ஓட்டை பானையும் ஒளிரும் பூவும்
ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.
இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.
குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.
இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.
“ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்”
அதற்கு விவசாயி, “பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்”
இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது
அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.!!
எல்லா உயிர்களுக்கும் உதவி செய்
தமிழ் அறிவு கதைகள்
ஒரு நாட்டு ராஜாவிடம் முத்தன் வேலை செய்து வந்தான். அந்த ராஜாவுக்கு மிருகங்கள் பறவைகள் பேசும் பாஷை தெரியும். முத்தனுக்கு ஒரேய ஆச்சரியம், எப்படி ராஜா விலங்குகள் பேசுவதை அறிந்து கொள்கிறார் என்பது அவனுக்கு வியப்பாக இருந்தது, முத்தன் தான் அந்த ராஜாவுக்கு தினமும் உணவு கொண்டு கொடுப்பான். ராஜாவின் உணவில் ஒரு பகுதி மட்டும் தனியாக தனிப் பெட்டியில் ராணியே சமைத்துத் தருவாள்.
ஒரு நாள் முத்தன் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தான். அந்த பெட்டிக்குள் ஏதோ துண்டு தூண்களாக சமைத்து வைக்கப்பட்டிருந்தன. இது என்னவாக இருக்கும் என்று ஒரு துண்டை எடுத்து சாப்பிட்டுப் பார்க்கிறான். அதைச் சாப்பிட்டதும் முத்தனுக்கு பறவை மிருகங்களின் பேசும் பாஷை புரிய ஆரம்பிக்கிறது. புதிய சக்தி கிடைத்ததும் அவன் அரண்மனையில் இருந்து அப்படியே புறப்பட்டு கிளம்பி விடுகிறான்.
அவன் குதிரையில் கிளம்பிச் செல்லும் வழியில் எறும்புகள் சாரை சாரையாக போவதை பார்த்தான், எறும்பின் தலைவன் இவனிடம் குதிரையை எறும்புகளை மிதிக்காத வண்ணம் செலுத்தும் படி வேண்டிக் கொண்டது. அவனும் அப்படியே செய்தான். எறும்புகள் நன்றி தெரிவித்து, என்றேனும் உங்களுக்கு உதவுவேன் என்று கூறியது.
அடுத்து, அவன் செல்லும் வழியில் குளம் இருந்தது அங்கு மூன்று மீன்கள் அழும் குரல் கேட்டது. அவை புதருக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. குளத்தில் தாவிக் குதிக்கும் போது அவை தவறிப் புதரில் விழுந்திருந்தன.
அத்தனையும் காப்பாற்றி தண்ணீருக்குள் மீண்டும் எடுத்துவிட்டு கிளம்பினான். மீன்களும் நன்றி தெரிவித்தது.
அவன் கொஞ்ச தூரம் ஒரு காட்டைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தான். சின்னஞ்சிறு காகங்களின் குரல் கேட்டது. தாய் காக்கை அவைகளிடம் “நீங்களே உங்கள் உணவைத் தேடிக் கொள்ளுங்கள் ” என்று கூறி மரத்தில் இருந்து கீழே தள்ளி விட்டிருந்தது. அவைகளுக்கு தானியங்களை உணவாக கொடுத்துவிட்டு கிளம்பினான். அவை மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றி கூறின.
அதன் பின் காட்டைக் கடந்து அவன் வேறு ஒரு நாட்டுக்குள் நுழைந்தான். ஊரே கோலாகலமாக இருந்தது.
அந்த நாட்டு இளவரசி தன் கணவனைத் தேர்ந்தெடுக்கும் சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தாள். வேலைக்காரனுக்கு ஆசை, எப்படியும் இந்தப்போட்டியில் கலந்துகொண்டு நாம் இந்த நாட்டின் அரசனாக வேண்டும் என ஆசைப்பட்டான்.
