தேவை அரபி பி.எட்.
முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
முஸ்லிம்கள் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் மிகவும் மோசமாகப் பின்தங்கியுள்ளார்கள். எனவே அவர்களுக்குப் பத்து சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என அரசுக்கு சச்சார் கமிட்டி பரிந்துரை செய்தும் அதன் பரிந்துரை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
இது ஒருபுறமிருக்க, ஏற்கெனவே உள்ள வாய்ப்பையும் தட்டிப் பறிக்கும் நிலையும், வாய்ப்பை உருவாக்காத நிலையுமே நீடிக்கிறது.
பள்ளிக்கூடப் பாடத்திட்டத்தில் பத்து, பன்னிரண்டாம் வகுப்புகளில் அரபி மொழி ஒரு மொழிப்பாடமாக இருந்த அங்கீகாரத்தைச் சமச்சீர்க் கல்வி எனும் பெயரில் அரசு தட்டிப் பறித்தது. அதாவது அதன் மதிப்பெண் பாடத்தின் மதிப்பெண்ணாகச் சேர்க்கப்படமாட்டாது. இதனால் அரபிமொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் வேலையை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
அரபி மொழியில் அஃப்ளலுல் உலமா எனும் இளங்கலைப் பட்டத்திற்கு நிகரான தேர்வைச் சென்னைப் பல்கலைக் கழகமும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகமும் நடத்திவருகின்றன.
இதனைத் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான முஸ்லிம் மாணவ, மாணவியர் எழுதி வெற்றிபெறுகின்றனர். ஆனால் அவர்கள் பள்ளியில் அரபி ஆசிரியராகச் சேர்வதற்கான அரபி பி.எட். தமிழகத்தில் ஓரிடத்தில்கூட இல்லை. இதனால் அஃப்ளலுல் உலமா தேர்வை எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை.
அதனையடுத்து மாநில அளவிலான பேராசிரியர் தகுதித் தேர்வை (ஸ்லெட்) தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக் கழகங்கள் நடத்துகின்றன. அதில் அரபி மொழியில் எம்.ஏ., எம்.ஃபில். படித்தவர்கள் பேராசிரியருக்கான தகுதித் தேர்வை எழுத வாய்ப்பில்லை. ஏனென்றால் அரபி மொழி அதில் இடம்பெறவில்லை. இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழக முஸ்லிம் மாணவ, மாணவியர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். உரிய முறையில் படித்தும் வேலை வாய்ப்பின்றி அலைய வேண்டிய கட்டாயச் சூழ்நிலைக்கு இந்த அரசு அவர்களைத் தள்ளியுள்ளது.
மேலும் அரபியில் எம்.ஃபில். வரை பட்டம் பெற்றவர்கள், அதற்குமேல் பிஎச்.டி. ஆய்வை மேற்கொள்ளலாம் என்றால் அதற்கெனப் புதியதொரு சட்டத்தைப் பல்கலைக் கழகங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன. அதாவது 10, +2, இளங்கலை, முதுகலை என வரிசையாகப் படித்திருக்க வேண்டுமாம். இதனால் தகுதி அடிப்படையில் அஃப்ளலுல் உலமா தேர்வு எழுதி, அதன் பின் எம்.ஏ., எம்.ஃபில். பட்டம் பெற்றவர்கள் பிஎச்.டி. ஆய்வை மெற்கொள்ள இயலாத சூழ்நிலை நிலவுகிறது.
எனவே சிறுபான்மைப் பட்டியலிலுள்ள முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் அரபி மொழியைப் பத்து, பன்னிரண்டாம் வகுப்புகளில் விருப்பப் பாடமாகச் சேர்த்து, அதன் மதிப்பெண்களையும் மற்ற மதிப்பெண்களோடு சேர்த்துக்கொள்ள அங்கீகாரம் வழங்குமாறும் அரபி அஃப்ளலுல் உலமா தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் தகுதியைப் பெற அரபி பி.எட். படிப்பை ஏற்படுத்தித் தருமாறும் முஸ்லிம் மாணவ, மாணவியர் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கின்றார்கள். அத்தோடு, மாநில அளவிலான பேராசிரியர் தகுதித் தேர்வில் (ஸ்லெட்) அரபியை இணைக்குமாறும், அரபி சார்ந்த படிப்புக்கு என்னென்ன தடைகள் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் நீக்கி, அதை எளிமைப்படுத்துமாறும் யுஜிசி தேர்வாணையத்தைத் தமிழக முஸ்லிம் மாணவ, மாணவியர் கேட்டுக் கொள்கின்றனர்.
source: http://www.samooganeethi.org/index.php/category/carreers/item/854