”அல்லாஹ், நமக்குப் பணி புரிய ஒரு அடிமைப் பெண்ணையும் தந்து விட்டான்!”
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (தம் துணைவி) சாராவுடன் நாடு துறந்தார்கள். மன்னன் ஒருவன் அல்லது கொடுங்கோலன் ஒருவன் ஆட்சி புரிந்த ஓர் ஊருக்குள் இருவரும் நுழைந்தனர்.
அழகான ஒரு பெண்ணுடன் இப்ராஹீம் வந்திருக்கிறார்! என்று (மன்னனிடம்) கூறப்பட்டது. மன்னன் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அழைத்து வரச் செய்து இப்ராஹீமே! உம்முடன் இருக்கும் இந்தப் பெண் யார்? எனக் கேட்டான். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் என் சகோதரி என்று சொன்னார்கள்.
பிறகு சாராவிடம் திரும்பிய இராப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நீ என் கூற்றைப் பொய்யாக்கி விடாதே! நீ என் சகோதரி என்று நான் அவர்களிடம் கூறியிருக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! உன்னையும் என்னையும் தவிர இந்தப் பூமியில் ஓரிறை விசுவாசி (மூமின்) யாரும் இல்லை என்று சொன்னார்கள். பிறகு சாராவை மன்னனிடம் அனுப்பினார்கள்.
அவன் அவரை நோக்கி எழுந்தான். சாரா எழுந்து உளூச் செய்து தொழுது விட்டு இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால் எனது பெண்மையை கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றியிருந்தால் இந்தக் காஃபிரை என்னை ஆட்கொள்ள விடாதே! என்று பிரார்த்தித்தார். உடனே அவன் கீழே விழுந்து (வலிப்பினால்) கால்கள் உதைத்துக் கொண்டான்.
மன்னனின் நிலையைக் கண்ட சாரா இறைவா! இவன் செத்து விட்டால் நான் தான் இவனைக் கொன்றேன் என்று மக்கள் கூறுவர் என்று கூறியவுடன் மன்னன் பழைய நிலைக்கு மீண்டு மறுபடியும் சாராவை நெருங்கினான்.
சாரா எழுந்து உளூச் செய்து தொழுது விட்டு இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால் எனது பெண்மையை கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றியிருந்தால் இந்தக் காஃபிரை என்னை ஆட்கொள்ள விடாதே!என்று பிரார்த்தித்தார். உடனே அவன் கீழே விழுந்து கால்களால் உதைத்துக் கொண்டான்.
மன்னனின் நிலையைக் கண்ட சாரா இறைவா! இவன் செத்து விட்டால் நான் தான் இவனைக் கொன்றேன் என்று மக்கள் கூறுவர் என்று பிரார்த்தித்தார்.
இப்படி மன்னன் இரண்டு அல்லது மூன்று முறை வீழ்ந்து எழுந்து அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஒரு ஷைத்தானைத் தான் அனுப்பியிருக்கிறீர்கள். எனவே இவரை இப்ராஹீமிடம் அழைத்துச் செல்லுங்கள். இவருக்கு (பணிப் பெண்ணான) ஹாஜரைக் கொடுங்கள் என்று (அவையோரிடம்) சொன்னான்.
சாரா இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் திரும்பி வந்து ”அல்லாஹ் இந்த காஃபிரை வீழ்த்தி நமக்குப் பணி புரிய ஒரு அடிமைப் பெண்ணையும் தந்து விட்டான் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 221)
[ அந்த அடிமைப்பெண்தான் ஹாஜரா (ஹாஜர்) அலைஹிஸ்ஸலாம். அவர்கள்.]