பொடுபோக்கு செய்யப்படுகின்ற அல்குர்ஆன் கட்டளைகள்
மௌலவியா ஷர்மிலா (ஷரயிய்யா)
அல்குர்ஆன் மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கு அத்தியாவசியமான எத்தனையோ சட்டங்களையும், நல்ல ஒழுக்கங்களையும் தெளிவாகவும், விளக்கமாகவும் கூறிக் காட்டுகின்றது. ஆயினும் எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு குர்ஆனிலுள்ள ஒரு சில சட்டங்கள் மட்டும் அதிலும் குறிப்பாக தொழுகை, நோன்பு, தர்மம் கொடுத்தல், ஹஜ் செய்தல், வட்டி போன்ற குறிப்பாக சில சட்டங்கள் மாத்திரமே அவர்களின் மார்க்கமாக மாறி விட்டது.
அல்குர்ஆன் அறிவிக்கும் பெண்கள் சம்மந்தமான சட்டங்கள், திருமணச் சட்டங்கள், குழந்தை சம்மந்தமான சட்டங்கள் இப்படி எதை எடுத்தாலும் அதைப் பற்றிய அறிவு எம் சமுகத்தில் அரிதிலும் அரிதாகிக் கொண்டிருக்கின்றது.
எமது வேதம் அல் குர்ஆன் அது ஒரு உன்னத வழிகாட்டியாகும். எனது இந்த ஆக்கத்தில் அல்குர்ஆனில் சொல்லப்படடிருந்தும் மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ள சில சட்டங்களை இங்கு அலசுவோம்.
அதற்கு முன் ஒரு விடயத்தை நாங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அதாவது அல்லாஹ் தன் திருமறையில் ஒரு விடயத்தைப் பற்றி கூறுகின்றானாயின் அது சிறிய விடயமல்ல, மாறாக அது இறைவனின் வாக்கியமாகும். எனவே எவ்வாறு தொழுகையை இறைகட்டளையாக எடுத்துக் கொள்கின்றோமோ அவ்வாறே அவனுடைய திருமறையிலுள்ள ‘உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள்’ எனும் வசனம்.
‘உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள்’
என்ற வசனத்தையும் இறைகட்டளையாக எடுத்துக் கொள்ள நாம் கடமைப்பட்டுள்ளோம். ஏனென்றால் அதுவும் இறைவனிடமிருந்து வந்த வஹியாகும். எனவே நாம் இந்த விடயத்தில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். இவ்வாறு குர்ஆனில் எத்தனை எத்தனை வசனங்கள் எம் கண்ணுக்குத் தென்படாமல் உள்ளன. அவைகளிலிருந்து ஒன்று உங்களுடன் பேசுகின்றது. ‘விசுவாசம் கொண்டோரே உங்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களும் (அடிமைகளும்) பிரயமடையாத சிறுவர்களும் (நீங்கள் வீட்டினுள் இருக்கக்கூடிய நேரங்களில் உங்களிடம் வருவதாயின்) மூன்று நேரங்களில் அவர்கள் அனுமதி கோர வேண்டும்.
(அந்நேரங்களாவன) பஜ்ரு தொழுகைக்கு முன்னரும், உச்சிப் பொழுதில் உங்களுடைய மிச்சமான ஆடைகளைக் களைந்திருக்கும் நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பின்னரும் உங்களுடைய மறைவான மூன்று (நேரங்கள்) ஆகும். இவற்றுக்குப் பின் (வருவது) உங்கள் மீதோ , அவர்கள் மீதோ குற்றமில்லை. (காரணம்) இவர்கள் உங்களிடம் சுற்றி வருபவர்கள். உங்களில் சிலர் சிலரிடம் (திரும்பத் திரும்ப வருபவர்கள்) இருக்கிறீர்கள். இவ்வாறு அல்லாஹ் வசனங்களை விளக்குகின்றான். இன்னும் அல்லாஹ் நன்கறிந்தவன் தீர்க்கமான அறிவுடையவன். (அல்குர்ஆன்- சூரதுன் நூர் : 58)
இந்த வசனத்தில் இறைவன் சில நல்லொழுக்கங்களை கற்றுத் தருகின்றான். வலக்கரம் சொந்தமாக்கப்பட்டவர்கள் (அடிமைகள்), பருவமடையாத சிறு குழந்தைகள் என்ற இருசாராரும் வீட்டிலேயே அதிகமாக நேரததை கழிக்கக்கூடியவர்களாக இருக்கின்றனர்.இவர்கள் வெளியில் சென்று மீண்டும் வீடு நுழைய நேரிட்டால் வீட்டிற்கு வெளியே நின்று மூன்று முறை ஸலாம் கூறி அனுமதி கோர வேண்டும் என்பதை இவ்வசனம் எடுத்துக்காட்டுகின்றது. உண்மையில் இந்த ஒழுக்கச் சட்ட விதிமுறையை ஆழமாக சிந்திக்கும் எவரும் அல்குர்ஆனின் மான்பினை உணராமல் இருக்க முடியாது. இச்சந்தர்பத்தில் நாம் ஒவ்வொருவரும் எங்களின் வீட்டுச் சூழலை சிந்தித்துப் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். சாதாரணமாக எங்கள் வீட்டில் உள்ளவர்கள் பல கோலங்களிலும் இருப்பார்கள்.
