ரமளானை வரவேற்போம்
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் குடும்பத்தினர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!
நம்மை நோக்கி வந்திருக்கும் இம்மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாதமாகும். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்கவேண்டிய அனைத்து ஒழுங்கு முறைகளையும் அல் குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் தெளிவு படுத்தியுள்ளது.
ரமழான் மாதத்தில் முஸ்லிமான, வயது வந்த, புத்தி சுவாதினமுள்ள, ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும்.
இறைவிசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது எப்படி நோன்பு விதியாக்கப்பட்டதோ அதே போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது நீங்கள் அதன் மூலம் இறையச்சமுடையவர்கள் ஆகலாம்” (அல்பகரா 2:183).
ரமழான் மாதத்திற்குரிய பிறையை பார்ப்பதன் மூலமோ பிறை தென்படாத பொழுது ஷஃபானை முப்பதாக கணக்கிடுவதன் மூலமோ நோன்பு நோற்பது கடமையாகும். ”பிறைப் பார்த்து நோன்பு வையுங்கள், மேக மூட்டம் போன்ற காரணங்களால் பிறை தென்பட வில்லையானால் ஷஃபானை முப்பதாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி)
ரமழான் மாதத்தின் சிறப்பு:
ரமழான் மாதம் எத்தகையது என்றால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய, சத்தியத்தை அசத்தியத்தை பிரித்துக் காட்டும் அல் குர்ஆன் அருளப் பெற்றது, உங்களில் எவர் அம்மாதத்தை அடைவாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்” (அல்பகரா 2: 185).
ரமழானின் ஒவ்வொரு இரவிலும் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்தித்து அல்குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள்” (புகாரி)..
இச்செய்திகள் அல்குர்ஆனுக்கும் ரமழானுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை தெளிவுபடுத்துகிறது. அல் குர்ஆனுடனான தொடர்பை குறைத்துக்கொண்ட அதிகமான முஸ்லிம்கள் இச் சந்தர்ப்பத்திலிருந்தாவது அல் குர்ஆனை படிப்பதன் மூலம், அதனை ஆராய்வதன் மூலம், அதன் வழி நடப்பதன் மூலம், வாழ்க்கையின் எல்லா சந்தர்ப்பங்களிலும் அதை தீர்வாக ஆக்கிக் கொள்வதன் மூலம் அதன் பக்கம் நெருக்கத்தை அதிகப்படித்துக் கொள்ளவேண்டும்.
இரண்டாவது சிறப்பு: ”ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின வாசல்கள் திறக்கப்படும், நரகத்தின் வாசல்கள் மூடப்படும், ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).
மூன்றாவது சிறப்பு: ”ரமழானுடைய ஒவ்வொரு இரவிலும் பகலிலும் நரகத்திற்குரியவர்கள் விடுதலைச் செய்யப்படுகின்றனர், இன்னும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு பிரார்த்தனை இருக்கிறது” என நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).
நான்காவது சிறப்பு: ”ஐந்து வேளைத் தொழுகை, ஒரு ஜும்ஆவிலிருந்து மற்றொரு ஜும்ஆ, ஒரு ரமழானிலிருந்து மற்றொரு ரமழான் அவைகளுக்கு மத்தியில் நிகழ்ந்த பாவங்களுக்கு பரிகாரமாகும். பெரும் பாவங்களைத் தவிர” என நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
ஐந்தாவது சிறப்பு: ரமழான் மாதத்தில் லைலதுல் கத்ர் என்ற ஒரு இரவு இருக்கிறது, அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும்.
இம்மாதத்தில் நோன்பு நோற்பதன் சிறப்பு:
1-நோன்பு பரிந்து பேசும்: ”நோன்பும், அல் குர்ஆனும், மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும்: நோன்பு கூறும், ”நான் இவ்வடியானை உணவை விட்டும், இச்சைகளை விட்டும் தடுத்திருந்தேன் இவன் விடயத்தில் பரிந்துரைப்பாயாக!” அல் குர்ஆன் கூறும் ”நான் இவனை இரவில் தூங்கவிடாமல் தடுத்திருந்தேன் எனவே இவனுக்கு பரிந்துரை செய்வாயாக” என நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).
