வலுவான குடும்பம் பலமான சமூகம்
CMN SALEEM
மனிதன் கூடிவாழப் பிறந்தவன். குடும்ப மாகவும் தொடர்ந்து சமூகமாகவும் சேர்ந்து வாழ்கின்ற தேவையும் அவசியமும் உடையவன். தனிமனிதனாக இங்கு யாரும் பிறப்பதில்லை.
தாய் தந்தைக்குப் பிள்ளையாக, தாத்தா பாட்டிக்குப் பேரப் பிள்ளையாக, சகோதரன் சகோதரிக்கு உடன் பிறந்தாராக, தாய்மாமன் அத்தைக்கு மருமகன் அல்லது மருமகளாக என்று ஒரு குடும்ப அமைப்பின் அங்கமாகத்தான் அனைவரும் இங்கு பிறக்கின்றனர்.
தனிமனிதனாக இருந்து கொண்டு இங்கு யாரும் எதையும் துளியளவுகூடச் சாதிக்க முடியாது. மானுடப் படைப்பின் தொடக்கத்திலேயே இதை நாம் பார்க்கலாம்.
முதல் மனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் படைக்கப்பட்டபோது அவர் தனிமையில் தான் இருந்துவந்தார். அவர் இருந்ததோ சொர்க்கம். அங்கு எதற்கும் பஞ்சமில்லை. கேட்டதெல்லாம் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தாலும் தனிமை அவரை வாட்டவே செய்தது. ஒருமுறை அவர் உறங்கிக் கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து அவரது வளைந்த விலா எலும்பிலிருந்து அவருடைய இணை ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களை இறைவன் படைத்தான்.
துயில் கலைந்து விழித்தெழுந்த ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது தலைமாட்டில் ஒரு பெண் அமர்ந்திருப்பதைப் பார்த்து, ‘’நீர் யார்?’’ என்று அவரிடம் கேட்டார்கள். அதற்கு ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ‘’நான் ஒரு பெண்’’ என்றார். ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ‘’நீ எதற்காகப் படைக்கப்பட்டுள்ளாய்?’’ என்று கேட்டார்கள். ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ‘’நீர் என்னிடம் அமைதி பெறுவதற்காக’’ என்று கூறினார்கள். (அல்பிதாயா வந்நிஹாயா இப்னுகஸீர்)
ஆக, மனித இனத்தின் தனிமையைப் போக்கவும் அவர்களை ஆசுவாசப்படுத்தவும் குடும்பத்தின் தேவை இன்றியமையாதது. இது மனித வரலாறு தொடங்கிய காலத்தில் முதல் மனிதராலேயே உணரப்பட்டுள்ளது.
குடும்பம் என்றால் என்ன?
சமுதாயத்தின் அடிப்படை ஆதாரக் குழுவாகவும் இயற்கையான அமைப்பாகவும் குடும்பம் இருக்கிறது. நாட்டிற்கும் சமூகத்திற்கும் அடிப் படையான குழந்தைகள் உருவாகும் இடமும் வளரும் இடமும் குடும்பம்தான்.
தாய், தகப்பன், பிள்ளைகள் ஆகியோர் ஒரு கூரைக்குக் கீழ் வாழ்வதால் மட்டுமே அதைக் குடும்பம் என்று சொல்லிவிட முடியாது. மாறாக, இனிய உறவுகளின் சங்கமமே குடும்பம் ஆகும்.
இனிய உறவுகள் என்பது என்ன?
கணவன்- மனைவிக் கிடையிலான உறவு சுமுகமாக இருக்க வேண்டும். பெற்றோர்-பிள்ளைகளுக் கிடையிலான பாசம் பலமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் தமக்கிடையே ஒருமித்த உணர்வுடன் இருக்க வேண்டும். இதையே நாம் இனிய உறவுகள் என்போம்.
குடும்பம் என்பது ஒரு தனிச்சொல்லாயினும் அதைப் பிரித்துப் பார்க்கும்போது அதில் ‘’கொடு இன்பம்’’ என்கின்ற தொனி ஒலிக்கிறது. எனவே, இன்பத்திற்குப் பஞ்சமில்லாத உறவுகளின் சங்கமமே குடும்பம் எனப்படும்.
