சிகிச்சையா? சித்திரவதையா?
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
[ முஸ்லிம் உம்மத் என்ற உடம்பைத் தாக்கும் வெளிப்பாதிப்புகள் பல. எடுத்துக்காட்டாக ஆபாசமான சூழல், ஆடம்பர மோகம், அதனைத் தூண்டும் விளம்பரங்கள், மீடியாக்கள், சினிமா மற்றும் கலாசார சீர்கேடுகள், மது, சூது, போதை வஸ்துக்கள் எனப்பலவற்றைக் குறிப்பிடலாம்.
சமூகம் என்ற உடம்புக்கு வைத்தியம் செய்ய முயற்சிக்கும் தாஇகளில் அநேகர் இந்த வெளிப் பாதிப்புக்களிலிருந்து சமூகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதிலேயே கவனம் செலுத்துகின்றார்கள்.
சமூகத்தின் கட்டமைப்பிலுள்ள கோளாறுகளை சீர் செய்வதில் கவனம் செலுத்துவதில்லை அல்லது அந்தக் கரிசனை மிகவும் குறைவு என்றே கூற வேண்டும். அதனால் சிகிச்சைகள் பயனற்றுப் போகின்றன அல்லது சிகிச்சைகளே சித்திரவதைகளாகவும் மாறி வருகின்றன.
அன்பும் சகோதரத்துவமும் குறைவாகவே காணப்படுகின்றன. சமூக விவகாரங்கள் கலந்தாலோசனை இல்லாமல், தீர்மானங்கள் இல்லாமல் கிடப்பிலேயே இருக்கின்றன.
கட்டுப்பாடு, ஒழுங்கு என்பன சமூகத்தில் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. விமர்சனம் மட்டும் குறைவின்றி நடக்கின்றது.]
சிகிச்சையா? சித்திரவதையா?
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
சிகிச்சையா? சித்திரவதையா? மனித உடலில் இரண்டு வகையான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.
உடலின் இயற்கையான கட்டமைப்பில் (Inbuilt System) ஏற்படுகின்ற கோளாறுகள்.
உதாரணம்: நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் இரத்தத்தில் இருக்க வேண்டிய செங்குருதி, வெண்குருதித் துணிக்கைகளின் அளவு, இரத்தத்தில் இருக்க வேண்டிய சீனியின் அளவு, இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் என்பவற்றின் அளவு, சுரக்கும் சுரப்பிகளின் அளவு போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இவையனைத்தும் அளவாக இருந்தால் உடலில் இயக்கம் சீராக இருக்கும். இருக்க வேண்டிய அளவை விட இவை அதிகமானால் அல்லது குறைந்தால் உடலின் கட்டமைப்பு (Inbuilt System) பாதிப்படைகிறது. விளைவாக உடல் பலவீனமடைகிறது.
மற்றுமொருவகைப் பாதிப்புக்கள் உடலுக்கு வெளியே இருந்து வருகின்றன. இத்தகைய பாதிப்புகள் பல்வேறு காரணிகளால் வரலாம். நீரினால்ஸ காற்றினால்ஸ கிருமிகளினால்ஸ மழையினால்ஸ குளிரினால்ஸ கடும் வெப்பத்தினால்ஸ உடலைக் காயப்படுத்தும் ஒரு பொருளினால் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன.
உடலின் கட்டமைப்பு (Inbuilt System) சீராக இருந்தால் வெளிப் பாதிப்புகளுக்கு எதிராக நின்று தாக்குப் பிடிக்கும் சக்தி உடலுக்கு இருக்கும். கட்டமைப்பு சீர்குலைந்திருந்தால் அல்லது பலவீனப்பட்டிருந்தால் வெளிப் பாதிப்புக்களால் உடல் பல்வேறு உபாதைகளை எதிர் கொள்ள வேண்டி ஏற்படும். அது மட்டுமல்ல சிகிச்சையும் பயனற்றுப் போகலாம். சிலபோது சிகிச்சையே சித்திரவதையாகவும் மாறலாம்.
