ஹலால் செக்ஸ்!
[ மேற்கத்திய முதலாளிகள் முஸ்லிம் வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக “ஹலால்” பொருட்களை சந்தைப் படுத்துகிறார்கள். இத்தனை காலமும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் பல்வேறு முஸ்லிம் சமூகங்களை சேர்ந்த வர்த்தகர்கள், “ஹலால் சந்தையில்” ஏகபோக ஆதிக்கம் செலுத்தினார்கள்.
“இவ்வளவு காலமும் மில்லியன் யூரோ வருமானம் வரும் ஹலால் சந்தையை கவனிக்காமல் விட்டு விட்டோமே” என்று அங்கலாய்க்கிறார்கள் ஐரோப்பிய முதலாளிகள்.
தனி மனித பாலியல் இச்சைகளை மூடி மறைத்துக் கொண்டு, வெளியே ஒழுக்கசீலர்களாக காட்டிக் கொள்ளும் சமூகங்கள் முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமல்ல, இந்துக்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் என்று எல்லா மதங்களிலும் இருக்கின்றன. இத்தகைய பழமைவாத சமூகங்களை உடைக்கும் பணியில் முதலாளித்துவம் ஈடுபட்டு வருகின்றது. அதற்கு “கலாச்சார மோதல்”, “அல்கைதா அபாயம்”, “மத அடிப்படைவாதத்தை அடக்குதல்” என்றெல்லாம் தத்துவ விளக்கம் அளிக்கப்படுகின்றது. ]
சில மாதங்களுக்கு முன்னர் நெதர்லாந்து ஊடகங்களில் பரபரப்பாக ஒரு விஷயம் பேசப்பட்டது.
உலகின் முதலாவது “Online இஸ்லாமிய செக்ஸ் கடை”, இன்டர்நெட்டில் திறக்கப்பட்டுள்ளது. நிறுவனர் நெதர்லாந்தில் வாழும் மரோக்கோ வம்சாவழி முஸ்லிம். நிறுவனர் தான்
இது குறித்து ஒரு இமாமிடம் ஆலோசனை கேட்டதாகவும், அதற்கு அவர் “இதிலே இஸ்லாமுக்கு மாறான எந்த அம்சமும் இல்லை.” திருப்தி தெரிவித்ததாகவும் கூறினார்.
அவர் மேலும் கூறும் பொழுது: “நான் கூட மத நம்பிக்கையுள்ள முஸ்லிம் தான். எனது (ஹலால்) செக்ஸ் கடையில் ஆபாசப் படங்கள் இருக்காது. திருமணமான தம்பதிகளுக்கு தேவையான தாம்பத்திய வாழ்வை திருப்தி செய்யும் பொருட்களையே விற்கிறேன்.” என்றார்.
இதிலே கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில், பாலியல் வக்கிரங்களை சந்தைப் படுத்தும் சாதாரண மேற்கத்திய செக்ஸ் கடையைப் போல இதனைக் கருத முடியாது. இருப்பினும் நெதர்லாந்து ஊடகங்கள், இதை ஏதோ இஸ்லாமிய மதத்தினரிடையே ஏற்பட்டுள்ள கலாச்சாரப் புரட்சி என்பதைப் போல சித்தரித்திருந்தன.
பாலியல் கேளிக்கைப் பொருட்களை விற்கும் செக்ஸ் கடைகள், முதலாளித்துவம் கோலோச்சும் சர்வதேச நகரங்களில் சாதாரணமாக காணப்படும். மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகள், ஆசியாவில் இந்து /பௌத்த/கிறிஸ்தவ பழமைவாதம் பேணும் நாடுகள், ஆகிய இடங்களில் மட்டும் இவை காணப்படுவதில்லை.
தனி மனிதனின் பலவீனத்தை பயன்படுத்தி லட்சக்கணக்கான பணம் சம்பாதிக்கலாம் என்ற சூத்திரம் முதலாளித்துவத்தின் அடிப்படை. அதன் பிரகாரம் எதோ ஒரு வகையில் செக்ஸ் வியாபாரத்தை உலகம் முழுவதும் பரப்பி வருகின்றது.
“இன்டர்நெட்” என்ற மகத்தான கண்டுபிடிப்பு அதற்கு உதவுகின்றது. ஏதாவது நாடு அதை தடை செய்யும் பட்சத்தில், “தனி மனித சுதந்திரத்தை தடுக்கிறார்கள்” என்று அந்த நாடு மீது குற்றம் சாட்ட முடியும்.
மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளில் பகிரங்கமாக செக்ஸ் கேளிக்கைப் பொருட்கள் விற்கும் கடைகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அங்கெல்லாம் அவை கிடைப்பதில்லை எனக் கூற முடியாது. அமெரிக்காவில், ஐரோப்பாவில் இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் ரகசியமாக கொண்டு வந்து சேர்க்கிறார்கள் அல்லது சில சட்டவிரோத வியாபாரிகள் கடத்திக் கொண்டு வந்து விற்கிறார்கள்.
தனி மனித பாலியல் இச்சைகளை மூடி மறைத்துக் கொண்டு, வெளியே ஒழுக்கசீலர்களாக காட்டிக் கொள்ளும் சமூகங்கள் முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமல்ல, இந்துக்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் என்று எல்லா மதங்களிலும் இருக்கின்றன. இத்தகைய பழமைவாத சமூகங்களை உடைக்கும் பணியில் முதலாளித்துவம் ஈடுபட்டு வருகின்றது. அதற்கு “கலாச்சார மோதல்”, “அல்கைதா அபாயம்”, “மத அடிப்படைவாதத்தை அடக்குதல்” என்றெல்லாம் தத்துவ விளக்கம் அளிக்கப்படுகின்றது.
கம்யூனிசத்திடம் இருந்து விடுதலையான ரஷ்யா முதல், இஸ்லாமிய அடிப்படைவாதத்திடம் இருந்து விடுதலையான ஆப்கானிஸ்தான் வரை பரவி வரும் சமூகச் சீரழிவுகளுக்கு தனி மனித சுதந்திரம் என்று பெயர் சூட்டப்படுகின்றது.
இத்தகைய “விடுவிக்கப் பட்ட பகுதிகளில்” பாலியல் தொழில் அமர்க்களமாக நடக்கின்றது. பருவ வயதை எட்டாத சிறுவர்கள் கூட குடும்ப வறுமையைப் போக்க பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர். சமுதாய சீர்குலைவுக்கு காரணமான வறுமையை முதலில் ஒழிக்க வேண்டும் என்று யாரும் கேட்டு விடக் கூடாது!
மேற்குலக பல்கலைக்கழகங்கள் இதை “கலாச்சாரங்களின் மோதல்” என்று வரைவிலக்கணம் கொடுக்கின்றன. தாலிபானும், அல்கைதாவும் அதையே “ஐரோப்பிய சீரழிவுக் கலாச்சாரத்திற்கு எதிரான மத நம்பிக்கையாளர்களின் போராட்டம்” என்று திருப்பிப் போடுகிறார்கள்.
மதவாதிகள், தேசியவாதிகள் எல்லோரும் இதனை கலாச்சாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக மட்டும் பார்க்கின்றார்கள். இவர்களுக்கிடையிலான அடிப்படைப் பிரச்சினை ஒன்று தான். சமூக சீரழிவுகளுக்கு காரணம், முதலாளித்துவ பொருளாதாரம் என்பதை நம்ப முடிவதில்லை.
மேற்கத்திய முதலாளிகள் முஸ்லிம் வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக “ஹலால்” பொருட்களை சந்தைப் படுத்துகிறார்கள். இத்தனை காலமும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் பல்வேறு முஸ்லிம் சமூகங்களை சேர்ந்த வர்த்தகர்கள், “ஹலால் சந்தையில்” ஏகபோக ஆதிக்கம் செலுத்தினார்கள்.
“இவ்வளவு காலமும் மில்லியன் யூரோ வருமானம் வரும் ஹலால் சந்தையை கவனிக்காமல் விட்டு விட்டோமே” என்று அங்கலாய்க்கிறார்கள் ஐரோப்பிய முதலாளிகள்.
நெதர்லாந்தின் மிகப் பெரிய சூபர் மார்க்கட் நிறுவனம் (Albertheijn) தனது கடைகளில் ஹலால் முத்திரை இடப்பட்ட பொருட்களை விற்பனை செய்கின்றது. இந்த ஹலால் வியாபாரத்தில் புதிய வரவு “சைக்கிள் கம்பனி”.
நெதர்லாந்து ஒரு சைக்கிள்களின் நாடு என அழைக்கலாம். ஐரோப்பாவில் இந்த நாட்டில் தான் சைக்கிள் பாவனையாளர்கள் அதிகம். ஆனால் புதிதாக வரும் வெளிநாட்டு குடிவரவாளர்கள் சைக்கிள் பாவிப்பது குறைவு. அவர்கள் அநேகமாக கார், அல்லது மோட்டார் சைக்கிளையே நாடுகின்றனர்.
