சமூக ஏற்றத் தாழ்வுகளை அகற்றும் ஈதுல் பித்ர் என்னும் ஈகைத் திருநாள்
மனித குலத்துக்கு சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும், இறையச்சத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்தில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எடுத்துவைத்த எழில் மார்க்கமான இஸ்லாத்தின் ”லாஇலாஹ இல்லல்லாஹ்” இறைவன் ஒருவனே!
ஈடு- இணையற்றவன் என்னும் பகுத்தறிவு சித்தாந்தத்தை அரேபிய மக்களின் உள்ளங்களில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விதைத்தார்கள்.
இந்தக் கொள்கையினை ஏற்றுக் கொள்ள மறுத்த அவரது உறவினர்களும், ஊராரும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பல்வேறு இன்னல்லகளை ஏற்படுத்தினர். சதித்திட்டம் தீட்டி அவரைக் கொல்லவும் துணிந்தனர். பித்தர் என்ற பட்டத்தை சூட்டியும், கல்லால் அடித்தும் பலர் அவரை சித்ரவதைப் படுத்தினர்.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஓர் இறைக் கொள்கையினை ஏற்று அவரது மனைவியார் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா முதன்முதலாக இஸ்லாம் மார்க்கத்தை தழுவினார்கள்.
சொந்த மண்ணில் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதை உணர்ந்த முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அண்டை நகரமான மதீனாவுக்கு தப்பிச் சென்றார். மதீனா வாசிகளின் அன்பும், ஆட்சியாளர்களின் ஆதரவும் அளப்பரியதாக அமைந்ததால் அங்கிருந்தபடியே உலகம் முழுவதும் இஸ்லாம் மார்க்கத்தின் கொள்கைகளை அவர்கள் பரப்பினார்கள்.
இஸ்லாம் என்பது ஈமான், தொழுகை, நோன்பு, ஜக்காத்து, ஹஜ் என்னும் ஐம்பெரும் கடமைகளை நிறைவேற்றி, அவற்றின் மூலம் இறையருளை அடைய வழிகாட்டும் அமைதி மார்க்கம் என்று அவர் போதித்தார்கள்.
”வணக்கத்திற்குரிய நாயனாக ஈடு- இணையற்ற அல்லாஹ்வை நான் ஏற்றுக் கொண்டுள்ளேன். அவனது திருத்தூதரும், எனது வழிகாட்டியுமான முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்றி, இஸ்லாத்தின் பாதையில் நின்று, இந்த மார்க்கத்தின் நெறிகளை பிறழாமல் பின்பற்றி உண்மையான முஸ்லிமாக வாழ்வேன்” என்று உளப்பூர்வமாக உறுதி ஏற்பது, இஸ்லாத்தின் முதல் கடமையான ஈமான் (உறுதிப்பாடு) கொள்ளுதல் ஆகும்.
இரண்டாவது கடமையாக, தன்னை படைத்த இறைவனை நினைந்து, நன்றி கூறும் பொருட்டு தரையில் நெற்றி பதியும்படி சிரம் தாழ்த்தி, அன்றாடம் ஐவேளை அல்லாஹ்வை வணங்க வேண்டும்.
ஏழைகளின் பசியை உணராமல் வசதி படைத்தவர்கள் சொகுசாக வாழ்வதும், ஏழைகள் குடல் கொதித்து பட்டினியால் சாவதும் சமத்துவம் ஆகாது. எனவே, பசியின் அருமையை உணர்த்தி, பசித்தவருக்கு அன்னமிடும் நற்பண்பை செலவந்தர்களுக்கு உணர்த்தவும், பசியின் கொடுமையை செலவந்தர்களும் அனுபவித்து உணர்ந்து, தான- தர்மங்களை தொடரவும் இஸ்லாத்தில் நோன்பு மூன்றாவது கடமையாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அல்லாஹ்வால் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனின் அனேக வசனங்கள் நோன்பின் அவசியத்தையும், அருமையையும் போதிக்கின்றன. ரமலான் என்றழைக்கப்படும் இந்த நோன்பு மாதத்துக்கு ஏனைய பல்வேறு சிறப்புகளும் உண்டு.
