யதார்த்தங்களை ஏற்றுக் கொள்ளலும் எதிர்கொள்ளலும்
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
ஈமானின் ஆறாவது அம்சம் அல்லாஹ்வின் ஏற்பாட்டை (கத்ரை) விசுவாசிப்பதாகும்.
அல்லாஹ்வின் ஏற்பாட்டில் நல்லவைகளும் இருக்கின்றன கெட்டவைகளும் இருக்கின்றன என்பதை நாம் விசுவாசிக்கின்றோம். அந்த விசுவாசத்தினால் விளைகின்ற பயன்கள் ஏராளம்.
அல்லாஹ் தனது ஏற்பாட்டில் நல்லவைகளோடு கெட்டவைகளையும் இணைத்தே வைத்திருக்கின்றான். உதாரணமாக, முதல் மனிதனின் பிறப்போடு ஷைத்தானும் வந்து விட்டான். சுவர்க்கத்தோடு நரகமும் படைக்கப்பட்டு விட்டது. மனிதனின் உள்ளுணர்வில் நன்மையை வைத்தது போல் தீமையையும் அல்லாஹ் வைத்திருக்கிறான்.
ஆரோக்கியத்தோடு நோய்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சத்தியத்தோடு அசத்தியத்தின் இருப்பும் இடம் பிடித்திருக்கின்றது. இவ்வாறு நன்மை, தீமைகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
நன்மை, தீமைகளின் இத்தகைய இருப்பை இஸ்லாமியப் பாஷையில் கழா கத்ர் என்று நாம் கூறுகின்றோம். சாதாரண பாஷையில் யதார்த்தம் என்று கூறுவோம். இந்த யதார்த்தத்தைப் பேசும் போது சிலர்,
இப்படியொரு யதார்த்தம் எதற்கு? அனைத்தையும் நல்லவையாகவே அல்லாஹ் படைத்திருந்தால் பிரச்சினைகளே இருந்திருக்காதல்லவா? என்று கேட்கின்றனர்.
ஆம், அப்படியொரு உலகத்தையும் அல்லாஹ் படைத்துத்தான் இருக்கிறான். அங்கு இருப்பவை அனைத்துமே நல்லவைதாம், கெட்டவை அங்கு இல்லை. அதுதான் மலக்குகளின் உலகம். அந்த உலகத்தின் யதார்த்தமே வேறு. அனைத்துமே நல்லவையாக இருக்கும் வகையில் அந்த உலகை அல்லாஹ் திட்டமிட் டிருக்கிறான். அங்கு பசியில்லை, தாகமில்லை, தாபமில்லை, தூக்கமில்லை, பொருளில்லை, சம்பாத் தியமில்லை, இலாப நட்டமில்லை, சேமிப்பில்லை, அதனால் வட்டியில்லை, சூதில்லை என்று அந்த யாதார்த்தத்தை விவரித்துக் கொண்டே போகலாம்.
மலக்குகளின் உலகில் அரசியலில்லை, தேர்தலில்லை, போட்டியில்லை, கருத்து வேறுபாடுகள் இல்லை, இனவர்க்க பேதங்களில்லை.
அந்த உலகமே வேறுஸ மனிதனாகப் பிறந்தவர்கள் அந்த உலகின் யதார்த்தங்களைக் கற்பனை செய்வதில் அர்த்தமில்லை. எமக்குரிய யதார்த்தங்களை அறிந்து அவற்றை எதிர்கொள்வதே எமக்குப் பொருத்தமானது. எங்களது உலகம் நல்லவைகளும் கெட்டவைகளும் கொண்டதாகும். இங்கு வெள்ளைக்குப் பக்கத்தில் கறுப்பு இருக்கும் நீதியின் பக்கத்தில் அநீதி இருக்கும் நல்லவனுக் குப் பின்னால் கெட்டவன் இருப்பான் பகலோடு இரவும் தொடர்ந்து கொண்டே இருக்கும் நடுநிலையானவனும் இருப்பான் தீவிரவாதியும் இருப்பான் உண்மைகள் இருப்பது போல போலிகளும் இங்கு நடமாடவே செய்யும்.
