Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

”லைலத்துல் கத்ர்” இரவும் இருபத்தி ஏழும்!

Posted on June 21, 2017 by admin

”லைலத்துல் கத்ர்” இரவும் இருபத்தி ஏழும்!

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியம் மிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின்படி (நடைபெற வேண்டிய) சகலகாரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்), அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.” (அல் குர் ஆன் 97: 1 -5)

என லைலத்துல் கத்ர் இரவைப்பற்றி அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் குறிப்பிடுகிறான். இந்த லைலத்துல் கத்ர் இரவு எப்போது, அதில் நம்முடைய வணக்க வழிபாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை குர்ஆன் – ஹதீஸ் ஒளியில் ஆய்வு செய்வோம்.லைலத்துல் கத்ர் இரவு ரமலான் மாதத்தின் 27ஆம் இரவில்தான் என இஸ்லாத்தில் பெரும்பான்மையான மக்கள் விளங்கி வைத்துள்ளனர். அவர்கள் அவ்வாறு விளங்கிக் கொண்டதற்கு காரணத்தையும் கூறுகின்றனர்.

லைலத்துல் கத்ர் இரவு பற்றி அல்லாஹ் இறக்கிய மேற்படி அத்தியாயத்தில் லைலத்துல் கத்ர் என்ற வார்த்தை மூன்று முறை வருகிறது. மேற்படி மூன்றை ஒன்பதைக் கொண்டு பெருக்கினால் இருபத்திஏழு. எனவே இருபத்தி ஏழாம் இரவில்தான் லைலத்துல் கத்ர் என்று, குர்ஆனிலும், ஹதீஸிலும் இல்லாத ஒரு ”அரிய?..!” விளக்கத்தைத் தருகின்றனர்.

மேற்படி விளக்கத்தைத் தருவதோடு மட்டுமில்லாமல் இஸ்லாமிய மார்க்கத்தை ஓர் சடங்கு மார்க்கமாக கருதிய பலர், ரமளான் மாதத்தின் ஒரு சில குறிப்பிட்ட நாட்களில் (அதாவது வெள்ளி, திங்கள், மற்றும் 27ஆம் இரவு ஆகிய நாட்களில்) பள்ளிகளில் நிரம்பி வழிவர். குறிப்பாக இருபத்தி ஏழாம் இரவில் மாத்திரம் அதுவரை கண்டிராத கூட்டம் பள்ளியில் அலைமோதும். அன்றைய இரவில் பள்ளிகள் அலங்கரிக்கப்பட்டும், பண்டங்கள், பழங்கள் குவியவும் காரணமாக அமையும். அந்த நிலை சரியானதுதானா என்பதை இந்த கட்டுரையில் ஆய்வு செய்வோம்.

”தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம். நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம். அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது.” (அத்தியாயம் 44 ஸுரத்துத் துகான் – 2முதல் 4வரையிலான வசனங்கள்) என அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் கூறுகிறான்.

அருள்மறை குர்ஆன் யாருக்கு அருளப்பட்டதோ, அந்த அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் லைலத்துல் கத்ர் பற்றி என்ன விளக்கமளிக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

சில நபித்தோழர்கள் லைலத்துல் கத்ரு, கடைசி ஏழு இரவுகளில் இருப்பதாக கனவு கண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”உங்கள் கனவைப்போல் நானும் கண்டேன். எவர் (லைலத்துல் கத்ர்) இரவை அடைய முயற்சிக்கின்றாரோ, அவர் கடைசிப் பத்தில் தேடட்டும்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதார நூல்: புஹாரி)

”லைலத்துல் கத்ரை அறிவிப்பதற்காக நான் வெளியில் வந்தேன் அப்போது இரண்டு மனிதர்கள் வழக்காடிக் கொண்டிருந்தார்கள். அவ்விருவருடனே ஷைத்தான் இருந்தான். எனவே நான் அதை மறந்துவிட்டேன். எனவே அதை (லைலத்துல் கத்ரை) கடைசி பத்து நாட்களில் தேடுங்கள்” (அறிவிப்பவர்: அபூஸயீத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், அஹ்மத்)

மேற்குறிப்பிட்ட ஹதீஸ்கள் யாவும் பொதுவாக லைலத்துல் கத்ர் பிந்திய பத்து இரவுகளில் இருப்பதாகத் தெரிவிக்கின்றன.

