பெண்களின் மாண்பும் மதிப்பும் மிகவும் பெறுமதியானது
எஸ்.எல்.மன்சூர்
பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள். அந்தளவுக்கு பெண்மை மௌனமானது, புனிதமானது, உலகை உருவாக்க, மனித பெருக்கத்தை விரிவாக்க இன்று நேற்றல்ல மனிதன் படைக்கப்பட்ட அன்றிலிருந்து ஆண், பெண் இரண்டும் பின்னிப் பிணைந்து வாழ்க்கைச் சக்கரத்தை உருள வைக்கின்ற மாபெரும் பணியை பெண்கள் சமூகத்தின் தலையாய கடமையாகக் கொண்டு முன்னெடுத்துவருகின்ற நிலையில் இந்தப் பெண் இனத்தை ஒருபடி மேல் உயர்த்தி பெண்களுக்கென்றே ஒரு சர்வதேச தினத்தை உருவாக்கும் அளவுக்கு பெண் முக்கியத்துவமிக்கவளாக அமைவதற்கு பல்வேறுபட்ட உட்பெறுமானங்கள் பாரியளவு புதைந்துள்ளதை ஆண்வர்க்கம் மறந்துவிடக்கூடாது, என்பதற்காக வேண்டியே ஆகும்.
ஒருகாலகட்டத்தில் பெண் போகப்பொருள், பெண் அடிமையானவள், பெண் தீங்குடையவள், பெண்னோ ஆணின் வேலைக்காரி, பெண் பலவீனமானவள் என்றெல்லாம் தொண்டுதொட்டு சமூகத்தில் இழிநிலைக்குள் தள்ளப்பட்டிருந்ததை நாம் அறியாமலா இருக்கின்றோம்.
இஸ்லாமிய மரபில் தாயின் மடியில் சுவர்க்கம் இருக்கின்றது என்றும், தாயன்பு உலகில் யாராலும் வழங்கமுடியாத அன்பு என்றும் கூறப்படுகிறது. தமிழ் மரபில் மாதா பிதா குரு தெய்வம் என்றும் கூறப்படுகின்றபோது தாய்க்கு முன்னுரிமை வழங்கி கௌரவிக்கின்றது.
இவ்வாறு போற்றப்படும் பெண்களை இன்றுகூட பலர் இழிவுபடுத்தி அதில் குளிர்காய நினைக்கின்றபோதுதான் பெண்னிலை வாதம் என்கிற தோற்றப்பாடு வெளிக்கிட்டு சமவுரிமையும், சம அந்தஸ்தும் கிடைக்க போராட்டம் நடாத்தும் நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டனர் என்றால் அதற்குக் காரணம் ஆண்களின் மேலாதிக்கமா? சமூதாயத்தில் பெண்னின் நிலையை அறியாத மடமைத்தனமா? என்பன ஒருபுறம் இருந்தாலும் பெண்னின் ஏகபோக உரிமை என்பது ஆண்கள் ஊடாக வழங்கப்பட வேண்டிய ஒன்றே என்பதை கவனத்திற் கொண்டாலே பெண்கள் சமூகத்தின் கண்கள் என்பதை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.
மார்ச் எட்டு வந்துவிட்டால் பெண்கள் தினம் என்கிறோம். அந்நாளை பெரியளவில் பெண்களுக்கு மகுடம் சூட்டி பட்டம் கட்டி அழகு பார்க்கின்றோம். ஆனால் இன்று எத்தனையோ பெண்கள் ஆண் சமூகத்தால் சீரழிக்கப்பட்டமையை சுட்டிக் காட்டுகின்றோமா? சமுதாயத்தின் அடிமைத்தனத்திலிருந்து விலக்களிக்கத்தான் செய்கிறோமா? இல்லையே. ஆணுக்கு சரி சமமாக எந்தத்தொழிலாகட்டும் அங்கே ஆணுக்குரிய அதே அந்தஸ்த்து வழங்கப்பட்டாலும் தொழில் ரீதியான பெண்மைக்குரிய விலக்கை உரிமைய அளிக்கின்ற விடயத்தில் பாராமுகமாக இருப்பது ஏன் என்பதில்தான் விபரமே அடங்கியுள்ளது.
