பார்வையை மாற்று, மகிழ்வோடு இரு!
முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, பிஎச்.டி.
அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோகம்; ஒவ்வொரு கவலை. இவ்வுலகில் நாம் கவலையற்ற வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமென்றால் நாம் பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.
கண்ணோட்டத்தை மாற்றினால் நமக்கு நிகழ்வதெல்லாம் எண்ணியெண்ணி வருந்த வேண்டிய நிலை ஏற்படாது. நடப்பவை யாவும் இறைவன் விதிப்படியே எனும் நிலைக்கு நாம் வந்துவிடுகின்றபோது கவலை ஏற்பட வாய்ப்பே இல்லை.
எல்லாம் அறிந்த இறைவனின் விதிப்படி நடைபெறுகின்ற எதுவும் தவறாக இருக்காது எனும் நம்பிக்கை மனத்தில் பதிந்துவிடுகின்றபோது எல்லாமே மகிழ்ச்சியாக மாறிவிடுகின்றது.
ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தில் துள்ளி விளையாடும் அழகுக் குழந்தை. அக்குழந்தைதான் அவ்வீட்டிலுள்ளோர் அனைவரின் மகிழ்ச்சிக்கும் காரணம். திடீரென ஒரு நாள் அக்குழந்தை நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டது. இந்நிகழ்வு அக்குடும்பத்திலுள்ளோர்க்குத் தீராத சோகமாக ஒட்டிக்கொள்கிறது.
அமெரிக்காவில் இரட்டைக் கட்டடங்கள் இடிந்துவிழுந்த மறக்க முடியாத சோகமாகச் சூழ்ந்துகொள்கிறது. நினைவைவிட்டு அகல மறுக்கிறது. இந்நிகழ்வுக்குப் பின் யாரும் யாரோடும் மனம்விட்டுப் பேசுவதில்லை. ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை. அவ்வீடே ஒரே சோகமயமாகக் காட்சியளிக்கிறது. இது சாதாரண மனிதர்களின் நிலை.
இதே நிகழ்வு ஓர் ஆன்மிகவாதியின் குடும்பத்தில் நிகழ்கிறது. அவர் மூன்று நாள்களுக்குச் சோகமாக இருந்துவிட்டு, பிறகு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிடுகிறார். மற்றவர்களைப்போல் இயல்பாகச் சாப்பிடுகிறார்; எப்போதும்போல் அன்றாடப் பணிகளில் ஈடுபடுகின்றார். இவரால் மட்டும் எப்படிச் சோகத்தை அவ்வளவு எளிதாக மறக்க முடிந்தது? அப்படியென்றால் இவருக்குத் தம் பிள்ளைமீது பாசம் இல்லையா?
அவ்வாறன்று. இது இறைவனின் விதிப்படி நடந்துள்ளது. அவன் எதைச் செய்தாலும் நன்மைக்குத்தான் செய்வான். எனவே இதிலும் ஏதாவது நன்மை மறைந்திருக்கும் என்று நம்புகின்றார். இந்த நம்பிக்கையால்தான் இவரால் இயல்பாகச் செயல்பட முடிகிறது. மேலும் ஒரு குழந்தை இறந்துவிட்டால் அக்குழந்தை நாளை மறுமையில் தன் பெற்றோரைச் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லாமல் அது சொர்க்கத்தினுள் நுழையாது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய செய்தியை மனதார நம்பியுள்ளார். அதனால்தான் பெரும் சோகத்தைக்கூட இவரால் இயல்பாக எடுத்துக்கொள்ள முடிகிறது.
இதையும் தாண்டி, வரலாற்று நிகழ்வு ஒன்று நம்மைப் பெரும் வியப்படையச் செய்யும். வீட்டில் குழந்தை இறந்துவிட்டது. கணவர் வியாபாரத்திற்காக வெளியூர் சென்று அன்று இரவுதான் திரும்பி வருகிறார். அவர் வரும்போது சோகத்தை வெளிக்காட்டி அவர் மனதைப் புண்படுத்திவிடக்கூடாது என்று எண்ணிய மங்கை நல்லாள் உயிர்நீத்த குழந்தையின் பூத உடலை ஓர் அறைக்குள் திரையிட்டு மறைத்து வைத்துவிட்டு, இச்செய்தியை என் கணவருக்கு நான் தெரிவிக்கும் வரை யாரும் தெரிவிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு, தம்மை மிகவும் அழகாக அலங்கரித்துக்கொண்டு, தம் கணவரை அன்போடு வரவேற்று, உணவு பரிமாறி, அவரின் இரவுத்தேவையையும் நிறைவேற்றுகின்றார்.
