”நீ செய்து விட்டு என்னிடம் கூறு”
தக்கலை கவுஸ் முஹம்மத்
நீ செய்து விட்டு என்னிடம் கூறு’ என்று தத்துவம் பேசுபவர்கள் அறிவாளிகளா?.. இது பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.
“நம்பிக்கையாளர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள். செய்யாததை சொல்வது இறைவனிடம் வெறுப்புக்குரியதாகும்.” (அல் குர்ஆன் 61:2,3)
இரண்டு விதமான சொற்சொடர்களை இந்த வசனம் தடுக்கின்றது.
1. தாம் செய்யாததை செய்ததாகக் கூறி பெருமையடித்துக் கொள்வது,
2. தாம் செய்யாமல் பிறரை செய்யும் படி தூண்டுவது.
இஸ்லாத்தைப் பொருத்தவரை எடுத்துச் சொல்வதை விட வாழ்ந்துக் காட்டுவதே மிக சிறந்த செயலாகவும் முன் மாதிரியாகவும் கருதப்படும்.
தொழாதவர்கள் பிறரை தொழுகைக்கு போகச் சொல்வது, செல்வம் இருந்தும் ஜகாத்தோ தர்மமோ செய்யாதவர்கள் தான தர்மங்களுக்கு பிறரை தூண்டுவது. பிரித்தாள்பவர்கள் ஒற்றுமையைப் பற்றிப் பேசுவது போன்றவை வெறும் நடிப்பான வார்த்தைகளாகி விடும். வெறும் நடிப்பாக இருப்பதால்தான் இறைவன் அதை வெறுக்கின்றான்.
இந்த உலகில் பிறருக்கு நன்மையை எடுத்துச் சொல்லி அழைத்தவர்கள், இவர்களின் அழைப்பை ஏற்று நன்மையின் பக்கம் திரும்பியவர்கள் இவர்களில் நன்மையின் பக்கம் அழைத்தவர்களில் சிலர் நாளை மறுமையில் நரகில் கிடப்பதை இவர்களின் அழைப்பை ஏற்று நன்மை செய்து சொர்க்கம் சென்றவர்கள் பார்ப்பார்கள்.
அப்போது ‘நீங்கள் எங்களுக்கு நன்மையை ஏவினீர்களே இப்போது நரகில் கிடக்கின்றீர்களே..ஏன்?’ என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள் ‘நாங்கள் உங்களுக்குத் தான் நன்மையை ஏவினோம் அதை நாங்கள் செய்யவில்லை அதனால் ஏற்பட்ட விளைவுதான் இது” என்று புலம்பி கதறுவார்கள் என்ற எச்சரிக்கையை முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளதை நாம் மறக்காமல் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இனி ‘நீ செய்து விட்டு என்னிடம் கூறு’ என்று தத்துவம் பேசுபவர்கள் அறிவாளிகளா?.. என்பதை சிந்திப்போம்.
சொல்பவர்கள் தூய்மையானவர்களாகவும் வாய்மையானவர்களாகவும் இருந்தால் தான் அவர்கள் சொல்வதை கேட்டு செயல்படுவேன் என்று முடிவெடுப்பவர்கள், தங்களை மறந்து விட்டு தங்களை நன்மையின் பக்கம் அழைப்பவர்களின் குறைகளை அலசுபவர்கள் இறுமாப்பு கொண்டவர்களாவார்கள். அதன் அடையாளம் தான் “நீ முதலில் செய்து விட்டு என்னிடம் கூறு” என்ற இறுமாப்பு வெளிபாடாகும்.
தாம் தொழாதவர்கள் பிறரை தொழுகைக்கு போக சொல்கிறார்கள் என்றால் அந்த அழைப்பை ஏற்று தொழுகைக்கு சென்றால் அதனால் இவர்களுக்கு என்ன குறை வந்து விடப்போகின்றது? அழைக்கப்படும் அந்த அழைப்பு இறைவனை நோக்கிய அழைப்பாகும் என்பதை மறுக்கும் துணிவை இவர்கள் எங்கிருந்துப் பெற்றார்கள்?. தம்மை நன்மையின் பக்கம் அழைக்கக் கூடியவர்களிடம் சில குறைப்பாடுகள் இருக்கலாம். குறைப்பாட்டுக்கு அப்பாற்பட்டவர்கள் யார்தான் இருக்கிறார்கள்? அவர்களின் வாழ்க்கையில் குறைப்பாடு இருக்கிறது என்பதால் அவர்களின் வார்த்தைகளும் குறைப்பாடு உடையதாகி விடுமா..?
சைத்தான் ஒரு நல்ல காரியத்தை ஏவினாலும் அதையும் ஏற்று பின்பற்றலாம் என்ற வித்தையை இஸ்லாம் நமக்கு சொல்லி கொடுக்கின்றது.
