நன்மை பயக்கும் நபிமொழி – 84
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்
அல்லாஹ் மறுமை நாளில் அனைத்துப் படைப்பினங்களுக்கு முன்பாக என்னுடைய சமுதாயத்திலிருந்து ஒரு மனிதனைத் தனியாக நிறுத்துவான் அவனுக்கு எதிராகத் தொண்ணூற்று ஒன்பது (பாவ) ஏடுகள் விரிக்கப்படும் அதிலிருந்து ஒவ்வொரு ஏடும் பார்வை செல்கின்ற தொலைவின் அளவிற்கு இருக்கும்.
பிறகு அல்லாஹ் அவனிடம் இதிலிருந்து நீ எதையாவது மறுக்கின்றாயா? (அல்லது) பாதுகாவலர்களாகிய என்னுடைய எழுத்தாளர்கள் உனக்கு அநீதி இழைத்து விட்டார்களா?”. என்று கேட்பான்.
என்னுடைய இரட்சகனே இல்லை (அனைத்தும் நான் செய்த பாவங்கள்தான்) ” என்று அவன் கூறுவான். (நீ வேதனையிலிருந்து தப்பிக்க) உனக்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்று அல்லாஹ் கேட்பான் அதற்கு அவன் என் இரட்சகனே ஏதுமில்லை என்று கூறுவான்
அப்போது அல்லாஹ் கூறுவான் அவ்வாறில்லை உனக்கு நம்மிடத்தில் ஒரு நன்மை இருக்கிறது இன்றைய தினம் உனக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது என்று கூறியவுடன் ஒரு சிற்றேடு வெளிப்படும் அதில் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸுலுஹு (வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன் மேலும் நிச்சயமாக முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வுடைய அடியார் என்றும் அவனுடைய தூதர் என்று சாட்சி கூறுகிறேன்). என்ற ஏகத்துவக் கலிமா இருக்கும்.
நீ உன்னுடைய (நன்மை தீமைகளின்) எடையைப் பார் என்று அல்லாஹ் கூறுவான் என்னுடைய இரட்சகனே (இந்த பாவ) ஏடுகளுடன் இந்தச் சிறிய ஏடு என்ன (பெரிதா?) என்று அவன் கேட்பான் அதற்கு அல்லாஹ் நிச்சயமாக நீ அநீதி இழைக்கப்படமாட்டாய் என்று கூறுவான் அந்தப் பாவ ஏடுகள் ஒரு தட்டிலும் அந்தச் சிற்றேடு ஒரு தட்டிலும் வைக்கப்படும் அந்தப் பாவ ஏடுகள் பறந்தோடி விடும் அந்த சிற்றேடு கனத்து விடும் அல்லாஹ்வின் பெயரை விட எதுவும் கனத்து விடாது. (அறிவிப்பவர் :- அம்ருப்னு ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் திர்மிதி 2563)
‘என்னை மறுத்தவர் தவிர என் சமுதாயத்தினர் அனைவரும், சொர்க்கத்தில் நுழைவார்கள்!’ இறைத்தூதர் அவர்களே! மறுப்போர் யார்? என்று கேட்கப்பட்டது. ‘எனக்குக் கட்டுப்பட்டவர், சொர்க்கத்தில் நுழைவார். எனக்கு மாறு செய்தவர், என்னை மறுத்தவராவார்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்:புகாரி)
‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! கூலியை அதிகம் பெற்றுத்தரும் தர்மம் எது?’ என்று கேட்டார். ‘நீ ஆரோக்கியமாகவும், ஏழ்மையை பயந்து, செல்வத்தை எதிர்பார்த்திருக்கும் ஏழையாகவும் இருக்கும் நிலையில் நீ தர்மம் செய்வதுதான். உயிர் தொண்டைக்குழியை அடைந்து, இன்னாருக்கு இவ்வளவு, இன்னாருக்கு இவ்வளவு, இன்னாருக்கு இவ்வளவு என நீ கூறும் நேரம் வரை, (தர்மம் செய்ய) தாமதிக்காதே’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். ‘ (அறிவிப்பாளர்: அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்:புகாரி)
‘அல்லாஹ் ஒரு அடியானை பிரியம் வைத்துவிட்டால் ஜிப்ரீலை அழைத்து, ”அவரை நான் பிரியம் கொள்கிறோம். அவரை நீ விரும்புவீராக!” என்று கூறுவான். அவரும் அவனை பிரியம் கொள்வார். ஜிப்ரீல் வானத்தில் உள்ளவர்களை அழைத்து ”அல்லாஹ் இன்னமனிதனை பிரியம் கொள்கிறான். அவரை நீங்களும் விரும்புங்கள் என்பார். வானத்தில் உள்ளோர் அவரை பிரியம் கொள்வர். பின்பு பூமியில் (உள்ளவர்களிலும்) அவர் பால் இணக்கத்தை ஏற்படுத்தப்படும்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள். (நூல்: புகாரி)
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”ஒவ்வொரு திங்கள்கிழமையும், வியாழக்கிழமையும் செயல்கள் அனைத்தும் அல்லாஹ்விடம் எடுத்துச் செல்லப்படுகின்றன. அப்போது அல்லாஹ்வுக்கு இணை வைக்காத அனைவரையும் அல்லாஹ் மன்னிக்கிறான். ஆனால் தனக்கும் தன் சகோதரனுக்கும் இடையே பகைமை கொண்டவனைத் தவிர. இவர்கள் விஷயமாக அல்லாஹ் (கூறும்போது) ‘இந்த இருவரும் சமாதானம் ஆகும் வரை இருவரையும் விட்டு விடுங்கள்” என்று கூறுவான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)
ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: “தன் சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் வெறுப்பது, ஒரு முஸ்லிமுக்கு அனுமதி இல்லை. மூன்று நாட்களுக்கும் மேல் ஒருவன் வெறுத்து, இறந்து விட்டால், அவன் நரகில் நுழைவான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”மூன்று நாட்களுக்கு மேல் ஒரு மூஃமினை வெறுப்பதற்கு, மற்றொரு மூஃமினுக்கு அனுமதி இல்லை. மூன்று நாட்கள் கழிந்து விட்டால், அவரை அவர் சந்திக்கட்டும். அவருக்கு ஸலாம் கூறட்டும். அவரின் ஸலாமுக்கு பதில் கூறிவிட்டால் கூலி பெறுவதில் இருவரும் சமமாகி விடுவார்கள். அவருக்குப் பதில் ஸலாம் கூறாவிட்டால், அவர் பாவத்தைச் செய்தவராவார். ஸலாம் கூறியவரோ, வெறுத்தல் எனும் குற்றத்திலிருந்து நீங்கியவராவார்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: அபூதாவூது)