நோன்பு என்பது கேடயம்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:
حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ
“யார் பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும் குடிப்பையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை” (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1903).
சிலர் நோன்பு வைத்த நிலையிலும் தீமைகளைக் கைவிடாமல், பொய் பேசுவது, கெட்ட வார்த்தைகள் பேசுவது, சினிமா வீடியோக்கள் சீரியல்கள், ஆபாச இணையம் என்று பலவிதமான மார்க்க முரணான கேளிக்கைகளில் ஈடுபடுவது ஆகிய செயல்களால் தமது நோன்பையும் நன்மைகளையும் தமது மறுமை வாழ்க்கையையும் பாழாக்குபவர்களாக வாழ்வதையும் பார்க்கிறோம். அல்லாஹ் அவர்களுக்கும் நேர்வழி காட்டுவானாக என்று பிரார்த்திப்பதுடன் அவற்றால் ஏற்படும் தீமைகளை அவர்களுக்கு நல்ல முறையில் உணர்த்தி அவர்களையும் நேர்வழிப்படுத்த நாம் முயல வேண்டும்.
சிலர் இந்த மாதத்திலும் நோன்பு மட்டும் வைத்துக் கொண்டு தொழாமல் பாராமுகமாக இருப்பதும், இன்னும் சிலர் தூங்குவதில் அதிக நேரத்தைக் கழிப்பதும் உண்டு. இதைவிடவும் வேதனை, இன்னும் சிலர் அலட்சியமாக நோன்பும் வைக்காமல் தொழுகைக்கும் செல்லாமல் வெறுமனே ஈத் பெருநாள் அன்று மட்டும் பள்ளிக்கு வருபவர்களும் நம் சமுதாயத்தில் உண்டு என்பதும் கசப்பான உண்மையாகும்.
அல்லாஹ் அவர்களுக்கும் நேர்வழி காட்டுவானாக!
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ وَهُوَ الْقَطَوَانِيُّ عَنْ سُلَيْمَانَ بْنِ بِلَالٍ حَدَّثَنِي أَبُو حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ فِي الْجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ الرَّيَّانُ يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ يَوْمَ الْقِيَامَةِ لَا يَدْخُلُ مَعَهُمْ أَحَدٌ غَيْرُهُمْ يُقَالُ أَيْنَ الصَّائِمُونَ فَيَدْخُلُونَ مِنْهُ فَإِذَا دَخَلَ آخِرُهُمْ أُغْلِقَ فَلَمْ يَدْخُلْ مِنْهُ أَحَدٌ
சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்று கூறப்படும் ஒருவாசல் இருக்கிறது.
மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள்.
அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்.
“நோன்பாளிகள் எங்கே?” என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள்.
அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்.
அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும்.
அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்.
(அறிவிப்பாளர்: சஹ்ல் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி – 1896).
மேலும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الصِّيَامُ جُنَّةٌ فَلَا يَرْفُثْ وَلَا يَجْهَلْ وَإِنْ امْرُؤٌ قَاتَلَهُ أَوْ شَاتَمَهُ فَلْيَقُلْ إِنِّي صَائِمٌ مَرَّتَيْنِ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ تَعَالَى مِنْ رِيحِ الْمِسْكِ يَتْرُكُ طَعَامَهُ وَشَرَابَهُ وَشَهْوَتَهُ مِنْ أَجْلِي الصِّيَامُ لِي وَأَنَا أَجْزِي بِهِ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا
நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும். எனவே நோன்பாளி கெட்ட பெச்சுகளைப் பேசவேண்டாம்; அறிவீனமான செயல்களில் ஈடுபட வேண்டாம். யாரேனும் ஒரு நோன்பாளியைத் தீயசொல்லால் திட்டினாலோ வீண் வம்புக்கு வந்தாலோ “நான் நோன்பாளி” என்று அவர் இருமுறை கூறிவிடவும். என் உயிரைக் கைவசம் வைத்திருப்பவன் மீதாணை! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் மணம், அல்லாஹ்வின் கணிப்பில் கஸ்தூரியின் நறுமணத்தைவிடச் சிறந்ததாகும். அல்லாஹ் கூறினான்: எனக்காக நோன்பாளி தம் (ஹலாலான) உணவையும் குடிப்பையும் உடலிச்சையையும் துறந்து விடுகிறார். (அவரது) நோன்பு எனக்கு மட்டுமே உரியது.அதற்கு நானே கூலி வழங்குவேன். (நோன்பின்போது செய்யப்படும்) ஒரு நன்மை என்பது பத்து மடங்குகள் பெருகக் கூடியதாகும். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1894) .
பாவங்களிலிருந்து காக்க வேண்டிய நோன்பு, பயனின்றிக் கழிவதால் யாருக்கு இழப்பு என்பதை நாம் சிந்திக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.
அல்லாஹ்வின் தூதர் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பை கேடயத்துக்கு உவமையாக்கிக் குறிப்பிட்டுள்ளார்கள்.
கேடயம் உறுதியாக இருந்தால் அதைத் தாங்கிய ஒருவர் தன்னைத் தாக்கும் எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள இயலுவதைப்போல், நோன்பு எனும் இக்கேடயம் உறுதியாக இருந்து இறையச்சத்தை வழங்கினால் இந்த வாழ்க்கையில் சந்திக்கும் பல விதமான தீய காரியங்களின் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள இயலும் என்று இதன் மூலம் உணரலாம்.
மேலும் படைவீரர்கள் எவ்வாறு அன்றாடம் பயிற்சிகளும் சிறப்புப் பயிற்சிகளும் பெற்றுக் கொண்டே எப்போது ஏற்படும் என்று அறியாத, அல்லது சில நேரங்களில் ஒரு போரும் நடைபெறாமல் ஓய்வு பெறும் நிலையிலும், போருக்குத் தயார் நிலையில் இருக்கப் பயிற்சி தொடர்ந்து எடுக்கின்றனரோ அதே போல் நாமும் இந்த ரமளான் மாத நோன்பு மற்றும் திங்கள், வியாழன், மாதம் மூன்று நோன்புகள் போன்ற ஸுன்னத்தான நோன்புகள் மற்றும் உபரியான, நஃபிலான நோன்புகள், மேலும் இறையச்சத்தை எற்படுத்தும் செயல்கள் மூலம் நமது ஈமானையும் இறையச்சத்தையும் உறுதியாக்கி, சமுதாயத்தில் மலிந்து கிடக்கும் வழிகேடுகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முயல்வோமாக!
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக! ஆமீன்!
source: http://www.satyamargam.com/articles/thoughts/126-ramadan-thoughts/1302-1302.html