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் நீண்ட ஹதீஸின் ஒரு பகுதியில்…
‘யார் இரவில் ஆயத்துல் குர்ஸி’ (என்ற வசனத்தை)யை ஓதுகின்றாரோ அவர் விடியும் வரை ஷெய்த்தானின் தீங்கிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்’ என்று ஒரு திருடன் தனக்கு கற்றுக் கொடுத்ததாக அபூஹுரைரா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறுகிறார்கள் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘சொன்னவன் பொய்யன் சொல்லப்பட்ட வார்த்தை உண்மை, ஷெய்த்தான் தான் இதை உனக்குக் கற்றுக் கொடுத்துள்ளான்” என்றார்கள். (பல ஹதீஸ் நூல்களில் இந்த சம்பவம் இடம் பெறுகின்றது) (அந்த வசனம் குர்ஆனின் இரண்டாவது அத்தியாயத்தில் 255வது வசனமாக இடம் பெற்றுள்ளது)
இந்த செய்தியில் ‘சொன்னவன் பொய்யன் என்பதால் அதை புறக்கணித்து விடு’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லவில்லை. சொன்னவன் பொய்யன் என்றாலும் அவன் சொன்ன விஷயம் உண்மையானது. அவ்வாறு செய்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.
ஷெய்த்தான் சொன்னதால் இதை செய்யமாட்டேன் என்று யாராவது முடிவெடுத்தால் சந்தேகமில்லாமல் அவரை மனநோயாளி என்று முடிவு செய்து விடலாம்.
“எவன் தன்னுடைய இறைவனின் வசனங்களைக் கொண்டு நினைவு படுத்தப்பட்ட பின்னரும் அவற்றைப் புறக்கணித்து விடுகிறானோ, அவனைவிட அநியாயக்காரன் எவன் (இருக்கிறான்)? நிச்சமயாக நாம் (இத்தகைய) குற்றவாளிகளை தண்டிப்போம்.” (அல்குர்ஆன் 32:22).
இறை வசனங்கள் நினைவூட்டப்பட்டப் பிறகு அவற்றை (ஆட்களை காரணம் காட்டி உட்பட) புறக்கணிக்கக் கூடாது அது இறைவனின் கோபத்திற்குரிய செயலாகி விடும் என்பதை இந்த வசனத்திலிருந்து ஐயமற விளங்கிக் கொள்ளலாம். எனவே பிறர் நம்மிடம் நன்மையை ஏவும் போது ‘நீ முதலில் சரியாக இருந்துக் கொண்டு என்னிடம் கூறு’ என்று மறுத்து புறக்கணிப்பது அவரை தவறான பாதையில் நிலைத்திருக்க ஷெய்த்தான் செய்யும் சூழ்ச்சிகளில் ஒன்றாகும். இறை நம்பிக்கையுள்ள எந்த அறிவாளியும் ஷெய்த்தானின் சூழ்ச்சிக்கு அடிபணிய மாட்டான்
மேற்காணும் விளக்கங்கள் யாவும் ஒருவர் இன்னொருவரிடம் தொழுகையைப்பற்றி எடுத்துக்கூற அவர் அதற்கு முதலில் நீ பின்பற்றிவிட்டு பிறகு என்னிடம் சொல்லவா என்கிறார்… இதற்கான விளக்கமான பதில்தான் நீங்கள் இதுவரை படித்தது …. இது நமக்கு நல்லதொரு புரிதலை உண்டாக்கும் என நான் நினைக்கிறேன் இன்ஷா அல்லாஹ்.
ஆக மொத்தத்தில் எந்த ஒரு உபதேசமானாலும், ஹதீஸ்கள் ஆனாலும் தான் செய்யாமல் பிறரை செய்ய சொல்பவன், சொல்லுக்கும் தன்செயலுக்கும் சம்மந்தமில்லாமல் நடப்பவன்தான் மிகுந்த நஷ்டவாளியாகிறான்.
ஆனால்
அவனால் எடுத்து வைக்கப்பட்ட அந்த உபதேசத்தால் அல்லது ஹதீசால் ஒருவர் உணர்ந்து அதன்படி செயல்படுத்தினால் அது செயல்படுத்தியவருக்கு நன்மையே! இதனால் அதனை எத்திவைத்த நபருக்கும் அதற்கான கூலியும் கிடைக்கிறது.
எனவே
இது விஷயத்தில் சரியான புரிதல்களை உட்கொள்ள வேண்டுமே தவிர எத்தி வைக்கப்பட்ட இறை வசனங்களால், ஹதீஸ்களால் நமக்கு ஏற்பட்டுவிடுகிற குற்ற உணர்வு மேலீட்டால் இவர் மட்டும் என்ன யோக்கியரா?!.. என சொன்னவரை வெறுப்பின் அரசியலில் ஆராயாமல், குற்றம் பிடிக்காமல் சொல்லப்பட்டதில் நல்லதை எடுத்துக்கொண்டு நல்ல முறையில் நாம் செயல்பட்டால் நன்மைதான் என நல்லதொரு புரிதலை ஏற்படுத்திக் கொள்வதால் நன்மையே உண்டாகும், இன்ஷாஅல்லாஹ் ….
source: http://seasonsnidur.blogspot.in/2015/10/blog-post_21.html#more