“கோவை கலவரத்தில் எனது சாட்சியம்” புத்தகத்தின் தாக்கம்!
நேற்று பேருந்தில் வரும் போது நல்ல கூட்டம் கடைசி சீட்டில் எனக்காக ஒரு இடம் இருந்தது!. அமர்ந்ததும் “கோவை கலவரத்தில் எனது சாட்சியம்” புத்தகத்தை கையில் எடுத்து வாசித்து கொண்டிருக்கும் போதே அருகில் அமர்ந்திருந்த 40 வயதுமிக்க ஒருவர் மெதுவாக என்னுடன் சேர்ந்தே இந்த புத்தகத்தை வாசிக்க தொடங்கினார்.
சரியாக, நான் பிப் 98 குண்டுவெடிப்பை நெருங்கின சமயம் அவரும் இணைகிறார். நாங்கள் இருவரும் புத்தகத்துடன் பயணப்படுகிறோம். அடுத்து சட்ட ரீதியான உதவிகள் செய்வதாக கூறும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் பகுதி வந்ததும்! அந்த மனிதர் வாய்விட்டு கேட்டே விடுகிறார், “என்னப்பா ஒரே முஸ்லிம் பெயரா இருக்கு?. என்னப்பா இது பஸ்ல இதெல்லாம்”..இப்போது இன்னும் மூன்று பேரது கவனம் இந்த புத்தகத்தின் மீதும் என்மீதும்! என் பாதைக்கான தடத்தை உருவாக்கி தந்து விட்டார் என்ற சந்தோசத்தில் நானே தொடர்ந்தேன்.
நவம்பர் 97 நடந்த கலவரங்களைப் பற்றி புத்தகம் செல்லும் பாதையை எடுத்து அந்த பயணத்தின் வாசகர்களாக மூன்று பேரையும் உட்புகுத்தி அவர்கள் படிக்க ஆரம்பித்ததும்! அவர்களுக்குள் ஒரு வெறுப்பு, காவல்துறையா இது! இன்றைக்கு அர்ஜூன் சம்பத் என்ற பெயர் அவர்களுக்கு பரிட்சயமாய் இருந்தது. ஆனால்,அன்றைய அர்ஜூன் சம்பத்தின் கோர முகத்தை படித்ததும் அவர்களின் முக சுழிப்பை காண முடிந்தது.
பேருந்து கோவையிலிருந்து தான் புறப்பட்டது! புத்தகமும் கோவையை மையமாக கொண்டு தான் சுற்றுகிறது. அதனால் தான் என்னவோ எளிதாக நாங்களும் அதனுடன் இணைந்து விட்டோம். முக்கியமான பகுதிகளை அவர்களிடம் படிக்க சொல்லி விட்டு கொஞ்சம் விவாதத்தை தொடங்கினோம்.
கோவை கலவரங்களை பார்வையிட்டு வந்த சட்டமன்ற உறுப்பினர் அப்துல் நாசர் உணர்ச்சிவயப்படும் ஒரு வாசகம்,” இந்த கலவரங்களை பார்த்து விட்டு கண்ணில் நீருடன் மனதில் வெறுப்புடன் இருக்கும் போது சாலைப்பாதுகாப்பை சீர் செய்யும் ஒரு காவல்துறை அதிகாரியை கீழிறங்கி கொன்று விட்டு வர வேண்டும் என்று எனக்கு தோன்றியது”.. இந்த வாசகத்தை தான் முதலில் எடுத்து வைத்தேன்.
மேலும்,
மருத்துவமனையில் சிகிச்சை கேட்டு வந்தவர்களை காவல்துறை அடித்தும் எரித்தும் கொன்றது!.
ஹீசர் பானு வீட்டில் காவல்துறை உட்புகுந்து முகத்தில் வீசியது, முஸ்லிம் பெண்களை கீழ்தரமாக காவல்துறை நடத்தியது !..
காவல்துறை மீட்டிங்கில் இராமகோபாலன் பங்கேற்றது!..
பால் வாங்க வெளிவந்தவர்களை, குழந்தைக்கு மாத்திரை வாங்க வந்தவர்களை துப்பாக்கி தோட்டாக்களுக்கு இரையாக்கியது..
குண்டு வைத்துக் கொண்டு தீவிரவாதிகள் ரூமுக்குள் பதுங்கியிருந்தனர் எனக் பொய்க் கூறி மொட்டை மாடியில் தண்ணி டாங்கிற்குள்ளே வைத்து கொடூரமாக சுட்டு கொன்றது..
