அகபா – இஸ்லாத்தின் ஏறுமுகம்
அன்சாரிகள் என்று நாம் போற்றும், நேசிக்கும் ஓர் சமூகத்தை வரலாறு பதிவு செய்ய தங்களை தயார்படுத்திக் கொண்ட இடம்தான் அகபா. மக்காவிற்கு வெளியே உள்ள பள்ளத்தாக்கு பகுதி. படிக்கின்ற ஈமானிய உள்ளங்கள் அந்த 70 பேரில் நாம் ஒருவராக இருந்திருக்க கூடாதா? என்று ஏக்கமடைய செய்த நிகழ்வுதான் அகபா.
எப்படி ஏக்கம் இல்லாமல் போகும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் சுவனத்தை வாக்குறுதியாக பெற்றவர்களாயிற்றே. வேறு என்ன வேண்டும் இந்த உலகில் இறையடியானுக்கு?
நபிகாளாரின் மக்கா நகர வாழ்க்கையில் 13ம் ஆண்டு. குறைஷிகள் கடும் நெருக்கடி போட்டாலும், அண்ணலாரை இரகசியமாக மதினாவாசிகள் சந்தித்தனர். நபிகளாரை மதினாவுக்கு புலம்பெயர்ந்து வருவதற்க்கான ஏற்பாடு எப்படி அமைய வேண்டும் என்ற ஆவல் அவர்கள் மக்கா நோக்கி கிளம்பியதிலிருந்தே தெரிகின்றது.
நடுநிசி இரவு, குறைஷி சமூகம் உறக்கத்தில். அசத்திய சமூகம் உறங்கட்டும், சத்தியம் எழுச்சி பெற வேண்டுமல்லவா?
பாலைவன பள்ளத்தாக்கில் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறிய தந்தை அப்பாஸோடு வருகை தர,
”மதினாவாசிகளே, முஹம்மத் எங்களிடத்தில் எப்படி கண்ணியமாய் இருக்கின்றார் என்று உங்களுக்கு தெரியும். அவரை நாங்க எவ்வாறு பாதுகாத்து வருக்கின்றோம் என்பதும் உங்களுக்குத் தெரியும். இப்போது அவர் உங்களிடத்தில் வர விரும்புகின்றார்”
”நீங்க அவர்களை பாதுகாத்து உதவி செய்வீர்கள் என்றால் அழைத்து செல்லுங்கள், இல்லை எதிரிகளிடத்தில் ஒப்படைச்சி விடுவீங்கன்னா, அவர்களை எங்களோடு விட்டுவிடுங்கள்”
வார்த்தையில் தெளிவு, அப்பாஸ் பேசி முடித்தார்.
மதீனாவாசிகளில் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பேச ஆரம்பித்தார்…
செய்வோமா வேண்டாமா? என்னமாதிரி கஷ்டம் வரும். இப்படியெல்லாம் சிந்திக்க தெரியாதவர்கள் அங்கு வந்திருந்த மதினாவாசிகள். “சத்தியத்தை ஏற்றுக் கொண்டோம் அதற்காக எதையும் இழப்போம் அவ்வளவுதான்” என்ற மன நிலை.
”அல்லாஹ்வுடைய தூதரே! எங்களிடத்தில் என்ன ஒப்பந்தம் எதிர்பார்க்குறீங்க?”
அண்ணலார் மதீனா வரவேண்டும் என்பதில் உறுதி. அதற்கு தேவையான அனைத்தும் செய்வோம் என்பதில் தெளிவு. பேசிய வார்த்தை அதை காட்டுகின்றது.
அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்;
”மதீனாவாசிகளே….! நீங்கள் இன்பத்திலும் துன்பத்திலும் எனக்கு செவிசாய்த்து, கட்டுப்படனும். வசதியிலும் வசதியின்மையிலும் செலவு செய்யனும், நன்மையை ஏவி தீமைகளைத் தடுக்கணும், அல்லாஹ்வுக்காக நீங்கள் தியாகம் செய்யத் தயாராகணும், அல்லாஹ்வுடைய விஷயத்தில் யாராவது உங்களை பழித்தால் அந்த வார்த்தைகள் உங்களை பாதிக்க கூடாது, ஆட்சி, அதிகார விஷயத்தில் சண்டையிடக் கூடாது, நான் உங்களிடம் வந்து விட்டால் நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும்; உங்களையும் உங்க குடும்பத்தினரையும் பாதுகாப்பது போல் என்னைப் பாதுகாக்க வேண்டும் ”
தூதரை மதிக்காத, அவர்களை பற்றி கவலைப்படாத வேதம் கொடுக்கப்பட்ட சமூகம் எப்படி போனது என்பதற்கு வரலாறு சாட்சியாக நிற்கின்றது. அதுபோன்று இந்த உம்மத் இருக்க கூடாது என்பது பெருமானாருடைய ஆவல். அப்புறம், இஸ்லாமென்றால், வணக்க வழிபாடுகளில், முஸ்லிம் சமூக கருத்து வேறுபாடுகளில், மஹல்லாஸஊர் பிரச்சினைகளில் காலம் தள்ளும் என் போன்ற மக்களுக்கு மேலே அண்ணலார் சொன்ன வார்த்தைகள் எந்தளவுக்கு புரிந்ததுன்னு தெரியல.
