அன்பை போதித்த அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
‘அகிலத்தில் ஆற்றல்மிகு வார்த்தை அன்பேயாகும்’ – Love is the most powerful word in the world, முதுமொழி அன்பின் மதிப்பையும் உயர்வையும் விளக்குகின்றன. ”அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்” என்று தமிழ்மறை கூறுகிறது. அன்பைப் போதிக்காத சமயங்கள் இல்லை என்றே கூறலாம். அன்புதான் அனைத்து நற்செயல்களுக்கும் அடிப்படைக் காரணமாகும்.
“சிறுவர்கள் மீது அன்பு காட்டுங்கள்; பெரியவர்களுக்கு மரியாதை செய்யுங்கள்” என்பது அண்ணலாரின் அன்புக் கட்டளை.
அன்பு எனும் வேர்ச்சொல்லுக்குப் பல கிளைகள் உள்ளன. ஓர் அன்னை தன் செல்லக் குழந்தைகள்மீது காட்டும் அன்பு, ஓர் இளைஞன் தன் வயதொத்த ஓர் இளைஞியிடம் காட்டும் அன்பு, ஏழைகள் மீது காட்டும் அன்பு, இறைவன் மீது கொள்ளும் அன்பு என எல்லாமே அன்புதான். எனினும் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி பதத்தைத் தருகிறது தேனினுமினிய தமிழ்மொழி.
1. ஓர் அன்னை தன் செல்லக் குழந்தைகளிடம் காட்டும் அன்பும், குழந்தைகள் தம் அன்னையிடம் காட்டும் அன்பும் பாசம் (Affection) ஆகும். இதே அன்பை அரபியில் ஷஃபகத் என்று கூறப்படுகிறது.
2. ஒருவன் அல்லது ஒருத்தி தன் வயதொத்தவனிடம் அன்புகொண்டு தோழமையோடு பழகுதல் நட்பு (Friendship) ஆகும். இதே அன்பை அரபியில் ஸதாகத் என்று கூறப்படுகிறது.
3. நாம் ஏழைகளிடம் காட்டும் அன்பு இரக்கம் (Pity) ஆகும்.
4. ஒரு தொழிலாளி தன் முதலாளியிடம் காட்டும் அன்பு விசுவாசம் ஆகும்.
5. ஓர் இளைஞன் தன் வயதொத்த ஓர் இளைஞியிடம் காட்டும் அன்பு காதல் (Lust) ஆகும். இதே அன்பை அரபியில் இஷ்க் என்று கூறப்படுகிறது. கணவன்-மனைவிக்கிடையே உள்ள அன்பு காதலாகும்.
6. உறவினர்களிடம் காட்டும் அன்பு பந்தம் (Relationship) ஆகும். இதை அரபியில் ஸிலத்துர் ரஹ்ம் என்று கூறுகின்றனர்.
7. உயிரினங்களிடம் காட்டும் அன்பு ஜீவகாருண்யம் ஆகும்.
8. நாம் இறைவனிடம் காட்டும் அன்பு பக்தி (Piety) ஆகும். இதை அரபியில் தக்வா என்று கூறுகின்றனர். இதனால்தான் இறைபக்தி என்று கூறுகிறோம்.
9. இறைவன் தன் அடியார்களிடம் காட்டும் அன்பே கருணை (Mercy) ஆகும். இதை அரபியில் ரஹ்மத் என்று கூறுகின்றனர். அதனால்தான் திருக்குர்ஆனில் அல்லாஹ் தன்னை ரஹீம்-கருணையாளன் என்று கூறுகின்றான்.
10. பொருள்களின் மீது நாம் கொள்ளும் வேட்கையே ஆசை (Like) ஆகும். இதனால்தான் மண்ணாசை, பொன்னாசை என்று கூறுகிறோம்.