எடுத்துக்காட்டாக உடலில் இயற்கையாக சுரக்கும் இன்சுலினின் அளவு குறைவாக இருந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். இந்நிலையில் ஒரு சிறு காயம் ஏற்பட்டாலே அதனை ஆற்ற முடியாது போகலாம். அவ்வாறிருக்கையில், பெரிய சத்திர சிகிச்சை ஒன்றுக்கு நோயாளியை உட்படுத்துவது எங்ஙனம்? அது நோயாளியை சித்திரவதைக்குட்படுத்துவதாகவே முடியும்.
ஏன் இந்த உதாரணம்?
மனித உடலின் கட்டமைப்பு சீர்குலைந்தால் அதில் உள்ள கோளாறுகளையே முதலில் சரி செய்ய வேண்டும். கட்டமைப்பில் உள்ள கோளாறுகளை ஒரு பக்கம் வைத்துவிட்டு வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் போனால் சிகிச்சையே சித்திரவதையாகிவிடும் என்ற உதாரணம் மனித உடலுக்கு மட்டுமல்ல மனித சமூகம் என்ற உடலுக்கும் பொருந்துகிறது.
முஸ்லிம் சமூகத்தை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஓர் உடலுக்குத்தானே ஒப்பிட்டார்கள். அந்த உடலிலும் மனித உடல் போன்றே இரண்டு வகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன.
ஒன்று: கட்டமைப்பில் ஏற்படுகின்ற பாதிப்புகள்
இரண்டு: வெளியில் இருந்து வருகின்ற பாதிப்புகள்
முஸ்லிம் உம்மத் என்ற உடம்பைத் தாக்கும் வெளிப்பாதிப்புகள் பல. எடுத்துக்காட்டாக ஆபாசமான சூழல், ஆடம்பர மோகம், அதனைத் தூண்டும் விளம்பரங்கள், மீடியாக்கள், சினிமா மற்றும் கலாசார சீர்கேடுகள், மது, சூது, போதை வஸ்துக்கள் எனப்பலவற்றைக் குறிப்பிட லாம்.
சமூகம் என்ற உடம்புக்கு வைத்தியம் செய்ய முயற்சிக்கும் தாஇகளில் அநேகர் இந்த வெளிப் பாதிப்புக்களிலிருந்து சமூகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதிலேயே கவனம் செலுத்துகின்றார்கள். சமூகத்தின் கட்டமைப்பிலுள்ள கோளாறுகளை சீர் செய்வதில் கவனம் செலுத்துவதில்லை அல்லது அந்தக் கரிசனை மிகவும் குறைவு என்றே கூற வேண்டும். அதனால் சிகிச்சைகள் பயனற்றுப் போகின்றன அல்லது சிகிச்சைகளே சித்திரவதைகளாகவும் மாறி வருகின்றன.
சமூகம் என்ற உடலின் கட்டமைப்பு
மனித உடலில் இயற்கையானதொரு கட்டமைப்பு இருப்பதுபோல் சமூகத்திற்கென இயற்கையானதொரு கட்டமைப்பு இல்லை. சமூகத்திற்கான கட்டமைப்பு உண்மையில் செயற்கையானதுதான். அதனை நாமே கட்டமைக்க வேண்டும். இஸ்லாம் தந்திருக்கும் வழிகாட்டல்களுக்கமைய ஒரு சமூகத்தை ஒரு மனித உடலைப் போன்று கட்டமைக்க வேண்டிய பொறுப்பு சமூக சீர்திருத்த முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களையே சாரும்.
எப்படிக் கட்டமைப்பது?
ஒரு சமூகத்தைக் கட்டமைப்பதற்குத் தேவையான அம்சங்களை சென்ற இதழ் தஃவா களத்தில் நாம் கலந்துரையாடினோம். நான்கு பிரதான அம்சங்களில் கரிசனையும் அர்ப்பணத்துடன் கூடிய ஈடுபாடும் இந்தக் கட்டமைத்தலுக்கு அவசியமாகின்றன.