ஆணின் உயர்வுக்கு பக்கபலமாக காணப்படும் பெண்னை ஏன் இப்படிப் பார்க்கப்படுகின்றன என்பதை வரலாற்று ரீதியாக ஆய்கின்றபோது பாலியல் ரீதியான ஒரு இணைப்பாக தோற்றமளிக்கும் பெண்மையை ஆணாதிக்க மேலாண்மை பார்க்கின்ற கோணத்தில் விழுகின்ற பார்வையில் அடக்கமுடியாத உணர்ச்சி அங்கே விபரீதத்தை ஏற்படுத்தி விடுகிறது என்பதுதான் உண்மையாகும். அண்மையில் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் சொந்த மகளையே பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தந்தையின் கொடூர வக்கிரப்புத்தியை என்னவென்று சொல்வது?
இவ்வாறுதான் பார்வையும், பெண்மையின் மௌனமும் அவளது பாத்திரப்படைப்பும் ஆண்களை வசீகரிக்க வைக்கின்ற அளவுக்கு பெண்களின் தோற்றப்பாடுகளும் காரணமாக அமைந்து விடுகின்றன எனலாம். இன்றைய நவீன உலகம் என்ற போர்வையில் அலைய விடும் அபலத்தனமான பெண்களும் சமூகத்தில் இருக்கும் வரை இச் சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணமே காணப்படும். இதனைத்தவிர்ப்பதற்கு சமயரீதியான அணுகுமுறைகளை ஓரளவுக்காவது கைக் கொள்கின்றபோது அங்கே ஆண் பெண் என்கிற வேறுபாடுகளும், மரியாதைகளும், மதிப்பும் மேலோங்குவதற்கு உதவியாக அமையுமல்லவா?
நூற்றாண்டைக் கடந்து கொண்டாடப்படுகின்ற இந்த சர்வதேச பெண்கள் தினமானது மிகப்பெரியதோர் போராட்டங்களுக்கு மத்தியில் கொண்டுவரப்பட்டது என்பதை யாரும் மறக்கமுடியாது. இன்று பெண்கள் தினத்தில் பெண்களின் ஏகபோகம், சமவுரிமை என்றெல்லாம் பேசுகின்றோம் அன்று பெண்களை வஞ்சகம் தீர்க்கும் போகப்பொருளாகவும், அடிமைத்தனத்துடனும் நடாத்தப்பட்ட ஒரு சமுதாயத்திலிருந்து பெண்கள் சமுகம் விழித்துக் கொண்ட அந்த நாளை உருவாக்குவதற்கு பலபெண்கள் போராடிய வரலாறுகளும் உண்டு.
முதன் முதலில் பெண்களுக்கான ஒரு தினத்தை வரையறை செய்வதற்காக தீர்மானம் மேற்கொண்ட அமெரிக்காவின் சோஷலிசக் கட்சி ஆரம்பிப்பதற்கு உதவிநின்றது. இதன் பிரகாரம் கோபன்ஹேனில் 1910ஆம் ஆண்டில் நடைபெற்ற சர்வதேச மாநாடொன்றில் பெண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டியதன் அவசியம் மேலும் வலியுறுத்தப்பட்டன் பிற்பாடு, உலக நாடுகள் அதனை ஏற்றுக் கொண்டு 1911ஆண்டில் சர்வதேச பெண்கள் தினத்தை மார்ச் 19ஆம் திகதி கொண்டாட முடிவாகியது.
அந்த தினத்தில் கொண்டாட்டங்களும், பேரணிகளும் நடைபெற்று பெண்களுக்கான தினம் ஒன்றிற்கான ஆணிவேர் அப்போது இடப்படுகின்றது. அதன் பின்னர் மேற்கத்தேய ஐரோப்பிய நாடுகள் 1913ஆம் ஆண்டில் ஒன்று கூடிய வேளை மார்ச் 08ல் அனுஷ்டிப்பது என்கிற முடிவுகளின் அடிப்படையில் கொண்டாடப்பட்டு வருகின்றன. பின்னர் ஐ.நா. சபை உருவாக்கப்பட்டதன் பிற்பாடு இத்தினம் மேலும் மெருகூட்டப்பட்டு உலகில் வாழும் பெண்களை கௌரவிக்கும் முகமாக அவர்களது அபிலாஷைகளை, பெண்களின் வர்க்கம் ஆட்பட்டுள்ள அடக்கு முறைக்கு விடுதலை வேண்டிய செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உலகின் கண்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு கடந்த 1975ம் ஆண்டு முழுவதையும் பெண்கள் ஆண்டாக ஐ.நா.சபை அறிவித்து பெண்களுக்குரிய மாண்பு வழங்கப்பட்டு, வியாபித்துள்ளதை இன்றுவரை காணலாம்.