”லைலத்துல் கத்ரு இரவை ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையான இரவுகளில் நீங்கள் தேடுங்கள்” – (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஆதார நூல்: புஹாரி)

மேற்படி ஹதீஸிலிருந்து லைலத்துல் கத்ர் இரவு பிந்திய பத்துக்களில், குறிப்பாக ஒற்றைப்படையான ஐந்து இரவுகளில் இருக்கிறது என்பதை அறியமுடிகிறது. இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவாக அறிவித்த செய்திகள் இருக்க, மூன்றை ஒன்பதால் பெருக்கினால் வரும் விடை 27. அந்த 27ஆம் இரவில்தான் லைலத்துல் கத்ர் இரவு என்ற ”அதிமேதாவித்தனமான” விளக்கத்தை இவர்களுக்கு அளித்தது யார்?.

இறைத்தூதருக்கும் மேலாக லைலத்துல் கத்ர் பற்றிய விளக்கம் அளிக்க வேறு எவருக்கும் அருகதையேதும் உண்டா? எவரோ அளித்த ஆதாரமற்ற விளக்கத்தை வைத்துக் கொண்டு, அந்த 27ஆம் இரவில் மாத்திரம் தொழுதுவிட்டு மற்ற ஒன்பது இரவுகளையும் வீணே விட்டுவிடுவது சரிதானா? இல்லை முறைதானா?

அவ்வாறு தொழும் அந்த 27ஆம் இரவில்கூட பழங்கள், பதார்த்தங்கள், நேர்ச்சை பொட்டலங்கள் என்று அமர்க்களப்படுத்தப்படுவதெல்லாம் இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட செயலா? ”லைலத்துல் கதர் இரவின்” சிறப்புக்களைப் பற்றி அறிந்தால், மார்க்கத்தில் இல்லாத செயல்களைச் செய்ய மனம் இடம் கொடுக்குமா?

லைலத்துல் கத்ர் இரவின் சிறப்புக்கள்

லைலத்துல் கத்ர் இரவின் சிறப்புக்கள் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்த ஹதீஸ் ஒன்றை காண்போம்:

”யார் லைலத்துல் கத்ரு இரவில் நம்பிக்கையோடும் (அல்லாஹ்விடம் கூலியை) எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்” (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதார நூல்: புஹாரி, முஸ்லிம்)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன வணக்கத்தை நாம் எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதற்கு அவர்கள் காட்டித் தந்த வழிமுறையிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

லைலத்துல் கத்ரும் பிரத்யேகத் தொழுகையும்

லைலத்துல் கத்ர் இரவுக்கென்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்தவொரு பிரத்யேகத் தொழுகையையும் காட்டித் தரவில்லை. அவ்வாறு பிரத்யேகத் தொழுகை எதுவும் இல்லை என்பதற்கு கீழக்காணும் ஹதீஸே போதிய ஆதாரமாகும்.

”ரமளானில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகை எவ்வாறு இருந்தது என்று நான் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கேட்டபோது, ரமளானிலும், ரமளான் அல்லாத மாதங்களிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதினொரு ரக்அத் (8103) மேல் தொழுததில்லை என்று விடையளித்தார்கள்.” (அறிவிப்பவர்: அபூஸலமா ரளியல்லாஹு அன்ஹா, ஆதார நூல்: புஹாரி, முஸ்லிம், திர்மிதி).

மேற்படி ஹதீஸில் கூறப்பட்ட பதினொரு ரக்அத் இரவுத் தொழுகையைத்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”தொழுகையின் நிலை, குர்ஆனை ஓதுதல், ருகூவு, ஸுஜுது போன்றவற்றை தகுந்த முறையில் நீட்டி, ஸஹர் நேரம் தப்பிவிடுமோ என்று கருதும் அளவுக்குத் தொழுதிருக்கின்றார்கள். இவ்வாறானத் தொழுகையைத்தான் நாமும் தொழ வேண்டும். அதை விட்டுவிட்டு, இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லாத தஸ்பீஹ் தொழுகை, குல்குவல்லாஹு ஸுராவை நூ று தடவை ஓதி தொழும் தொழுகை, என நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத் தராத வணக்கவழிபாடுகளையெல்லாம் இஸ்லாமியர்களில் பெரும்பாலோர் செய்து வருவது எதன் அடிப்படையில் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