11. தாய் நாட்டின் மீதும் தாய்மொழியின்மீதும் நாம் கொள்ளும் அன்பு பற்று (Patriotism) ஆகும். இதை அரபியில் ஹுப்புல் வத்தன் என்று கூறுகின்றனர். இதனால்தான் நாட்டுப்பற்று, மொழிப்பற்று என்று அழைக்கிறோம்.12. பொதுவாக ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடம் காட்டும் அன்பு சகோதரத்துவம் (Brotherhood) ஆகும். இதை அரபியில் உக்வத் என்று கூறுகின்றனர்.ஆக, மேற்கண்ட பதங்கள் யாவும் அன்பு எனும் கட்டத்தைத் தாண்டியபிறகுதான் பிறக்கின்றன.
மேற்கண்ட அனைத்துப் பதங்களுக்குள்ளும் அன்பு எனும் வேர் உள்ளது. ஒரு பொருளையோ மனிதனையோ நாம் பார்க்கும்போது நம் உள்ளத்தில் ஏற்படும் இயல்பான உணர்வுதான் அன்பு. அந்த அன்பு எப்பொருளை அல்லது எவ்விடத்தைச் சார்ந்து நிற்கிறதோ அதை வைத்துத்தான் அதற்குரிய பெயர் மாறுபடுகின்றது. ஆக, அன்பு என்பது ஒன்றுதான். அதன் கிளைகள்தாம் பற்பல.
தமிழில் உள்ள அன்பு எனும் பதத்திற்கு இணையாக அரபியில் ஹுப்பு எனும் பதம் உள்ளது. இந்த ஹுப்பு உடைய கிளைகள்தாம் மஹப்பத், ஷஃபகத், இஷ்க், சதாகத், உக்வத், உத்து, சிலத்து ரஹ்ம், ஹுப்புல் வத்தன், ரஹ்மத் ஆகும். மேற்காணும் பதங்கள் யாவற்றுக்கும் ஹுப்பு எனும் அன்புதான் அடிப்படை. எனவே அந்த அன்பு எங்கு பொருந்துகிறதோ அதை வைத்தே அதற்குரிய பெயர் சொல்லப்படும்.
மேற்கண்ட அனைத்து வகையான அன்பையும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளதோடு, அதன்படி வாழ்ந்தும் இருக்கின்றார்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இயற்கையாகவே அன்புமிக்கவர்களாக இருந்தார்கள். அவர்களின் நற்குணங்களும் அன்பான பேச்சும் இனிய நடைமுறைகளும்தாம் பிறரைக் கவர்ந்தன. பிறருடன் பழகும்போதும் தம் குடும்பத்தாருடன் பேசும்போதும் தம் துணைவியருடன் உரையாடும்போதும் இனிய வார்த்தைகளையே பேசினார்கள்; அன்பாகவே நடந்துகொண்டார்கள். அவர்களின் அன்பான பேச்சும் புன்னகை தவழும் முகமும் காண்போரைக் கவரும்.
”அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.”
அன்பு உடையோரே உயிர் உடையோராகக் கருதப்படுவர். அது அற்றோர் உயிர் இருந்தும் உயிரற்றோரே ஆவர் என்று வள்ளுவர் கூறுகிறார். அவரின் வாய்மொழிக்கேற்ப அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகுந்த அன்புகொண்டவர்களாக வாழ்ந்து காட்டினார்கள் என்பதை நாம் வரலாற்றின் மூலம் அறிகிறோம்.
அல்லாஹ் திருக்குர்ஆனில், “இவ்வுலக மக்களுக்கு ஓர் அருட்கொடையாகவே-அன்பாளராகவே நாம் உம்மை அனுப்பியுள்ளோம்” என்று கூறுகின்றான். அல்லாஹ்வின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில்தான் அண்ணலார் அனைவரிடமும் அன்பாகவே நடந்துகொண்டார்கள். நாளுக்கு நாள் பற்பல துன்பங்களும் துயரங்களும் அவர்களை வாட்டியபோதும் தம் இனிய பண்பாலும் சகிப்புத்தன்மையாலும் அவற்றைப் பொறுத்துக்கொண்டார்கள்.
