இறைவன் என்பவன் யார்? அவன் என்னதான் செய்து கொண்டு இருக்கிறான்?
இறைவனின் இருப்பை உறுதி செய்யும் பதிவு இது
இறைவன் என்பவன் யார்? அவன் என்னதான் செய்து கொண்டு இருக்கிறான்? சொல்லப்படும் ஒரு லட்சத்து இருபத்தி நான்காயிரம் நபிமார்களையும் படைத்து, நான்கு வேதங்களையும் இம்மண்ணில் இறக்கி வைத்து, சொர்க்கத்தையும் நரகத்தையும் ஏற்படுத்தி, நேர்வழி பெற்றோர்க்கு சொர்க்கமென்றும், வழி பிறழ்ந்தோர்க்கு நரகமென்றும் சொல்லி வைத்து, இவ்வுலகை அன்றிலிருந்து இனி முடியும் நாள் வரை பரிபாலித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்பவனின் உண்மை நிலைதான் என்ன? அவனின் தன்மைகளும்தான் என்ன ?
வரவிருந்த பெருவெள்ளம் இறைவனால் அறிவிக்கப்பட்டு கட்டிய கப்பலில் தன் மக்களோடு பயணத்தை மேற்கொண்ட நூஹு அலைஹிஸ்ஸலாம் இன்றெங்கே?
மீனின் வயிற்றில் காலங்களாய் குடியிருந்த கிள்று அலைஹிஸ்ஸலாம் இனியும் உண்டா இங்கே?!
கடலைப் பிளந்து தன் கௌம்களை கரை சேர்த்த மூஸா அலைஹிஸ்ஸலாம் எங்கே சென்றார்?
கன்னியின் வயிற்றில் கருவாய் உருவாகி காருண்யராய் வலம் வந்த ஈஸா அலைஹிஸ்ஸலாம் இன்றிருப்பதும் எங்கே?
பிறையை தன் விரல் அசைவால் பிளந்து காட்டிய நம் கண்மணி நாயகம் ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும்தான் இன்றைக்கு எங்கே?
உத்தம சஹாபாக்கள் எங்கே, ரசூலுல்லாஹ்வின் அத்தனை மேன்மை உறவுகளும் எங்கே, நீதியை நிலை நாட்டிய நேர்மை கலீபாக்கள் எங்கே, உலகு முடியுமட்டும் பயணிக்கும் பாதை போட்டு காட்டிய நான்கு இமாம்கள் எங்கே, இப்புவியில் வந்துதித்த எத்தனை எத்தனையோ இறைநேச செல்வர்களும்தான் எங்கே. இறையாலேயே இறக்கப்பட்ட நான்கு வேதங்களில் மூன்று சென்று மறைந்த இடமும்தான் எங்கே?
மரணத்தை விஞ்சும் எவரும் இவ்வுலகில் இல்லைதான் என்பதை மகத்தானவர்கள் இவர்கள் எல்லோரின் மரணத்தையும் முழுமையாக ஏற்று பொருந்திக் கொண்டிருக்கிற நமக்கு, இந்நாட்களில் ஏற்பட்டு விடுகிற சில மரணங்கள் பதில் சொல்ல முடியாத பல கேள்விகளை எழுப்புவதாக அமைந்து விடுவதோடல்லாமல், அடிப்படையிலேயே மிக ஆச்சரியமான ஒரு விஷயமாகவும்தான் மாறிப்போகிறது.
குறிப்பிட்டு காட்டப்பட்ட அத்தனை வல்லமை கொண்டவர்களுமே இறந்துதான் போயிருக்கிறார்கள் என்கிற உறுதிப்பாடான நிலையிலும் கூட, இன்றைய நாட்களில் நடந்து விடும் இறப்புக்களை அவ்வளவு எளிதில் நம் மனங்கள் ஏற்றுக் கொள்வதில்லைதான். எப்படியான சமாதானங்களை நாம் கூறிக் கொண்டாலும், ஏதோ சில தயக்கங்களும், நெருடல்களும் எல்லோர் மனங்களிலும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன.
படைத்தல், காத்தல், அழித்தல் என்கிற மூன்று வகை செயல்களையும் சதா சர்வ காலமும் நடத்திக் கொண்டிருக்கிற ஒரே இறைவனே வணக்கத்துரியவன் என்கிற நம் அடிப்படை நம்பிக்கை, முதலிரண்டு செய்கைகளால் எந்தவித மாற்றமும் கொள்ளாத போது, அழித்தல் என்கிற இறப்பு வந்து விடும் போது மாத்திரம், இறைவனைத் தாண்டிய காரணங்களை தேட ஆரம்பித்து விடுவது என்பது, உயிர் பறிப்பு அவனுக்குரியதில்லையோ என்கிற பிறழ் எண்ணத்தின் சிதறல்களாகவே முற்றுப் பெறுகிறது.