லைலத்துல் கத்ர் இரவில் சொல்ல வேண்டிய பிரார்த்தனை

”அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எந்த இரவு என்று நான் அறிய நேர்ந்தால், அந்த இரவில் நான் என்ன சொல்ல வேண்டும் என்று கேட்டதற்கு,

”அல்லாஹும்ம இன்னக்க அப்வுன் துஹிப்புல் அஃபஃவ ஃபஃபு அன்னி” (யா! அல்லாஹ்! நீ மன்னிக்கக் கூடியவன். மன்னிப்பை விரும்புபவன். என்னை நீ மன்னித்து விடு!) என்று கற்றுக் கொடுத்தார்கள்.” (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதாரம்: அஹ்மத், இப்னுமாஜா, திர்மிதி)

பள்ளியில் தங்கி இருத்தல் (இஃதிகாஃப்)

அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமளான் மாதத்தின் கடைசி பத்து நாட்களிலும் பள்ளியில் தங்கி இருந்து, மற்ற நாட்களைவிட அதிகமான அளவு வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதற்கு ஆதாரமாக கீழ்கண்ட ஹதீஸ்கள் ஆதாரமாக அமைந்துள்ளன.

”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமளானின் கடைசி பத்து நாட்களில் அவர்கள் மரணிக்கும்வரை இஃதிகாஃப் (பள்ளியில் தங்கி) இருந்தார்கள்.” (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஆதார நூல்கள்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத்)

”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்ற எந்த நாட்களிலும் வணக்கத்தில் ஈடுபடாத அளவுக்கு ரமளானின் பிந்திய பத்துக்களில் வணக்கத்தில் ஈடுபடுவார்கள்” (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஆதார நூல்: முஸ்லிம்)

”அல்லாஹ்வின் திருத்தூதர், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ரமளானின்) பிந்திய பத்து இரவுகள் வந்ததும் வணக்கத்தில் ஈடுபட முழுமையாக ஆயத்தமாகி விடுவார்கள். இரவை வணக்கத்தில் கழிப்பார்கள். தனது குடும்பத்தையும் விழிக்கச் செய்வார்கள்” (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஆதார நூல்கள்: புஹாரி, முஸ்லிம்)

மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமளானின் பிந்திய பத்து இரவுகளில் முன்னெப்போதையும்விட அதிகமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள் என்பது தெளிவாகிறது. அதுவும் (இஃதிகாஃப்) பள்ளியிலேயே தங்கி இறை நினைவில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதையும் அறிய முடிகிறது.நபி

ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த வழிமுறை இவ்வாறு இருக்க, நம் மக்களில் பலர் அடையாளம் தெரியாத நபர் யாரோ சொன்ன ”அதிமேதாவித்தனமான” விளக்கத்தை வைத்துக்கொண்டு, ரமளானின் 27ஆம் இரவில் மட்டும் ஏனோதானோ என்று பள்ளிக்கு வருவதும், மற்றுமுள்ள நாட்களிலும் இறை மன்னிப்பைத் தேடுவதை விட்டுவிட்டு, வீட்டில் குறட்டை விடுவதும் சரியானதா? அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த இஃதிகாஃப் (பள்ளியில் இறை நினைவுடன் தங்கியிருத்தல்) இன்று நம் மக்களின் நடைமுறையில் இல்லை. இதற்கு காரணம் ஏனெனில் இஃதிகாஃப் இருக்கும்போது அவசியமான காரியங்களுக்குக் கூட பள்ளியைவிட்டு வெளியேறக்கூடாது என்று காட்டப்படுவதும், அண்ணல் நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் இறைநினைவுடன் தங்கியிருந்த முறை மக்களுக்கு சரியாக எடுத்துக் காட்டப்படாததுமே ஆகும்.

அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைநினைவுடன் பள்ளியில் தங்கியிருந்த முறையை பார்ப்போம்.