அன்பும் சகோதரத்துவமும்
கலந்தாலோசனை
கட்டுப்பாடும் ஒழுங்கும்
ஆக்கபூர்வ விமர்சனம்
இந்த நான்கில் முதல் மூன்று அம்சங்களும் சமூகம் என்ற உடலை பலமாக கட்டமைப்பதற்கு இன்றியமையாதவையாக இருக்கின்றன. அதேநேரம் கட்டமைப்பில் ஏற்படுகின்ற உள், வெளிக்கோளாறுகளை சீர்செய்வதற்கு நான்காவது அம்சம் அவசியப்படுகின்றது. நான்காவதை சிகிச்சை என்றும் எடுத்துக் கொள்ளலாம். சமூகம் என்ற உடலில் ஏற்படும் நோய்களுக்கு மருத்துவம் செய்யும் முயற்சியே ஆக்கபூர்வ விமர்சனமாகும்.
ஆக்கபூர்வ விமர்சனம் என்றால் என்ன?
இதில் மூன்று விடயங்கள் உள்ளடங்குகின்றன.
கோளாறைக் கண்டறிதல்: ஒரு Scan Report ஐப் போன்று உள்ளதை உள்ளவாறு கண்டறிதல் ஆக்கபூர்வ விமர்சனத்தின் முதல் அம்சமாகும்.
கோளாறை சீர்செய்ய வேண்டியவர்களுக்கு மத் தியில் அந்தக் கோளாறு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தல். ஆக்கபூர்வ விமர்சனத்த்தின் இரண்டாவது அம்சமாகும்.
விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கும் போது எதிர்ப்புணர்வை கொழுந்துவிட்டெரியச் செய்யும் அசிங்கமான அணுகுமுறைகளைத் தவிர்த்தல்.
கோளாறை நிவர்த்திக்கும் வகையிலான திட்ட ஆலோசனைகளை முன்வைத்தல். முன்வைக்கப்படும் திட்ட ஆலோசனைகள் அல்லது முன்மொழிவுகள் நடைமுறைச் சாத்தியமானதாக இருப்பதையும் உறுதி செய்தல். இந்த மூன்று அம்சங்களையும் ஒரே வார்த்தையில் சிகிச்சை என்றும் குறிப்பிடலாம்.
இஸ்லாமியப் பரிபாஷையில் இந்தச் சிகிச்சைக்குப் பல பெயர்கள் உண்டு. நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல் என்பது அவற்றுள் முக்கியமானதாகும். சமுதாயம் என்ற உடலில் இதுவரை இல்லாத நன்மைகளை ஏற்படுத்துவதும் இருக்கின்ற தீமைகளைக் களைவதும்தான் அந்தப் பணி. அதனை மற்றுமொரு வகையில் சொன்னால் சமுதாயம் என்ற உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கின்றவற்றிலிருந்து அதனைப் பாதுகாப்பதும் என்றும் கூறலாம்.
இன்று நடப்பது என்ன?
சுருக்கமாகச் சொன்னால் சமூகம் கட்டமைக்கப்படவில்லை. இயக்கங்கள், சங்கங்கள், கட்சிகள் போன்றன கட்டமைக்கப்படுகின்றன. காரணம் கட்டமைப்புக்கு அவசியமான பண்புகள் ஓரளவேனும் அவற்றினால்தான் பின்பற்றப்படுகின்றன.
அவையே,
அன்பும் சகோதரத்துவமும்
கலந்தாலோசனை
கட்டுப்பாடும் ஒழுங்கும்
தங்களுக்குள் இருக்கும் குறை நிறைகளை அலசும் பண்பு (அமைப்பு ரீதியாக செயல்படத் தேவையில்லை என்று கூறும் அமைப்புகள் கூட கட்டமைப்புக்குத் தேவையான இந்தப் பண்புகளை தமக்குள் செயல்படுத்தியே வருகின்றன.)