இதுதான் யதார்த்தம். இந்த யதார்த்தத்திற்கு முன்னால் எமக்கு இரண்டு கடமைகள் இருக்கின்றன.
ஒன்று, நன்மை தீமைகளின் இருப்பை ஒரு யதார்த்தமாகக் கருதி அதனை அல்லாஹ்வின் ஏற்பாடு என விசுவாசிப்பதாகும். அதனைத்தான் ஈமானின் ஆறாவது அம்சம் என நாம் கற்றிருக்கின்றோம்.
இரண்டாவது, இத்தகைய யதார்த்தங்களை அல்லாஹ்வின் வழிகாட்டலுக்கமைய எதிர்கொள்வது எப்படி? என்பதை நாம் கற்று செயல்படுவதாகும். இந்த இரண்டாவது கடமையை சிறப்பாக செய்வதற்குத்தான் அல்லாஹ் நபிமார்களை அனுப்பி மனித சமூகத்திற்கு அவசியமான வழிகாட்டல்களை வழங்கினான்.
இந்த இரு கடமைகளையும் சுருக்கமாகக் கூறினால்,
யதார்த்தங்களை ஏற்றுக் கொள்ளல்
யதார்த்தங்களை எதிர்கொள்ளல் என்று குறிப்பிடலாம்.
அல்குர்ஆன் பல யதார்த்தங்களை சுட்டிக் காட்டியிருக்கிறது ஏற்றுக் கொண்டும் இருக்கிறது. அவற்றுக்கு சில உதாரணங்களைப் பார்த்துவிட்டு யதார்த்தங்களை எதிர்கொள்வது எப்படி? என்ற தலைப்புக்கு வருவோம்.
அல்குர்ஆன் கூறும் யதார்த்தங்கள் சில…
உங்களுக்கு உங்களது மார்க்கம் எனக்கு எனது மார்க்கம் என்ற குர்ஆனியக் கூற்று ஒரு யதார்த்தத்தை ஏற்றுக் கொள்கிறது. உலகில் பல மதங்கள் இருக்கின்றன என்ற யதார்த்தமே அது.
அல்லாஹ் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரு சமூகமாக ஆக்கியிருப்பான் என்ற குர்ஆனின் கூற்று மனித இனம் பல சமூகங்களாக, குழுமங்களாக தொடர்ந்துமிருக்கும் என்ற யதார்த்தத்தை உறுதிப்படுத்துகின்றது.
அவர்கள் தொடர்ந்தும் கருத்து வேறுபடுபவர்களாகவே இருப்பர் உமது இரட்சகன் அருள் புரிந்தவர்களைத் தவிரஸ அ(ந்)த (நோக்கத்தி)ற்காகவே அவர்களை அவன் படைத்தான் என்ற குர்ஆனின் வாக்கு மனிதர்களுக்கு மத்தியிலிருக்கின்ற வேறுபாடுகள் ஒரு யதார்த்தம் என்பதை உணர்த்துகின்றது.
உள்ளத்தின் மீதும் அதனை வடிவமைத்து செம்மைப்படுத்தியவன் மீதும் சத்தியமாக அவனே அதன் உள்ளுணர்வில் நன்மையையும் தீமையையும் வைத்தான் என்ற குர்ஆனியக் கூற்று நூறு வீதம் நிறைவான மனிதனாக உலகில் எவரும் இல்லை என்ற யதார்த்தத்தை புரியவைக்கிறது, முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட மாநபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைத் தவிர.
ஆதமுடைய சந்ததிகள் அனைவரும் தவறிழைப்பவர்களே என்ற நபிமொழியும் இந்த யதார்த்தத்தை உணர்த்துகிறது.
யதார்த்தங்களை எதிர்கொள்வது எப்படி?
