செல்வம்: இறைவனால் நம்மிடம் கொடுக்கப்பட்ட அமானிதம்
முஸ்லிம் செல்வந்தர்கள் அனைவரும் தங்களின் செல்வத்திலுள்ள ஏழைகளின் பங்கான ஜகாத்தை முறைப்படி கணக்கிட்டுக் கொடுத்து விட்டால், முஸ்லிம் சமுதாயத்தில் ஒரு ஏழையைக் கூட பார்க்க முடியாது. ஏழைகளின் பங்கு எனும்போது இறைவன் ஏழைகளுக்குக் கொடுக்கச் சொல்லி நம்மிடம் அந்தப் பங்கை கொடுத்துள்ளான். அது இறைவனால் நம்மிடம் கொடுக்கப்பட்ட அமானிதம் என்பதை முஸ்லிம் செல்வந்தர்கள் உணர வேண்டும்.
உதாரணமாக நாம் மிகவும் மரியாதை காட்டும் ஒரு பெரும் செல்வந்தர் நம்மிடம் ஒரு பத்து ஆயிரம் ரூபாயைக் கொடுத்து நமக்கு மிகவும் அறிமுகமான ஒரு நபரைச் சொல்லி அவரிடம் கொண்டு கொடுத்து விடும்படிச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்போது நமது கடமை என்ன? நாணயமாக அந்த பத்தாயிரத்தை உரிய நபரிடம் சேர்த்து விடுவதுதானே நமது நீங்காக் கடமை!
அவ்வாறு செய்யாமல் இப்போது ரூபாய் பத்து ஆயிரம் நமது கையில்தான் இருக்கிறது. எனவே அது நமக்கே சொந்தம் என்று தவறாக எண்ணி அந்தப் பணத்தை உரியவரிடம் கொடுக்காமல் வைத்துக் கொண்டால் அது அமானத மோசடியா இல்லையா?
நீங்களே சொல்லுங்கள். நாம் மிகவும் மரியாதை வைத்திருக்கும் அந்த செல்வந்தருக்கு, அவர் கூறியபடி அவர் கூறிய நபருக்கு அந்த பத்து ஆயிரத்தை நாம் கொடுக்கவில்லை என்பது தெரிய வரும்போது நமது நிலை என்னவாக இருக்கும்? நம்மை அவர் மனிதராக மதிப்பாரா? ஒருபோதும் மதிக்கமாட்டார்.
இதுபோல்தான் இறைவன் நமக்குத் தந்த செல்வத்திலிருந்து ஏழைகளது பங்கை அவர்களுக்கு உரிமையானதை அவர்களிடம் ஒப்படைக்காமல் நாமே சேமித்து வைத்துக் கொண்டால் அது அமானித மோசடியாகும். இது பற்றி அல்லாஹ் அவனது இறுதி நெறிநூலில் கூறுவதைப் பாரீர்!
“எவர்கள் பொன்னையும். வெள்ளியையும் சேமித்து வைத்துக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கிறார்களோ, (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக! அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். இதுதூன் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது. ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறப்படும்) (அல்குர்ஆன் : 9:34.35)
இவ்வளவு கடுமையான எச்சரிகையைப் பார்த்த பின்னரும் ஒரு முஸ்லிம் கஞ்சனாக இருப்பானேயானால் அவன் மறுமையை உறுதியாக நம்பும் ஓர் உண்மை முஸ்லிமாக ஒருபோதும் இருக்கமாட்டான்.
-an najaath