பின்னர், “அபூதல்ஹா அவர்களே! ஒரு கூட்டத்தார் தம் பொருட்களை ஒரு வீட்டாரிடம் இரவலாகக் கொடுத்திருந்து, பிறகு அவர்கள் தாம் இரவலாகக் கொடுத்துவைத்திருந்த பொருட்களைத் திரும்பத் தருமாறு கேட்கும்போது அவர்களிடம் (திருப்பித் தர முடியாது என) மறுக்கும் உரிமை அவ்வீட்டாருக்கு உண்டா?” என்று சாதுர்யமாகக் கேட்கின்றார். அதற்கு அவர், “இல்லை” என்று கூறுகிறார்.
“அவ்வாறாயின், தங்கள் மகனுக்காக (அல்லாஹ்விடம்) நன்மையை எதிர்பாருங்கள்” என்று கூறுகிறார். தம் மகன் இறந்துவிட்டதைப் புரிந்துகொண்ட கணவர் கோபப்படுகிறார். காலையில் இச்செய்தியை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறி, தம் மனைவி செய்தது குறித்து முறையிடுகின்றார். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “கடந்த இரவில் (நிகழ்ந்த உறவில்) அல்லாஹ் உங்கள் இருவருக்கும் வளம் புரிவானாக!” என்று சொல்கின்றார்கள். பின்னர் அவர் கர்ப்பமுற்றார். குழந்தையும் பிறந்தது. அந்த மங்கை நல்லாளின் பெயர் உம்முசுலைம் ஆகும். இந்நிகழ்வு முஸ்லிம் எனும் நபிமொழித் தொகுப்பு நூலில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. (நூல்: முஸ்லிம்: 4853)
மேற்கண்ட இந்நிகழ்வைப் படிக்கின்ற நமக்கு வியப்பே மேலிடும்.
குழந்தை இறந்துவிட்டதை எண்ணி ஒரு தந்தையே பொறுத்துக்கொள்ள மாட்டார்.
ஆனால் இங்கு ஒரு தாயாக இருந்து, பொறுமை காத்து, இறைவனின் விதியை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார் என்றால் அது எப்படிச் சாத்தியமாகும்?
அதுதான் வலுவான, அசைக்க முடியாத இறைநம்பிக்கை.
அதுதான் மறுமையை நோக்கிய கண்ணோட்டம்.
மறுமையை நோக்கிய கண்ணோட்டம் எப்போதும் பொறுமைக்கும் மகிழ்ச்சிக்குமே வழிகாட்டும்.
நல்ல முறையில் வியாபாரம் நடந்துகொண்டிருக்கின்ற கடை. இலாபம் மிகுதியாக வந்து கொட்டிக்கொண்டிருந்தது. மகிழ்ச்சியோடு வியாபாரம் செய்து, பணத்தை எண்ணிக் கல்லாப் பெட்டிக்குள் வைத்துவிட்டு, பெரியதொரு பூட்டைப் போட்டுப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் செல்கிறார். காலையில் கடையைத் திறக்க வந்தவருக்குப் பேரதிர்ச்சி. பூட்டை உடைத்து, கல்லாவில் எண்ணி வைத்திருந்த பணம் முழுவதும் அப்படியே களவு போய்விட்டது. அதைக் கண்டதும் கத்துகின்றார்; கதறுகின்றார்.
