‘எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன் – அவனே சிறந்த பாதுகாவலன்’
ஹிஜ்ரி 4 ஆம் ஆண்டு ஷஃபான் மாதம் ஏற்கனவே உஹதுப் போரில் அபுசுஃப்யான் விட்ட சவாலை எதிர்கொள்ள தயாரிப்புப் பணிகளில் இறங்கினார்கள் இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஆனால் அக்கால கட்டத்தில் மக்காவில் கடும் பஞ்சம் நிலவியது. எனவே தந்திரமாகச் சிந்தித்த அபு சுஃப்யான் ஓர் ஆளை மதினாவிற்கு அனுப்பி வைத்தார்.
‘முஸ்லிம்களைத் தாக்கி அடியோடு இல்லாது ஒழிக்க குறைஷிகள் மிகப் பெரிய படை ஒன்றைத் திரட்டுகின்றார்கள்’
‘அரபுலகில் யாரும் அப்படையை எதிர்த்து நிற்க முடியாது’, என்பது போன்ற வதந்திகளை அவன் மதீனாவில் பரப்ப ஆரம்பித்தான். இதனால் முஸ்லிம்கள் பயந்து போய் வீடுகளுக்குள் முடங்கிக் கொள்வார்கள். சவாலைச் சந்திக்க வராத கோழைகள் என்று பழியை அவர்கள் மீது போட்டு விடலாம் என்று எதிரிகள் திட்டமிட்டனர்.
அவர்களுடைய திட்டம் ஓரளவு வெற்றியும் பெற்றது. எதிரிகளைச் சந்திக்க எழுச்சியோடு கிளம்புங்கள் என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அறைகூவல் விடுத்தபோது முஸ்லிம்களிடமிருந்து ஆதரவுக் குரல்கள் எழவில்லை.
‘யார் வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி. தனியாளாகச் சென்று நானே எதிரிகளைச் சந்திப்பேன்.’ என்று பொது மக்கள் மத்தியில் பகிரங்கமாக இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) புறப்பட்டு நின்றார்கள். அதைக் கேட்டதும் உயிரைத் துச்சமென மதித்து ஆயிரத்து ஐநூறு தோழர்கள் தோள் தட்டிப் புறப்பட்டார்கள்.
அவர்களை அழைத்துக் கொண்டு இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பத்ரை நோக்கிக் கிளம்பினார்கள். அங்கே அபு சுஃப்யானும் இரண்டாயிரம் வீரர்களோடு கிளம்பி வந்தார். ஆயினும் மர்ருழ் ழஹரான் (தற்போதைய ஃபாத்திமா பள்ளத்தாக்கு) என்ற இடத்தை அடைந்ததும் மேலே முன்னேற விரும்பாமல் திரும்பி விட்டார். இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) எட்டு நாட்கள் பத்ரில் காத்திருந்தனர். அந்நாட்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் முஸ்லிம்கள் வியாபாரக் குழுக் களோடு வியாபாரம் செய்தனர்
“உங்களுக்கு எதிராகப் பகைவர்கள் (பெரும்படையாகத்)திரண்டிருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு பயப்படுங்கள்” என்று மக்கள் அவர்களிடம் கூறினார்கள். அதனைக் கேட்டு அவர்களின் இறை நம்பிக்கை இன்னும் அதிகமாகி விட்டது.
அது மட்டுமல்ல, “எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன். அவனே சிறந்த பாதுகாவலன்” என்றும் கூறினார்கள்.
இறுதியில் அவர்கள் அல்லாஹ்வின் பெருங் கொடைகளையும், அருளையும் பெற்றுத் திரும்பினார்கள். அவர்களுக்கு எத்தகைய தீங்கும் ஏற்படவில்லை. இன்னும் அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தின் படி நடந்தார்கள் (என்ற சிறப்பும் அவர்களுக்குக் கிடைத்தது).
மேலும், அல்லாஹ் மகத்தான கொடையாளனாக இருக்கிறான். தன் நண்பர்களைக் கொண்டு உங்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தவன் ஷைத்தானே! (என்பது இப்போது உங்களுக்குப் புரிந்து விட்டது.) எனவே நீங்கள் உண்மையிலேயே இறை நம்பிக்கை உடையவர்களானால் (இனி) அம்மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்!”
(ஆக உஹதில் ஏற்பட்டிருந்த பீதியை இச்சம்பவம் இன்னும் ஊதிப் பெரிதாக்கியது. இனிமேல் குறைஷிகளால் தனித்து நின்று முஹம்மதை (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) சமாளிக்க இயலாது என்கிற எண்ணத்தை அரபுலகில் இது வளர்த்தது.
பிறகு நடந்த இன்னொரு நிகழ்ச்சி இந்த எண்ணத்தை மேலும் வலுவாக்கியது. அரபுக்கும், சிரியாவுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் தூமத்தல் ஜன்தல் (தற்போதைய அல்ஜவ்ஃப்) என்ற முக்கியமான இடம் இருந்தது. இராக், சிரியா மற்றும் எகிப்துக்கு செல்லும் அரபு வாணிபக் குழுக்கள் இவ்வழியாகத் தான் சென்று வந்தன. வியாபாரக் குழுக்களை குறுக்கிட்டுத் தடுத்தும், கொள்ளையடித்தும் இப்பகுதி மக்கள் பெரும் தொந்தரவு கொடுத்து வந்தனர். அவர்களை அடக்கி ஒடுக்குவதற்காக ஆயிரம் படைவீரர்களோடு ஹிஜ்ரி 5 ஆம் ஆண்டு ரபீவுல் அவ்வல் மாதம் தாமே தலைமையேற்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) புறப்பட்டார்கள். இறைத்தூதரை எதிர்க்கும் துணிவு அவர்களுக்கு வரவில்லை. ஊரைக் காலி செய்து ஓடி விட்டனர்.
சையத் அப்துர் ரஹ்மான் உமரி
முழு கட்டுரைக்கு… கீழே “கிளிக்” செய்யவும்.
http://www.nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7489