எனினும், சமூகம் கட்டமைக்கப்படவில்லை. அது அநாதரவாகவே இருக்கின்றது. எமது சமூகம்! எமது சமூகம்! என தமது சமூகப்பற்றை வெளிப்படுத்தாதவர்கள் இல்லை. எனினும், சமூக அங்கத்தவரிடையே,
அன்பும் சகோதரத்துவமும் குறைவாகவே காணப்படுகின்றன. சமூக விவகாரங்கள் கலந்தாலோசனை இல்லாமல், தீர்மானங்கள் இல்லாமல் கிடப்பிலேயே இருக்கின்றன.
கட்டுப்பாடு, ஒழுங்கு என்பன சமூகத்தில் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. விமர்சனம் மட்டும் குறைவின்றி நடக்கின்றது.
ஒவ்வொரு கட்சியும் ஏனைய கட்சிகளை ஒவ்வோர் இயக்கமும் ஏனைய இயக்கங்களை பகிரங்கமாகவோ திரை மறைவிலோ விமர்சிக்காமலிருப்பது மிகவும் குறைவு. காரணம், விமர்சனத்தில் தான் பல அமைப்புகளின் வாழ்வே தங்கியிருக்கின்றது. பிறரை கீழ்த்தரமாகவோ, இரகசியமாகவோ குறை கூறி, அபாண்டங்கள் சுமத்தி விமர்சித்து ஏனையோர் பிழையில் இருக்கிறார்கள், தாங்கள் மட்டுமே சரி என வலிந்து கூறாவிட்டால் அவர் களது வாழ்வே முகவரியற்றுப் போய் விடும். அதனால் விமர்சனங்கள் தாராளமாகி விட்டன. நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டிய ஆக்கபூர்வ விமர்சனம் மட்டும் அத்தி பூத்தாற் போன்று பார்வைகளில் படாமலேயே தோன்றி மறைந்து விடுகின்றன.
சமூகம் கட்டமைக்கப்படவில்லை. அதற்குரிய பண்புகளும் சமூகத்தில் நலிவடைந்து காணப்படுகின்றன. இந்நிலையில் சமூகத்தின் பொறுப்புதாரிகள் எனத் தம்மைக் கூறிக் கொள்பவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?
அவர்களும் ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட அமைப்புக்களுக்குள்தான் தங்களது நேரத்தினதும் உழைப்பினதும் பெரும் பகுதியை செலவிடுகிறார்கள். அமைப்புகளின் சுவர்களைத் தாண்டி வெளியே வந்து சமூகத்தைக் கட்டமைப்பதற்காகஸ கட்டமைப்புக்குரிய பண்புகளை சமூகத்தில் வளர்ப்பதற்காகஸ பலமான சமூகக் கூட்டமைப்பொன்றை மார்க்க ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஸ்தாபிப்பதற்காகஸ அந்தப் பெரு முயற்சிக்கு அனைத்து அமைப்புகளினதும் ஆலோசனைகளையும், மானசீகமான, வெளிப்படையான ஒத்துழைப்புகளையும் பெறுவதற்காகஸ பலமான சமூக கூட்டிணை வொன்றுக்கு அவசியப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MOU), சட்ட யாப்புகள், பொறிமுறைகள், ஒழுக்கக் கோவைகள் போன்றவற்றைத் தயாரிப்பதற்காகஸ அந்தக் கூட்டிணைவில் அனைவரையும் இதய சுத்தியோடு நம்பிக்கையூட்டி ஒன்று சேர்ப்பதற்காகஸ தங்களை அர்ப்பணித்துக் கொண்டதாகத் தெரியவில்லை.