குடும்ப அமைப்பின் முக்கியத்துவம்
மனிதனுக்குக் குடும்ப அமைப்பு மிகவும் முக்கியமானது. குடும்ப அமைப்பை அறவே இழந்த பிள்ளைகளும் சீரான குடும்பப் பின்னணியற்ற பிள்ளைகளுமே பெரும்பாலும் சிறார் குற்றவாளிகளாக மாறுகின்றனர்.
குடும்ப அமைப்பு என்பது பொதுவாக நாம் நினைப்பது போன்று சாதாரண அமைப்பல்ல. அது மனித இனத்தை வழிநடத்தும் உயர்ந்த பல்கலைக்கழகம். எத்தனையோ புத்தகங்கள் சேர்ந்து சொல்லிக்கொடுக்க முடியாத கல்வியை அது எளிதாகப் புகட்டுகிறது. அதில் பாடம் போதிக்கும் ஆசிரியர்கள் படித்த பட்டதாரிகளாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்களின் அறிவு அசாத்தியமானது.
தங்களின் மாணவர்களாகிய பிள்ளைகளுக் காகவே வாழும் அவர்களின் வாழ்க்கை தியாகம் நிறைந்தது. அதில் போதிக்கப்படும் பாடங்கள் அடுத்த தலைமுறையின் நலன் கருதி இதயசுத்தியோடு போதிக்கப்பட்டவை ஆகும்.
குடும்பம் பற்றி சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தின் 16(3)ஆவது விதி கூறும்போது, “குடும்பம் என்பது சமூகத்தின் இயல்பானதும், அடிப்படையானதுமான குழு அலகாகும். அது சமூகத்தாலும், தேசத்தாலும் பாதுகாக்கப் படுவதற்கு தகுதி பெற்றுள்ளது” ” (The family is the natural and fundamental group unit of society and is entitled to protection by society and the State) என்கிறது.
குடும்பத்தை எதற்காக இயற்கையான அமைப்பு என்று சொல்கிறார்கள் என்றால், அது காலம் காலமாக இருக்கிறது. அரசாங்கம், நாடு போன்ற அமைப்புகள் உருவாவதற்கு முந்தைய காலத்திலிருந்தே குடும்பம் இருந்து கொண்டிருக்கிறது. குடும்பம், அரசுக்கு முந்தையது; அரசைவிட மேலானது; இயற்கை யானது. முதல் மனிதரின் காலம் தொட்டு இருந்துவரும் தொன்மையான குடும்ப அமைப்பை அழியாமலும் சிதையாமலும் காப்பாற்ற வேண்டியது அனைவரின் பொறுப்பாகும்.
இஸ்லாத்தில் குடும்ப அமைப்பு
இஸ்லாமிய வாழ்வில் குடும்பமே அடித்தள மாகும். அதன் பலம், சமூகத்தின் பலம். அதன் பலவீனமே சமூகத்தின் பலவீனம். இஸ்லாம் குடும்பத்தை எதிர்கால சந்ததியை உருவாக்கும் அடிப்படை நிறுவனமாகப் பார்க்கிறது. திருக்குர்ஆன் குடும்ப வாழ்வுக்குத் தரும் முக்கியத்துவத்தைப் பின்வரும் அம்சங்களில் நாம் விளங்கலாம்:
1. திருக்குர்ஆன் குடும்பத்தை இறைச்சான்று என வர்ணிக்கிறது:
وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ (سورة الروم:21)
நீங்கள் (உங்கள்) துணைவியரிடம் மன அமைதி பெறுவதற்காக உங்களிலிருந்தே அவர்களை உங்களுக்காக அவன் படைத்து, உங்களிடையே பாசத்தையும் பரிவையும் அவன் ஏற்படுத்தியிருப்பதும் அவனுடைய சான்றுகளில் அடங்கும். சிந்திக்கும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல சான்றுகள் உள்ளன. (திருக்குர்ஆன், 30:21)
2. குடும்பம் சார்ந்த அறங்களை இறை நம்பிக்கையின் அங்கங்களோடு திருக்குர்ஆன் இணைத்துப் பேசுகிறது. பின்வரும் இறைவசனங்களில் இதை நாம் காணலாம்:
உங்கள் முகங்களை நீங்கள் கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக, நன்மை புரிவோர் யாரெனில், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் வானவர்களையும் வேதங்களையும் நபிமார்களையும் நம்பிக்கை கொண்டவர் தான். அவர்கள் (தமது) செல்வத்தைத் தாம் விரும்பினாலும்கூட அதை உறவினர்களுக்கும் அநாதைகளுக்கும் வறியவர்களுக்கும் வழிப்போக்கருக்கும் யாசிப்போருக்கும் அடிமைகள் மீட்புக்கும் வழங்குவார்கள். தொழு கையைக் கடைப்பிடிப்பார்கள். ஸகாத் (எனும் கட்டாய தர்மத்)தை வழங்கு வார்கள். வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவார்கள். வறுமையிலும் நோய் நொடியிலும் போர்க்காலத் திலும் பொறுமை காப்பார்கள். அவர்களே வாய்மையாளர்கள். அவர் களே இறையச்சமுடையோர் ஆவர்.(திருக்குர்ஆன், 2:177)
(நபியே!) தன்னைத் தவிர வேறு யாரையும் நீங்கள் வழிபடக் கூடா தென்றும் பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டுமென்றும் உம்முடைய இறைவன் கட்டளையிடுகின்றான். அந்த இருவரில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையடைந்த நிலையில் உம்மிடம் இருந்தால், அவர்களை நோக்கி ச்சீ என்று(கூடச்) சொல்லிவிடாதீர். அவர்களை விரட்டாதீர். அவர்களிடம் கண்ணியமான சொல்லையே சொல்வீராக. பணிவெனும் சிறகைக் கனிவுடன் அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக. மேலும், இறைவா! நான் சிறுவனாக இருந்தபோது அவர்கள் என்னைப் பராமரித்ததைப் போன்று அவர்களுக்கு நீ கருணை காட்டுவாயாக என்று பிரார்த்தனை புரிவீராக. (திருக்குர்ஆன், 17:23,24)
இந்த வசனங்கள் உறவுகள் மற்றும் குடும்பம் சார்ந்த அறங்களின் உயர்வையும் அவற்றின் புனிதத்தையும் புலப்படுத்துகிறது. முந்தைய வசனம் (2:177), உறவினர்களை அரவணைத்து அவர்களின் தேவையறிந்து ஆதரவளிப்பதை இறைநம்பிக்கையின் பாற்பட்டது என்று பேசுகிறது. அடுத்த வசனம் (17:23,24), பெற்றோருக்கு நன்மை செய்வது இறைவழி பாட்டுடன் இணைத்துப் பேசும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்துகிறது.
3. குடும்பத்தோடு தொடர்புடைய சட்டங்கள் குர்ஆனில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் மணமுடித்தல், மணவிலக்கு, வாரிசுரிமை, குழந்தை வளர்ப்பு ஆகியவை தொடர்பான சட்டங்கள் அனைத்தையும் திருக்குர்ஆன் போதிய அளவு விவரிக்கின்றது.
திருக்குர்ஆன் குடும்ப அமைப்புக்கு இவ்வளவு பெரிய முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. பிறசமயத்தார் பெரும்பான்மையாக வாழும் ஒரு நாட்டில், அதிலும் பெரும்பான்மைவாதம் சிறுபான்மையினரை நசுக்கத் துடிக்கும் ஒரு தருணத்தில், சிறுபான்மையினராக வாழ்கின்ற முஸ்லிம்கள் குடும்ப அமைப்பைப் பேணிக் காப்பது என்பது கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பாகிறது. ஏனெனில், சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையினரின் சிந்தனையாலும் கலாச்சாரத்தாலும் பெரும்பாலும் பாதிப்புக்கு ஆளாவார்கள்.