இன்று சமூகத்தில் பெண்ணின் ஆற்றலை உளப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் ஒரு தலைமுறையின் உருவாக்கம் ஆரம்பித்திருக்கிறது. நாட்டின் ஜனாதிபதி தொடக்கம் உயர் நிiயிலுள்ள ஐநா சபையின் மனித உரிமைகளுக்கான ஆணைக்குழு வரை தலைமை தாங்கும் உயரிய மாண்புகளை இன்று பெண்கள் தாங்கிக் கொள்கின்ற ஒரு நிலையில்; பெண்கள் விடயத்தில் கடந்த காலங்களைப் போல சிந்தனையற்ற சமூகமாக பார்க்கப்படவில்லை. வீட்டின் தலைவன் ஆண் என்கிற அந்த நிலைமாறி உத்தியோகம் பார்க்கின்ற பெண்னை சாதாரண தொழிலற்ற ஆண்கள் திருமணம் செய்து இல்லறத்தை நல்லறமாக மாற்றியமைத்து அக் குடும்பத்தை பொருளாதார ரீதியாகவும், சமூகரீதியாகவும். வீட்டிலும், நாட்டிலும் தலைமைத்துவத்தை பெண்களே ஏற்று வழிநடாத்தும் முறைகளை இன்றைய காலகட்டத்தில் நமது நாட்டில் கிராமங்களில்கூட காண்கின்றோம். இது பெண்களுக்குக்கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே கூறலாம்.
உண்மையில் இன்று அறிவியல் ரீதியாக உலகத்தின் எழுச்சிக்கு பெண்களின் கனிசமான உந்துதல் வழங்கப்படுகிறது என்பதை நாம் மறைக்கவும் முடியாது. ஒரு ஆணின் வெற்றிக்கு பெண் காரணமாக இருக்கின்றாள் என்கிற மொழியை பல அறிஞர்களும், ஆய்வாளர்களும் கூறினாலும் பெண்ணின் அமைதியான, சிந்தனைக்குரிய விடயங்கள் உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரலாறுகள் பலவுண்டு.
இவ்வாறன பெண்களின் மனோதிடத்தை, மனோவலிமையை காத்து விரிவாக்கி வியாபிக்க வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு ஆணுக்கும் உரியது. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை என்கிற பேரில் இளந்தலைமுறைப் பெண்களும்சரி, ஆண்களும்சரி பாதையை மாற்றுவதற்கு தயாராகி சீரழிந்துவிடக்கூடிய சந்தர்ப்பங்கும் இல்லாமலும் இல்லை. அதனை வெற்றி கொண்டு ஆணும் பெண்ணும் சரிசமமானவர்கள் என்பதுடன், பண்பாடு, ஒழுக்கம், விழுமியம் போன்ற அம்சங்களுடன்சார்ந்த சமரீதியான கட்டுக்கோப்புடன் வாழ்கின்றபோது அங்கே இரண்டும் ஒன்று எங்கிற நிலைமை தோற்றம்பெறும்.
இதனை மீறுகின்றபோதுதான் சமூகத்திலும், வீட்டிலும், பயணத்திலும், அலுவலங்களிலும் பெண்கள் சந்திக்கக்கூடிய சிக்கல்கள் தோற்றம் பெறுகின்றன. ஆண்களுக்கு இணையாக பெண்கள் காணப்பட்டாலும் பெண்னின் பவீணத்தைப் பயன்படுத்தி திறமைக்கேற்ற வாய்ப்புக்கள் அளிக்கப்படுவதில்லை. திறமைகளை வெளிக்காட்டினாலும் அவற்றை விமர்சிக்க ஆண்களின் மேலாதிக்கத் தன்மை போன்றன அவளின் உயர்வுக்கு, சிந்தனைக்கு தடையை ஏற்படுத்தி விடுகின்றது. இவ்வாறான இழிநிலைமைகள் குறித்த சில ஆண்களிடமிருந்து மறையாதவரை பெண்களும் சம அந்தஸ்தஸ்து விடுதலை என்று கோஷமிட்டுக் கொண்டேதான் இருப்பார்கள்.