காவல் துறைக்குப் புகார் சொல்லப்படுகின்றது. மோப்ப நாய் வருகிறது. எல்லாச் சோதனையும் நடக்கின்றது. உரிய விசாரணை நடத்தப்பட்டு, விரைவில் திருடர்கள் பிடிக்கப்படுவார்கள் எனக் கூறிவிட்டு, காவல் துறை சென்றுவிடுகின்றது. இவருடைய நிலையோ சோகத்திலும் சோகம். ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை; தூங்குவதில்லை; மற்றவர்களிடம் இயல்பாகப் பேசுவதில்லை. மனது முழுக்கச் சோகம் கவ்விக் கொண்டது. பல நாள்களாகியும் இயல்பு நிலைக்குத் திரும்பாமல் பெரும் சோகத்திலேயே காணப்படுகிறார். இது சாதாரண மனிதனின் நிலை.
இதே நிகழ்வு ஓர் இறைநம்பிக்கையாளருக்கு ஏற்படுகிறது. அவர் உடனே, இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்-திண்ணமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கிறோம். திண்ணமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்ல உள்ளோம்-எனும் மந்திர வார்த்தைகளைக் கூறுகிறார். பின்னர் தாம் ஏதோ தவறு செய்திருப்பதாக உணர்கின்றார். இது இறைவனின் சோதனைதான் எனத் தெளிவடைகிறார்; நல்ல வேளை பணம் மட்டுமே திருடு போயுள்ளது. கடையிலுள்ள சரக்குகள் அனைத்தும் அப்படியே உள்ளன.
“திருடு போகாமல் அவற்றைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று இறைவனைப் புகழ்ந்து அவனுக்கு நன்றி கூறுகின்றார். மேலும் எப்போதும் போல் வியாபாரத்தைக் கவனிக்கத் தொடங்கிவிட்டார். சோகமோ துன்பமோ அவரைச் சூழ்ந்துகொள்ளவில்லை. கண்ணோட்டத்தை மாற்றினார். இழந்ததை எண்ணி வருந்தாமல் வரப்போகும் இலாபத்தை எண்ணி வியாபாரத்தைத் தொடர்ந்தார்.
இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சோகமோ சோதனையோ மனிதர்களை அடைந்துகொண்டுதான் இருக்கின்றது. ஆனால் அவற்றைப் புறந்தள்ளிவிட்டு மகிழ்ச்சியாக மாற்றிக்கொள்வது நமது கண்ணோட்டத்தில்தான் உள்ளது. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது எனும் பழமொழி சோகத்தை அப்புறப்படுத்திவிட்டு இயல்பாக வாழ்வதற்கான வழிகாட்டுகிறது. இவ்வாறே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிகளும் நமக்கு வழிகாட்டுகின்றன. ஆக, அவரவர் கண்ணோட்டத்தில்தான் சோகமும் மகிழ்ச்சியும் பின்னிப் பிணைந்துள்ளன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
எனக்கு ஒரு கைக்கடிகாரம் இல்லையே என ஏங்குவதைவிடக் கையே இல்லாதவனைப் பார்த்து, அவனைவிட எனக்கு இறைவன் மிகுந்த கருணைபுரிந்துள்ளான் என ஆறுதலடைவது மகிழ்ச்சிக்கான வழியாகும். என் காலுக்கொரு செருப்பு வாங்க முடியவில்லையே என ஏங்குவதைவிட, கால் இழந்தவனைப் பார்த்து, இவனைவிட எனக்கு இறைவன் மிகுந்த கருணைபுரிந்துள்ளான் என ஆறுதல் அடைவது மகிழ்ச்சிக்கான வழியாகும். ஓட்டு வீட்டில் உள்ளவன் மாடி வீட்டிலுள்ளவனைப் பார்த்துப் பார்த்து ஏங்குவதைவிட, வீடே இல்லாமல் தெருவோரத்தில் வசிப்போரைப் பார்த்து, இவர்களைவிட அல்லாஹ் எனக்கு மிகுதியாக அருள்புரிந்துள்ளான் என எண்ணுவதே மகிழ்ச்சிக்கான வழியாகும்.
o என் மனைவி என்னிடம் மிகவும் மோசமாக நடந்துகொள்கின்றாள் எனக் குறைபட்டுக் கொள்வதை நிறுத்திவிட்டு, ஒரு கணம் மனைவியே இல்லாமல் தனிமரமாக வாழுகின்றவனைப் பார்த்து, அல்லாஹ் எனக்கு மிகுந்த உபகாரம் செய்துள்ளான் எனக் கருதுவதே மகிழ்ச்சிக்கான வழி.