இஸ்லாமியர்களின் மறைநூலான திருக்குர்ஆன் ரமலான் மாதத்தின் ஒற்றைப்படை இரவுகளில் ஒன்றில் தான் அருளப்பட்டது என்பது இம்மாதத்தின் தனிச்சிறப்பை தரணிக்கு உணர்த்துகின்றது.
ரமலான் மாதத்தின் முதல் பிறை காணப்பட்ட மாலைப்பொழுதின் அதிகாலையில், முதல் நோன்பினை முஸ்லிம்கள் கடைபிடிக்கின்றனர். அதிகாலையில் எழுந்து, “ஸஹர்” எனப்படும் கதிரவனின் உதய வேளை முடிவதற்குள் சாப்பிட்டு முடித்தபின், “மஹ்ரிப்” எனப்படும் மாலை தொழுகை நேரம் வரை சுமார் 14 மணி நேரம் ஒருதுளி நீரைக்கூட பருகாமல் உடலை வருத்தி, படைத்தவனை நினைத்து, அவனை ஐந்து வேளையும் வணங்கியவர்களாய் மாதத்தின் 30 நாட்களையும் கழிப்பதே, ரமலான் நோன்பின் சிறப்பாகும்.
இத்தகைய நோன்பினை பேணுபவர்கள் நல்ல சிந்தனை, நல்ல நடத்தை, நல்லொழுக்கம் ஆகியவற்றை கடைபிடிக்கவும், அன்றாட ஐவேளை தொழுகையை தவறாமல் மேற்கொள்வதன் மூலம் இறைவனிடம் நெருங்கி உறவாடவும் இஸ்லாத்தின் மூன்றாவது கடமையான நோன்பு, பாதை வகுத்து தந்துள்ளது.
அதோடு, மட்டுமில்லாமல், ஜக்காத் எனப்படும் நான்காம் கடமைக்கான வாசலாகவும் ரமலான் நோன்பு திழ்கின்றது.
ரமலான் மாதத்தின் 30 நாட்களும் நோன்பிருந்து, தங்களின் கடமையை நிறைவேற்றிய இஸ்லாமியர்கள், ஷவ்வால் மாதத்தின் முதல் பிறையை பார்த்ததும் பசுவைக் கண்ட கன்றாக துள்ளி மகிழ்ந்து, களிப்பெய்துகிறார்கள். அன்று மாலையில் இருந்து ஈகைத் திருநாள் (ஈதுல் ஃபித்ர்) எனப்படும் பெருநாள் துவங்கிவிடும்.
மறுநாள் காலை மசூதிகளிலும், ஈத்கா எனப்படும் திறந்த வெளி திடல்கள், கடற்கரை போன்ற பரந்த- திறந்த வெளிகளிலும் கூட்டாக சிறப்பு தொழுகையில் பங்கேற்று, நோன்பு, ஜக்காத்து என்னும் இரு கடமைகளையும் ஒருசேர நிறைவேற்ற தங்களுக்கு அருள் புரிந்த அல்லாஹ்விற்கு அவர்கள் தொழுகையின் வாயிலாக சிரம் தாழ்த்தி நன்றி கூறி மகிழ்கின்றனர்.
நமக்குள் பேதங்கள் இல்லை; ஏற்றத் தாழ்வுகள் அறவே இல்லை என்பதை உணர்த்தும் வகையில் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கின்றனர். அண்டை வீட்டாரையும், நண்பர்களையும் தங்களது இல்லத்திற்கு வரவேற்று, இனிப்புகள் மற்றும் பிரியாணி விருந்தளித்து, உபசரித்து இஸ்லாமியர்கள் பேருவகை கொள்கின்றனர்.
