இளைய தலைமுறையும், இஸ்லாமிய தலைமையும்!
அல்லாஹ் மனித சமூகத்தை படைத்தது முதல் யுகமுடிவு நாள் வரையிலான அனைத்து செயல்பாடுகளும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வழிமுறையிலேயே இயங்குவதற்கு நியமனம் செய்துள்ளான்.
ஆதி முதல் அந்தம் வரை நடக்கும் எந்த செயல்பாடுகளும், நிகழ்வுகளும் அவனுடைய ஞானத்திற்கு அப்பாற்பட்டோ, அவனது வரம்புகளை மீறியோ நடைபெறுவது இல்லை. மனித இனம் மட்டுமின்றி இப்பிரபஞ்சத்தின் அத்தனை எல்லைகளிலும் உள்ள ஒவ்வொரு ஜீவராசிகளின் ஜனனமும், மரணமும் மிகத் தெளிவாக முன்னரே தீர்மானிக்கப்பட்ட நியதியில் அவை அவற்றிற்கான வரையறையுடன்தான் இயங்குகின்றன.
”இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை.மேலும் அவை வாழும் இடத்தையும், (இருக்கும்) இடத்தையும், (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன.” (அல் குர்ஆன் 11:6)
இப்படி ஒழுங்குபடுத்தப்பட்ட உலக இயக்கம் என்பது ஒட்டுமொத்த ஜீவராசிகளுடன் மனிதர்களையும் உள்ளடக்கியதுதான். எனில் மற்றெந்த படப்புகளும் தங்களுக்கு விதிக்கப்பட்ட வரம்புகளை மீறாதபோது மனிதன் மட்டுமே தன்னுடைய பொறுப்புகளையும் தன் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளையும் மீறி அறியாமையின் காரணமாக தவறிழைக்கிறான்.
எனவேதான் கருணையாளனான அல்லாஹ் தன்னுடைய அடியார்களை நேர்வழிப்படுத்தவும் அவர்கள் மறந்து போனவற்றை ஞாபகமூட்டி முற்றிலும் ஒழுக்கச் சார்புகளுடன் வாழ கற்றுக்கொடுக்கவும் இறைத்தூதர்களை அனுப்பி வைத்தான்.
இந்த இறைத்தூதர்கள் யாவரும் அந்த மனிதர்களிடமிருந்தே உருவாகி இறைவாக்குகளால் பக்குவப்படுத்தப்பட்டு பின்னர் மனிதர்களுக்கு உபதேசம் செய்யும் தலைவர்களாக பரிணமித்தனர்.
இந்த அடிப்படையில் புரிந்துகொண்டால் தலைமைத்துவம் என்பது எவ்வளவு பெரிய பாரிய பொறுப்புகளைக் கொண்ட நபித்துவத்தின் இன்றியமையாத அங்கமாக இருந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். அப்படியாக இவ்வுலக மக்களுக்கு வழிகாட்டியாக தோன்றிய இறுதித் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த ஒட்டுமொத்த மானுட சமூகத்தையும் வழிநடத்தும் மிகப் பெரிய சுமையை தம் கல்பில் வாங்கிக்கொண்டார்கள்.
அந்தச் சுமையின் கனம் பற்றி திருக்குர்ஆன் இவ்வாறு பேசுகிறது:
(நபியே!) நாம் ஒரு மலையின் மீது இந்தக் குர்ஆனை இறக்கியிருந்தோமானால், அல்லாஹ்வின் பயத்தால், அது நடுங்கிப் பிளந்து போவதாகக் கண்டிருப்பீர்.மேலும், மனிதர்கள் சிந்திக்கும் பொருட்டு இத்தகைய உதாரணங்களை நாம் அவர்களுக்கு விளக்குகிறோம்.(அல் குர்ஆன் 59:21)
நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக் காட்டினோம்.ஆனால் அதைச் சுமந்து கொள்ள அவை மறுத்தன.அதைப் பற்றி அவை அஞ்சின.ஆனால் மனிதன் அதைச் சுமந்தான்.நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும், அறிவிலியாகவும் இருக்கின்றான். (அல் குர்ஆன் 33:72)
இன்றைய நாளில் பரவலாக இஸ்லாமிய தலைமைத்துவம் பற்றிய விளக்கங்களும், போதனைகளும் சரமாரியாக மக்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டு, பல்வேறு வடிவங்களில் பின்பற்றப்பட்டும் வருகின்றன. ஒவ்வொருவரும் தங்களுடைய கணிப்பின் அடிப்படையிலான இஸ்லாமிய தலைமைத்துவமே நிஜமான தலைமைத்துவ வழிமுறை என்று நம்புகிறார்கள். எனினும் பொது சமூகத்தின் மத்தியில் இஸ்லாமிய தலைமைத்துவம் குறித்த வேறுவிதமான மாற்றுக் கருத்துகள் உருவாகி இந்தத் தகுதியின் மதிப்பு கீழிறங்கி வருகிறது.