அது மட்டுமல்ல. நாம் இலங்கையர்கள் என்ற வகையில் நாட்டு நலன்களுக்கு ஒத்துழைக்கும் சமூகமாகஸ ஏனைய சமூகத்தவர்கள் எம்மைப் பற்றி வைத்திருக்கும் மதிப்பீடுகளை உணர்ந்து அவற்றை நல்லதாக மாற்றியமைக்க முயற்சிக்கும் சமூகமாகஸ சகவாழ்வைக் கட்டி யெழுப்புவதிலும் இஸ்லாத்தின் மகிமையை பிறர் உணரச் செய்வதிலும் முன்னுதாரணமாகத் திகழும் சமூகமாகஸ முஸ்லிம் சமூகத்தை மாற்றியமைக்க வேண் டிய அவசியமும் சமூகத்தின் பொறுப்புகளில் அமர்த் தப்பட்டவர்களுக்கு இருக்கின்றது.
சமூகம் என்ற உடலில் கட்டமைப்போடு கூடிய இத்தகைய பணிகளைச் செய்து அதன் கட்டுமானத்தைப் பலப்படுத்தினால் பின்வரும் நன்மைகள் விளையும்:
முஸ்லிம் சமூகத்தினுள் இருக்கின்ற பல்வேறு தரப்பினர்களுக்கு மத்தியில் அன்பு, சகோரத்துவம் ஏற்பட்டு இணக்கப்பாட்டோடு செயல்படும் கலாசாரம் மேலோங்கும். இன்று இவ்வாறான ஒரு நிலை சமூகத்தின் மேல் மட்டத்தில் ஏற்பட்டிருந்தாலும் கீழ்மட்டத்தில் அந்த நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் பலர் உறுதியாக இருக்கிறார்களோ என்று நினைக்க வைக்கிறது கீழ்மட்ட சூழல். மொத்த சமூகத்தில் மேல்மட்ட அங்கத்தவர்களின் வீதம் 0.1 கூடத் தாண்டுமா? என்பது சந்தேகமே. அவர்கள் மாத்திரம் ஒன்றிணைந்து மொத்த சமூகத்தையும் கட்ட மைத்துவிட முடியுமா?
சமூகக் கட்டமைப்பை பலப்படுத்தும் போது விளையும் இரண்டாவது நன்மையை விளங்குவதாயின் இன்றுள்ள ஒரு பிரச்சினையை நாம் அறிந்திருக்க வேண் டும். இன்றைய முஸ்லிம் சமூகம் அறுத்துப் பலியிடப்பட்ட ஒரு பிராணி போன்று கிடக்கின்றது. பலம் கொண்ட வர்கள் எனக்கு, உனக்கு என்று சண்டையிட்டு அதனைப் பங்கு வைத்துக்கொள்ளும் போட்டியில் இறங்கியிருக்கிறார்கள். தனது பங்கை அதிகப்படுத்திக் கொண்டவர்கள் வெற்றி பெற்றுவிட்டதாக நினைக்கிறார்கள். பங்கு குறைந்தவர்கள் தோல்வி மனப்பான்மையால் துவண்டு போகிறார்கள்.
சமூகத்தைக் கட்டமைக்கும் பணி செவ்வனே நடைபெற்றால் நிலைமை இவ்வாறிருக்குமா? இல்லை, அது தலைகீழாக மாறும். பிராணியை பங்கு போடும் போட்டிக்குப் பதிலாக அனைத்துத் தரப்பினரும் ஒன்று சேர்ந்து அப்பிராணியை உயிர்ப்பித்துப் பராமரித்துப் பாதுகாக்கும் நிலை ஏற்படும். இன்றைய சமூகத்திற்கு அந்தப் பாக்கியம் என்று கிடைக்குமோ?! அல்லாஹ்வே அறிவான்.