சத்தியத்திற்காக தியாகம், இழப்பு, செலவழித்தல் இவைதான் இஸ்லாத்தின் வாய்ப்பாடு. அசத்தியத்தின் வீழ்ச்சியை கண்ணெதிரே பார்க்கத்துடிக்கும் மனிதர்களை உருவாக்கத்தான் இஸ்லாம் விரும்புகின்றது.
அசத்தியமென்றால்..
சிலை வணக்கத்தை கட்டி காக்கின்றார்களே அது அசத்தியம். நபிகளாருக்கெதிராக விஷமமும் அவதூறும் செய்கின்றார்களே அது அசத்தியம். குர்ஆனின் ஓர் கருத்தும் மக்களிடத்தில் சென்று விடாமல் உலக மீடியாக்களை தன் பாதையில் செலுத்துகின்றார்களே அது அசத்தியம். உலக பொருளாதாரத்தை வட்டியின் கீழ் கொண்டு வந்து பலகீனர்களை கொடுமைக்கு உள்ளாக்கின்றார்களே அது அசத்தியம். தீவிரவாததிற்கு எதிராக என்னும் பெயரால் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிக்கின்றார்களே அது அசத்தியம். இப்படி எத்தனையோஸ
”அல்லாஹ்வின் தூதரே! ஒப்புக்கொள்கின்றோம்” – கஅப் அவர்களின் வார்த்தை மதின சமூக பொறுப்பாளராக.
இடைமறித்தார் ஓர் மதினத்து இளைஞர், சமூக அக்கறையும் பொறுப்புணர்வும் கொண்ட இளைஞர்.
“என் மக்களே! நீங்கள் எதன் பக்கம் ஒப்புக்கொள்கின்றீர்கள் என்று தெரிந்துதான் ஒப்புக்கொள்கிறீர்களா? இவர் அல்லாஹ்வுடைய தூதர். இவர்களை அழைத்து சென்றால். ஒட்டுமொத்த உலகத்தையும் நீங்க எதிர்க்க வேண்டி வரும். கருப்பர் வெள்ளையர் என்றில்லாமல் அனைவரையும் எங்களை துண்டாட தயாரா என்று நீங்கள் அழைப்பது போன்ற காரியத்தை கையில் எடுக்கின்றீர்கள்.”
”விளைவு என்னவாகும் தெரியுமா? உங்களில் பலர் கொல்லப்படலாம். உங்கள் குடும்பங்கள், வீடுகள் சூரையாடப்படலாம். இதெல்லாம் தெரிந்துதான் செய்கின்றீர்களா?”
செய்யும் காரியத்தில் கவனத்தை மெருகேற்றும் இளைஞர். சமூகத்தை பற்றி கவலையில்லாமல் அலைந்து திரிபவர்கள் போன்று அல்ல. கருத்து வேறுபாடுகளில் சமூகத்திற்குள் அடித்து கொண்டு திரியும் அநிநியாயக்காரர் அல்ல.
“ஆம், அனைத்தையும் தெரிந்துதான் ஒப்புக்கொள்கின்றோம். அல்லாஹ்வுடைய தூதருக்காக நாங்கள் எதை இழந்தாலும் அது எங்களிடத்தில் மிச்சப்பட்டதைவிட சிறப்பானது; இதில் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம்”
”ஓகே, அல்லாஹ்வுடைய தூதரே! இதெல்லாம் செய்தால் எங்களுக்கு என்ன கிடைக்கும்?” – மதினாவாசிகளின் குரல்.
எதார்த்தமானவர்கள் அவர்கள், உள்ளொன்றும் வெளியொன்றும் என பேசத்தெரியாதவர்கள்.
பளிச்சென்று கேள்வி.
அருமையான பதில்…
“சுவனம்..
இவையெல்லாம் நீங்கள் நிறைவேற்றினால். அல்லாஹ் சுவனத்தை உங்களுக்கு தருவான்” – பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நச்சென்ற வார்த்தைகள்.
பெருமானார் கருணையாளர், மக்களுடைய சுமைகளை இறக்கி வைக்க வந்தவர். மனிதன் சிலைக்கு, ஆட்சியாளனுக்கு, உலகத்திற்கு, பெண்ணிற்கு, மன இச்சைக்கு அடிமை ஆவதிலிருந்து விடுதலை பெற அனுப்பப்பட்டவர். இறைவனுக்காக எழுந்து நிற்கும் நல்ல உள்ளத்திற்கு ஆக வெகுமதியான பரிசிற்கு பொறுப்பேற்பதில் என்ன ஆச்சரியம் இருக்க போகின்றது.
மதினாவாசிகள் உற்சாகத்தோடு எழுந்தார்கள்,
”ஆஹா..! இதைவிட வேறு என்ன சிறப்பான வியாபாரம் பூமிக்கு மேலே இருக்க முடியும்? இதோ ஒப்பந்தம் (பைஆ) செய்கின்றோம்.”
ஒவ்வொருவரும் அண்ணலாரின் கையைபிடித்து உறுதி செய்தனர். புதிய உலக அத்தியாயத்திற்கு அடித்தளமிட்டனர்.
மதீனாவாசிகளோடு முடிந்து விடுவதில்லை. சுவனத்திற்காக ஒப்பந்தம் செய்ய எல்லா காலகட்டத்திலும் பெருமானாரின் கரங்கள் நீண்டு இருக்கின்றன. நம் கரங்கள் முன் வருமா? அதுதான் கேள்வி.
source: http://labbaikudikadunews.blogspot.in/2016/02/3_28.html#more