தலைமைத்துவம் என்ற பெரிய சுமையை சுமந்து கொண்ட இறைத்தூதரின் முந்தைய கால வாழ்கைச் சூழ்நிலைகள் அவர்கள் வாழ்ந்த சமூகத்தில் அவர்களுடைய இருப்பு, பெருமானாரின் சித்தாந்தங்களை முதன்முறையாக ஏற்றுக்கொண்ட தலைமுறையினரின் ஆட்சி முறைகள் ஆகியவற்றை ஆழ்ந்து பகுப்பாய்வு செய்து இன்றைய காலச் சூழ்நிலைகளுடன் ஒப்பீடு செய்வதன் மூலம் நமக்கு தலைமைத்துவம் குறித்த சில வடிவங்கள் கிடைக்கலாம். அதன்மூலம் தலைமைத்துவம் குறித்து பொதுமக்களிடம் இழையோடிக் கிடக்கும் தப்பபிப்ராயங்களை களைந்து எல்லா முஸ்லிம்களையும், இன்ன பிற சக சமூகங்களையும் ஆதிக்க சக்திகளுக்கு எதிரான மிகப் பெரும் போராட்டம் ஒன்றில் ஒன்றிணைக்க முடியும்.
இன்றைய நாட்களில் இஸ்லாமிய உலகம் சந்திக்கும் பிரச்னைகள் மற்றும் சவால்களை தீரத்தோடு எதிர்கொண்டு மக்களை வழிநடத்தக்கூடிய தலைமை ஒன்று இல்லாமல் போனது துரதிருஷ்டவசமானதே. உலக அளவில் முஸ்லிம்களுக்கு ஓர் உறுதியான தலைமைத்துவம் ஏற்பட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அது குறித்து கவலையுடன் பல சமயங்களில் நம்மிடையே பேசப்பட்டும் வருகிறது. ஆனால் அப்படி விவாதிக்கப்படும் பல்வேறு சிந்தனைகள் யதார்த்தத்திற்கு வெகு தூரம் அப்பாற்பட்டவை. கிலாஃபத், இஸ்லாமிய ஆட்சி போன்ற சொற்பதங்கள் மக்களை அந்த இலக்கை நோக்கிய யதார்த்தமான நடைமுறைகளிலிருந்து திசைதிருப்பவே இன்று பயன்படுத்தப்படுகின்றன. இன்று உலக முஸ்லிம்கள் பிரதேச மற்றும் பிராந்திய வாரியாக பல்வேறு வகையான அடக்குமுறைகளையும் பிரச்னைகளையும் சந்தித்து வருகிறார்கள். அவை எல்லாவற்றையும் ஒரே கண் கொண்டு பார்ப்பதும் அந்தப் பிரச்னைகளுக்கு ஒரே மாதிரியான ஒரே இரவில் கிடைக்கும் கற்பனைத் தீர்வுகளை சொல்வதும் முற்றிலும் பிழையான அணுகுமுறையாகும்.