வசதி படைத்தவர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் தங்களது செல்வத்தை (நிலம், கால்நடை, ரொக்கப்பணம், தங்கம், வெள்ளி மற்றும் வைர ஆபரணங்கள், வாகனம் உள்ளிட்டவை) ஆண்டுதோறும் கணக்கிட்டு, அதில் 2 1/2 சதவீதத்தை (நாற்பதில் ஒரு பங்கு) உள்ளச்சுத்தியுடன் பங்கிட்டு, அந்த பங்கினை ஏழை, எளிய மக்களுக்கு தானமாக பகிர்ந்து வழங்கும் ஈகையாம் ஜக்காத்து என்னும் தானத்துக்கும் புனித ரமலான் நோன்பு வழி அமைக்கின்றது.
இதன் அடிப்படையில் நான்கு கடமைகளையும் நிறைவேற்றி இறைவனின் இன்னருளைப் பெற்ற நல்லடியார்களை, பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டு- அன்று பிறந்த குழந்தைகளாக புதிய வாழ்வினை தொடங்கும் ஐந்தாவது கடமையான ஹஜ்ஜுக்கும் ரமலான் நோன்பு முன்நின்று, தயார்படுத்தி அழைத்து செல்கிறது.
இந்த புனித ரமலான் பெருநாள் மூலம் ஏழை-பணக்காரர்கள் என்ற பேதங்கள் நீங்கி, உயர்ந்தோர்-தாழ்ந்தோர் என்ற ஏற்றத்தாழ்வுகள் அகன்று, அனைவரும் சமநிலையில் வாழும் சமதர்ம சமுதாயம் படைக்க வலியுறுத்திய அண்ணலார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியில் நடக்க உறுதி மொழியேற்போம். தான, தர்மங்களை செய்து இறைவழியில் இன்புற்று இணைந்திருப்போம்.
புண்ணியங்களின் பூக்காலமான புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று, தவறாமல் திருக்குர்ஆன் ஓதி, இரவுகளில் நின்று வணங்கி, இறைவனை அதிகமதிகம் நினைத்துக் கொண்டு, இஸ்லாமியக் கடமைகளில் ஒன்றான ‘ஸகாத்தையும்’ நிறைவேற்றி, படைத்த இறைவனுக்காகப் பசித்து, தனித்து, விழித்திருந்து புனித ரமலான் மாதம் முடிந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளைத்தான் ஈகைத் திருநாளாகக் (‘ஈத் அல் ஃபித்ர்’) கொண்டாடுகிறோம். இதையேதான் நோன்புப் பெருநாள் என்றும் அழைக்கிறோம்.
இந்தப் பெருநாளில் குளித்து, புத்தாடை உடுத்தி, பெருநாள் தொழுகைக்கு முன்பே ‘ஸதகத்துல் ஃபித்ர்’ என்ற தானத்தைச் செலுத்திவிட்டுத்தான் பெருநாள் தொழுகைக்கே செல்ல வேண்டும்.
’ஈத் அல் பித்ர்’ அன்று நோன்பு நோற்கக் கூடாது. ரமலானில் எடுத்துக் கொண்ட புலனடக்கப் பயிற்சியை பின்வரும் நாட்களிலும் பேணுதல் அவசியம்.
நோன்பு நோற்றுப் பழகிய உடலுக்கு நோன்பு அல்லாத பெருநாளை அடையும் போது வெறும் வயிற்றில் தொழுகைக்குச் சென்றால் தொழுகையில் கவனம் செலுத்த முடியாத அளவுக்குப் பசிக்க ஆரம்பித்துவிடும். அதனால் தொழுகைக்குச் செல்லும் முன்பு ஏதேனும் சாப்பிட்டுவிட்டுச் செல்வது நல்லது, குறிப்பாக பேரித்தம்பழம்.