தாயிஃப் நகர மக்கள் கல்லால் அடித்து அவர்களின் மேனியைக் காயப்படுத்தி, கடுஞ்சொற்களால் வதைத்து, அவர்கள்தம் நெஞ்சைப் புண்ணாக்கியபோதும் அவர்களைப் பழிவாங்க எண்ணவில்லை. கடின உளம் கொண்ட கல்நெஞ்சக்காரர்களிடமும் அண்ணலாரின் அன்பே மிகைத்து நின்றது. அம்மக்களின் நல்வழிக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள்.
திருக்குர்ஆனில் அல்லாஹ், தன்னுடைய இறுதித்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களிடம் எவ்வளவு அன்பாக நடந்துகொண்டார்கள் என்பதைப் புகழ்ந்து கூறுகின்றான். ”அல்லாஹ்வின் கருணையால் அவர்களிடம் நீங்கள் மிகவும் நளினமாக நடந்துகொண்டீர்கள். நீங்கள் மட்டும் சற்றுக் கடினமானவராகவும் கல்நெஞ்சினராகவும் இருந்திருப்பின் அம்மக்கள் உம்மைவிட்டு வெருண்டோடியிருப்பார்கள். (அல்குர்ஆன் 3: 159)
அதாவது நீங்கள் மிகவும் அன்பானவர்; நளினமானவர். நீங்கள் அம்மக்களிடம் அன்பாக நடந்துகொண்டதால்தான் அவர்கள் உங்களின் இனிய பேச்சைச் செவியுற முற்பட்டனர்; பின்னர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர் என்று விரித்துரைக்கின்றான். அவ்வளவு அன்புமிக்கவராக அண்ணல் நபியவர்கள் திகழ்ந்தார்கள். இதனால்தான் அவர்களுடன் சேர்ந்தே இருந்த ஆருயிர்த் தோழர்களைப் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றான்.
”முஹம்மது (இவர்) அல்லாஹ்வின் தூதர். அவரோடு இருப்பவர்கள் நிராகரிப்போரிடம் கடினமானவர்களாகவும் தங்களுக்கு மத்தியில் ஒருவருக்கொருவர் அன்புமிக்கோராகவும் இருக்கின்றார்கள்.” (அல்குர்ஆன் 48: 29)
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்பைப் போதித்ததால்தான் அவர்களின் அன்புத் தோழர்கள் தங்களுக்கு மத்தியில் எவ்விதப் பிணக்குகளுமின்றி அன்பாகவும் சகோதரத்துவ உணர்வோடும் திகழ்ந்தார்கள்.
“உன் உறவைத் துண்டித்தவரோடு சேர்ந்து வாழ்; உனக்கு அநீதி செய்தவரை மன்னித்துவிடு; உனக்குத் தீங்கிழைத்தவருக்கு நன்மைசெய்” என்று கூறி மற்றோர்மீது அன்புடையோராக வாழ வழிகாட்டியுள்ளார்கள்.
பாசம்
நாம் நம்முடைய குழந்தைகளிடம் எவ்வாறு நடந்துகொள்கிறோம். எவ்வாறு பேணி வளர்க்கிறோம் என்று சிந்தித்துப் பார்க்கும்போது, அண்ணல் நபியின் சமுதாயத்தினர் என நாம் சொல்-க் கொள்ளவே வெட்கப்படவேண்டும். இன்றைய அவசர யுகத்தில் ஒரு தாய் தன் குழந்தைக்கு அன்பு முத்தம் கொடுப்பதற்கோ குழந்தை தன் அன்னைக்குப் பாசமுத்தம் கொடுப்பதற்கோ நேரமில்லை. வேகமாகப் புறப்படும் வேளையில், குழந்தை தன் வாயில் கைவைத்து முத்தமிட்டு, அதைத் தன் அன்னையிடம் காட்டுகிறது. அவளும் அதை (Plain Kiss) அன்புடன் ஏற்றுக்கொள்கிறாள். இந்த வேகத்தில் இன்றைய சமுதாயம் சென்றுகொண்டிருக்கிறது.
