வெண்திரை வெளிச்சத்தில் வெந்து போகும் வெட்க உணர்வுகள்
வெட்கம் என்பது மனித இனத்துடன் ஒட்டி ஒன்றிணைந்து பிறந்த ஓர் இயற்கை உணர்வாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் வெட்கத்தை மனிதனின் உணர்வுகளில் ஒன்றாகக் கலந்து படைத்ததன் விளைவாகத் தான் முதல் மனிதர்களான ஆதம், ஹவ்வா ஆகிய இருவரும் பொங்கி எழுந்த நாணத்துடன் தங்கள் மானத்தை சுவனத்தின் இலை தழைகளைக் கொண்டு மறைக்க விளைகின்றனர்.
”அவ்விருவரும் அம் மரத்தைச் சுவைத்த போது அவர்களின் வெட்கத்தலங்கள் அவர்களுக்குத் தெரிந்தன. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையினால் தம்மை மூடிக் கொள்ள முயன்றனர்.” (அல்குர்ஆன் 7:22)
மேலும் மண்ணுலகத்திற்கு மனிதனை இறக்கி வைத்து, அவனுக்கு மரியாதை தரக்கூடிய, அலங்காரமான ஆடையையும் சேர்த்தே இறக்கி வைத்ததாக அல்லாஹ் கூறுகின்றான்.
”ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம்.” (அல்குர்ஆன் 7:26)
மனிதனுக்கு ஆடை மானத்தை மட்டும் காக்கவில்லை! மரியாதையைப் பெற்றுத் தரும் அலங்காரமாகவும் அமைந்துள்ளது என்பதை இந்த வசனத்தில் இருந்து தெரிந்து கொள்கின்றோம். மானம் மனிதனுடன் ஒட்டிப் பிறந்ததன் பின்னணியாகத் தான் காட்டுவாசிகளாக இருந்தாலும் ஆண்கள் ஒரு முழ ஒட்டுக் கோவணத்தைக் கொண்டேனும் அதை மறைக்கத் தவறுவதில்லை.
பெண் வர்க்கம் இதைவிட கூடுதலாக மறைத்துக் கொள்கின்றது. நாடோடியிடம், காட்டுமிராண்டியிடம் ஒண்டி நிற்கும் இந்த வெட்க உணர்வுடன் ஈமானிய உணர்வும் சேர்கின்ற போது அது மேலும் மெருகேருகின்றது. ஈமான் இல்லாமல் அறியாமை எனும் உணர்வு வலுக்கின்ற போது இயற்கையிலேயே இருக்கின்ற வெட்கமும் அறுந்து போய் விடுகின்றது.
கால் நிர்வாணம், அரை நிர்வாணம் என்பது மாறி முழு நிர்வாணமாக மாறி விடுகின்றது. இப்படி ஒரு வெட்கங் கெட்ட நிலைக்கு ஆணும் பெண்ணும் சென்று விடுகின்றனர். இப்படிப்பட்ட மிருக நிலைக்கு ஒரு முஃமினான ஆணோ பெண்ணோ செல்வது கிடையாது. அவர்களது ஈமான் அவர்களைக் கடிவாளமிட்டு காத்து நிற்கின்றது.
ஹஜ்ஜத்துல் வதாவுக்கு முந்தைய வருடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தலைமையில் மக்களை ஹஜ்ஜுக்கு அனுப்பி வைத்தார்கள். துல்ஹஜ் பிறை பத்தாம் நாள், “எச்சரிக்கை! இந்த வருடத்திற்குப் பின்னர் இணை வைப்பவர்கள் யாரும் ஹஜ் செய்யக் கூடாது. கஅபாவை நிர்வாணமாக தவாஃப் செய்யக் கூடாது” என்று அறிவிக்கச் செய்தார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 1622)
மக்கா நகரம் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்ததும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிர்வாணம் எனும் வாசலுக்கு நிரந்தர ஆடை அணிவிக்கின்றார்கள்.