கண்ணில் படும் மசூதிகள் அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டது! குரான் புத்தகம் முஸ்லிம்களின் கண்முன்னால் கிழித்தெறியப்பட்டது..
இத்தனை பெரிய கலவரத்திற்கு இடையும் முஸ்லிம்கள் பெரும்பாலாக குடியிருக்கும் பகுதிகளில் இருந்த மாற்று மத குடும்பத்தினருக்கும் மாற்று மத வழிபாட்டு தலங்களுக்கும் எவ்வித சிறு பாதிப்பும் ஏற்படாமல் முஸ்லிம்கள் நடந்து கொண்டது..
கலவரத்திற்கு காரணம் “செல்வராஜ்” என்ற இந்து கொல்லப்பட்டான் என்பதே பொய்! வதந்தி! அவரது பெயர் “அந்தோனி செல்வராஜ்” அவர் ஒரு கிறிஸ்துவர் என்பதும்…
சிறையில் முஸ்லிம் மக்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாவது, சிறை சென்றவர்களின் குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டது, அந்த குடும்ப பெண்கள் விபச்சாரத்திற்கு தள்ளப்பட்டது, வேலஇ, கல்வி என அனைத்தும் மறுக்கப்பட்டது!
என..
இத்தனையும் கடந்து நாங்கள் பேசி முடிக்கும் போது நான் சேர வண்டிய இடத்தை நெருங்கியிருந்தேன். நான் மனதிற்குள் எனக்கான சமூக இலக்கையும் அடைந்த திருப்தியுடனும் அவர்களிடம், என் பெயர் அபூபக்கர் சித்திக் உங்களது ஒவ்வொருவரது பெயர்களும் ஒரு மதத்தை அடையாளப்படுத்துகிறது. ஆனால் உண்மையில் நமது பெயர்கள் எல்லாம் அடையாளப்படுத்தப் பட வேண்டியது மனிதம் என்ற ஒன்றைத் தான் மதங்களை அல்ல.
நாளை இதை போன்று ஒரு நிலை உருவாகலாம் அன்று நாம் எதை அடையாளப்படுத்தப்போகிறோம் என்பதில் தான் நமக்கான அடையாளம் வெளிவரப்போகிறது.
மொத்தம் என்னை சுற்றியிருந்தவர்களின் அனுபவம் மொத்தம் 120 ஆண்டுகளாவது இருக்கும்! அவர்கள் இந்த 23 ஆண்டு அனுபவத்தை கூட முழுமையாக முடித்து விடாத ஒரு இளைஞனிடம் நன்றி கூறினார்கள். நண்பர்களானார்கள்.
அந்த இரண்டு மணி நேரம் பேருந்தின் பின்சீட்டுக்கு சொந்தக்காரன் நான்.
பேருந்து அடையும் இலக்கிலிருந்து பாதியிலேயே இறங்கும் பயணியாக நான் அம்மூவரை விட்டும் பிரியும் போது அவர்களின் உள்ளத்தில் இருந்த என் மீதான மத அடையாளமும் என் மதத்தின் மீதாக இருந்த தவறான அடையாளமும் அழிக்கப்பட்டதாக நான் உணர்ந்தேன். அடுத்த கலவரத்தில் அந்த மூன்று நபர்களின் குடும்பமும் பாசிசத்திற்கு இரையாகாது என்பதில் மிகுந்த மகிழ்ச்சி.
“கோவை கலவரத்தில் எனது சாட்சியம்” என்ற நூலின் வெற்றிக்கு இதுதான் சாட்சியம்.
-அபூ_சித்திக்.
“கோவை கலவரத்தில் எனது சாட்சியம்” நூலைப்பற்றி…
இந்திய தேசிய லீக் கட்சியின் புவனகிரி சட்ட மன்ற உறுப்பினராக இருந்த திரு ஏ,வி,அப்துல் நாசர் சொல்ல பழனி ஷஹானால் எழுதப்பட்டு சென்னை ஆழி பப்ளிஷர்ஸால் வெளியிடப்பட்ட நூல். விலை ரூபாய் 100.
போக்குவரத்து காவலர் செல்வராஜ், அல்உமா தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பின்பு நடைபெற்ற வெறியாட்டத்தின் பின்பும் கோவையில் குண்டு வெடிப்பிற்குப் பிறகும் களப்பணி செய்தவர்
கோவை கலவரம், அதற்கு முன்பிருந்த சூழல், ஊதி பெருக்கப்பட்ட பகைமை உணர்ச்சி, காவல் துறையில் ஊடுறுவிய காக்கிகள் போன்ற பல விஷயங்கள் ஏற்கனவே அறிந்ததுதான். அவற்றையெல்லாம் இவர் உறுதி செய்கிறார்.
