அந்நியருக்கு மத்தியிலும் அழைப்புப் பணியை விரிவுபடுத்துவோம்
இன்று, பல்வேறு கொள்கை சார்ந்த இயக்கங்கள் உள்ளன. அவையனைத்தும் முஸ்லிம்களுக்கு மத்தியில் தான் அதிகளவு பிரசாரம் செய்துவருகின்றன.
நம் நாட்டில் இஸ்லாத்தின் வாடையை நுகராது,ஏகத்துவக் கொள்கையின் இன்பத்தை உணராது, நரகத்தின் விளிம்பில் நிற்கும் முஸ்லிமல்லாத மக்களைப் பற்றி பெரிதாக அவை அக்கறை எடுத்துக் கொள்வதில்லை.
அதனால், அவர்களில் அதிகமானவர்கள் இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் தவறாக விளங்கி வைத்துள்ளனர். முஸ்லிம் பெயர் தாங்கிகளின் மோசமான சில நடவடிக்கைகளினால் அவர்களிற் சிலர் இஸ்லாத்தையே வெறுக்கின்றனர்.
இதனால், நமக்கும் அவர்களுக்குமிடையே பகைமை உணர்வு படர ஆரம்பித்துள்ளது. இந்தக் கசப்புணர்வைக் களைவதற்கு நாம் முயற்சிக்க வேண்டியுள்ளது.
இன வன்முறைகளுக்கும், அரசியல் பழிவாங்கல்களுக்கும், ஆன்மீக தகிடுதத்தங்களுக்கும், மதவாதிகளின் சுரண்டல்களுக்கும் உட்பட்டு, ஏமாற்றமடைந்துள்ள இவர்களின் மன அழுத்தங்களுக்கு ஆறுதல் அளிக்கும் அருமருந்தாகத் திகழும் இஸ்லாத்தைப் பற்றிய அறிமுகத்தை நாம் வழங்க முனைய வேண்டும்.
இப்பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. ஏனெனில், எல்லா நபிமார்களும் எத்தகைய அராஜக சக்திகளுக்கும் அஞ்சாமல், இஸ்லாத்தையும் அதன் ஏகத்துவக் கொள்கையையும் அறிமுகம் செய்தார்கள்.
பலதெய்வ வழிபாடு எங்கு வேரூன்றியிருந்ததோ, அங்கேயே ஏகத்துவத்தைத் துணிவாகப் பிரசாரம் செய்தார்கள். எனினும், நம்மிற் சிலர் அல்லாஹ்வின் ‘தீனை’யே ‘தீனுக்காக’ அலட்சியப்படுத்தி,இயக்கம் வளர்க்க முயற்சிக்கின்றனர். நபிமார்கள் எதைச் செய்தார்களோ அதைவிட்டுவிட்டு, இஸ்லாமிய ஆட்சியை ‘எஜஸ்மண்ட்’ வேலை மூலம் பெற்று விடலாம் என்ற கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றனர்.
முஸ்லிம் சமுதாயத்திற்கு மத்தியில் ஊடுறுவியுள்ள ஷிர்க், பித்அத், மூடப் பழக்க வழக்கங்கள், தவறான கொள்கைகள் அனைத்தையும் துணிச்சலுடன் விமர்சனம் செய்து, அவர்களைத் தூய்மையான ஏகத்துவக் கொள்கையின் பக்கம் அழைக்க வேண்டும். அழைப்புப் பணியில் இறங்கும் போது, இயக்கம் வளர்ப்பதற்காக வளைந்து, நெழிந்து, பூசி மெழுகக் கூடாது.
ஊருக்குப் பயந்து உண்மையை மறைக்கவும் கூடாது. அல்லாஹ் ஒருவன் என்று உறுதியாக நம்ப வேண்டும். அவனல்லாத அனைத்தும் வணங்கத் தகுதியற்றவை என்று உறுதியுடன் உரத்து முழங்க வேண்டும். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களே எங்கள் நிரந்தர வழிகாட்டி. அன்னவர்களது ‘சுன்னா’வுக்கு முரணான அனைத்தும் புறக்கணிக்கப்பட வேண்டியவைகள். இந்த உறுதியான கொள்கை நிலைக்கு எமது உயிர்தான் விலை என்றால், அதற்கும் தயங்கக் கூடாது. இதுதான் உண்மையான ஏகத்துவக் கொள்கை வாதிகளின் உறுதியான நிலைப்பாடாக இருக்க வேண்டும்.
முஸ்லிம் சமுதாயத்தை சீர்படுத்தும் பணிக்கு நிகராக, அந்நிய மக்களுக்கான அழைப்புப் பணியையும் நாம் மேற்கொள்ள வேண்டும். கருத்தரங்குகள், துண்டுப் பிரசுரங்கள், நேரடி சந்திப்புகள், மீடியாக்கள் இன்னும் இதுபோன்ற பல்வேறு வழிகளிலும் இஸ்லாத்தின் பக்கம் அவர்களை அழைக்க நாம் உழைக்க வேண்டும். அப்போதுதான் நமது எதிர்பார்ப்பும் அழைப்புப் பணியும் முழமை பெறும்.
தொழுவது எவ்வளவு முக்கியத்துவம் உடையதோ, அதேபோல் அழைப்புப் பணியும் ஒரு முக்கிய கடமையாக உள்ளது என்பதை நாம் உணரவும் உணர்த்தவும் வேண்டும். இப்பணியிலிருந்து ஒதுங்கியிருந்தாலும் அல்லாஹ் விசாரிப்பான் என்பதை நினைவில் நிறுத்திப்பார்க்க வேண்டும். எனினும், இதில் இதுவரை போதியளவு அக்கறை செலுத்தாமல் இருப்பது வருந்தத்தக்க விடயமாகும்.
source; http://nallurdawa.blogspot.in/2014/03/blog-post_20.html