நாம் ஏற்கனவே விளங்கியதன்படி யதார்த்தங்களில் நல்லவைகளும் இருக்கின்றன கெட்டவைகளும் இருக்கின்றன. சரிகளும் இருக்கின்றன பிழைகளும் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றுடனும் ஒத்துழைக்கும் மனப்பாங்குகளும் மனித உள்ளங்களில் வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறானதொரு யதார்த்தத்தை உருவாக்கி அதிலே அல்லாஹ் மனிதர்களை வாழச் செய்திருக்கிறான். ஏன்? யதார்த்தங்களோடு வாழ்ந்து மரணித்து விடுவதற்காகவா? அல்லது நல்லவற்றைத் தக்கவைத்துத் தீயவற்றை அகற்றி ஒரு புதிய உலகம் அமைப்பதற்காகவா?
ஆம், மனித உள்ளத்தின் யதார்த்தத்தை விளக்கும் போது ஸஅதன் உள்ளுணர்வில் நன்மையையும் தீமையையும் அவனே வைத்தான் என்று கூறிவிட்டு அதனை எதிர்கொள்வது எப்படி? என அடுத்த வசனத்தில் அல்லாஹ் விபரிக்கிறான். தனது உள்ளத்தை (தீயவற்றிலிருந்து) தூய்மைப்படுத்தியவன் வெற்றியடைந்தான் (தீயவற்றில்) அதனைப் புதைத்து விட்டவன் தோல்வியடைந்தான்.
ஆக, நல்லதையும் தீயதையும் ஏற்பாடு செய்த அல்லாஹ் அவற்றை எதிர்கொண்டு செய்ய வேண்டிய வேலை என்ன என்பதையும் தெளிவுபடுத்தியே இருக்கிறான்.
மனித உள்ளத்தில் நல்லதுமிருக்கும், தீயதுமிருக்கும். இருப்பவைகளோடு வாழ்ந்து விட்டுப் போவோம் என்ற போக்கை அல்லாஹ் அங்கீகரிக்கவில்லை. மாறாக, அந்த யதார்த்தத்தை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பதையே அல்லாஹ் வலியுறுத்துகிறான்.
உங்களுக்கு உங்களது மார்க்கம் எனக்கு எனது மார்க்கம் என பல மார்க்கங்களின் இருப்பை ஒரு யதார்த்தமாக வைத்திருக்கும் அல்லாஹ் அந்த யதார்த்தத்தோடு வாழ்ந்து விட்டுச் செல்ல அனுதிக்கவில்லை. மாறாக, அதனை எதிர்கொண்டு வாழுமாறே அவன் கட்டளையிடுகிறான்.
உமதிரட்சகனின் பாதை நோக்கி அறிவோடும் அழகிய உபதேசம் கொண்டும் அழைப்பு விடுப்பீராக. (அந்த அழைப்பின்போது விவாதிக்க நேரிட்டால்) மிக அழகிய வார்த்தைகள் கொண்டு விவாதிப்பீராக!
பல மதங்களின் இருப்பு ஒரு யதார்த்தம் என்றால் அதனை எதிர்கொள்ளும் வழிமுறையை மேற்படி வசனம் கற்றுத் தருகிறது.
இவ்வாறு யதார்த்தங்கள் அனைத்தையும் யதார்த்தங்களாக ஏற்பதோடு அவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகளையும் குர்ஆனும் ஸுன்னாவும் கற்றுத் தந்து கொண்டே இருக்கின்றன.
ஏன் இந்தப் பாடம்?
தஃவா களத்தில் பலர் யதார்த்தங்களை யதார்த்தங்களாகப் பார்ப்பதுமில்லை அவற்றை உரிய முறையில் எதிர்கொள்வதுமில்லை. மாறாக, பல யதார்த்தங்கள் தொடர்பில் தங்களது அதிருப்தியையும் விமர்சனத்தையும் வெளியிடுவதிலேயே தங்களது காலத்தையும் நேரத்தையும் செலவிடுகிறார்கள். இவர்கள் எதனையும் சாதிக்கவும் மாட்டார்கள் பிறர் சாதிக்க விடவும் மாட்டார்கள்.