எனவே பிராந்திய ரீதியாக அந்தந்தப் பகுதி முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு அவர்களைக் கொண்டே தீர்வுகளை வழங்கக்கூடிய தலைமைத்துவம் ஒன்று உருவாவதன் மூலம் குறுகிய கால இலக்குகள் மற்றும் நீண்ட கால இலக்குகள் எனப் பிரித்து இலகுவாக நமது இறுதி இலட்சியத்தை அடைய முடியும். இந்த அடிப்படையில் இந்திய சமூகம் குறிப்பாக இந்திய முஸ்லிம்களிடையே இன்று இருக்கும் தலைமைத்துவ கோட்பாடுகள், இந்தப் பிரதேசத்தில் முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்னைகள், அதனுடைய தீர்வுக்கான தேவையை ஒட்டி அமையும் தலைமைத்துவம் போன்றவை குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.
இன்று உலக முஸ்லிம் மக்கள் தொகையில் பெரும் சதவிகிதமாக இருக்கும் இந்திய முஸ்லிம்களை வலிமைப்படுத்தும் மாபெரும் பணியை துவக்கும்போது சில நடைமுறைச் சிக்கல்களை காண முடிகிறது அது துவக்கமாக நீண்ட காலம் பாரம்பரியமாக இருந்து வரும் தலைமைத்துவத்தில் இருந்துதான் துவங்குகிறது. இங்கும் முஸ்லிம்கள் மாநில ரீதியாக வேறுபட்ட கலாச்சாரத்திலும் தலைமைத்துவ வழிமுறைகளிலும் சிதறிக் கிடக்கின்றனர். அவர்களை ஒரு தலைமையின் கீழ் ஒன்றிணைப்பதே மிகவும் சவாலான காரியமாக பார்க்கப்படுகிறது.
இந்திய முஸ்லிம்களில் பெரும் ஜனத்திரள் இன்று நிறைந்திருப்பது பாரம்பரியமான முஸ்லிம் கட்சிகளின் கீழும், ஜமாஅத் தலைமைகளுக்கும் கீழ்தான். இது ஒரு வகையில் மிகவும் அரோக்கியமான நடைமுறையாக இருந்தாலும் அரசியல் மற்றும் மார்க்க ரீதியான அணிதிரட்டலுக்கு இன்று இவைதான் மிகப் பெரும் சவாலாக உள்ளது. இது போன்ற தலைமைத்துவ இடங்களுக்கு வருவதற்கு முன்னர் இருந்த சாதாரண அடிப்படை ஜனநாயக வழிமுறைகள் மருவி இன்று பொருளாதாரம் மற்றும் குலப்பெருமை போன்றவை தகுதிகளாக ஆக்கப்பட்டு விட்டது.
பாரம்பரியமாக செயல்படும் முஸ்லிம் கட்சிகள் தைரியமான அரசியல் முடிவுகள் எடுப்பதிலும், மக்களை போராட்ட ரீதியாக ஒருங்கிணைப்பதிலும் பெரும் தேக்க நிலையிலேயே இருக்கின்றன. அத்தகைய இயக்கங்களின் ஆரம்ப காலகட்டத்தில் சமூகம் அடைந்த அரசியல் பலன்களை இன்று அவை வழங்க முடியவில்லை. மாறி வரும் காலச் சூழ்நிலைகளுக்கு தக்கவாறு புதிய சிக்கல்களை தீர்க்கவல்ல ஒரு மாற்றத்தை அவர்கள் அடைந்து கொள்ளவில்லை.
இத்தகைய தலைமைகளைக் கொண்டு பிற அரசியல் தலைவர்கள் அடைந்த பலன்கள்தான் அதிகம். அவர்கள் முஸ்லிம் சமூகத்தை வெறும் ஓட்டு வங்கிகளாகவே பயன்படுத்திக்கொண்டு அந்தச் சமூக மக்களை பெரும் சமூகச் சிக்களுக்குள் எளிதாக விட்டுவிட்டார்கள். இவர்களிடம் அரசியல் பலனை எதிர்பார்த்த நம்முடைய சமூகத் தலைமைகளிடம் தூரநோக்கு திட்டம் என்று எதுவும் இல்லாமல் போனதால் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடமும் இவர்களுக்கு இருந்த மதிப்பு விட்டுப் போய் வேறு தலைமைத்துவ இடங்களைத் தேடி மக்கள் போய்விட்டனர். இது இன்று மக்களை ஒன்றிணைப்பதில் மிகப் பெரும் சவாலான காரியமாக இருக்கிறது. அரசியல் கட்சிகள் மாறி மாறி இந்தச் சமூகத்தை பயன்படுத்திய நிலைகளைப் பற்றி நிறையவே பேசலாம். அவ்வளவு நீண்ட துரோக வரலாறு அது, இன்றும் அதுவே தொடர்கிறது.