பெண்களுக்கு எங்கு சென்றாலும் முன்னுரிமை வழங்கப்படுவது சம்பிரதாயமாக இருந்து வருகின்ற ஒரு நடைமுறையாகும். அது தற்போது மங்கி மறைந்து வருகின்றது. பயணத்தில் தனியான பெண்கள் பஸ்சேவை, பள்ளியில் தனியான பிரிவுகள் போன்றன காணப்பட்டாலும் தொழில் ரீதியாக வருகின்றபோது பெண்மைக்கு நாம் மரியாதை கொடுக்கவேண்டும். ஏனெனில் பெண் இந்த உலகின் கண். பெண்கள் இல்லை என்றால் உலகில் மனித வர்க்கமோ தோன்றியிருக்காது. அதற்காகத்தான் தாயும் பெண்னே, தாரமும் பெண்னே என்பார்கள். கருணைக்கு பெண்ணை உதாரணமாக்கிக் காண்பிப்பார்கள். மார்ட்டின் லூதர் “ஒருபெண்ணின் இதயம் கருணையின் கோவிலாக மாறும்போது அதற்கு இணையான வாஞ்சை இந்த உலகத்தில் எங்குமே இல்லை” என்று கூறியிருக்கின்றார். இவ்வாறு பெண்ணை சமூகம் உயிர்த்துடிப்புமிக்கதாக காண்கின்றபோது சிறப்பான சமுதாயம் உருவாக்கப்படுகிறது. அது எதிர்மறையாக அமையுமானால் அச்சமூதாயமே குட்டிச் சுவராகி, சீரழிந்துவிடும்.
இவ்வாறான நடைமுறைகளை சாத்தியப்படுத்துவதற்காகவே பெண்ணுரிமை முக்கியத்துவம் பெறுகின்றது. பெண்ணுரிமையானது பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு ஏற்பவும், சமூக அமைப்பிலும் அதன் விளைவுகளுக்கேற்ப மாறுபடுகின்றது. சமூகத்தின் ஒவ்வொரு இயக்கத்திலும் சமூகத்தின் வரம்புகளுக்கு அப்பால் சென்று பங்காற்றலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் வர்க்க பேதமற்ற முறையில் சமூகம் பெண்களின்மீது முழுமையான சுதந்திரத்தை உறுதிப்படுத்தும். ஆரம்பகாலத்தில் பெண்களின் கௌரவம், சுதந்திரம் காணப்பட்டாலும் அண்மைக்காலங்களில் பெண் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டும் பெண்கள் அமைப்புக்கள், இன்று ஊடங்களாக இருக்கட்டும், பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளாகட்டும் அங்கே பெணகளும், சிறுமிகளுமே காட்சிப் பொருளாக காணப்படுவர். இதற்கு இன்றைய சினிமாக்கள் போன்றனவும் காரணமாக அமைகின்றன.