அத்தோடு இஸ்லாமிய வாழ்வமைப்பும், இஸ்லாமிய சிந்தனையை ஆழ்ந்து படிப்ப தற்கான வாய்ப்பும், வசதிகளும் இந்நிலையில் மிகக் குறைவாகவே இருக்கும். இத்தகைய சூழலில் முஸ்லிம்களை, ஆளுமை சிதைவடை யாமல் காக்கும் முதன்மையான அமைப்பு குடும்பம் எனும் நிறுவனம்தான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
முஸ்லிம் குடும்பங்களின் இன்றைய நிலை
நமது முஸ்லிம் சமூகத்தில் குடும்ப வாழ்வு என்பது படிப்படியாகச் சிதைந்து வருவதைப் பார்க்க முடிகிறது. எஃகுக் கோட்டையைப் போன்று பலமாக இருந்து வந்த முஸ்லிம் குடும்பங்களின் அடித்தளம் ஆட்டம் கண்டு வருகிறது. குடும்பச் சிதைவுக்கு எடுத்துக் காட்டாக மேலைநாடுகளை எடுத்துச் சொன்ன காலம்போய், இப்போது முஸ்லிம் குடும்பங்களையே உதாரணம் சொல்லலாம் எனும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. இதைப் பற்றிய துல்லியமான புள்ளி விவரங்கள் இருக்கிறதா, இல்லையா என்பது தெரியாவிட்டாலும், இன்றைய தினம் சமூகத்தின் மிக முக்கியான, முதன்மையான பேசுபொருளாக இது மாறியிருப்பது உண்மை.
இன்றைக்குக் குடும்பங்கள் எவ்வாறெல்லாம் சிதைந்துவருகிறது என்பதை பின்வரும் அம்சங்களில் நாம் பார்க்கலாம்:
1. பெருகிவரும் மணமுறிவு: பெருநகரம், நகரம், கிராமம் எனும் பாகுபாடின்றி எல்லாப் பகுதிகளிலும் மணமுறிவு காணப்படுகிறது. மணமுறிவுக்கு ஆளாகாத குடும்பங்களில்கூட சுமூக உறவின்மை பெரும் பிரச்சினைகளில் போய் முடிகிறது.
2. பிறமதத்தவரை மணமுடித்தல்: இது இன்றைக்கு முஸ்லிம் சமூகத்தில் படிப்படி யாக அதிகரித்து வருகிறது. முன்னர் அத்தகைய பிள்ளைகளை ஒரேயடியாகத் தலைமுழுகிய முஸ்லிம் பெற்றோர்கள், பின்னர் கண்டும் காணாமல் விட்டார்கள். அதன் பின்னர், ஊர்உலகத்திற்குத் தெரியாமல் இரகசியமாக அவர்களே அதற்கு அனுமதி அளித்தார்கள். தற்போது அத்தகைய திருமணத்தை, பத்தி ரிக்கை அடித்து விநியோகித்து ஊர்உலகத்தைத் திரட்டி வைத்துக்கொண்டு தாமே முன்நின்று திருமணம் செய்துகொடுக்கிறார்கள்.
3. உறவுகள் முறையாகப் பேணப்படாமை: இன்றைக்கு முஸ்லிம் குடும்பங்களில் மிக நெருங்கிய உறவினர்களுக்கு மத்தியிலேயே கடும் பிரச்சினைகள் காணப்படுகிறது. உறவு முறிவோ கோபதாபமோ இல்லாதபோதும் தொடர்புகள் அறவே இல்லாமல் வாழும் நிலை பரவலாகி உள்ளது.
இப்பகுதியில் மாமியார்- மருமகள், நாத்தனார்-மச்சினி போன்ற உறவுகள் ஒட்டுறவாட முடியாத நிலையும் அதனால் கணவன் மனைவி உறவிலோ அல்லது சொந்தபந்தங்களின் உறவிலோ கடும் விரிசல் உருவாவதும் நம் சமூகத்தில் பரவலாகக் காணப்படுகிறது.
குடும்பச் சிதைவின் விளைவுகள்
குடும்பச் சிதைவின் காரணமாகப் பல்வேறு தீமைகள் விளைகின்றன. அவற்றில் முக்கிய மானவை: 1. சமூகச் சீரழிவு 2. பொருளாதாரச் சுமை.
1. உறவுகள் சிதைந்து குடும்ப அமைப்புமுறை ஆட்டம் கண்டுவரும் நாடுகளில் அமெரிக்கா மிக முக்கியமானது. ஏறத்தாழ சரிபாதி திருமணங்கள் அங்கு மணமுறிவில் முடிவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதனால் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் மட்டுமன்றி, குழந்தைகளின் வாழ்க்கையும் அவர்களின் எதிர்காலமும் பாழாகின்றன.