2-நோன்பை போன்ற ஓர் அமல் இல்லை: ”நான் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் பெற்றுத் தரும் ஒரு காரியத்தை கட்டளையிடுவீராக எனக் கேட்டேன். அதற்கு அன்னார் நான் உனக்கு நோன்பை உபதேசிக்கிறேன், அதை போன்று ஒன்று இல்லை” என கூறினார்கள், என அபூ உமாமா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நஸஈ).
3-கனக்கின்றி கூலி வழங்கப்படும்: ”ஆதமுடைய மகனின் ஒவ்வொரு அமலுக்கும் (செயலுக்கும்) பத்திலிருந்து எழு நூறு மடங்கு வரை கூலி பெருக்கி கொடுக்கப்படுகிறது நோன்பைத் தவிர. நிச்சயமாக அது எனக்குரியதாகும், நானே அதற்கு கூலி வழங்குவேன்” என அல்லாஹ் கூறுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).
4-நோன்பின் கூலி சுவர்க்கம்: ”நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு வாசல் இருக்கிறது, அதற்கு ரய்யான் என்று சொல்லப்படும். அவ்வாசல் வழியாக நோன்பாளிகள் மாத்திரம் நுழைவார்கள், அவர்களல்லாது வேறு யாரும் அதனால் நுழைய மாட்டார்கள், அவர்கள் நுழைந்தவுடன் அவ்வாசல் மூடப்பட்டு விடும்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).
5-நரகத்தை விட்டு பாதுகாப்பு: ”எவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்பாரோ அல்லாஹ் அவரது முகத்தை நரகத்தை விட்டு எழுபது ஆண்டுகளுடைய தொலைவுக்கு தூரப்படுத்தப்படுவான்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).
6-நரகத்தை விட்டு தடுக்கும் கேடயம்: ”நோன்பு ஒரு அடியானை நரகத்தை விட்டு தடுக்கும் கேடயமாகும்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அத்தபரானி அல்கபீர்).
7-முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்: ”எவர் ரமழான் மாதத்தில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்ப்பார்த்தவராகவும் நோன்பு நோற்கிறாரோ அவரது முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).
8-மனோ இச்சைகளை விட்டுத் தடுக்கும்: ”வாலிபர்களே! உங்களில் திருமணம் முடிப்பதற்கு சக்தியுடையவர்கள் திருமணம் செய்து கொள்ளட்டும். நிச்சயமாக அது பார்வையை தாழ்த்தக்கூடியதாகவும், மர்மஸ்தானத்தை தவறான வழியின் பக்கம் செல்வதை விட்டுத் தடுக்கக்கூடியதாகவும் இருக்கும். எவர் திருமணம் முடிக்க சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு இருக்கட்டும், நிச்சயமாக அது அவரை (தவறானவைகளை) விட்டு பாதுகாக்கும்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).
9-நோன்பாளிக்கு ஈருலகிலும் மகிழ்ச்சி: ”’நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள் உள்ளன: ஒன்று அவன் நோன்பு திறக்கும் நேரத்தில் ஏற்படக்கூடியது, மற்றது (நாளை மறுமையில்) அவனது ரப்பை சந்திக்கும் பொழுது ஏற்படக்கூடியது” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).
10-கஸ்தூரியை விட சிறந்த வாடை: ”எனது உயிர் எவன் கை வசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரக்கூடிய வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட சிறந்ததாகும்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).