உன்மையில் இவர்கள் அல்லாஹ் வலியுறுத்திக் கூறக் கூடிய இந்த மூன்று நேரங்களிலும் மிகவும் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும்.
பஜ்ர் தொழுகைக்கு முன்
பஜ்ர் தொழுகையின் நேரமானது மனிதன் உறங்கிக் கொண்டிருக்கும் நேரமாகையால் ஆழ்ந்த உறக்கத்தில் அவனின் ஆடைகள் விலகி எவ்விதத்திலும் தூங்குவதற்கு வாய்ப்பிருக்கின்றது. இச்சந்தர்ப்பத்தில் அவன் தன்பிள்ளையோ அல்லது தன் வீட்டு வேலையாட்களோ அல்லது தன உறவினர்களோ தன்னை அந்தக் கோலத்தில் காண்பதை விரும்ப மாட்டான். இதனால் தான் அடிமைகளும்,சிறு குழந்தைகளும் வீட்டினுள் நுழையும் போது அனுமதி கோர வேண்டிய நேரங்களில் ஒன்றாக இந்த நேரத்தை ஆக்கியுள்ளான்.
சூரியன் உச்சிப் பொழுதை அடையும் போது
இது லுஹருக்கு முன்னோ அல்லது பின்னோ ஆறுதலாகத் தூங்கும் நேரமாகும். ஓய்வைப் பொறுத்தமட்டில் ஆண்களாயினும், பெண்களாயினும் தங்களது வேலைகளை முடித்து விட்டு
தங்களது மேலாடைகளை அல்லது முந்தானைகளை களைந்து ஏதோ ஒரு களைப்பில் தூங்குவதாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இந்த நேரத்தில் ‘கைலூல்லாஹ்’ தூக்கம் தூங்கக் கூடியவர்களாக இருந்தார்கள். எனவே இந்த நேரத்திலும் வீட்டினுள் நுழைபவர்கள் அனுமதி கோர வேண்டும்
இஷா தொழுகைக்குப் பின்னர்.
இந்த நேரமும் நாமறிந்த மனிதர்கள் பிரதானமாக தூங்க ஆரம்பிக்கும் நேரமாகும்.
அல்லாஹ் அனுமதி கோருமாறு வலியுறுத்தக்கூடிய இம்மூன்று நேரங்களிலும் அனுமதியில்லாமல் நுழைவது நாகரீகமானதல்ல என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இன்னும் இந்த விடயத்தில் அல்லாஹ் பருவமடைந்தவர்களும் விதிவிலக்கல்ல என்பதை தொடர்ந்து சுட்டிக் காட்டுகின்றான்.
‘இன்னும் உங்களில் உள்ள சிறுவர்கள் பிராயமடைந்துவிட்டால் அவர்களுக்கு முன்னுள்ள (மூத்தவர்கள்) அனுமதி கேட்டது போன்று அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தன் வசனங்களில் உங்களுக்கு விளக்குகின்றான். அல்லாஹ் நன்கறிபவன், தீர்க்கமான அறிவுடையவன்’ (அல்குர்ஆன் சூரத்துன் நூர் : 59)
பருவமடைந்த பிள்ளைகள் வீட்டில் நுழையும் போது அனுமதி பெற்றுத்தான் நுழைய வேண்டும் என்பதை இவ்வசனத்திலிருந்து நாங்கள் விளங்கலாம். ஏனென்றால் ஒரு குழந்தை பருவமடைந்தால் அவனின் சிந்தனை, பார்வை, உணர்வு என்பனவற்றில் மாற்றம் ஏற்படுகின்றது. இச்சந்தர்ப்பத்தில் ஒரு பருவமடைந்தவன் திடீரென வீட்டினுள் நுழையும் போது அவன் காணக் கூடிய பொருத்தமற்ற காட்சிகள் அவனை தப்பான எண்ணங்களின் பால் இட்டுச் செல்கின்றன.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்
ஏழு வயதை அடைந்த உங்களின் குழந்தைகளுக்கு தொழுமாறு ஏவுங்கள். பத்து வயதாகியும் தொழாவிட்டால் தண்டியுங்கள். இன்னும் படுக்கையில் அவர்களை பிரித்துவிடுங்கள். (அல் ஹதீஸ்)
இதற்காகத்தான் அல்லாஹ் ஒருமனிதன் தன் சொந்த வீட்டில், தான் நுழையும் போதுகூட அவன் பருவமடைந்தவராக அல்லது பருவமடையாதவராக இருந்தாலும் சரி மூன்று முறை ஸலாம் கூறுவதன் மூலம் அனுமதி கோர வேண்டும் என்பதை அல்லாஹ் கட்டாயப்படுத்தியுள்ளான்.