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் (ஆடை) அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 7:31) என்ற வசனம் வணக்கத்தின் பெயரால் உருவாகும் நிர்வாணக் கலாச்சாரத்தை உடைத்தெறிகின்றது.
இஸ்லாம் மனித வாழ்வியல் தொடர்பான அனைத்திற்கும் வழிகாட்டலை வழங்குகின்றது. அந்த அடிப்படையில் ஓர் ஆண் அல்லது ஒரு பெண் தன்னுடைய மானத்தை எந்த அளவுக்கு மறைக்க வேண்டும் என்று வழிகாட்டுகின்றது.
இன்று நம்முடைய வாழ்க்கையில் ஒரு பெண்ணின் உடலிலிருந்து ஆடை எந்த அளவுக்கு விலகுகின்றதோ அந்த அளவுக்கு அப்பெண்ணின் உடற்பகுதி ஆடவனின் காமப் பார்வைக்குப் பலியாகின்றது. அதே சமயம் ஓர் ஆணின் உடலிலிருந்து ஆடை அகல்கின்ற போது, ஏன்? அவன் மேலாடை இல்லாமல் திறந்த மேனியாக நிற்கும் போது கூட அவன் எந்தப் பெண்ணையும் கவர்வது கிடையாது.
மனிதனிடம் இழையோடுகின்ற இந்த இயற்கை உணர்வைக் கவனித்து இஸ்லாம் ஒரு பெண்ணுக்கு அவளது முகம், முன் கைகளைத் தவிர உடல் முழுவதும் ஆடை அணிய வேண்டும் என்கின்றது. ஆனால் ஆணுக்கு இந்த அளவுகோலை விதிக்கவில்லை. ஓர் ஆண் தன் மானப் பகுதியை மறைக்காமல் இருந்தால் அவன் நிர்வாணம் என்ற நிலையை அடைகின்றான்.
பெண்களுக்குரிய உடற்கூறுகளைக் கவனித்து எல்லாம் வல்ல அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.
”தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.” (அல்குர்ஆன் 24:31)
ஏகத்துவத்தைக் கொள்கையாகக் கொண்ட பெண்களிடம் இந்த மாற்றங்கள் இன்று படிப்படியாக உருவாகிக் கொண்டிருக்கின்றன. அல்ஹம்துலில்லாஹ்!
பொதுவாகவே நம்முடைய பெண்கள் தம்பி, மகன் அல்லது இது போன்ற நெருங்கிய உறவினர் நிற்கும் போது, மகன் தானே என்று மேல் பகுதியில் முந்தானை இல்லாமல் நிற்பதில்லை. அவர்களது நாண உணர்வு அவர்களது மான உணர்வை வெகுவாகவே காத்து நிற்கின்றது. முந்தானை சற்று விலகினாலும் விஞ்சி நிற்கும் வெட்க உணர்வின் காரணமாக இழுத்துப் போட்டு மறைப்பது பெண்களின் வாடிக்கையான ஒன்று!
இது போல் ஓர் ஆண் தனது மகள் முன்னால் ஜட்டியுடன் நிற்பதில்லை. அந்த ஆண் மகனையும் நாணம் ஆரத் தழுவி அரவணைத்துக் கொள்கின்றது. இதில் எல்லாம் நம்மிடம் அல்லாஹ்வின் அருளால் எந்தக் குறையுமில்லை.
குறை எங்கே ஏற்படுகின்றது என்றால் நிர்வாணமானவர்களைப் பார்ப்பதில் தான். நாண உணர்வை நாசமாக்கும் நடிப்புலகம் நாங்களாவது, நிர்வாணமானவர்களைப் பார்ப்பதாவது? என்று ஆச்சரியத்துடன் வினவலாம். நிஜ வாழ்க்கையில் நாம் நிர்வாணமாக இருப்பதில்லை. குளியல் அறையில், யாருடைய பார்வையும் படாத இடத்தில் கூட நிர்வாணமாக இருக்கக் கூடாது என்பதைப் பேணுபவர்களாக இருக்கின்றோம்.
“அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுடைய மானங்களை யாரிடம் மறைக்க வேண்டும்?யாரிடம் மறைக்க வேண்டியதில்லை?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “உன்னுடைய மனைவி அல்லது உனது அடிமைப் பெண்கள் ஆகியோரிடத்தில் தவிர மற்றவரிடம் உனது மானத்தை மறைத்துக் கொள்” என்று சொன்னார்கள்.
“ஒரு மனிதர் இன்னொரு மனிதருடன் இருக்கும் போது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “முடிந்த அளவுக்கு மற்றொருவர் (உன்) மானத்தை பார்க்காதவாறு நடந்து கொள்” என்றார்கள். “ஒருவர் தனியாக இருக்கும் போது?” என்று நான் கேட்டதற்கு, “அல்லாஹ் வெட்கப் படுவதற்கு மிகவும் தகுதியானவன்”என்று சொன்னார்கள். (அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி 2693)
இந்த ஹதீஸின் அடிப்படையில் நிர்வாணமாக நாம் யாரும் குளிப்பது கிடையாது. இன்னும் சொல்லப் போனால் நிர்வாண நிலையில் இருப்பவர்களை நாம் நேரில் பார்க்கக் கூட சகிக்க மாட்டோம் என்பது உண்மையே! ஆனால் சினிமா, டிவி என்று வருகின்ற போது அதில் வரும் நிர்வாண நடிக, நடிகைகளைப் பார்த்ததும் நாம் நமது வெட்க உணர்வை காற்றில் பறக்க விட்டு விடுகின்றோம். ஆண்களும் பெண்களும் சேர்ந்தே அமர்ந்து இந்த அவலத்தை அரங்கேற்றுகின்றோம்.
வீட்டில் நிற்கும் போது தாவணியில்லாமல் நிற்காத பெண்களால் – தாய், தந்தை, பிள்ளைகள்,பேரன் பேத்திகள் என்று குடும்பத்திலுள்ள அனைவரும் மொத்தமாக கதாநாயகியின் குளியல் காட்சிகளை, வில்லனின் கற்பழிப்புக் காட்சிகளை, கதாநாயகனின் படுக்கைக் காட்சிகளை,அவர்கள் கட்டித் தழுவும் பாடல் காட்சிகளை – எப்படிப் பார்க்க முடிகின்றது? அதுவும் நாம் பெற்ற பிள்ளைகளுடம் அமர்ந்து பார்ப்பதற்கு நமது வெட்க உணர்வு எப்படி இடம் தருகின்றது?
நடைமுறை வாழ்க்கையில் பெற்றோர்கள் தங்களது மகன் படுக்கையறையில் கதவைத் திறந்து போட்டுக் கொண்டு கட்டித் தழுவி, படுத்துக் கிடப்பதற்குச் சம்மதிப்பார்களா? நாண உணர்வு அவர்களை அடித்துப் புரண்டு அங்கிருந்து ஓட வைக்காதா? இந்த அளவுக்கு கரைபுரண்டு ஓடும் வெட்க உணர்வை திரைப்படத்தைப் பார்க்கும் போது நாம் காற்றில் பறக்க விடுவது ஏன்?
இங்கு தான் நம்மிடம் ஈமான் பலவீனப் பட்டு நிற்கின்றது. அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு மனிதர் தமது சகோதரர் (அதிகம்) வெட்கப் படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்த போது அவ்வழியே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சென்றார்கள். உடனே, “அவரை (கண்டிக்காமல்) விட்டு விடுங்கள். ஏனெனில் நிச்சயமாக வெட்கம் ஈமானின் ஓர் அம்சம்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 24)
இந்த ஹதீஸின் படி வெட்கம் தீமையைச் செய்வதை விட்டும் தடுக்க வேண்டும்? அவ்வாறு தடுத்திருக்கின்றதா என்றால் இல்லை. ”வெட்கம் இல்லையெனில் விரும்பியதையெல்லாம் செய்” என்ற பழமொழிக்குத் தக்க, வெட்கங் கெட்ட எல்லாக் காரியங்களையும் செய்ய ஆரம்பித்து விடுகின்றோம்.