ஓர் அறிஞர் கூறினார், இருட்டை ஏசாதே. முடியுமாயின் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிவை. இருட்டு என்பது ஒரு யதார்த்தம். அதில் உடன்பாடு இல்லாமல் இருப்பது வேறு, அது இருக்கக் கூடாது என்று நினைப்பது வேறு. அதற்காக அதனைத் திட்டலாமா?
முதலில் இருட்டு எனும் யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில், அது அல்லாஹ்வின் ஓர் ஏற்பாடு. அடுத்து ஒரு மெழுகுவர்த்தியினால்தான் அதனை எதிர் கொள்ள முடியுமானால் எதிர்கொண்டாக வேண்டும்.
இந்தப் பக்குவம் தஃவா களத்தில் இன்று குறைவாகவே இருக்கின்றது. மாறாக, யதார்த்தங்கள் தொடர்பில் வேறு நிலைப்பாடுகளே எம்மை ஆட்சி செய்கின்றன.
சிலர் யதார்த்தங்களை ஒன்றும் செய்துவிட முடியாது அவை அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். நாமும் நாமாக இருந்துவிட்டுப் போவோம் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். இத்தகையவர்களே இன்று அதிகமாக இருக்கின்றனர்.
இன்னும் சிலர் யதார்த்தங்களைத் திட்டிக் கொண்டும் விமர்சித்துக் கொண்டும் இருக்கிறார்கள். சிலர் காலத்தைத் திட்டுகிறார்கள் சிலர் சகுனத்தைத் திட்டுகிறார்கள். சிலர் தங்களது தலைவிதியைத் திட்டுகிறார்கள். மற்றும் சிலர் மனிதர்களையே திட்டுகிறார்கள். அவர்களது திட்டுகள், விமர்சனங்களிலிருந்து எவரும் தப்பியதில்லை, ஸஹாபாக்கள்கூட பலரது கூரிய நாவுகளால் கண்ட துண்டமாக வெட்டப்படுகிறார்கள்.
ஸஹாபாக்களையே வெட்டுகின்றவர்கள் உலகில் யாரை வெட்ட மாட்டார்கள்? யார் மீது அவதூறு சொல்ல மாட்டார்கள்? இன்றும் சிலரால் ஒரு கருத்து வேறுபாடு என்ற யதார்த்தத்தைக்கூட ஏற்க முடியவில்லை. எங்களுடைய கருத்துக்கள், வழிமுறைகளையே அனைவரும் ஏற்க வேண்டும், சரி காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் இருக்கிறார்கள். அவற்றுக்கு வெளியே இருக்கும் கருத்துக்கள், வழிமுறைகள் பற்றி நினைத்துப் பார்க்கவும் அவர்கள் தயாரில்லை.
யதார்த்தங்கள் விடயத்தில் களத்திலுள்ளவர்கள் ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும். அந்த முடிவு மேலே கூறப்பட்டவை போன்ற இஸ்லாத்துக்கு முரணான நிலைப்பாடுகளல்ல. மாறாக, மனிதர்களை நேரிய வழியில் நடத்துகின்ற இஸ்லாத்தின் நிலைப்பாடே அது.
யதார்த்தங்கள் அல்லாஹ்வுடையது. அவற்றை எதிர்கொள்ளும் பொறுப்பு மனிதர்களுடையது.
யதார்த்தங்களை அல்லாஹ்வே ஏற்பாடு செய்துள்ளான். அவற்றில் நல்லவைகளும் கெட்டவைகளும் இருக்கின்றன. நாம் அந்த யதார்த்தங்களை விட்டு விரண்டோடவும் முடியாது அவற்றை திட்டவும் முடியாது. மாறாக, அவற்றை எதிர்கொண்டு வெற்றி பெறும் களத்திற்கு வர வேண்டும்.