மூன்றாவது நன்மையும் இது போன்றதே. இன்றைய சூழலில் அதனைக் கற்பனை செய்வதுகூட சிரமமாகவே இருக்கின்றது. இன்று ஒவ்வொரு தரப்பினரும் தாம் செய்யும் பணிகளையே இறுதியானதும் சரியானதுமாகக் கருதுகின்றனர். ஏனையவர்கள் செய்வதை ஒன்றில் பயனற்றது என்று கருதுகிறார்கள் அல்லது பயனுள்ளதுபோல் தெரிந்தால் அதனை செய்யவிடாமல் தடுக்கிறார்கள். காரணம் நற்பெயரை அவர்கள் சம்பாதித்துக் கொள்வார்கள் என்ற பயம் அல்லது பிறர் செய்கின்ற பணிகளை தாமும் அள்ளிப் போட்டுக் கொண்டு செய்யத் துடிக்கிறார்கள்.
சமூகம் சீராகக் கட்டமைக்கப்படுமாயின் இந்த நிலையும் தலை கீழாக மாறும். ஒவ்வொரு தரப்பினரும் செய்யும் பணிகளை அவர்கள் செய்யவிட்டு அந்தப் பணிகளுக்கு வலுவூட்டி அவற்றில் அவர்களை நிபுணத்துவம் பெறச் செய்வதில் ஏனைய தரப்பினர் கவனம் செலுத்துவார்கள். இதன் மூலம் போட்டி மனப்பான்மைக்குப் பதிலாக ஒத்துழைக்கும் கலாசாரம் சமூகத்தில் மேலோங்கும். பல்வேறுபட்ட முயற்சிகளுக்கு களமாகவும் முஸ்லிம் சமூகம் பரிணமிக்கும்.
நான்காவது நன்மை வளங்களோடு சம்பந்தப்பட்ட தாகும். இன்று சமூகத்தின் பல்வேறு தரப்பினர்கள் பல்வேறு வளங்களையும் பலங்களையும் தம்வசம் வைத்திருந்தாலும் கூட அவற்றை ஒரு சில துறைகளில் மட்டுமே அவர்களால் பயன்படுத்த முடிகிறது. (உதாரணமாக: பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள்) இவை தவிர சமூகம் வேண்டி நிற்கும் நூற்றுக் கணக்கான துறைகளை அடையாளப்படுத்தவோ அந்தத் துறைகளில் முன்னேறுவதற்கான திட்டங்களை அறிமுகம் செய்யவோ முடியாதிருக்கிறது.
சமூகம் அதற்கேயுரிய பண்புகளோடு கட்டமைக்கப் பட்டால் இந்த நிலையும் தலை கீழாக மாறும். அதாவது, வினைத்திறனோடும் விளைதிறனோடும் பல்வேறு துறைகளில் கருமமாற்றுபவர்களைக் கண்டு ஏனையோர் மகிழ்ச்சியடையும் சூழல் உருவாகும். அதனை சமூகத்திற்குக் கிடைத்த வெற்றியாக அனைவரும் கருதுவார்களே தவிர தமக்கேற்பட்ட தோல்வியாக எவரும் கருத மாட்டார்கள்.
இந்த ஆரோக்கியமான மனநிலையை வளர்த்துக் கொள்ள முடியாதவர்கள் தங்களது இயலாமையையும் தோல்வி மனப்பான்மையையும் மறைத்துக் கொள்வதற்காக பிறர் செய்த வேலைகளையும் தாமே செய்வதாக காட்டிக் கொள்கிறார்கள்.
அன்பு, சகோதரத்துவம்
கலந்தாலோசனை
கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கு
ஆக்கபூர்வ விமர்சனம்
என்பவற்றால் கட்டமைக்கப்பட்ட சமூகத்தில் பயன்கள் இவை போன்று இன்னும் பல!
அத்தகைய நன்மைகளில் பிரதானமான மற்றொன்று தான் அந்த சமூகத்தின் உடம்பில் காணப்படுகின்ற நோய் எதிர்ப்பு சக்தியாகும். உடலின் கட்டமைப்பு பலமாக இருக்கும்போது நோய் எதிர்க்கும் சக்தியும் பலமாக இருக்கும். அப்போது மட்டுமே வெளிச் சூழலிலிருந்து வரும் பாதிப்புக்களுக்கு அந்த உடலால் ஈடுகொடுக்க முடியும்.