இது வண்முறைகளுக்கும், பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும் வழிசமைத்து விடுகின்றன. இதிலிருந்து பெண்கள் விடுபடுவதற்குரிய நடடிவடிக்கைகளை மேற்கொள்வதில் சமூகப்பற்றாளர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். பொதுவாக பெண்களிடம் உடல்பலமும், மனோபலமும் காணப்படுகின்றன. அதேவேளை ஆண்களைவிட பெண்களே அதிக சக்தி வாய்ந்தவர்கள் என்பதை விஞ்ஞானம் நிருபித்துள்ளது. இதனை பெண் வர்க்கம் வெளிக்காட்டாத நிலையில் பெண்களுக்கெதிரான குடும்ப மற்றும் பல்வேறுபட்ட மட்டங்களிலும் தொல்லைகள் பிரச்சினைகள் காரணமாக பெண்கள் உளநெருக்கீட்டுக்குள்ளாகின்ற தன்மை தற்காலத்தில் உலகளவில் அதிகரித்துள்ளமைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
அந்தவகையில் இன்று பெண்களின் மீதான தாக்கமானது பல்வேறு முனைகளிலிருந்தும் வெளியாவதாகக் கூறப்படுகின்றது. உதாரணமாக யுத்தம், இடப்பெயர்வு, பாதுகாப்பற்ற நிலை, பொருளாதார நெருக்கடிகள், ஆண்களின் மேலாதிக்க முறைமை, சுகாதாரம் போஷாக்கற்ற நிலையில் கவனம் செலுத்தாமை, பெண்களின் உரிமைகள் தொடர்பான தெளிவற்ற தன்மை, வறுமை, அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலை, வலதுகுறைபாடுகள், கர்ப்பிணி, வயோதிபம், சிறுபிள்ளைகளைக் கொண்ட தாய்மார், சிறுபராயமுடையோர் என பலதரப்பட்டவர்களின் மீது முறையற்ற விதத்தில் ஏதோர்வடிவில் பெண்கள்மீது நடைபெற்றே வருகின்றன.
உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் பிரகாரம் மூன்றுக்கு ஒருவர் என்கிற வீதத்தில் பெண்கள் உடல், உள, பாலியல் ரீதியான வன்முறைத் தாக்குதல்களுக்குள் அகப்;படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான காலப்பகுதியில் பெண்களின் முக்கியத்துவம், பெண்களுக்கு எதிராக சர்வதேச மட்டத்திலும், வீடு, சூழல் மட்டங்களிலும் காணப்படுகின்ற வன்முறைகள், அடக்குமுறைகள் போன்றவற்றை இல்லாமல் ஒழிக்கச் செய்வதற்கான திட்டங்களில் சமூகம்சார் அமைப்புக்களும், அரசும், சர்வதேச மட்டத்திலும் இதற்கான முன்னெடுப்புக்கள் எடுக்கப்படுதல் அவசியமாகும்.
இதற்கான ஆரம்பத்தை கல்வியின்பால் செலுத்துவற்கு ஆவண செய்யப்பட வேண்டும். எத்துறைகளிலும் கொடிகட்டிப்பறக்கும் பெண்ணினம் இன்னும் பலபடிகள் உயர்ந்து நாட்டையும், வீட்டையும் கவனிக்கின்றபோது நல்லறிவாற்றல் உள்ள நாளைய சந்ததிகள் உருவாக்கப்படுவார்கள். அதன் பலாபலன்கள் சமூகத்தில் பாரிய விருட்சமாக பரிணமிக்கும். அறிஞர் ராஜாஜி கூறுவதுபோல் “தாய்மை என்பதுதான் பெண்களின் மிக முக்கிய அணிகலன், தாயின் இதயம்தான் குழந்தைகளின் பள்ளியாகும்” என்பதற்கிணங்க பெண்கள் ஒவ்வொருவரும் பள்ளியாக மாறுகின்றபோது உலகம் பெண்களின் காலடியில் உயிர்பெற்று பெண்ணின் மடியில் உதயமாகும் என்பதை ஒவ்வொருவரும் ஞாபாகத்தில் இருத்திக் கொள்ளல் வேண்டும்.
நானும் ஒரு பெண்தானே!
நான் வளர்வதை நன்றாகப் பாருங்கள்
வேலைகளை சுமந்து உலாவுகிறேன்
நான் என்ன மாடா? ஜடமா?
நான் அணைக்கும் விளக்கா?
ஒளியேற்றும் தீபாமா?
என்னை ஏன் புரியவில்லை
ஆயினும் நான் ஏங்கவில்லை
நான் ஒரு விதையுள்ள பை
என்னுள் உலகத்தின் வித்தே அதிலுள்ளது
நான் எதையும் செய்வேன்
என்னால் எதையும் செய்யவும் முடியும்
நான் வீரமானவள்
நான் வைரமானவள்
என்னால் யாரையும் வெற்றி கொள்ள முடியும்
இருந்தாலும்
நானும் ஒரு பெண்தானே!