இஸ்லாமிய அடிப்படையில் கவனித்தால் இன்றைய பாரம்பரியமாக செயல்படும் ஜமாஅத் ரீதியான பலமான கட்டமைப்பு வேறுவிதமான வடிவத்திற்கு பரிணமித்திருக்கிறது. இதை உடனடியாக மீள்கொணர்வு செய்ய வேண்டும். அல்லது முஸ்லிம்களை இயக்க ரீதியாக இஸ்லாமிய அணிதிரட்டலுக்கு உட்படுத்த வேண்டும். முஸ்லிம்களுக்கு தலைமையேற்க வேண்டும் என்றால் அவர்கள் பெரும் செல்வந்தராகவும், கல்வி ஞானம் பெற்றவராகவும், பாரம்பரியமான குடும்பத்தையும் சேர்ந்திருக்க வேண்டும் என்ற அடிப்படைகள் யதார்த்தத்தில் உள்ளது. இது மிகவும் அசாதாரணமான நடைமுறை. இஸ்லாத்தினுடைய வராலற்று ரீதியான அமைப்பு முறைகளில் இவற்றை போன்ற நடைமுறைகளுக்கு அணுவளவும் இடமில்லை என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
இஸ்லாமிய மார்க்கம் இலகுவானது, அது இவ்வுலகத்திற்கு சொல்லும் செய்திகள் சாதாரணமானவை. எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது. இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்ப காலத்தில் இன்று நடப்பது போன்ற ஒரு கோரிக்கை குறைஷிகளின் பாரம்பரியமான தலைவர்களிடம் இருந்து முன்வைக்கப்பட்டது. அதாவது அல்லாஹ்வின் தூதருடன் எப்பொழுதும் பிலால், அம்மார், கப்பாப் பின் அரத் மற்றும் இப்னு மஸ்ஊத் போன்ற ஏழ்மையும், செல்வாக்கும், குடும்ப பாரம்பரியமும் இல்லாத தோழர்கள் இருப்பதாலும் அவர்களின் ஆலோசனைகளை இஸ்லாமிய தலைமைத்துவம் கேட்பதாலும் அவை தங்களுக்கு அசவுகரியமாக இருப்பதாக அவர்கள் கூறினார்கள். அவர்களுடைய தலைமைத்துவத்தை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் அவர்களை விட்டு விட்டு அல்லாஹ்வின் தூதர் தங்களை இணைத்துக்கொண்டால் நாம் இங்கு இந்தப் புதிய மார்க்கத்தை மேலும் இணைந்து முன்னெடுக்கலாம் என்று ஆலோசனை கூறினார்கள்.
பின்னர் அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கி வைத்து இஸ்லாம் சாதாரண ஈமான் கொண்டவர்களுடைய (விசுவாசிகளின்) மார்க்கம்தான் என்பதை நிரூபித்தான்.
(நபியே!) எவர் தம் இறைவனுடைய திருப்பொருத்தத்தை நாடியவர்களாக காலையிலும், மாலையிலும் அவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடன் நீரும் பொறுமையை மேற்கொண்டிருப்பீராக! இன்னும் உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நாடி அ(த்தகைய)வர்களை விட்டும் உம் இரு கண்களையும் திருப்பி விடாதீர்.இன்னும், எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனை நீர் வழிபடாதீர்.ஏனெனில் அவன்தன் இச்சையைப் பின்பற்றியதனால் அவனுடைய காரியம் வரம்பு மீறியதாகி விட்டது. (அல்குர்ஆன் 18:28)
இது சாதாரண மனிதர்களின் மார்க்கம். இதன் மேல் பொருளாதாரமோ, அல்லது குலப் பெருமையோ ஆதிக்கம் செலுத்துவதை அது விரும்புவதில்லை. அதை ஆரம்பத்திலேயே தடையும் செய்திருக்கிறது. எனவே இன்றைய புதிய தலைமைத்துவ ஃபித்னாக்களிலிருந்து நாம் சமூகத்தை உண்மையின் பக்கம் திசை திருப்ப வேண்டிய கடமையும் நமக்கு உள்ளது.