இறைத்தூதர் நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்புப் பெருநாளில் காலையில் தொழுகைக்குச் செல்லும் முன்பு சில பேரீச்சம்பழங்களை உண்ணாமல் புறப்பட மாட்டார்கள்.
“ரமலான் மாதம் நோன்பு நோற்று பெருநாளுக்குப் பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார்” என்று இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள்.
பெருநாள் முடிந்த உடனேயே அந்த ஆறு நோன்பை தொடர வேண்டுமென்ற அவசியமில்லை, ஷவ்வால் மாதத்தில் ஏதேனும் ஆறு நாட்களில் இந்த நோன்பை நம் வசதிக்கேற்ப வைத்துக் கொள்ளலாம். இது (மாதவிலக்கின்போது) பெண்கள் விடுபட்ட நோன்பை நிறைவேற்றுவதற்கானது என்ற தவறான கூற்று நிலவுகிறது. மாறாக, இது எல்லாருக்குமானது, கடமையான நோன்பாக இல்லாவிட்டாலும் இந்த உபரியான நோன்பை கடைபிடிப்பது சிறப்பானது.
நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்புப் பெருநாளில் பள்ளியில் தொழாமல் திடலுக்குச் செல்பவர்களாக இருந்தார்கள். அவர்கள் முதலில் தொழுகையைத் துவக்கி நிறைவேற்றிவிட்டே மக்களுக்குப் போதனைகள் செய்வார்கள். ஆனால், நபிகளாரின் காலத்திற்குப் பிறகு, தொழுகை நடத்துபவரின் போதனைகளுக்காகக் காத்திராமல், தொழுகை முடிந்ததும் மக்கள் கலைந்து சென்றுவிடுபவர்களாக இருந்ததைக் கண்டதால் நடைமுறையை விளங்கிக் கொண்டு தொழுகைக்கு முன்பே உரையை நிகழ்த்தும் பழக்கத்தை இமாம்கள் ஏற்படுத்திக் கொண்டனர்.
ஈகைப் பெருநாளை நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதைப்போல் நம்முடைய சமுதாய மக்களும் மகிழ்ச்சியாகக் கொண்டாட நமது கடமையான ஸக்காத் என்னும் தர்மத்தை முழுமையாக, சரியாகச் செய்வோம். நாம் செய்யும் சிறிய தர்மத்தால் ஒரு சிலராவது பயன்பெறுவார்கள்.
சதக்கா என்றால் தான தர்மம். அல்லாஹ்வின் பெயரால் வழங்கப்படும் இந்த தான தர்மங்கள் நெருப்பை நீர் அணைப்பதுபோல் நம் பாவங்களை அழித்துவிடும் வல்லமை பெற்றது என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பகன்றுள்ளார்கள்.
மேலும், சதக்கா என்ற அழகிய கடனை அல்லாஹ்வின் பெயரால் ஏழைகளுக்கு அளிப்பவர்கள், அக்கடனை பன்மடங்கு அபிவிருத்தியுடன் இறைவனால் அவர்களுக்கு திருப்பி வழங்கப்படும். சதக்கா அளிக்கும் கொடையாளர்களின் நற்செயல்கள் அவர்களுக்குரிய சிறப்பையும், நற்பேற்றினையும் பெற்றுத்தரும் என திருமறையும் குறிப்பிடுகின்றது.
ஒருவர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ‘இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?’ என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு ‘எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
இதனை மனதில் நிறுத்திக் கொண்டு பிறருக்கு நன்மைகளைச் செய்து நம் நாட்டிலும் பிற நாடுகளிலும் சமாதானம் நிலவ சகல மக்களும் சகோதர பாசத்துடன் வாழ எல்லாம் வல்லோனைப் பிரார்த்திப்போம்.
இன்று ‘ஈதுல் பித்ர்’ எனப்படும் ஈகை திருநாளை கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்!
நன்றி: மாலைமலர்