ஆபாசங்கள், ஆடம்பர மோகங்கள், இவற்றைத் தூண்டும் காரணிகள், தொலைக்காட்சி, சினிமா, மது, சூது, போதை வஸ்துக்கள், கலாசார சீர்கேடுகள் போன்ற எதுவானாலும் சமூகக் கட்டமைப்பு பலமாக இருக்கும் போது அதனுள் ஊடுருவுவது சிரமமே. அவ்வாறே ஊடுருவினாலும் அவற்றிற்கு சிகிச்சை செய்வது சிரமமில்லை.
அதேநேரம், அன்பும் சகோதரத்துவமும், கலந்தாலோசனை, கட்டுப்பாடு, ஆக்கபூர்வ விமர்சனம் என்பன இல்லாத சமூகத்தில் ஒரு தீமைக்கெதிராகவோ அல்லது ஒரு நன்மைக்கு ஆதரவாகவோ மொத்த சமூகமும் சேர்ந்து ஒருமித்த ஒரு தீர்மானத்திற்கு வருவதும் கூட சிரம சாத்தியமானதாகவே இருக்கும். சாத்தியமானால் கூட அது மிக மிக அரிதாகவே நடக்கும். காரணம், மேலே சொல்லப்பட்ட கூட்டு வாழ்க்கைக்குரிய பண்புகள் இல்லாத சமூகத்தில் ஒருவருக்கொருவர் பகைமையோடும் போட்டி மனப்பான்மையோடும் தான் செயல்படுவார்கள்.
மகன் மரணித்தாலும் குற்றமில்லை மருமகள் விதவையாகினால் போதும் என்ற மனப்பான்மை கூட்டுப் பண்புகள் இல்லாத சமூகத்தை ஆட்சி செய்வதனால் அங்கு நன்மைகள் வளர்ந்து மேலோங்குவதையோ பாவங்கள் குறைந்து மங்கிப் போவதையோ எதிர்பார்க்க முடியாது. அத்தகையதொரு சூழலில் சீர்கேடுகளைப் பல்கிப் பெருகச் செய்யும் கிருமிகள் உல்லாசமாக வளர முடியுமே தவிர நன்மையின் வித்துக்கள் முளைப்பது கடினமாகவே இருக்கும்.
கூட்டு வாழ்க்கைக்குரிய பண்புகள் இல்லாத சமூகத் தில் அந்தப் பண்புகளை மேலோங்கச் செய்வதற்கே சீர்திருத்த முயற்சிகளில் ஈடுபட்டிருப்போர் அதிக முக்கியத்துவத்தையும் முன்னுரிமையையும் கொடுக்க வேண்டும். அதற்குப் பதிலாக (அதாவது அன்பு, சகோதரத்துவம், கலந்தாலோசனை, கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கு என்பவற்றை வளர்ப்பதற்குப் பதிலாக) தாமே சரியானவர்கள் ஏனைய அனைத்துத் தரப்பினரும் ஒதுக்கி ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் என்ற மனப்பான்மையை வளர்த்துப் பிறரைக் கீழ்த்தரமாக விமர்சிக்கும் கலாசாரத்தையும் புதிய பரம்பரைக்கு வழங்கி விட்டுச் சென்றால்ஸ அது நோயிலிருக்கும் சமூகத்திற்கு சிகிச்சையளிக்கும் முயற்சியல்ல. மாறாக, நோயாளியை சித்திரவதை செய்யும் கொடூரமாகும்.
சீனி வியாதிக்காரனை சத்திர சிகிச்சைக்குட்படுத்துவது போன்ற சித்திரவதையாக இன்றைய தஃவாகளம் தேசத்திலும் சர்வதேசத்திலும் மாறியிருப்பதை யார்தான் உணர்ந்து கொள்ளப் போகின்றார்கள்?!! இன்றைய சூழலில்ஸ
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்,
அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
(இக்கட்டுரை – December 2015 இல் எழுதப்பட்டது)