தவறான வாழ்க்கைமுறை காரணமாக அங்கு பிறக்கும் மொத்தக் குழந்தைகளில் நாற்பது சதவீதக் குழந்தைகள், திருமணம் ஆகாத பெண்களுக்குப் பிறக்கின்றன. மண முடிக்காமல் தாயாகும் பெண்களில் கணிசமானோர் பள்ளிக்கூடம் போகும் பதின்ம வயதினர். அங்கு ஒரு தாய் தன் பிள்ளைக ளுக்குச் செய்யும் உச்சபட்சமான அட்வைஸ், பாலுறவின்போது கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்திக்கொள் என்பதுதான்.
ஆக, மணமுறிவு, பதின்மவயது மகப்பேறு, ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள், திருமண மாகாத தாய்மார்கள், ஒருபாலுறவு, தன் பாலினத் திருமணம் என சமூகச் சீரழிவுகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
2. குடும்பச் சிதைவால் பாதிப்புக்குள்ளாகும் மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசின் தலையில் விழுகிறது. ஏனெனில், அவர்களைக் காப்பதற்கு நெருங்கிய உறவுகள் பெரும்பாலான வீடுகளில் இல்லை. இதனால், அரசுக்குப் பெரும் பொருளாதாரச் சுமை ஏற்படுகிறது.
குடும்பங்கள் சிதைந்துபோவதால் பிரிட்டனில் ஆண்டுக்கு 20 பில்லியன் பவுண்ட் (சுமார் ஒரு லட்சத்து அறுபதாயிரம் கோடி இந்திய ரூபாய்கள்) செலவு பிடிக்கிறது என 2006ஆம் ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் வெளியான பிரேக்டவுன் பிரிட்டன் (உடைந்துபோன பிரிட்டன்) எனும் அறிக்கை கூறுகிறது.
சமூகச் செலவுகள் என்ற பெயரில் மேலை நாடுகள் குடும்பச் சிதைவுப் பிரச்சினைக ளுக்காகச் செலவு செய்யும் தொகை (2005ஆம் ஆண்டுக் கணக்கீட்டின்படி) அந்நாடுகளின் பொருளாதார மதிப்பில் 16 முதல் 29 விழுக்காட்டையும் தாண்டுகிறது.
இறுதியாக
குடும்பம் என்பதைக் குறிக்க அரபியில் உஸ்ரத் எனும் சொல் ஆளப்படுகிறது.
الأسْرَةُ: مَأْخُوذٌ مِنَ الأسْرِ، وَهُوَ الْقُوَّةُ، سُمُّوا بِذَلِكَ لأِنَّهُ يَتَقَوَّى بِهِمْ (لسان العرب)
உஸ்ரத் எனும் சொல், அஸ்ர் எனும் வேர்ச் சொல்லில் இருந்து பிறந்ததாகும். இதற்கு வலிமை என்று பொருள். குடும்பத்தில் ஒருவர் மற்றவருக்கு வலிமையாகத் திகழ்கிறார்கள்; ஒருவர் மற்றவருக்குப் பலம் சேர்க்கிறார்கள் என்பதாலேயே குடும்பத்திற்கு உஸ்ரத் எனும் சொல் அரபியில் வழங்கப்படுகிறது.
அது மட்டுமன்றி, அஸ்ர் என்ற சொல்லுக்குப் சிறைப்படுத்தல், கையைக் கட்டுதல் போன்ற பொருள்களும் உண்டு. பெரும்பாலும் சிறைப்படுத்தும்போது கையைக் கட்டவோ விலங்கிடவோ செய்வார்கள். அவ்வாறே, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த அங்கத்தினர்கள் யாவரும் பாசக் கயிற்றால் ஒரு பூமாலையைப் போன்று பிணைக்கப்பட்டவர்கள் என்ற பொருளை அந்தச் சொல் குறிக்கும்.
எனவே, நம்முடைய உறவுகளைக் கண்ணிமைபோல் காப்போம். குடும்பங்களைக் கோட்டைகளைப் போன்று வலுப்படுத்து வோம். அதன் ஊடாக முஸ்லிம் சமூகத்தைப் பலமடங்கு பலமாக்குவோம்.
source: http://www.samooganeethi.org/index.php/category/salim-articles/pathetic/item/841