உதாரணமாக நோய் என்ற யதார்த்தத்தை நாம் அல்லாஹ்வுடைய ஏற்பாடு என ஏற்றுக் கொள்கிறோம்.. பின்னர் அல்லாஹ்வுடைய ஏற்பாடுதானே, அதனை ஏன் மாற்ற வேண்டும் என்று நாம் சிந்திப்பதில்லை. நோயைத் திட்டுவதுமில்லை. அதனை விட்டு விரண்டோடவும் முடிவதில்லை. மாறாக, அதனை அமைதியாக உரிய முறையில் சிகிச்சையளித்து எதிர்கொள்ளத் தயாராகிறோம்.
இதே அணுகுமுறை தஃவா களத்தில் உள்ள நோய்கள் விடயத்திலும் பின்பற்றப்பட வேண்டும். அங்கும் நாம் விரும்பாத யதார்த்தங்கள் நிறையவே இருக்கின்றன. அவற்றை கண்டு முகம் சுளிப்பதும் திட்டுவதும் ஓட்ட மெடுப்பதும் அழகிய வழிமுறைகள் அல்ல. மாறாக, அந்த யதார்த்தங்களை உரிய சிகிச்சைகள் மூலம் எதிர்கொண்டு வெற்றி பெறுவதே தாஇகளின் கடமை.
சரி எது? பிழை எது?
யதார்த்தங்களை எதிர்கொள்வதற்கு இன்றியமையாத வினாவே இது. ஒருவர் தான் சரி என்று நினைப்பதைத் தக்க வைத்துக் கொண்டு பிழை என நினைப்பதைத்தான் மாற்ற முயற்சிப்பார். அவ்வாறிருக்கையில், அனைவரும் கருத்து வேறுபாடில்லாமல் சரிகளை சரி எனவும் பிழைகளைப் பிழை எனவும் உடன்பாட்டோடு ஏற்றுக் கொண்டால்தானே பிழைகளை நீக்கும் முயற்சியில் வெற்றி பெறலாம். மாறாக, ஒருவர் சரி என்று நினைப்பதை மற்றவர் பிழை என்று நினைத்தால் இருவரும் மோதிக் கொள்வார்களே தவிர, அவர்களால் மாற்றங்களைக் காண முடியாது போகலாம். இன்று நடந்திருப்பதும் இதுதான். முதலில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். அதன் பின்னரே யதார்த்தங்களை எதிர் கொள்ள வேண்டும் என்றும் ஒருவர் சிந்திக்கலாம்.
உண்மையில் கருத்து வேறுபாடு என்பதும் ஒரு யதார்த்தமே. ஒருவர் சரி என்று கருதுவதை மற்றவர் பிழை என்று கருதுவதும் ஒரு யதார்த்தமே. அந்த யதார்த்தத்தை அல்லாஹ்வின் ஏற்பாடு என்று ஏற்றுக் கொண்டால்தான் பிரச்சினையை சுமுகமாக அணுகலாம். இன்று அந்த யதார்த்தம் சரியாக அணுகப்படவில்லை. தேவையான வழிமுறைகளால் அது எதிர்கொள்ளப்படவில்லை. அதனால்தான் இன்றைய களம் பிரச்சினை நிறைந்ததாக மாறியிருக்கின்றது.
ஒருவர் எதனை சரி, எதனை பிழை என்று கருதுகின்றார் என்பது அவரைப் பொறுத்தது. அதற்கு அவர் மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும். அந்தப் பிரச்சினையை மறுமையில் தீர்த்து வைப்பதாக அல்லாஹ் கூறுகின்றான். அதனை நாம் எமது பிரச்சினையாக மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை.
எங்கள் மீது அல்லாஹ் சுமத்தியிருக்கின்ற பொறுப்பு அதுவல்ல. நாங்கள் அறிவுபூர்வமாகவும் அழகிய உபதே சங்கள் மூலமாகவும் சரிகளையும் பிழைகளையும் வேறுபடுத்திக் காட்ட வேண்டும். இந்த வேலையை உரிய முறையில் செய்தோமா? அல்லது தவறி விட்டோமா? என்பது குறித்தே நாம் விசாரிக்கப்படுவோம்.