இன்று சமகாலத்தில் இன்னும் பிற வகையான இஸ்லாமிய தலைமைகளும் செயல்பட்டு வருகின்றன. இதை ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைத்தால் இவர்களை இப்படி வரையறுக்கலாம். அதாவது, “மார்க்கத் தலைமை வேறு, அரசியல் தலைமை வேறு”” என்று செயல்படுவோர். இவர்களுடைய செயல்பாடுகள் பல்வேறு வகையான வடிவங்களில் இருந்தாலும், ஒருவருக்கு ஒருவர் வேறுபட்ட அரசியல் பார்வைகள் இருந்தாலும் இறுதியான வடிவம் என்பது இதுதான். அதாவது, மார்க்கம் வேறு, சமூக அரசியல் வேறு என்று செயல்படுவோர், அதில் சிலர் அப்படியெல்லாம் இல்லை என்று வாயளவில் சொன்னாலும் நடைமுறையாக அப்படி நடந்து கொள்வோர் என்றும் உள்ளனர்.
இத்தகைய பல்வேறுபட்ட தலைமைத்துவ அமைப்புகளால் முஸ்லிம் சமூகம் வழிபாட்டு பண்பாடுகள் ரீதியாக சில பலன்களை பெற்றிருந்தாலும் அரசியல் மற்றும் சமூக தளத்தில் மிகப் பெரும் வெற்றிடம் ஏற்பட்டு பெரும் சிக்கலான கட்டத்தை அடைந்திருக்கிறது. இன்று இஸ்லாமிய சமூகம் இந்தியாவில் சந்திக்கும் அத்தனை பிரச்னைகளுக்கும் அவர்களிடம் ஏற்பட்ட இத்தகைய மனப்போக்குதான் முக்கியமான காரணம் எனக் கூறலாம். இவர்களிடம் ஆபத்துகள் நிறைந்த பல குறுகிய பழமைவாதப் பார்வைகள் இருக்கின்றன. அவை அவர்களோடு நின்று விடாமல் சமூகத்தை பாதிக்கும் கட்டத்திற்கு நகரும்போது அவர்களை அந்நியப்படுத்திவிட்டு மக்களை முற்றிலும் வாழ்வியல் அடிப்படைகளை முன்வைத்து இறைவன் வழங்கியுள்ள அனைத்து ஆற்றலையும் பயன்படுத்தி ஒன்றிணைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
“சீஸருக்கு கொடுக்க வேண்டியதை சீஸருக்கு கொடுத்து விடுங்கள். ஜீஸஸுக்கு கொடுக்க வேண்டியதை ஜீஸஸுக்கு கொடுத்து விடுங்கள்” என்று ஒரு போக்கு மேற்கில் இருந்தது. இதை உருவாக்கி கிருஸ்தவ அரசியலில் பெரும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த கிருஸ்தவ மதகுருமார்களின் ஆதிக்கம் முழுவதுமாக தகர்க்கப்பட்டு அரசியல் வேறு, மதச் சம்பிரதாயங்கள் வேறு என்று உருவாக்கப்பட்டது, இதனால் பெரும் பலனடைந்தது அதிகார வர்க்கமும் ஆளும் மனிதர்களும்தான்.
மத ஆதிக்கம் இருந்தபோது பின்பற்றப்பட்டு வந்த கொஞ்சமும் நேர்மையான அரசியல் நெறிமுறைகள் துடைக்கப்பட்டு அதிகாரம், பதவி, பணம், செல்வாக்கு போன்றவை முக்கியமாக ஆகப்பட்டது. இதன் அடிப்படையில் புரிந்து கொண்டால் இஸ்லாமிய சமூகத்திடம் ஏன் இப்படிப்பட்ட கருத்தாக்கம் உருவாக்கப்பட்டது என்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம். மார்க்கம்-அரசியல் என்று பிரிப்பதன் மூலம் உறுதியான இஸ்லாமிய நடைமுறையை பின்பற்றும் மக்களை திசைதிருப்பி இஸ்லாம் என்னும் உயரிய அரசியல் சித்தாந்தத்தை அப்படியே வெற்றிகரமாக முடமாக்கிவிட துணிந்துள்ளனர். அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளனர்.