மேற்கூறப்பட்ட ஹதீஸை சிலர் தவறாக விளங்கியதன் காரணத்தால், பஜ்ருக்கு அதான் சொன்னது முதல் நோன்பை திறக்கும் வரை பல் துலக்காமல் இருக்கின்றனர். இதனால் சிலர் முன்னால் இருந்து பேசுவதோ அவர்களுக்கு பக்கத்திலிருந்து தொழுவதோ பலருக்கு கஷ்டமாக இருக்கின்றது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பு வைத்த நிலையில் கணக்கின்றி பல் துலக்குவார்கள் என்ற ஆதாரப்பூர்வமான செய்தி இவர்களுக்கு தெரியாததே இதற்குக் காரணம்.
ரமழான் நோன்புடன் தொடர்புடைய சில சட்ட திட்டங்கள்:
நிய்யத்தின் அவசியம்: ‘எவர் பஜ்ருக்கு முன்னர் நோன்பிற்குரிய நிய்யத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நஸாஈ).பெரும்பாலான முஸ்லிம்கள் நிய்யத்தை தவறாக விளங்கி வைத்துள்ளனர், ”நவய்து ஸவ்ம அதன் பர்ல ரமழானி ஹாதிஹிஸ் ஸனதி லில்லாஹி தஆலா” ரமழான் மாதத்தின் பர்லான நோன்பை நாளை பிடிக்க நிய்யத்து வைக்கிறேன் என்று பரவலாகச் சொல்லி வருகின்றனர். இதற்கு இஸ்லாத்தில் எந்த ஆதாரமோ அடிப்படையோ இல்லை, நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமோ, ஸஹாபாக்களிடமோ இதற்கு எந்த முன்மாதிரியுமில்லை. நிய்யத்தை வாயால் மொழிவது நபி வழிக்கு முரணான பித்அத் வழிகேடாகும். ”நமது விடயத்தில் எவர்கள் புதிய விடயங்களை ஏற்படுத்திச் செய்வார்களோ அது மறுக்கப்படும்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).
நிய்யத்தை ஒருவர் மனதால் ஏற்படுத்திக் கொள்ளவேண்டுமே தவிர வாயால் மொழிவது மார்க்கத்துக்கு முரணான ஒரு செயலாகும்.
ஸஹர் உணவு உட்கொள்வதின் சிறப்பு: ”நீங்கள் ஸஹர் உணவு உட்கொள்ளுங்கள் நிச்சயமாக அதில் பரகத் இருக்கிறது” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).நமது நோன்புக்கும் வேதக்கா
hர்களுடைய நோன்புக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு ஸஹர் உணவு உட்கொள்வதாகும்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத்). ஸஹர் உணவு பரக்கத் நிறைந்ததாகும், அதை நீங்கள் விட்டுவிட வேண்டாம். ஒரு மிடரு தண்ணீரையாவது குடிப்பதை கொண்டு ஸஹர் செ ய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ஸஹர் செய்பவர்கள் மீது அருள்புரிகிறான், வானவர்கள் அல்லாஹ்விடத்தில் அவர்களுக்கு அருள்வேண்டி பிரார்த்திக்கின்றனர்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).
முஸ்லிம்கள் பலர் இந்தப் பாக்கியங்களை தவற விடுவது கவலையான விஷயமாகும்.
ஸஹர் செய்வதை பிற்படுத்துவதும், நோன்பு திறப்பதை அவசரப்படுத்துவதும்:
எனது சமுதாயத்தினர் ஸஹர் செய்வதை பிற்படுத்தும் காலம் வரையும், நோன்பு திறப்பதை அவசரப்படுத்தும் காலம் வரை நன்மையில் இருக்கின்றனர்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).
நிச்சயமாக எனது அடியார்களில் எனது நேசத்திற்குரியவர்கள் நோன்பு திறப்பதை அவசரப்படுத்துபவர்களாவர்” என அல்லாஹ் கூறுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (திர்மிதி).