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவித்துள்ளதாவது :
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் பேரர்களைக் கொஞ்சி, முத்தமிட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். அச்சமயத்தில், கிராமப் புறத்தி-ருந்து நபித்தோழர் ஒருவர் வந்தார். அண்ணலாரின் இச்செயலைக் கண்டு ஆச்சரியப்பட்டு, நீங்கள் இவ்வாறு செய்கின்றீர்களா? எனக்குப் பத்துக் குழந்தைகள் உள்ளனர். நான் ஒரு நாளும் என் குழந்தைகளை முத்தமிட்டதில்லை என்று கூறினார். இதைக்கேட்ட அண்ணலார், அல்லாஹ் உன் உள்ளத்தி-ருந்து அன்பை எடுத்துவிட்டால் நானா பொறுப்பு? என்று மறுவினாத்தொடுத்தார்கள். (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)
ஆக, பெற்றோர் தம் குழந்தைகளை முத்தமிட்டுக் கொஞ்சுவதும் நபிவழியேயாகும். அப்போதுதான் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் மத்தியிலுள்ள பாசம் அதிகமாகும்.
குழலினிது யாழினிது என்ப தம்மக்கள்
மழலைமொழி கேளா தவர்.
யார் தம் செல்லக்குழந்தைகளின் மழலைமொழிகேட்டு இரசிக்கவில்லையோ அவர்கள்தாம் குழலோசையையும் யாழிசையையும் கேட்டு இரசித்துக்கொண்டிருப்பர் என்றுரைக்கிறார் வள்ளுவர். ஆம், மழலைமொழி கேட்டு இரசிப்பதுதான் பேரின்பம். தற்காலத்திலும் தம் பிள்ளைகளிடம் கொஞ்சிப்பேசி அவர்களின் மழலைமொழி கேட்டு இரசிக்கும் அன்னைகளும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
பந்தம்
ஒருவர் தம்முடைய உறவினர்களிடம் கொள்ளும் அன்புதான் பந்தம் ஆகும். உறவு என்பது நம் வாழ்வின் முக்கிய அங்கம். உறவைப் பிரிந்து நாம் வாழ இயலாது. உறவோடு நாம் சேர்ந்து வாழும்போதுதான் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். அதனால் நமக்குப் பக்கபலமும் மனதிடமும் உண்டாகின்றன. உறவை வெறுத்தொதுக்கினால் அவன் தனிமனிதனாக வாழும் நிலை ஏற்படும். அதனால் அவனை அவனுடைய எதிரிகள் எளிதில் வீழ்த்துவர்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் உறவினர்களோடு சேர்ந்து வாழ்ந்திருக்கின்றார்கள். பிறருக்கும் அதையே ஏவியிருக்கின்றார்கள். உங்களைத் துண்டிப்போருடன் சேர்ந்து வாழுங்கள் என்று கூறியுள்ளார்கள்.
”உறவைத் துண்டித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)
உறவைச் சேர்ந்து வாழ்வதால் என்ன நன்மை என்பதை திருக்குர்ஆன் வாயிலாகத் தெரிந்துகொள்வோம். நபி ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்தம் சமுதாய மக்களிடம் ஏகத்துவப் பிரச்சாரம் செய்தார்கள். அவர்களின் அழைப்பைக் கேட்டுக் கொதிப்படைந்த மக்கள், ஷுஐபே! நீர் சொல்வதில் எதுவுமே எங்களுக்குப் புரியவில்லை. உம்மை எங்களுள் பலவீனராகக் காண்கிறோம். உம் குடும்பம் மட்டும் இல்லையெனில் உம்மைக் கல்லால் அடித்தே கொன்றிருப்போம் (அல்குர்ஆன் 11: 91) என்று கூறினர். ஆக, நபி ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பக்கபலமாக இருந்தது அவர்களின் குடும்பமும், அவர்களின் உறவினர்களும்தாம். அதேபோல், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரம் செய்தபோது, அவர்களுக்குப் பக்கபலமாக இருந்தவர் அவர்களுடைய பெரிய தந்தை அபூதாலிப் ஆவார் என்பதை நாம் நினைவுகூரவேண்டும்.