ஆனால் இஸ்லாம் அரசியலில் தெளிவும் உறுதிமிக்க அரசியல் கோட்பாடுகளையும் அடிப்படையாக கொண்ட மார்க்கம். இதில் இன்று நடைபெறுவது போன்ற முரண்பாடுகளைக் கொண்ட நவீன தலைமைத்துவ வழிமுறைகளுக்கு சிறிதளவேனும் இடமில்லை. திருக்குர்ஆனும் திருத்தூதரின் வழிமுறைகளும் இதை தெளிவாக எடுத்தியம்புகின்றன.
உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) – நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும் அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். (அல்குர்ஆன் 24:55)
இஸ்லாமிய சமூகம் விடுதலை பெறுதல் மற்றும் சமூக மாற்றம் எல்லாம் வெறும் இபாதத்துகளில் முழுமையடைந்து மார்க்க வழிமுறைகளை பின்பற்றுவதால் மட்டும் நடந்து விடும் என்ற கற்பனை வழிமுறைகளில் இஸ்லாமிய கோட்பாட்டுக்கு உடன்பாடில்லை. அது மனிதர்களின் கடின முயற்சியாலும், கட்டுப்பாடான வாழ்க்கை முறைகளாலுமே இந்த பூமியில் வாழ முடியும் என்ற நியதிக்கு உட்பட்டது.
அல்குர்ஆன் இவ்வாறு பேசுகிறது:
அன்றியும், ஒரு தூதரையும் அவன் (அனுப்பி வைத்தான்). அவர் அல்லாஹ்வுடைய தெளிவான வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார் – ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்பவர்களை இருள்களிலிருந்து, ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்காக. (அல்குர்ஆன் 65:11)
எனில் இஸ்லாமிய தலைமைத்துவம் என்பது மக்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் மாற்றி நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இருக்க வேண்டும், இங்கு இருள் என்பது எல்லா வகையான அசத்தியமுமாகும். மக்களை சிரமப்படுத்தும் அநீதியான எல்லா தாகூத்துகளிடமிருந்தும் மக்களை மீட்பதே இருளிலிருந்து மீட்பதன் பொருள். வெறும் வழிபாடு ரீதியான பயிற்றுவித்தல் மட்டுமல்ல.
முஸ்லிம்களுக்கு தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் எனில் முகத்தில் பெருத்த தாடியும், தெளிவான அரபு மொழிப் புலமையும் இருக்க வேண்டும் என்ற பிம்பம் பொது சமூகத்திடையே கட்டமைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய கோட்பாடுகளையும் அதனுடைய சித்தாந்தங்களையும் தீரமாக நெஞ்சில் சுமந்த இளைஞர்களுக்கு முஸ்லிம் சமூகத்தை வழிநடத்தும் வாய்ப்புகளை இது மறைமுகமாக தடை செய்கிறது. இளைஞர்களால் வார்த்தெடுக்கப்பட்ட ஒரு மார்க்கத்தில் இருந்து கொண்டு சமூகத்தை இருள்களிலிருந்து வெளியேற்றும் ஆற்றல் கொண்ட மக்களை இளைஞர்கள் என்ற ஒரே காரணத்திற்காக முற்றிலுமாக புறக்கணித்து விடுகின்றனர்.
