செல்வமும் வறுமையும்
إِنَّا جَعَلْنَا مَا عَلَى الْأَرْضِ زِينَةً لَّهَا لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًا ، وَإِنَّا لَجَاعِلُونَ مَا عَلَيْهَا صَعِيدًا جُرُزًا
‘அவர்களில் அழகிய நல்லறம் செய்பவர் யார் எனச் சோதிப்பதற்காக இந்தப் பூமியின் மேல் உள்ளவைகளை அதற்கு அலங்காரமாக நிச்சயமாக நாம் ஆக்கியுள்ளோம். மேலும் அதன் மேல் உள்ளதை வறண்ட மண்ணாகவும் நாம் ஆக்கக் கூடியவர்களே!’. (அல்குர்ஆன் 18:07,08)
கடவுளை எல்லா மதத்தவர்களும் நம்புகின்றனர். ஆனால் மற்ற எந்தச் சமயத்தவர்களையும் விட முஸ்லிம்களின் கடவுள் நம்பிக்கை வலிமை மிக்கதாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது.
பக்திமான்களாக இருந்தவர்கள் கூட தங்கள் வாழ்க்கையில் துன்பங்களைச் சந்திக்கும் போது நாத்திகர்களாகி விடுவதை மற்ற மதத்தவர்களிடம் சர்வ சாதாரணமாகக் காண்கிறோம்.
கடவுள் என இவர்கள் நம்புகின்ற கற்சிலைகளுக்கு முன்னால் நின்று கொண்டு அதைத் திட்டுகின்ற காட்சியையும் மண்ணை வாரி தூற்றுகின்ற காட்சியையும் பிற மதத்தவர்களிடம் சர்வ சாதாரணமாக காண் முடிகின்றது. ‘கடவுளே! உனக்கு கண் இருக்கிறதா?’ என்றெல்லாம் துன்பம் வரும் வேளையில் புலம்புகின்றவர்களையும் நாம் பார்க்கிறோம்.
கடவுளை நம்புகின்ற மற்ற மதத்தவர்களிடம் காணப்படும் இந்தக் கோளாறு முஸ்லிம்களிடம் காணப்படுவதில்லையே அது ஏன்?
மற்ற மதத்தினர் தவறான அடிப்படையின் மீது தங்கள் நம்பிக்கை எனும் மாளிகைகளை எழுப்பிக் கொண்டது தான் இதற்குக் காரணம்.
இவ்வுலகில் வாழ்கின்ற மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியான செல்வச் செழிப்புடனும் வசதி வாய்ப்புகளுடனும் இருப்பதில்லை. சிலர் அதிகமான வசதிகளையும் பதவிகளையும் பெற்றுள்ளனர். பலர் இத்தகைய வாய்ப்பைப் பெற்றிருக்க வில்லை. இதற்குக் காரணம் என்ன என்பதை விளக்கும் போது மற்ற மதங்கள் செய்கின்ற தவறுகள் தான் அடிப்படைக் கோளாறு எனலாம்.
நீ கடவுள் மீது பக்தியுடன் இருந்தால் உனக்கு எண்ணற்ற வசதிகள் கிடைக்கும் என்று ஏழைகளிடம் அம்மதங்கள் பேசுகின்றன. சென்ற பிறவியில் நல்ல பக்திமானாக இல்லாததே நீ இப்போது ஏழையாக இருப்பதற்குக் காரணம் என்று அவனுக்கு அறிவுரை கூறுகின்றன.
இது போல் வசதி வாய்ப்புகளுடன் உள்ளவனை நோக்கி, கடவுள் உன் மீது அன்பாய் இருக்கிறார். நீ நல்லவனாக இருப்பதால் தான் இந்த நிலையை அடைந்திருக்கிறாய் என்றும் சென்ற பிறவியில் நீ நல்லவனாக இருந்ததால் தான் இந்த உயர்ந்த நிலை கிடைத்தது என்றும் பேசுகின்றன.
செழிப்பாய் இருந்தவனுக்கு ஒரு நட்டம் ஏற்பட்டால் இவன் என்னவோ செய்திருப்பான் என்று கூறுவதும் இதனால் இப்படி ஏற்பட்டது என்று பேசுவதும் இந்த நம்பிக்கையின் வெளிப்பாடுதான்.
கீழ் நிலையில் இருந்த ஒருவனுக்கு நல்ல நிலை ஏற்பட்டால் அவன் கொடுத்து வைத்திருக்கிறான். இவன் புண்ணியம் செய்திருப்பான் என்று காரணம் கூறுவதற்கும் இந்த நம்பிக்கை தான் காரணம்.
இந்த நம்பிக்கை ஆழமாக பதிந்த பிறகு ஒரு கேடுகெட்டவன் உயர்ந்த நிலையை அடைவதைப் பார்க்கும் போதுமு; ஒரு நல்லவன் சொல்லொனாத் துன்பத்தை அடையும் போதும் கடவுள் நம்பிக்கையே அவன் உள்ளத்திலிருந்து விலகி விடுகிறது. மதத்தை வளர்ப்பதற்காக பொய்யான காரணங்களைக் கூறி நம்மை ஏமாற்றி விட்டனர் என்று அவனுக்குக் கோபம் ஏற்படுகின்றது. இதனால் தான் கடவுள் (?) மீதே மண்ணை வாரித் தூற்ற முடிகின்றது.