நோன்பு திறந்தவுடன் ஒருவர் ஓத வேண்டிய பிரார்த்தனை:
ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ
தஹபல் லமஉ வப்தல்லதில் உரூகு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்”
பொருள்: நரம்புகள் நனைந்து விட்டன, தாகம் தீர்ந்து விட்டது, கூலி அல்லாஹ்வின் நாட்டத்தின் படி உறுதியாகி விட்டது” இந்த பிரார்த்தனை உறுதியான அறிவிப்பாளர் தொடருடன் பதிவாகி இருக்கிறது. அபூதாவுதில் பதிவாகி இருக்கும் இவ் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது, வேறு சில பிரபலமான பிரார்த்தனைகள் ஓதப்பட்டு வந்தாலும் அவைகள் பலவீனமான ஹதீஸ்களாகும்.
ஒருவரை நோன்பு திறக்கவைப்பதன் சிறப்பு:
எவர் ஒருவரை நோன்பு திறக்க வைப்பாரோ அவருக்கு அந்த நோன்பாளிக்குக் கிடைக்கும் கூலியைப் போன்றே வழங்கப்படும். அவரது கூலியில் எந்த ஒன்றும் குறைக்கப்பட மாட்டாது” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், திர்மிதி).
இரவுக் காலங்களில் நின்று வணங்குவது: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹாஅவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுடைய ரமழான் கால (இரவுத்) தொழுகை எவ்வாறு இருந்தது எனக் கேட்கப்பட்டது, அதற்கு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹாஅவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுடைய இரவுத் தொழுகை ரமழானிலும் ரமழான் அல்லாத காலங்களிலும் பதினொன்றாகவே இருந்தது” என கூறினார்கள். (புகாரி).எவர் ரமழான் காலங்களில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்ப்பார்த்தவனாகவும் நின்று வணங்குவாரோ அவரது முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்
” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள். (திர்மிதி).
உம்ராச் செய்வது:
எவர் ரமழானில் உம்ராச் செய்வாரோ அவர் என்னுடன் ஹஜ்ஜை நிறைவேற்றியவர் போன்றாவார்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).
ஒரு நோன்பாளி செய்வதற்கு விரும்பத்தக்க விடயங்கள்:
அதிகமாக அல் குர்ஆனை ஓதுவது, அதை விளங்குவது, மார்க்க வகுப்புக்களில் கலந்து கொள்வது, பிரார்த்தனையில், திக்ர்களில் ஈடுபடுவது, நல்லவற்றையே பேசுவது, நன்மையை ஏவுவது தீமையைத் தடுப்பது, ஸதகாக்கள் கொடுப்பது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்ரமழான் காலங்களில் ஜிப்ரீல் (அலை)யை சந்திக்கும் போது வேகமாக வீசும் காற்றைவிட தர்மம் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்.” (புகாரி).
ஒரு நோன்பாளி செய்யக்கூடாதவை:
பொய், புறம் பேசுவது, கோள் சொல்வது, அநாகரீகமாக நடந்து கொள்வது, நேரத்தை வீணான காரியங்களில் செலவழிப்பது, பார்க்கக்கூடாதவைகளைப் பார்ப்பது, கேட்கக்கூடாதவைகளைக் கேட்பது. இவைகளை ஒரு முஸ்லிம் எல்லாக் காலங்களிலும் தவிர்ந்திருக்கவேண்டும்.
எவன் பொய் சொல்வதையும், அதன் படி நடப்பதையும், விட்டு விடவில்லையோ அவன் பசியோடும், தாகத்தோடும் இருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை, என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள். (புகாரி). எத்தனையோ நோன்பாளிகள் அவர்களது நோன்பின் மூலமாக அவர்கள் பெற்றுக் கொண்டது பசியையும், தாகத்தையும் தவிர வேறெதுவுமில்லை” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள் (அஹ்மத், இப்னுமாஜா).
நோன்பின் மூலம் அல்லாஹ் நம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கும் அந்த உயரிய பண்புகளை அடைய முயற்சிப்போமாக!
– அதிரை தமீம்