அல்லாஹ் கூறும் இந்த ஒழுங்கு முறைகள் உதாசீனப்படுத்தப்படும் பட்சத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளை பல கோணங்களிலும் எமது சமூகத்தில் இன்று நாம் கண்ணுக்கு முன்னால் காண்கின்றோம். எத்தனை வீட்டுக்குள் இன்று முடிவு காணப்படாத , காணமுடியாத பிரச்சினைகள் சிலதை மறைத்து விட்டார்கள். சிலது சம்மந்தப்பட்டவர்களுக்கு மட்டும் தெரியும், சிலது பத்திரிகை வரை வந்துவிட்டது. இன்னும் பல பொலீஸ் விசாரணை , சிறைத் தண்டனை என்று நீண்டு கொண்டே செல்கின்றது.
குழந்தைகளைப் பெற்றவர்கள், உடன் பிறந்தவர்கள் எல்லோரும் சிந்திக்க வேண்டும்.இன்று பத்ரிகையை விரித்தால் தந்தை தன் மகளுடன் தப்பாக நடந்து கொண்டான். அல்லது மாமா தப்பாக நடந்து கொண்டான். அல்லது வீட்டிலிருந்த சகோதரன் சகோதரியுடன் தப்பாக நடந்து கொண்டான். இது ஏன் நடக்கிறது. இதற்கு வித்திட்டவர்கள் யார் என்று சிந்தித்தால் மிகச் சுலபமாக பதில் கிடைத்துவிடும்.
என்ன பதில் என்று சிந்திக்கிறீர்களா? இறைசட்டம் இங்கு பின்பற்றப்படவில்லை. அல்லாஹ்வின் தூதரின் கட்டளை கூட இந்த விடயத்திற்கு உரமிடுகின்றது.
இந்த சட்டங்கள் எங்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் அமுல்படுத்தப்படுகின்றதா? இல்லை தற்காலப் பிள்ளைகளுக்கு 4 வயது, 5 வயதானால் அனைத்து விடயமும் மிகவும் தெளிவாக விளங்கக்கூடிய சிந்தனை வளர்ச்சி இருக்கின்றது. எனவே பெற்றோராகிய நாம் பிள்ளைகளை படுக்கையிலிருந்து வேறாக்க வேண்டும் என்ற ஒழுக்கங்களை போதிக்க வேண்டும். அசிங்கமான, அனாச்சாரமான பேச்சுக்களை குழந்தைகளிருக்குமிடத்திலே, சபைகளிலே பேசுவதை தடுக்க வேண்டும். இவ்வாறான ஒழுக்க விடயங்கள் தான் எதிர் காலத்தில் ஒரு நல்ல இஸ்லாமிய சமூகத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மற்றவர்கள் வீட்டில் நுழையும்போது
ஒருவன் மாற்றான் வீட்டில் நுழையும் போது இதனைக் கடைப்பிடிக்குமாறு இறைவன் ஏவகின்றான்.
‘விசுவாசங் கொண்டோரே உங்கள் வீடுகளல்லாத வேறு வீடுகளில் (நீங்கள் நுழைய (நாடினால்) சலாம் கூறாமல் நுழையாதீர்கள். இதுவே உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்.நீங்கள் நல்லுபதேசம் பெறும் பொருட்டு’ (அல்குர்ஆன்- சூரதுன் நூர் : 27)
ஆகவே எம் வீட்டிலோ அல்லது பிறரின் வீட்டிலோ எங்களுக்கு அனுமதி கிடைக்காத பட்சத்தில் அங்கிருந்து வெளியேறி விட வேண்டும். அதுவே சிறந்த நல்லொழுக்கமும், நாகரீகமும் ஆகும். எமது சமூகத்தில் 3 அல்லது 4 முறைகள் அழைத்து பதில் கிடைக்காவிடில் வீட்டில் யாருமில்லை என்று நினைத்து அந்த வீட்டிலிருந்து எதையாவது pருடக்கூடியவர்களும், யாருடைய வீடாக இருந்தாலும் ஒரு ஹோலில் நின்று கொண்டு படுக்கையறையை எட்டிப் பார்த்தவண்ணம் வீட்டில் உள்ளவர்களை அழைக்கக் கூடியவர்களும் இருக்கின்றார்கள்.
இவ்வாறான செயற்பாடுகள் தான் குடும்பங்களுக்கு மத்தியில், ஏற்படக்கூடிய பாரிய பிரச்சினைகளுக்கும் , மனக்குமுறல்களுக்கும் வழிகோலாய் அமைகிறது. எனவே அல்குர்ஆனின் அழகான வழிகாட்டலிலிருந்து ஸலாம் கூறி அனுமதி கோரல் என்ற விடயத்தை வயதெல்லையில்லாமல் எல்லோரும் எச்சந்தர்ப்பத்திலும் கடைப்படித்து எம் வாழ்வை நெறிப்படுத்த முயற்சிப்போம்.
source: http://srilankamoors.com/