ஆனால் இஸ்லாம் பொய்யான காரணங்களைக் கூறி மக்களை ஏமாற்றவில்லை. பொய்யான வாக்குறுதிகள் எதனையும் அளிக்கவில்லை. எது உண்மையோ அதை மட்டுமே கூறுகின்றது.
இவ்வுலகில் உள்ள ஏழைகள் பலரை நாம் பார்க்கிறோம். அவர்கள் அனைவரும் கெட்டவர்களாக இருப்பதில்லை. அது போல் அனைவரும் நல்லவர்களாகவும் இருப்பதில்லை. அவர்களின் ஏழ்மை நிலைக்கும் அவர்களது பாவ புண்ணியத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பது கண்கூடாகத் தெரிகின்ற உண்மை.
அது போல் செல்வந்தர்களிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே உள்ளனர். இவர்களின் செல்வ நிலைக்கும் பாவ புண்ணியத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லாமலிருப்பதைக் காண்கிறோம்.
இந்த நிதர்சனமான உண்மையை அப்படியே கூறுகின்ற ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே!
இவ்வுலகில் நல்ல வசதி வாய்ப்புகளுடன் இருப்பதற்கும் நல்லவர்களாக இருப்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த வசதிகளைப் பெற்ற பிறகும் நீங்கள் நல்லவர்களாக வாழ்கிறீர்களா என்று சோதித்துப் பார்க்கவே இவை வழங்கப்பட்டுள்ளன. வசதிகள் வந்த பின் அதன் காரணமாக ஆணவம் பிடித்து அலைந்தால் நீ கெட்டவனாவாய்! அதை மற்றவருக்கு வாரி வழங்கி நற்செயல்களில் உன்னை ஈடுபடுத்திக் கொண்டால் நல்லவனாவாய் என்று இஸ்லாம் கூறுகின்றது.
அது போல் நீ வசதி வாய்ப்புகளைப் பெறவில்லை என்பதால் நீ கெட்டவன் இல்லை. இந்த வறுமையின் காரணமாக நீ தடம் மாறுகிறாயா அல்லது தடம் புரளாமல் உறுதியாக நிற்கிறாயா? என்று சோதித்துப் பார்க்கவே இந்த நிலை என்று இஸ்லாம் கூறுகின்றது.
செழிப்பு வறட்சி இரண்டுமே இரண்டு வகையான பரீட்சைகள் என்று இஸ்லாம் கூறுகின்ற காரணத்தினால் தான் முஸ்லிம்கள் எத்தகைய துன்பத்தை அடைய நேர்ந்தாலும் அவர்கள் அதைப் பொறுத்துக் கொள்கின்றனர். கடவுளே உனக்கு கண்ணில்லையா என்று கேட்பதில்லை.
இரண்டு நிலையில் எது ஏற்பட்டாலும் இரண்டும் சோதனைதானே தவிர நம்மை நல்லவன் கெட்டவன் என்று வழங்கப்படும் தீர்ப்பு அல்ல. இனிமேல்தான் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. அங்கே நல்ல தீர்ப்பு பெறுவதற்காக வறட்சியிலும் செழிப்பிலும் நிலை குலையாமல் இருக்க வேண்டும் என்று உறுதியான அடிப்படையின் மீது முஸ்லிம்களின் நம்பிக்கை எழுப்பப்பட்டுள்ளது.
அல் கஹ்ஃப் அத்தியாயத்தின் ஏழாவது வசனமும் அந்த அடிப்படையைத் தான் சொல்லித் தருகின்றது. இப்பூமியில் உள்ள செழிப்புகள் யாவும் நீங்கள் நல்லவர்களாக நடக்கிறீர்களா என்று சோதித்துப் பார்ப்பதற்குத் தான் என்று கூறி முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பலமான அஸ்திவாரத்தின் மீது எழுப்புகின்றது. பின்வரும் வசனங்களும் இந்த வசனத்தின் விளக்கவுரைகளாகத் திகழ்கின்றன.
‘நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பாலும் சோதிப்போம். ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (பொறுமையுடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது ‘நிச்சயமாக நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்’ என்று கூறுவார்கள்’ ( அல்குர்ஆன் 2:155,156)
‘(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும் உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப் படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும் இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள். ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடித் தரும்) தீர்மானத்திற்குரிய செயலாகும்’. ( அல்குர்ஆன் 3:186)
‘ஒவ்வொர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரீட்சைக்காக கெடுதியையும் நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர் நம்மிடமே நீங்கள் மீட்கப் படுவீர்கள்’. ( அல்குர்ஆன் 21:35)
‘இன்னும்; மனிதர்களில் (ஓர் உறுதியுடன் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான். அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கின்றான். ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின் அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கின்றான். இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான். இது தான் தெளிவான நஷ்டமாகும்’. ( அல்குர்ஆன் 22:11)
‘இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன் ‘என் இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தியுள்ளான்’ என்று கூறுகின்றான். எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து அவனை (இறைவன்) சோதித்தாலோ அவன், ‘என் இறைவன் என்னைச் சிறுமைப்படுத்தி விட்டான்’ என்று கூறுகின்றான்’. (அல்குர்ஆன் 89:15,16)
எனவே செல்வமும் வறுமையும் சோதனைக்குத் தான் என்பதை உணர்ந்து சோதனையில் தேறிட வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
source: http://mazaallah.typepad.com/blog/page/8/