அந்த விசாரணையில் வெற்றி பெற வேண்டும் என்று நாம் கருதுவோமானால் எமது அணுகுமுறை எப்படியிருக்க வேண்டும் என்ற வழிகாட்டல்கள் எமக்கு முக்கியம்.
அத்தகைய வழிகாட்டல் குறிப்புகள் சில வருமாறு:
தஃவா களத்தில் ஒருவர் சொல்பவராக இருப்பார் மற்றவர் கேட்பவராக இருப்பார். இந்த இரு நிலைகளில் ஒரு நிலையில் இருந்தவாறே நாம் யதார்த்தங்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. அவ்வாறாயின், சொல்பவரிடமும் கேட்பவரிடமும் இருக்க வேண்டிய பண்புகள்தான் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன.
சொல்பவர் தன்னைப் பெரியவர் என்று காட்டிக் கொள்ளும் தோரணையையோ அபிநயத்தையோ வார்த்தைப் பிரயோகங்களையோ வெளிப்படுத்தக் கூடாது. அவரது குரலிலும் மொழியிலும் தொனியிலும் பணிவு இருக்க வேண்டும். தனது பெருமைகளைக் கூறி கேட்போரை சிறுமைப்படுத்துவது இருக்கவே கூடாது.
கேட்பவர் சொல்லப்படும் விடயங்களை நன்கு செவிமடுக்க வேண்டும். சொல்லப்படும் விடயங்களுக்கு அறிவுபூர்வமாக விடையளிக்க முடியாது போனால் அடக்குமுறைகளில் நாட்டம் கொள்ளாது நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் அல்லது பதில் கூறுவதற்கு அவகாசம் எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது உண்மைகளை ஏற்க வேண்டும் அதுவும் முடியாதவிடத்து மௌனமாக இருந்துவிட வேண்டும்.
சொல்பவர் கேட்பவரைப் புண்படுத்தும் விதமாக வார்த்தைகளைப் பிரயோகிக்காதிருக்க வேண்டும் அவரது தனிப்பட்ட விவகாரங்களை சந்திக்கு இழுத்து வராதிருக்க வேண்டும் அவரை அவமானப்படுத்தும் வகையில் குறைகளை விமர்சிக்காதிருக்க வேண்டும். மாறாக, கருத்துக்களை முன்வைத்து அவற்றை தக்க ஆதாரங்களால் உறுதிப்படுத்த வேண்டும். கேட்பவர் சொல்பவரின் சுதந்திரத்தை மதிக்க வேண்டும். சொல்லும் உரிமையில் தலையீடு செய்ய தனக்கு அதிகாரமில்லை என்பதை உணர வேண்டும்.
சொல்பவர் அழகாகவும் அறிவுபூர்வமாகவும் ஆதாரங் களுடனும் தனது கருத்துக்களை முன்வைத்தால் மக்கள் அக்கருத்துக்களால் கவரப்படுவார்களே என்ற அச்சத்திற்கு கேட்பவர் ஆளாக வேண்டியதில்லை. அத்தகைய அச்சம் கேட்பவரின் மனதில் எழுந்தால் அவர் கருத் துக்களை கருத்துக்களால் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும். கருத்துக்களுக்குப் பஞ்சம் இருந்தால் கம்பு களைத் தூக்க கூடாது.
மொத்தத்தில் சொல்பவருக்கு அறிவுடன் கூடிய உன்னதமான பண்பாட்டுப் பயிற்சி தேவை. கேட்பவருக்கு உண்மையை அறியும் ஆராய்ச்சி மனப்பாங்கு தேவை. சொல்பவருக்கு பணிவு தேவை கேட்பவருக்கு பொறுமை தேவை. சொல்பவர்கள் பிரச்சினைக்கான தீர்வுகளையும் சேர்த்தே சொல்ல வேண்டும். கேட்போர் நல்ல ஆலோசனைகளை கெட்ட உள்நோக்கங்கள் என்று அர்த்தப்படுத்தாதிருக்க வேண்டும்.