”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஃதிகாஃப் இருக்க நாடினால் ஸுப்ஹுதொழுதுவிட்டு இஃதிகாஃப் இருக்கும் இடம் சென்றுவிடுவார்கள்” (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஆதார நூல்கள்: திர்மிதி, இப்னுமாஜா, அஹ்மத்)

”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஈதுல் பித்ரு) பெருநாளன்று (காலை) உணவு உண்டு, பெருநாள் தொழுகை முடிக்காத வரை (இஃதிகாஃபை) விட்டு வெளியே வரமாட்டார்கள்”. (அறிவிப்பவர்: புரைதா (ரலி) ஆதார நூல்கள்: திர்மிதி, ஹாகிம், அஹ்மத்)

மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது (மிக முக்கியமான அவசியத் தேவைகளைத் தவிர) பள்ளியைவிட்டு வெளிவரமாட்டார்கள் என்பது தெளிவாகிறது.

பள்ளியில் தங்கி இருக்கும்போது (இஃதிகாஃப்) அனுமதிக்கப்பட்டவை

”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது மனிதனின் அவசியத் தேவை (மலஜலம் கழித்தல்)க்காகத் தவிர வீட்டிற்குச் செல்லமாட்டார்கள்” (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஆதார நூல்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத்)

”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கும்போது நான் வீட்டில் மாதவிடாய்க்காரியாக இருந்து கொண்டே அவர்களது தலையை வாரிவிடுவேன். அவர்கள் தமது தலையை (மட்டும்) வீட்டுக்குள் நீட்டுவார்கள்.” (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஆதார நூல்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத்)

”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். இரவில் அவர்களைச் சந்திக்க நான் சென்றேன். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். பின்னர் நான் புறப்படுவதற்காக எழுந்தேன். என்னை வீட்டில் விடுவதற்கு அவர்களும் எழுந்தார்கள்.” (அறிவிப்பவர்: ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா, ஆதார நூல்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத்)

மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து இஃதிகாஃப் இருப்பவர் மிக முக்கியமான அவசியத் தேவைகளுக்காக மாத்திரம் வீடுகளுக்குச் செல்வது அனுமதிக்கப்பட்டவையே என்பதை அறியலாம்.

பள்ளியில் தங்கி இருக்கும்போது (இஃதிகாஃப்) அனுமதிக்கப்படாதவை.

அருள்மறை குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்:

”நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்.” (அத்தியாயம் 2 ஸுரத்துல் பகரா, 187வது வசனத்தின் ஒரு பகுதி)

”இஃதிகாஃப் இருப்பவர் நோயாளியை விசாரிக்காமல் இருப்பதும், ஜனாஸாவில் பங்கெடுக்காமல் இருப்பதும், மனைவியை தீண்டாமல் இருப்பதும், அணைக்காமல் இருப்பதும், அவசியத் தேவையை முன்னிட்டேத் தவிர வெளியில் செல்லாமல் இருப்பதும் நபி வழியாகும்” (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஆதார நூல்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத்)

மேற்குறிப்பிட்ட இறைமறை வசனத்திலிருந்தும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நடைமுறையில் இருந்தும் பள்ளியில் தங்கி இருக்கும்போது அனுமதிக்கப்படாதவை எவை என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

லைலத்துல் கத்ர் இரவும், முஸ்லிம்களில் பெரும்பாலோரின் நடைமுறையும்

தஸ்பீஹ் தொழுகை, குல்குவல்லாஹு ஸுராவை நூறு தடவை ஓதி தொழும் தொழுகை, ராத்திபுகள், குர்ஆன் ஓதி கத்தம் செய்தல், குர்ஆனில் வரும் ஸஜ்தா வசனங்கள் அனைத்தையும் அந்தந்த அத்தியாயத்தோடு ஓதி ஸஜ்தா செய்யாமல் மொத்தமாக 27ஆம் இரவில் ஓதி ஸஜ்தா செய்வது போன்றவை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்குக் கற்றுத்தராத, நாமே உருவாக்கிக் கொண்ட நூதனங்கள் (பித்அத்) ஆகும். இதுபோன்ற நூதனங்களை தவிர்ப்போம்.

லைலத்துல் கத்ர் இரவிலும், ரமளானின் கடைசி பத்திலும், அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அனுமதித்தவைகளை நடைமுறைப்படுத்துவோம். அனுமதிக்காதவைகளை தவிர்ந்து நடப்போம். அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கற்றுத் தந்த வழியில் நம் வணக்க வழிபாடுகளை அமைத்துக்கொள்வோம். அதற்குரிய அறிவையும், ஆற்றலையும், பக்குவத்தையும் தர வல்ல அல்லாஹ்வையே பிரார்த்திப்போம்.

source: islamthalam.wordpress

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

10 + = 17

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb