் அனுப்பினார்கள். விண்வெளிக்கலத்தை அதில் உள்ள மனிதர்களும் இயக்க முடியும், அதே சமயம் பூமியில் உள்ள விஞ்ஞானிகளும் தொலைக்கட்டுப்பாடு முறையில் அந்த விண்கலத்தை இயக்க முடியும். அதே போல், மனிதன், தானாகவே செயல்படும் முறையினால் இறைவனால் படைக்கப்பட்டுள்ளான். இறைவனது முழுப்பார்வையும் மனிதன் மீது எப்பொழுதும் அதிகாரம் செலுத்திக் கொண்டே இருக்கிறது.
பகுத்தறிவைக் கொண்டு, எதையும் தானாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் தனித்தன்மையை (ஐனெiஎனைரயடவைல) அல்லாஹ் மனிதனுக்கு வழங்கி அருளியிருக்கின்றான். இதனால் எல்லாவற்றின் மீதும் அல்லாஹ் செலுத்தும் அதிகாரத்திற்கு குறைவு ஏற்பட்டுவிட்டதாகப் பொருளல்ல.
மனிதனால் செய்யப்படும் பெட்ரோல் இஞ்சின், ஸ்டார்ட் செய்யப்பட்ட பிறகு தானாக இயங்குவதால், மனிதனின் அதிகாரம் அதன் மீது இல்லை என்று அர்த்தம் அல்லவே! இஞ்சின் செவ்வனே செயல்பட, அதற்குத் தேவையான பெட்ரோல், ஆயில், தண்ணீர், காற்று ஆகியவற்றை நாமே ஏற்பாடு செய்கிறோம். ஆனால், மனிதனைப் பொருத்தமட்டிலும், அவனது வாழ்வு என்ற இயக்கத்திற்குத் தேவையானவற்றை அவனே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் முறையில் அவனுக்குத் தனித்தன்மை அல்லாஹ்வால் வழங்கப்பட்டிருக்கிறது, அவ்வளவுதானே!
விஞ்ஞான அடிப்படையில் எந்தச் செயலுக்கும் விளைவு தவிர்க்கமுடியாததல்லவா? ஆகவே, நன்மை செய்வதற்குப் பரிசும், தீமை செய்ததற்குத் தண்டனையும் அல்லாஹ்வால் திட்டப்படுத்தப்பட்டிருப்பது பத்தறிவுக்குப் பொருத்தம் தானே!
குழப்படி ஏன்?
‘இன்னான் பாவம் செய்தது அல்லாஹ்வின் தக்தீரே ஆகும். தக்தீரே அப்படி இருக்கும்போது அவனைத் தண்டிப்பது – நரகத்தில் போடுவது நியாயமா?’ என்ற கேள்வியில் இரண்டு அம்சங்கள் உள்ளன.
‘அல்லாஹ்வின் தக்தீரே அப்படி என்பது ஒன்று.
‘தக்தீரின்படி நடந்ததை தண்டிக்கலாமா?’ என்பது இரண்டாவது அம்சம்.
முதற்கண், தக்தீர் என்பது மிகப்பெரிய விஷயம்! அதைப்பற்றி சர்ச்சை செய்ய வேண்டாம் என்பது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நயமான கட்டளை. சர்ச்சை செய்கின்றவர்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் தக்தீர் மனிதனால் அறிந்து கொள்ள இயலாத மகா பெரிய இரகசியம். இன்னின்னார் பாவம் செய்யும் மனிதர்கள் என்று யாரும் முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியாது. அப்படி இருக்கும்பொழுது, ‘பாவம் செய்கிறேன் என்றால் நான் தக்தீரின்படிதான் செய்கிறேன்!’ என்று ஒருவன் சொல்வது எப்படி சரியானதாகும்? தக்தீரைப்பற்றி முன்னதாகத் தெரிந்து கொள்ள முடியாத ஒருவன், முற்றிலும் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் போக்கல்லவா இது? தக்தீரின்படி பாவம் செய்யும் கூட்டத்தில் மோசமாகத் தன்னையும் சேர்த்துக் கொள்ள சண்டிவாதம் செய்யும் போக்கல்லவா இது?
தக்தீரின்மேல் பழிபோடுகிறவர்களுக்கு இன்னொரு செய்தியைச் சுட்டிக்காட்டினால் பித்தம் தெளியும். தக்தீரை ஒப்புக்கொண்டு தானே வாதாடுகிறீர்கள்? நல்லது! அதே தக்தீரின்படி நன்மை செய்யும் திருக்கூட்டமும் உண்டல்லவா? அதில் சேர்ந்துகொள்ள நாடுவதற்கு என்ன தடை?
நடந்து முடிந்ததே தக்தீர் என்றால் நடப்பதற்கு முன்னாலேயே, பாவத்திற்குச் சட்ட அங்கீகாரம் கோரும் குழப்படி ஏன்? தக்தீரின்படி பாவம் செய்தவர்கள், அதே தக்தீரின்படியே தண்டிக்கப்படுகிறார்கள். அந்த தண்டணை பெறுவதற்கு முந்த வேண்டிய அவசியம் என்ன? வேண்டாம் தர்க்கம் வேண்டாம்! வீண் வழக்காடல் வேண்டவே வேண்டாம்.
www.nidur.info