போட்டியில் கலந்து கொண்டான். போட்டியில் வெற்றி பெறவில்லை என்றால் சிறையில் தள்ளிவிடுவார்கள்.
போட்டி ஆரம்பம் ஆனது, அவனை ஒரு குளத்திற்குக் கூட்டிப் போனார்கள். குளத்திற்குள் ஒரு மோதிரத்தை போட்டு அதனை எடுக்க வேண்டும் என கட்டளையிட்டார்கள் . அவன் பயந்து மலைத்து நின்றான்.
குளத்திற்குள் நீந்த ஆரம்பித்த அவனுக்கு ஆச்சரியம்….! “இதோ உங்கள் மோதிரம்” என்று ஒரு குரல் கேட்டது. ஒரு மீன் தன் வாயில் மோதிரத்தைக் கவ்விக்கொண்டு வந்திருந்தது. அது அவன் புதலிருந்து காப்பாற்றிய மீன்.
இளவரசி அடுத்த போட்டி வைத்தாள். ஒரு மூட்டை அரிசி முழுவதும் தோட்டத்தில் கொட்டப்பட்டு விடிவதற்குள் ஒரு அரிசி விடாமல் சேகரிக்க வேண்டும். ஆகா இது நடக்கவே நடக்காது நமக்கு சிறை தான் என்று முடிவு செய்து அவன் தூங்கி விட்டான். அவன் உதவி இருந்த எறும்புகள் ஒவொன்றாக பொருக்கி ஒரு மூட்டையில் வைத்திருந்தது. அதனால் அதிலும் ஜெயித்து விட்டான்.
இறுதியான போட்டி ஒரு தங்க ஆப்பிள் காய்க்கும் மரம் காட்டில் இருக்கிறது- அதைக் கண்டுபிடித்து ஆப்பிளை எடுத்து வர வேண்டும்.
அவன் இருட்டும் வரை தேடினான் பசுமை மரங்கள் மட்டுமே இருந்தன. தங்க மரத்தைக் காணவே இல்லை. கவலையுடன் இருட்டியபிறகு தூங்கிவிட்டான். காலையில் எழுந்து பார்க்கிறான் அவன் அருகில் தங்க ஆப்பிள் இருந்தது. அவனிடம் உதவி பெற்ற காகங்கள் அந்த ஆப்பிளைத் தேடிக் கொண்டு வந்து அவனிடம் போட்டிருந்தன. அவன் அவைகளுக்கு நன்றி தெரிவித்தான்.
எல்லா போட்டியிலும் ஜெயித்ததால் அவனை இளவரசி மணந்து கொண்டாள். அவன் ராஜாவாக அவளுடன் அந்த நாட்டை மகிழ்ச்சியுடன் வெகு நாள் ஆட்சி செய்தான்.
நாம் செய்த உதவி வீணாகாது. அது நமக்கு ஏதாவதொரு வகையில் எப்போதாவது பயன்தரும். நாம் யாரேனும் ஒருவருக்கு உதவி செய்துவிட்டு மறந்து விட்டாலும்கூட அது பின்னொருநாளில் நமக்கு யார் வாயிலாகவாவது கிடைக்கும்.
‘‘செஞ்ச உதவியும் இட்டுவைத்த விதையும் வீணாகப்போகாது’’
மிக மிக அவசியமான நேரத்தில் செய்யப் படும் உதவி இந்த உலகை விட மிகப் பெரியது.
அரபுக் கதை. குழந்தைகளுக்கான கதை
தமிழாக்கம்: ஆல்பர்ட்
” ஏப்ரல்-ஜூன் 2015 இதழ் சிறுவர் இலக்கியச் சிறப்பிதழாக வந்திருக்கிறது.
குழந்தைகள் மட்டுமல்ல எந்த வயதினருக்கும் வாசிக்க இனிமையானவையே.
தொகுப்பும் மீள்பதிவும்: பாபு நடேசன்
source: http://tamilarivukadhaikal.blogspot.in/