ஒரு முஸ்லிமுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையிலுள்ள ஒப்பந்தம்
ஃபாத்திமா ஷஹானா (கொழும்பு)
ஒருவர் “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறு யாருமில்லை; முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்” என அல்லாஹ்விடம் ஒப்பந்தம் (கலிமா) செய்து முஸ்லிமாக அல்லாஹ்வின் அடியானாக இஸ்லாத்தில் நுழைந்துள்ளார்.
எனவே வாழ்க்கையின் எந்த நிலையிலும் ஒரு முஸ்லிம் தன் எஜமானான அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
சாதாரணமாக ஒரு நிறுவனத்தில் வேலை செய்யக்கூடியவர் அந்த நிறுவனத்தின் ஒழுங்கு முறைகளுக்கு அல்லது விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு ஒரு முகாமையயளருக்குக் கீழ் தன்னால் தன் நிறுவனத்திற்கோ அல்லது தன் வேலைக்கோ எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது. என்ற எண்ணத்தில் அந்த நிறுவனத்தின் வேலையை செய்யக்கூடியவராக இருப்பார். தன் குடும்ப சந்தோஷத்தை விட வேலையே முக்கியம் என்ற நிலை அவரிடம் காணப்படும்.
ஆனால், அல்லாஹ்விடம் கலிமா என்ற ஒப்பந்தத்தை செய்து கொண்ட நாம் எந்த விதத்தில் நம் எஜமானாகிய அல்லாஹ்விடம் ஒரு அடிமை என்ற ரீதியில் அவனுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதை நன்றாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நாம் அல்லாஹ்விடம் செய்து கொண்ட உறுதிமொழிக்கு அமைய நம் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.
நாம் அல்லாஹ்விடம் செய்து கொண்ட உறுதிமொழியில் முதலாவதாக “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை” என்பதாகும் ஆனால் சில முஸ்லிம்கள் “முஸ்லிம்” என்ற பெயர் தாங்கிகளாக மட்டும் வாழக்கூடியவர்களாக உள்ளனர்.
சிலர் அல்லாஹ்வை வணங்குவதோடு சில மனிதர்களுக்கும், மரணித்தவர்களுக்கும், வேறு சில பொருட்களுக்கும் (தாயத்து, தகடு….) அல்லாஹ்விற்கு மட்டும் உரித்தான பண்புகளை இணையாக்குகின்றனர். தங்கள்மார்கள்இ ஷேகுமார்கள் என சில மனிதர்களுக்கும் கட்டுப்பட்டு அவர்கள் என்ன சொன்னாலும் கண்மூடித்தனமாக பின்பற்றக்கூடியவர்களாக உள்ளனர்.
மரணித்த மனிதர்களிடம் சென்று அவர்களிடம் தம் தேவைகளைப் பிரார்த்திக்கக் கூடியவர்களாக சமாதி வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். தாயத்து, தட்டு வீடுகளில் தொங்க விடப்பட்டிருக்கும் அரபு எழுத்துக்களால் ஏதோ எழுதப்பட்டிருக்கும் பலகைகள், போத்தல்கள், இஸ்ம் ஆகியவற்றிற்கு தம் தேவைகளை நிறைவேற்றும், தம் பிரச்சினைகளைத் தீர்க்கும் தன்மை உள்ளது என நம்பி அல்லாஹ்விடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் முதல் ஒப்பந்தத்தை மீறி இஸ்லாத்திலிருந்து தங்களை அறியாமல் வெளியேறக்கூடியவர்களாக உள்ளனர். அல்லாஹ் நம் அனைவரையும் இந்த நிலையில் இருந்து காப்பாற்ற வேண்டும்.
அல்லாஹ் கூறுகின்றான்
“வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன்.” என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது, “நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது” என்பதே. (அல்குர்ஆன் 6:151)
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். (அல்குர்ஆன் 4:48)
லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது “என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்” என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன் 31:13)
அடுத்ததாக அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காமல் அவனை மட்டும் வணங்கக்கூடியவர்களான சில முஸ்லிம்கள் அல்லாஹ்விடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இரண்டாவது ஒப்பந்தத்தை மீறக்கூடியவர்களாக உள்ளனர்.
அதாவது “முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்” என்பது. அல்லாஹ்வின் தூதரின் அளப்பரிய பணி அல்லாஹ்வின் தூதுத்துவத்தை மக்களிடம் எத்தி வைப்பது. அவன் கட்டளைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை முறையை முன்மாதிரியாகக் கொண்டே நாம் அறிந்து கொள்ள முடியும். ஆனால் அல்லாஹ்வை மட்டும் வணங்கக்கூடிய சில முஸ்லிம்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொள்ளாமல் தம் வாழ்க்கையில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தராத புதிதாகப் புகுத்தப்பட்ட “பித்அத்” ஆன நடவடிக்கைகளை மேற்கொண்டு நரகத்திற்கே கொண்டு செல்லும் வழிகேட்டை மேற்கொள்கின்றனர்.
”செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதம். மிகவும் அழகிய வழி முஹம்மது அவர்களின் வழியாகும்.காரியங்களில் மிகவும் கெட்டது (மார்கத்தில்) புதிதாக உருவாக்கப்பட்டதாகும்.(மார்கத்தில்)புதிதாக உருவாக்கப்பட்டது அனைத்தும் பித்அத் ஆகும். அனைத்து பித்அத்களும் அனைத்து வழிகேடும் நரகத்திலே கொண்டு போய் விடும்.” (புகாரி 1560)
எனவே இத்தகைய காரியங்களில் ஈடுபடாமல் அல்லாஹ்வுக்கு முழுமையாகக் கட்டுப்பட்ட முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நம் வாழ்வின் அனைத்து நடவடிக்கைகளிலும் முன்மாதிரியாகக் கொண்டு வாழக்கூடிய உண்மை முஸ்லிம்களாக நாம் மாற வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
”என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவருக்கு அவரது தந்தையையும் அவரது பிள்ளையை யும்விட நான் மிக நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) ஈமான் உள்ளவராகமாட்டார்.” இதை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி 14)
எனவே நம் வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் அல்லாஹ்வுக்கு முழுமையாகக் கட்டுப்பட்ட, முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நம் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் முன்மாதிரியாகக் கொண்டு வாழக்கூடிய இஸ்லாம் மார்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு எந்த முடிவும் எடுக்கக்கூடிய, அல்லாஹ்வுக்காக நம் உயிரையே தியாகம் செய்யத் துணிந்தஇ நன்மையை ஏவி தீமையை தடுத்து வாழக்கூடிய நன்மக்களாக மாறி அல்லாஹ்வுக்காகவே வாழ்ந்து, அல்லாஹ்வுக்காகவே மரணிக்கக்கூடிவர்களாக நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக
source: http://rasminmisc.blogspot.com/2010/12/blog-post_4399.html