இவ்வாறு யதார்த்தங்களை எதிர்கொண்டால் எந்த சூழ்நிலையையும் மாற்றியமைக்கும் முயற்சி வெற்றி தருகிறது. இந்தப் பண்புகளை சொல்வோரும் கேட்போரும் இழந்து விட்டால் தீமைகள் குறைந்து நன்மைகள் வளர்வதற்குப் பதிலாக குழப்பங்களே மிஞ்சும். சொல்பவர்கள் நினைத்து விடக் கூடாது நாங்கள் நேர் வழியில் இருக்கிகிறோம்ஸ. பிரச்சினைக்குரியவர்கள் நாங்களல்லஸ அவர்களேஸ என்று.இல்லைஸ அவ்வாறில்லைஸ நேர்வழியைப் போதிப்பவர்கள் வழிகேடு என்ற யதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டிய முறைப்படி எதிர்கொள்ளாவிட்டால் அவர் களும் ஒரு வகையிலான வழிகேட்டில் இருக்கிறார்கள் என்றே அர்த்தம்.
நேர்வழியை விளங்கிக் கொண்டவர்களுக்கான சோதனை, வழிகேடு என்ற யதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டிய முறைப்படி எதிர்கொள்வதுதான். அதில் தவறினால் அவர்களும் தோல்வியாளர்களே. கேட்பவர்கள் நினைத்து விடக் கூடாது அறியும் ஆர்வத்தையும் ஆராய்ச்சியின் வாசலையும் மூடி விட்டால் சுவனம் நுழைந்து விடலாம் என்று. இல்லைஸ சுவனப் பாதையே அறிவுப் பாதைதான். செவிமடுக்காமல், விளங்காமல், ஒப்பிட்டுப் பார்க்காமல், ஆராயாமல், அர்த்தம் தேடாமல் அந்தப் பாதையில் நகரலாம் என்று நினைப்பது அவர்களை சூழ்ந்திருக்கும் அறியாமையாகும்.
உண்மைகளை விளங்க முயற்சிக்காமல் குருட்டுத்தனமான பின்பற்றல்களில் சிக்கித் தவிப்பதும் இந்த அறியாமையின் விளைவுதான். அல்லாஹ் அனைவரையும் வெ வ்வேறு வேறு இடங்களில் அமர்த்தி வித்தியாசமாக சோதிக்கிறான் என்பதை சொல்வோரும் செவிமடுப்போரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அப்போது யதார்த்தங்களை எதிர்கொண்டு வெற்றி பெறும் முயற்சி சிரம சாத்தியமானதாக இராது.
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
அமீர். இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
source: http://www.usthazhajjulakbar.org/2016/10/11/
இறை நம்பிக்கையின் (ஈமான் கொள்ள வேண்டிய ) ஆறு அம்சங்கள்
இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கையாகும் (ஈமான்). ஒருவர் முஸ்லிமா இல்லையா என்பதை தீர்மானிப்பது ஈமானாகும். இறை நம்பிக்கை இன்றி ஆற்றப்படும் எந்த ஒரு நற்காரியமும் எந்த மறுமை பிரயோசனத்தையும் கொடுக்காது.
அந்த அடிப்படையில், ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணும் ஆறு விடயங்களை நம்பிக்கை கொள்ள வேண்டும். அவற்றில் ஏதாவது ஒன்றை நம்பாவிட்டாலும் அவள் ஒரு முஸ்லிமாக கருதப்பட மாட்டாள்.
1. இறைவனை நம்புதல்
2. வானவர்களை நம்புதல்
3. வேதங்களை நம்புதல்
4. இறைத்தூதர்களை நம்புதல்
5. இறுதி நாளை நம்புதல்
6. நன்மை தீமை யாவும் இறைவன் நாட்டப்படி நடக்கிறது என்று நம்புதல். அதாவது அல்லாஹ்வின் ஏற்பாட்டை (கத்ரை) விசுவாசிப்பதாகும்.