இந்த நூலில் சொல்லப்பட்ட மூன்று முக்கியமான விஷயங்கள் நான் அறியாதவை. எனவே எனக்கு மிகவும் அதிர்ச்சியாய் இருக்கிறது.
இஸ்லாமியர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு முக்கியமான காரணமாக சொல்லப்பட்டது போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் கொலை. ஒரு இந்து போலீஸ்காரரை கொலை செய்தததற்கு பழி வாங்கவே இந்து முன்னணி வெறியாட்டத்தில் ஈடுபட்டது. போலீஸ் அவர்களுக்கு உடந்தையாக இருந்தது என்பதுதான் இதுவரை நாம் அறிந்த செய்தி.
கொல்லப்பட்ட போக்குவரத்து காவலர் செல்வராஜ் இந்து அல்ல, அவரது முழுப் பெயர் அந்தோணி செல்வராஜ். ஆக ஒரு இந்துவின் கொலைக்காக இந்து முன்னணி களமிரங்கவில்லை. ஏற்கனவே உள்ள பகைக்கு கணக்கு தீர்க்கவே இக்கொலையை காரணமாக்கியது. கலவரம் தொடங்குவதற்கு முதல் நாள் இரவு அப்போது கோவை போலீஸ் கமிஷனர் பொறுப்பு வகித்த மாசாண முத்து காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்துகிறார். முஸ்லீம் காவலர்களை வெளியே போகச் சொல்லி விட்டு நடந்த கூட்டத்தில் காவல்துறை அல்லாத ஒரு மனிதர் கலந்து கொண்டு போலீஸை வெறியூற்றுகிறார். அந்த மனிதர் யார் தெரியுமா? வீரத்துறவியார் என்று அழைக்கப்படுகிற ராம.கோபாலன். காவல்துறை கூட்டத்தில் அவருக்கு என்ன வேலை?
முதல் நாள் இரவு கூட்டம் நடக்கிறது. மறுநாள் முந்நூறு போலீசார் மாசாணமுத்து தலைமையில் ஊர்வலம் போகிறார்கள். அவர்களுக்கு பின்னே இந்து முன்னணியினர். அதன் பின்பே கலவரம் தொடங்குகிறது. அழிவு வேலை ஆரம்பிக்கிறது. மிகப் பெரிய துணிக்கடையான ஷோபா டெக்ஸ்டைல்ஸ் ஷட்டரை போலீசே உடைத்து பொருட்களை சூறையாடவும் தீயிட்டு கொளுத்தவும் ஏற்பாடு செய்கிறது.
கலவரத்திற்கு எதிர்வினையாக குண்டு வைக்க அல் உமா திட்டமிடுகிறது. இப்படி ஒரு சதி நடந்து கொண்டிருக்கிறது என்பதை தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர்கள் கோவை போலீஸ் கமிஷனரிடமும் தமிழக டி.ஜி.பி யிடமும் புகார் தெரிவிக்கின்றனர். ஆனால் அதை தடுப்பதற்கு காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குண்டு வெடிப்பு நடக்கட்டும் என்று காத்திருந்தது போலவே தெரிகிறது என்று குற்றம் சுமத்துகிறார் அப்துல் நாசர்.
ஒரு சமுதாயத்தையே குற்றப்பரம்பரையாக சித்தரிக்க காவல் துறையும் காவிக் கூட்டமும் கை கோர்த்து சதி செய்தது என்ற அவரது குற்றச்சாட்டு வலிமையானது.
ஆனால் அவர்கள் எல்லாம் இன்று சமுதாயத்தில் கௌரவமிக்கவர்களாக வாழ்கிற போது குற்றத்திற்கு தொடர்பில்லாத பல அப்பாவிகள் இன்னும் சிறையில் வாடுவது ஒரு மிகப் பெரிய அநீதி.
வன்முறையும் அப்பாவி மக்களைக் கொன்றதும் இஸ்லாத்திற்கே முரணானது என்பதை பல இடங்களில் அழுத்தமாக சொல்கிறார் நாசர். கோவை கலவரம் தொடர்பான ஒரு உண்மையான ஆவணாக இந்நூலை பார்க்கிறேன். இந்த நூலை கொண்டு வந்ததற்கும் இன்னொரு கலவரம் நிகழ்வதை தடுத்ததில் ஆற்றிய பங்கிற்கும் (நூலை வாங்கி விபரங்களை அறிந்து கொள்ளுங்களேன்) திரு ஏ.வி.அப்துல் நாசர் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். ( source: http://discoverybookpalace.com )