உயிர்பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் நேரம் கொடுமையானது என்று கூறுவர். ஏனெனில் உயிர் பிரிவதால் ஓர் உயிர் மட்டுமே பிரிகிறது. உறவு பிரிவதால் எத்தனையோ உறவினர்கள் நம்மைவிட்டுப் பிரிகின்றனர். எத்தனையோ சொந்தங்களும் பந்தங்களும் நம்மைவிட்டுப் பிரிகின்றன. எனவே உறவைப் பேணி வாழ்வது இன்றியமையாதது. ஙப்போல் வளை என்று ஆத்திச்சூடிப் பாடல் ஒன்று உண்டு. ங எனும் எழுத்தைப்போல் உறவினர்களை இணைந்து வாழவேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது.
அதற்கு மேலாக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்துவதைப் பாருங்கள். “உறவினர்கள் ஒன்றாக இருக்கும்போது சேர்ந்து வாழ்பவன் உறவை இணைப்பவன் அல்லன். ஒருவனுடைய உறவு அறுந்துவிட்ட நிலையில், தானாக முன்வந்து அவர்களிடம் சென்று சேர்ந்துகொள்பவனே உறவை இணைப்பவன் ஆவான்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள். (நூல்: புகாரீ)
ஜீவகாருண்யம்
உயிரினங்களிடம் அன்பு காட்டுவதே ஜீவகாருண்யம் ஆகும். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டியிருக்கின்றார்கள். அவற்றிற்குரிய உரிமைகளை நிறைவேற்றியிருக்கின்றார்கள்; நிறைவேற்ற ஏவியிருக்கின்றார்கள். அண்ணல் நபியவர்கள் எந்த ஓர் உயிருக்கும் தீங்கிழைக்கவோ, வதை செய்யவோ அனுமதிக்கவில்லை. அண்ணல் நபியவர்களின் வாழ்வில் நடந்த எத்தனையோ நிகழ்வுகள் இதற்குச் சான்றளிக்கின்றன.
நபித்தோழர்களுள் ஒருவர், ஒரு குருவிக்கூட்டி-ருந்து ஒரு குருவிக்குஞ்சைப் பிடித்துக்கொண்டு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்துகொண்டிருந்தபோது, அக்குஞ்சின் தாய்ப்பறவை அவரைச் சுற்றிச் சுற்றி வந்தது. அதைச் சிறிதும் பொருட்படுத்தாத அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று அமர்ந்துவிட்டார். இதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “உங்கள் கையிலுள்ள குஞ்சைப் பெற்றிடத் தாய்ப்பறவையின் ஏக்கத்தைப் பாருங்கள். நீங்கள் விளையாட அந்தக் குருவிக்குஞ்சுதான் கிடைத்ததா? அதை விட்டுவிடுங்கள். எவ்வுயிர்க்கும் நோவினை கொடுக்காதீர்கள்” என்று கூறினார்கள்.
ஒரு குருவியின் ஏக்கத்தைப் புரிந்துகொண்டு அதன்மீது இரக்கம் காட்டிய அண்ணல் நபியின் ஜீவகாருண்யத்தை இங்கு நாம் நினைவுகூர வேண்டும்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் சுயதேவையைப் பூர்த்திசெய்துகொள்ள ஒரு தோட்டத்திற்குள் சென்றார்கள். வெகுநேரமாகியும் திரும்பவில்லை. நபித்தோழர்கள் சிலர் அத்தோட்டத்திற்குள் சென்றபோது, ஓர் ஒட்டகம் அண்ணல் நபியவர்களிடம் அழுதுகொண்டு, என் முதலாளி என்மீது அதிகச் சுமையை ஏற்றுகிறான்; எனக்குச் சரியாகத் தீனி தருவதில்லை; என்னை அடித்துத் துன்புறுத்துகிறான் என்று முறையிட்டது. இதைக் கேட்ட நபியவர்கள், இந்த ஒட்டகத்தின் உரிமையாளர் யார்? என வினவ, நான்தான் அல்லாஹ்வின் தூதரே! என ஒருவர் நபியவர்கள்முன் வந்து நின்றார். அவரை நோக்கி, இனிமேல் நீ இதை அடிக்கக்கூடாது. அதிகச் சுமைகளை ஏற்றக்கூடாது. இதற்குத் தீனி போட்ட பின்னரே நீ உண்ண வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.