இத்துடன் மட்டும் நாம் நின்று விடுவதில்லை. நம்முடைய சந்ததியினரை தலைமுறை தலைமுறையாய் படம் பார்க்க வைத்து வெட்கக் கேட்டில் வீழச் செய்கின்றோம்.
இதன் விளைவாய், “யார் இஸ்லாத்தில் தீயதை நடைமுறைப் படுத்துகின்றாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின்னால் அதைச் செய்பவரின் பாவமும் அப்பாவங்களிலிருந்து எதுவும் குறைக்கப் படாத அளவுக்கு உண்டு” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஹதீஸின் சுருக்கம்) (அறிவிப்பவர் : ஜரீர் இப்னு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 1691) என்ற ஹதீஸின்படி நமது குடும்பத்தில் உள்ள சந்ததியினர் காலாகாலம் செய்யும் பாவங்களை நம்முடைய பதிவேட்டில் பதியச் செய்கின்றோம்.
பொதுவாக திரைப்படத்தைப் பார்ப்பவர்கள் அதில் வரும் கதாபாத்திரங்களின் நடை, உடை, பாவனைகளை அப்படியே தவறாது பின்பற்றுகின்றனர். இன்று ஆண்கள், பெண்கள் அணிகின்ற ஆடைகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள், தாக்கங்கள் எல்லாமே திரைப்படத்தின் பிரதிபலிப்புகளாவே அமைகின்றன. மனிதனின் புறத்தில் இப்படி மாற்றங்களை ஏற்படுத்துவது போலவே அகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றான்.
பலர் கொலையாளிகளாக ஆவதற்கு சினிமா தான் காரணம் என்ற செய்தி வருகின்ற போது அதன் பரிமாணத்தை நாம் விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது போன்ற தாக்கம் நம் பிள்ளைகளிடம் ஏற்பட்டு அவர்கள் வெகு விரையில் ஒழுக்க வீழ்ச்சியின் பால் விரைந்து சென்று விடுகின்றனர்.
விபச்சாரத்திற்குரிய விஷ வித்துக்களை விதைக்கக் கூடிய பண்ணையாக திரை உலகம் அமைந்திருக்கின்றது என்பதில் நம்மிடையே மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இத்தகைய தீமைகளின் பக்கம் நெருக்கக் கூடாது என்று திருக்குர்ஆனில் வல்ல அல்லாஹ் கூறுகின்றான்.
”விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது”. (அல்குர்ஆன் 17:32)
யாரும் எடுத்த எடுப்பில் விபச்சாரத்திற்குச் சென்று விடுவதில்லை. அதற்குக் காரணமாக அமைந்துள்ள புலன்களை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவுபடக் கூறுகின்றார்கள்.
“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது. அல்லது பொய்யாக்குகின்றது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 6243)
கண் செய்யும் விபச்சாரத்தை சினிமா, டிவி போன்ற சாதனங்கள் மூலம் நாம் செய்து கொண்டிருக்கின்றோம். இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்திருப்பது வெட்கத்தை இழப்பது தான். ஈமானின் கிளையான வெட்கத்தை இழப்பதால் விபச்சாரம் போன்ற தீமைகள் இதை அடித்தளமாகக் கொண்டு எழத் துவங்குகின்றன. எனவே ஈமானின் கிளையான வெட்கத்தைப் பேணுவோம். தீமைகளிலிருந்து விலகுவோம். (EGATHUVAM SEP 2003)
– எம். ஷம்சுல்லுஹா
source: http://tamilwebislam.blogspot.in/2016/10/blog-post_19.html