அல்குர்ஆன் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களது அரசியல் வாழ்க்கையைப் பற்றி இவ்வாறு பதிவு செய்கிறது:
ஃபிர்அவ்னுக்கு அஞ்சியும் அவன் கொடுமைப்டுத்துவானோ எனப் பயந்த தம் சமூகப் பிரமுகர்களுக்கு அஞ்சியும் மூஸாவை அவர்களுடைய சமூகத்தாரில் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை – சில இளைஞர்களைத் தவிர! (அல்குர்ஆன் – ஸூரத்துல் யூனுஸ் : 83)
பனூ இஸ்ரேல் சமூகத்தினர் ஃபிர்அவ்னின் கீழ் அடிமைப்பட்டு வாழ்ந்த அந்த வாழ்வை ஏற்றுப் பழகிப் போனார்கள். தம் மீது இழைக்கப்படும் அநியாயங்களின் முன்னால் பணிந்து, சரணடைந்து அதுவே இயல்பான வாழ்வு எனக் கண்டு வாழ்ந்தார்கள். இந்நிலையில் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அச்சமூக விடுதலைக்காகப் போராட எழுந்த போது அவரோடு ஒத்துழைத்து உண்மையாகவே போராட முன்வந்தவர்கள் சில இளைஞர்கள் மட்டுமே.
அடிமைப்பட்ட ஒரு சமூகத்தில் போராட்ட சக்தியாக எஞ்சி நிற்கக் கூடியவர்கள் இளைஞர்கள் மட்டுமே என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.சுற்றியிருக்கும் ஜாஹிலிய்யத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள முற்பட்டு குகையில் போய் தஞ்சமடைந்தோர் குறித்து அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:
அவர்கள் தமது இரட்சகனை நம்பிக்கை கொண்ட இளைஞர்கள். அவர்களுக்கு நாம் மேலும் நேர்வழியை அதிகரித்துக் கொடுத்தோம். (அல்குர்ஆன் – ஸூரத்துல் கஹ்ஃப் : 13)
இவ்வாறாக உணர்ந்து இன்றைய முஸ்லிம் சமூகத்தை எதற்கும் சமரசம் செய்து கொள்ளாத ஓர் உறுதியான தலைமையின் கீழ் ஒன்றிணைக்க வேண்டிய அவசியம் இன்றியமையாததாக இருக்கிறது. அந்த்த் தலைமை மார்க்க ரீதியாக உறுதியான போராட்ட குணத்துடனும், அரசியல் ரீதியாக பல்வேறு நுனுக்கங்கள் தெரிந்ததாகவும், மக்களுக்கு பயனளிக்கக் கூடிய வகையிலும் இருத்தல் வேண்டும்.
மாணவர்களையும், பெண்களையும் சிந்தனை ரீதியாக ஒருங்கிணைத்து அவர்களுடைய தளங்களில் ஏற்பட்டிருக்கும் சமூக சிக்கலுக்கு அவர்களைக் கொண்டே தீர்வுகளை வழங்கிடும் மிகப் பெரும் சுமையை தாங்கக் கூடியதாகவும் இந்த இஸ்லாமியத் தலைமைத்துவம் இருக்க வேண்டும். நிச்சயமாக அப்படி ஒரு மீளுணர்வு தலைமைத்துவம் ஒவ்வொரு நூற்றாண்டிலும் உருவாகும் என்பதுதான் அல்லாஹ்வின் தூதருடைய கிருபை மிகுந்த முன்னறிவிப்பு.
அப்படிப்பட்ட இளைஞர்களை நீங்கள் கண்டால் அவர்களைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அவர்கள் மக்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்பதற்காக அல்லாஹ்வினால் அவர்களிலிருந்தே அனுப்பப்பட்ட மாபெரும் அருட்கொடையாளர்கள்.
முஃமின்களே! உங்களில் எவரேனும் தன் மார்க்கத்தைவிட்டு மாறிவிட்டால் (அல்லாஹ்வுக்கு அதனால் நஷ்டமில்லை).அப்பொழுது அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான்.அவன் அவர்களைநேசிப்பான்.அவனை அவர்களும் நேசிப்பார்கள்.அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்.காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள்.அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்.நிந்தனை செய்வோரின் நிந்தனைக்கு அஞ்சமாட்டார்கள்.இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்.இதை அவன் நாடியவருக்குக் கொடுக்கின்றான்.அல்லாஹ் மிகவும் விசாலமானவனும் (எல்லாம்) நன்கறிந்தவனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன் – ஸூரத்துல் மாயிதா 5:54)
நன்றி: தூது ஆன்லைன்