உயிர் வதையை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. மாறாக, எல்லா உயிர்களிடத்தும் அன்புகாட்ட வேண்டுமென்றே அண்ணல் நபியவர்கள் போதித்துள்ளார்கள். இதையே நாம் கடைப்பிடிக்க வேண்டும்.
நட்பு
தன்னுடைய இரகசியங்களைப் பரிமாறிக்கொள்ளவும், தனக்கென ஓர் உறவை ஏற்படுத்திக்கொள்ளவும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அன்புடன் பழகுவதே நட்பாகும். இதைத் தோழமை, நேசம், நட்பு என்ற பெயர்களில் கூறலாம். அதிகமானோரை நண்பர்களாகப் பெருக்கிக்கொள்வதைவிட, ஒரு நண்பனாக இருப்பினும் சிறந்த நண்பனாக, உற்ற தோழனாக, சோகத்தில் ஆறுதல் கூறுபவனாக, தம் வெற்றியைப் பாராட்டுபவனாக, வழிதவறினால் சீர்படுத்துபவனாகத் தேர்ந்தெடுப்பது அவசியம்.
நண்பனுக்காக உயிரைக்கொடுப்பது எளிது
உயிரைக் கொடுப்பதற்குரிய நண்பன் கிடைப்பது அரிது.
உன் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருத வேண்டும். உன் இன்பத்தைத் தன் இன்பமாகக் கருதவேண்டும். உன் வேலைகளில் அவனும் பங்குகொள்ள வேண்டும். உனக்காக எதையும் தியாகம் செய்யக் காத்திருக்க வேண்டும். அதுதான் உண்மையான நட்பு.
இத்தகைய நட்பே அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அபூபக்ர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் இடையே இருந்தது. அண்ணல் நபியின் வார்த்தைகளுக்காக ஈராண்டுகள் அபூபக்ர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் காத்திருந்தார்கள். அவர்கள் மக்காவி-ருந்து மதீனாவுக்குப் புலம்பெயர அல்லாஹ்வின் கட்டளை வந்தபோது, நேராக அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் இல்லம் வந்தார்கள். அவர்களோ அண்ணல் நபியின் வருகைக்காக விளக்கேற்றி வைத்துக்கொண்டு காத்திருந்தார்கள். இதுவே உண்மையான நட்புக்கு அடையாளம்.
அதேபோல் அண்ணல் நபியவர்களும் அபூபக்ர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் குகைக்குள் இருந்தபோது இறைநிராகரிப்பாளர்கள் இருவரையும் தேடிக்கொண்டு குகையின் வாயில் வரை வந்துவிட்டார்கள். அந்நேரத்தில் மிகவும் அஞ்சிய தம்முடைய நண்பர் அபூபக்ர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அண்ணல் நபியவர்கள் ஆறுதல் கூறினார்கள். அதைத் திருக்குர்ஆன் கூறுகிறது:
குகையில் இருந்த இருவருள் ஒருவராக அவர் இருந்த(போது எதிரிகள் வந்து சூழ்ந்துகொண்ட) சமயத்தில் தம்முடன் (குகையில்) இருந்த தோழ(ராகிய அபூபக்)ரை நோக்கி, நீங்கள் கவலைப்படாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் என்று கூறியபோதும் அல்லாஹ் அவருக்குத் தன்னுடைய மனநிம்மதியை அளித்தான். (அல்குர்ஆன் 9: 40)
ஆக, அண்ணல் நபியவர்கள் எல்லாவித அன்பையும் கற்றுத்தந்துள்ளதோடு, வாழ்ந்தும் காட்டியிருக்கின்றார்கள். எனவே அன்பிற்கு எத்தனையெத்தனை வழிகள் உள்ளனவோ அத்தனை வழிகளிலும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையை நாம் கடைப்பிடித்தால், வீண்கோபம், மன இறுக்கம், படபடப்பு, பதற்றம் இவற்றிலிருந்து விடுபட்டு, சாந்தமான உள்ளத்துடனும் மனநிம்மதியுடனும் இனிய வாழ்வு வாழலாம் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.
– நூ. அப்துல் ஹாதி பாகவி