இறப்பு நடந்திருப்பது அவனுக்கே உரிய சொந்த இடம், அவனே கூறி வைத்திருக்கும் சிறந்த இடம். இறந்தவர்களோ, முழுவதுமாக தங்களை அவனுக்கே அற்பணித்துக் கொண்டோர் கூட்டம், உலகின் சகலமும் துறந்து சரணடைந்தோரின் கூட்டம். அவர்கள் இருந்தது அவனின் நேரடி கண்காணிப்பில், நேரடிப் பார்வையில் இன்னமும் நேரடிக் காவலில். அப்படியானால அவர்களுக்கும் திடுமென இறப்பையே கொடுத்து விடும் அவன் எப்படியான இறைவன்? காலில் விழுந்து மன்றாடியவர்களை காலால் எட்டி உதைத்தானா, அணைத்து மகிழ்ந்திடுவதை அடியோடு வெறுத்து மூர்க்கத்தனமாய் கொன்றேதான் அழித்தானா?
ஏராள கேள்விகள் மிக வெப்ராளமாகவே கேட்கப்படுவதின் வேக ஒலி காற்றைக் கிழித்து விண்ணையே முட்டுகிறது. அர்ஷிலேயே மோதுகிறது. ஏன், ஏன், ஏன்? அடைக்கலம் தேடி வந்தவர்களையும் கூட அநியாயமாக அழித்தொழிக்கும் அவன் இறைவனா? இப்படித்தான் இறைவன் என்றிருப்பான் என்றால், அப்படி ஒரு இறைவன் யாருக்கு வேண்டும், எதற்காக வேண்டும் இங்கே?
விசனம் கொண்டிருக்கும் கேள்விகளில் விபரம் பெற முடியாது, கோபம் கொப்பளிக்கும் வார்த்தைகளில் கடவுளைக் காண முடியாது, பற்றி எரியும் மனசுகளில் பற்றுள்ள இறைவன் இருக்க முடியாது, அலங்கோல எண்ணங்களில் ஆண்டவனின் காட்சி அமர்ந்திடவும் முடியாது. பின் எப்படித்தான் அவனை அறிந்து கொள்வது, அத்தனை கேள்விகளுக்கும் ஒற்றை ஒரு கேள்வியே மொத்த விடையாக, எல்லா மாயங்களும் நீங்கிய பாதையாக. விஷமே எல்லா மருந்துகளுக்கும் அடிப்படையாய் அமைந்திருப்பது போல, எல்லா கேள்விகளுக்கும் உயர்ந்த இன்னொரு பெரிய கேள்வியே இங்கே எல்லாவற்றிற்கும் பதிலாகிப் போகிறது.
இதோ…
இறைவனின் நேரடி கண்காணிப்பில் இல்லாத ஒரு இடமும், ஒரு உயிரும் ஒரு பொருளும் இந்த உலகென்று மட்டுமல்ல, மொத்த பிரபஞ்சத்திலும் ஏதாவது ஒன்று இருக்கிறதா? இருக்கிறது என்று சொல்லிவிடக்கூடிய திடமான பதில் என்று ஒன்று இருக்கிறதா? யாருடைய திட்டப்படியும் இல்லாமல், இறைவனின் எண்ணப்படி மாத்திரமே பிறப்பெடுத்து வந்து, “வந்து பிறந்து விட்டேன் மண்ணில் அதனால் வாழ்ந்து முடித்து விடுகிறேன்” என்று சமரசமாகி இந்த பூமியில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையே ஒரு மகா சரணாகதி அல்லவா? மறுக்க முடியுமா அதை? பிறந்திருக்க வேண்டாம் என்று நினைத்திருக்க முடியுமா, இல்லை அப்படி ஒரு நினைப்பு ஏற்பட்டிருக்க ஒரு வழியும் கிடைத்திருக்கத்தான் முடியுமா?
இப்படி எதுவுமே முடியாது என்று சொல்வதில் வருகிற ஏக்கப் பெருமூச்சில், கவிழ்ந்திருக்கும் தலை நிமிர்கிற பார்வையில்…
அதோ தன் இருப்பை புன்னகை ஒன்றில் உறுதி செய்து, எப்போதும் போல் தன் இயக்கங்களை தொடர்ந்து கொண்டிருக்கிறான் பூஜியத்துக்குள்ளே ஒரு ராஜியத்தை ஆண்டு கொண்டிருக்கும் அந்த சர்வலோகத்தின் அதிபதி அவன்!!
source: http://seasonsnidur.blogspot.in/2015/09/blog-post_66.html