o என் பிள்ளை மிகுந்த சேட்டை செய்கின்றான்; என் பேச்சையே கேட்பதில்லை என்று குறைபட்டுப் புலம்புவதைவிட, குழந்தை பாக்கியமே இல்லாமல் வாழுகின்ற தம்பதியரைப் பார்த்து அல்லாஹ் என்மீது மிகுந்த கருணைபுரிந்துள்ளான் என எண்ணுவது மகிழ்ச்சிக்கான வழியாகும்.
o என் கணவர் என்னிடம் நல்ல முறையில் நடந்துகொள்வதில்லை; நான் கேட்டதை வாங்கித் தருவதில்லை என்று ஒரு பெண் கவலைப்படுவதைவிடக் கணவனே இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு, சோகத்தோடு வாழ்க்கையைக் கழிக்கின்ற எத்தனையோ பெண்களைப் பார்த்து, அல்லாஹ் என்மீது மிகுந்த கருணை புரிந்துள்ளான் என எண்ணினால் மகிழ்ச்சி பெருகும்.
இப்படி நாம் காணுகின்ற கண்ணோட்டத்தை மாற்றினால் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிதான். வாழ்க்கையில் என்றென்றும் மகிழ்ச்சியாக இருக்க ஆயிரமாயிரம் வழிகள் உள்ளன. அதையெல்லாம் விட்டுவிட்டு நாம் வேறொரு கோணத்தில் பார்த்துக்கொண்டிருந்தால் வாழ்க்கை கசக்கத் தொடங்கிவிடும். நாம் எப்போதும் நம்மைவிட மேலோங்கிய நிலையில் உள்ளவர்களையே பார்த்துக்கொண்டிருந்தால் அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளையும் நற்பேறுகளையும் நாம் பார்க்கவே முடியாது. அதனால் நாம் மகிழ்ச்சியோடும் வாழ முடியாது; இறைவனுக்கு நன்றி செலுத்த வாய்ப்பும் ஏற்படாது.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ”உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள். உங்களைவிட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நீங்கள் குறைத்து மதிப்பிடாமலிருக்க மிகவும் ஏற்றதாகும்.” (நூல்: முஸ்லிம்: 5671)
ஆகவே ஒவ்வொரு மனிதனுக்கும் என்னென்ன தேவையோ எவ்வளவு தேவையோ அதையெல்லாம் உயர்ந்தோன் அல்லாஹ் நியாயமாகவே வழங்கியுள்ளான். ஆனால் நாம்தாம் இறைவனின் நியதியைப் புரிந்துகொள்ளாமல் சோகத்துடனும் துன்பத்துடனும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
தூயோன் அல்லாஹ் இவ்வுலகில் வாழுகின்ற அனைத்து மனிதர்களையும் சமமாகவே நடத்துகின்றான். ஆம், பிறக்கின்ற போது கையில் எதுவுமின்றிப் பிறக்கின்றான்; இறந்த பின்னரும் கையில் எதுவுமின்றியே செல்கின்றான். இடைப்பட்ட வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் இடையே சிற்சில பொருளாதார ஏற்றத்தாழ்வு உள்ளது. அவ்வளவுதான். அதற்காக அதை எண்ணியெண்ணி ஏங்க வேண்டிய அவசியமே இல்லை.
பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பது மனித வாழ்க்கை சீராக நடைபெற வேண்டும் என்பதற்காகத்தானே தவிர மனிதர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வையும் பிரிவினையையும் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இல்லை. ஏனென்றால் இறைவனைப் பொறுத்த வரை எல்லோரும் ஏழைகளே. அதாவது எல்லோரும் ஏதாவது தேவை உடையோரே ஆவர்.
அல்லாஹ் மட்டுமே எந்தத் தேவையும் அற்றவன் ஆவான். ஆதலால் இறைவனின் புறத்திலிருந்து எந்த ஏற்றத்தாழ்வும் மனிதனுக்கு இல்லை. எல்லோரும் சமமே. எனவே நாம் மகிழ்ச்சியாக இருக்க எந்தத் தடையும் இல்லை. காணும் கண்ணோட்டத்தை மாற்றுவோம்; மகிழ்ச்சியாக வாழ்வோம்!