வெளிநாட்டு குடிவரவாளர்கள் என்றால் முஸ்லிம்கள் என்று கருதிக் கொள்வது பொதுப்புத்தியில் உறைந்து விட்டது. அதனால் சைக்கிள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் முஸ்லிம்களுக்கேற்ற “ஹலால் சைக்கிள்” தயாரிக்கின்றன. அதற்கு அவர்கள் கூறும் காரணம், “இஸ்லாமிய மத நம்பிக்கையின் பிரகாரம் பெண்கள் சைக்கிள் ஓடுவது விரும்பத்தக்கதல்ல என்று எமது ஆய்வின் முடிவில் கண்டறிந்திருக்கிறோம்.” என்பது தான்.
இறைதூதர் முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் சைக்கிள் இருந்ததாக நாம் அறியவில்லை. பெண்கள் சைக்கிள் ஓடக் கூடாது என்ற சமூகக் கட்டுப்பாடு, பெருமளவு சைவத் தமிழர்கள் வாழும் யாழ் குடாநாட்டிலும் இருந்துள்ளது. (கடந்த 30 வருடங்களில் தான் இந்தக் கட்டுப்பாடுகள் கைவிடப்பட்டன.)
முஸ்லிம்கள் சைக்கிளை விரும்பாததற்கு மதக் கட்டுப்பாடு தான் காரணம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த செய்தியை அறிவித்த நெதர்லாந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியிலேயே மேலதிக விளக்கமும் கிடைக்கிறது.
காரில் வீதிவலம் வருவது, வயதுக்கு வராவிட்டால் ஸ்கூட்டரில் ஸ்டன்ட் காட்டுவது, என்பது இளைய தலைமுறையின் நாகரீக மோகம். முஸ்லிம் இளைஞர்களும் உலகை ஆட்டிப்படைக்கும் நுகர்பொருள் கலாச்சாரத்தின் அடிமைகள் தான். இந்தியா போன்ற ஏழை நாடுகளில் கூட “டூவீலரில்” போவது மத்திய தர வர்க்க “ஸ்டேடஸ்”. சைக்கிளில் போனால் சமூகத் தாழ்வாக கருதிக் கொள்வார்கள்.
ஐரோப்பிய வாழ் முஸ்லிம்கள் அப்படிப்பட்ட சமூகப் பின்னணியைக் கொண்டவர்கள் தாம். ஜாலியாக காரில் பறக்கும் நாகரீக இளைஞர்களிடம் “வாகனங்கள் வெளிவிடும் கரியமில வாயுவினால் சுற்றுச் சூழல் மாசடைவது” பற்றி போதிக்க முடியாது. சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.
மத நம்பிக்கையாளர்களை விட பண நம்பிக்கையாளர்கள் பெருகி வரும் காலம் இது. முதலாளித்துவ கலாச்சாரம் இன்று அனைத்து மதங்களையும் பின்னுக்கு தள்ளி விட்டது. ஒவ்வொரு நாட்டிலும் பெரும் கலாச்சாரமும், அதற்குள் துணைக் கலாச்சாரங்களும் இருப்பதாக வணிகத்துறை பாடநூல்கள் ஏற்றுக்கொள்கின்றன. துணைக் கலாச்சாரங்களின் “தேவைகளை” பூர்த்தி செய்வதற்காக மூலதனம் ஹலால் சந்தையைக் கைப்பற்ற துடிக்கின்றது. அது முஸ்லிம்களின் வழிபாட்டு ஸ்தலங்களையும் விட்டு வைக்கவில்லை.
சவூதி அரேபியா உலகம் முழுவதும் மசூதி கட்டிக் கொடுக்கும் “ரியல் எஸ்டேட்” வியாபாரத்தில் இறங்கி இருப்பது இரகசியமல்ல. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் சவூதி அரேபியாவின் மூலதனம் பாய்வதைத் தடுப்பதற்காக, அரசாங்கமே மசூதி கட்ட நிதி வழங்குகின்றது.
சவூதியின் (கடும்போக்கு) “வஹாபிஸ” இஸ்லாமுக்கு போட்டியாக, (தாராளவாத) “ஐரோப்பிய” இஸ்லாம் உருவாக்கப்படுகின்றது.
source: http://khaibarkalam.blogspot.in/